போர்-கிளர்ச்சி திண்டாடுகின்ற ஐந்து அரசுகள்!

நஜீப் பின் கபூர்

 நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல் 

*****

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல்-இலங்கை இங்கு என்ன நடக்கின்றது.!

கல்யாண வீட்டில் மாப்பிள்ளை செத்த வீட்டில் மையம்-இது ட்ரம்ப்!

ஜனாதிபதி அணுர மீது ஒரு சந்தேகப் பார்வைக்கு வாய்ப்புக்கள்!

ட்ரம்பும் கம்மன்பிலவும் கோவனத்தில் நிற்கிற காட்சி பாருங்கள்!

*****

People gather at the site of a US-Israel strike on a police station in Tehran.

ஒரு மாதங்களையும் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை எம்மால் நிறுத்த முடியாது. அதே போன்று அதிலிருந்து நாம் விடுபடவோ தப்பிக்கவோ முடியாத நிலை. இந்தப் போரை பொறுத்த வரை ஐ.நா.காணாமல் போய் இருக்கின்றது. அல்லது கோமாவில் இருக்கின்றது என்று சொல்லத் தோன்றுகின்றது. பனிப்போர் காலத்தில் ஐ.நா. மிகவும் செல்வாக்காக இருந்தது.

போர் தொடர்பாக இந்தக் கட்டுரையில் நாம் நான்கு நாடுகள் பிளஸ் இந்தியாவையும் விடமுடியாத நிலையில் சேர்த்துக் கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் போரைத்துவங்கிய அமெரிக்கா-இஸ்ரேல். தற்காப்புத் தாக்குதலை நடாத்திக் கொண்டிருக்கும் ஈரான். இந்தப் போர் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்தாலும் நாம் ஒரு புரிதலுக்காக சில தகவல்களை புள்ளிவிபரங்களை வைத்து இங்கு ஆராய இருக்கின்றோம்.

இதில் போருக்கு சம்பந்தமில்லாத நம்மையும் இந்தியாவும் சம்பந்தப்பட்ட சில தகவல்களை  வழங்கி இருக்கின்றோம். இதுவும் வாசகர்களுக்கு ஒரு புரிதலுக்கு உதவலாம். மேலும் நாம் இங்கு கொடுத்திருக்கின்ற புள்ளிவிபரங்கள் தரவுகள் மிகவும் பிந்திய தகவல்கள் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாடுகள் வாரியாக சில அடிப்படைத் தகவல்களை சற்றுப்பார்ப்போம்.

1.ஈரான்:முஜிதபா கமெய்ணி ஆன்மீகத் தலைவர். வயது 56. மக்கள் தொகை 9.6 கோடி. பரப்பு 1648195 ச.கி.மீற்றர். தலா வருமானம் 4250 அமெரிக்கா டொலர். பாதுகாப்பு செலவு (அ.டொ.) தரவரிசை 36. இராணுவ வல்லமை-16. நிலை.

2.அமெரிக்கா:டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி. வயது 79. மக்கள் தொகை 34.6 கோடி. பரப்பு 3796742 ச.கி.மீற்றர். தலா வருமானம் 92883 அமெரிக்கா டொலர். பாதுகாப்பு செலவு (அ.டொ.) தரவரிசை-1 இராணுவ வல்லமை-1. நிலை.

3.இஸ்ரேல்:பெஜ்ஜெமின் நெத்தென்யா பிரதமர். வயது 76. மக்கள் தொகை 1. கோடி. பரப்பு 22770 ச.கி. மீற்றர். தலா வருமானம் 64275 அமெரிக்கா டொலர். பாதுகாப்பு செலவு (அ.டொ.) தரவரிசை -18.இராணுவ வல்லமை-15. நிலை.

4.இலங்கை:அணுரகுமார திசாநாயக ஜனாதிபதி. வயது 57.  மக்கள் தொகை கோடி 2.3. பரப்பு 67240 ச.கி.மீற்றர். தலா வருமானம் 4325 அமெரிக்கா டொலர். பாதுகாப்பு செலவு (அ.டொ.) தரவரிசை-85.இராணுவ வல்லமை-68. நிலை.

5.இந்தியா:நரேந்திர மோடி பிரதமர். வயது 75.  மக்கள் தொகை 145 கோடி. பரப்பு சதுரக் 3287263 ச.கி.மீற்றர். தலா வருமானம் 3051 அமெரிக்கா டொலர். பாதுகாப்பு செலவு (அ.டொ.) தரவரிசை-5. இராணுவ வல்லமை-4. நிலை.

Iran war briefing: The world's next global chokepoint?

நாம் தந்திருக்கின்ற தகவல்களை நீங்கள் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். தொகுத்து வழங்கும் போது ஒப்பு நோக்க வசதியாக இருக்கலாம். உலகில் மிகவும் பலமான நாடு என்ற வகையில் அமெரிக்கா. அதே போன்று அந்த நாட்டு ட்ரம்ப் தான் இந்தத் தலைவர்களில் மூத்தவரும். அதே போன்று நெத்தென்யாவும் மோடியும் சம வயத்துக்காரர்கள். அணுராவும் முஜிதபாவும் சம வயதுக்காரர்கள்.

வயதில் மிகவும் இளையவர் ஈரான் ஆன்மீகத் தலைவர் முஜிதபா. இவரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் பொது மக்களின் நேரடி வாக்குகளினால் தெரிவாகின்றனர். ஈரான் ஆன்மீகத் தலைவர் தெரிவு 88 பேர் கொண்ட ஒரு உயர் சபையால் நடக்கின்றது. பதவிக்காலத்துக்கு வரம்பு கிடையாது. அதனால்தான் முஜிதபா தந்தை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்க முடிந்தது. இந்தப் பதவி மிகவும் செல்வாக்கான ஒன்று.

நாம் கொடுத்திருக்கின்ற தகவல்கள் புள்ளி விபரங்களை நோக்கும் போது நாடுகளின் பரப்பு மக்கள் தொகை தனி நபர் வருமானம் இராணுவ வலிமை என்பவற்றைப் புரிந்து கொள்ள முடியும். இராணுவ வல்லமையில் முதலாம் இடத்தில் இருக்கின்ற அமெரிக்கா மற்றும் தொழிநுட்ப ரீதியில் மிகவும் முன்னணியில் இருக்கும் இஸ்ரேலுடனும் நடக்கும் போரில் ஈரான் தாக்குப்பிடிப்பது இராணுவ நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது.

ஈரான் புரட்சி நடைபெற்று புதிய அரசு பதவி வைபவத்தில் (1979) பேசும் போது அப்போதய ஆன்மீகத் தலைவர் அயாத்துல்லா றூகுல்ல கோமெய்னி எதிர்காலத்தில் எமது இலக்கு அமெரிக்காவுக்கு சமமான இராணுவ வல்லமையாக அமைய வேண்டும் என்று கேட்டிருந்தார். அவர்தான் தற்போதய ஈரான் அரசின் கோட்பாதரும் கூட. அந்த இலக்கை எய்தும் பயணத்தில் படுகொலை செய்யப்பட்ட அலி கமெய்ணி மிகப் பெரிய பங்களிப்பை செய்திருந்தார். ஈரான் இன்று போரில் காட்டும் வல்லமை மூலம் இது உறுதியாகி வருகின்றது.

ஈரான் நிலத்தடி சுரங்க நிர்மாணத்துறையில் சக்திவாய்ந்த ஒரு நாடாக திகழ்கின்றது. இதனால்தான் உமா ஓயா திட்டத்தை அது நமக்கு நிர்மாணம் செய்து கொடுத்தது. தனது பாதுகாப்புக்காக நாட்டில் அமைத்த நிலத்தடி சுரங்க நகர்களில் பெற்ற நிபுணத்துவம்தான் இதற்கு அடிப்படை. இந்த சுரங்க இரகசியங்களை அமெரிக்க-இஸ்ரேல்  அண்மைக்காலம் வரை பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. என்னதான் ஈரான் ஏவுகணை-டேனார் விமன உற்பத்தி மற்றும்  அணுச் செரிவூட்டல் மையங்களை அமெரிக்க-இஸ்ரேல் விமானங்கள் தாக்கினாலும் அது தனது இலக்கை எட்டத் தவறிவிடுகின்றன.

மேலும் வரலாற்று ரீதியில் போர் தொடர்பில் ஈரானியர்கள்-பாரசீகர்கள் வெற்றி கொள்ள முடியாத ஒரு இனம்-தேசம் என்ற ஒரு பெருமை அவர்களுக்கு இருக்கின்றது. அத்துடன் இந்தப் போரில் பலியாகும் உயிர்கள் இறைவன் மனதை வெல்லும் ஒரு புனித காரியம்-தியாகம் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். எனவே மரணங்கள் இழப்புக்களைக் கண்டு அவர்கள் துவண்டு போக மாட்டார்கள்.

இதனால் போரில் அவர்கள் மிகவும் மனவலிமையுடையவர்களாக இருக்கின்றார்கள். இது அவர்கர்களுக்கு சாதகமாக இருக்கின்றது. மேலும் தொழிநுட்ப ரீதியில் அவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் சீனா மற்றும் ரஸ்யா  வட கொரியா இவர்களுக்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தப் போரில் ஈரான் வெற்றி பெறுமாக இருந்தால் அது வல்லரசு அந்தஸ்தை பெறும்.

இந்த நிலையில் அங்கு புதிதாக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கின்ற முஜிதபா கமெய்ணி தனிப்பட் ரீதியில் தனது தந்தையை-ஆட்சித் தலைவரையும் நெருங்கிய உறவுகளையும் பலி கொடுத்திருக்கின்றார். இதனை விட தந்தை இருக்கின்ற காலத்திலே அவர் தீர்மானங்கள் எடுக்கின்ற முக்கிய பொறுப்பாளராக பக்கத்தில் இருந்திருக்கின்றார்.

மேலும் ஈரான்-ஈராக் போரில் அவர் ஒரு படைவீரராகவும் களத்தில் இருந்திருக்கின்றார். எனவே அவர் ஒரு படை வீரன். சமயத் தலைவர். நவீன தொழிநுட்ப அறிவை பெற்ற புத்திஜீவி. ஆனால் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இன்று வரை அவர் பகிரங்கமாக எங்கும் பிரசன்னமாகவில்லை.? இது தொடர்பாக நாம் கடந்த வாரம் சில தகவல்களைச் சொல்லி இருந்தோம்.

டு;ரம்ப் பற்றி பேசுவதானால் அவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த  நாட்டுத் தலைவர். அவரது அணுகுமுறைகள் அறிவிப்புக்கள் பற்றிய நிறையவே முரண்பாடுகளும் குழப்பங்களும் காணப்படுகின்றன. இது பற்றி நமது ஜனாதிபதி ஒரு வித்தியாசமான கருத்தை சொல்லி இருந்தார். அதனை நாம் கடந்தவாரம் பதிந்திருந்தோம்.

ஆனால் இப்படியான ஒரு நாட்டுத் தலைவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதை அந்த நாட்டு மக்கள் எந்தளவுக்கு ஜீரணிக்கின்றார்கள் என்று தெரியாது. ஆனால் சில தினங்களுக்கு நோ கிங்-இங்கு யாரும் அரசர்கள் கிடையாது என்று ட்ரம்புக்கு எதிரான பேரணியில் என்பது (80) இலட்சம் பேர்வரை கலந்து கொண்டிருந்தனர். ட்ரம்பின் அண்ணன் மகள் உறவினர்கள் கூட இந்தப் பேரணியல் முன்னணியில் இருந்தனர். இது அங்குள்ள மக்கள் மனநிலையை வெளிப்படுத்துகின்றது.

மேலும் இந்தப் போரை முன்னெடுத்துச் செல்ல தன்னிடம் காசு கிடையாது. அரபு நாடுகள்தான் தனக்கு உதவ வேண்டும் என்று ட்ரம்ப் இப்போது மிரட்டுகின்றார். அத்துடன் தனது கால்களை நக்குகின்ற ஒருவர்தான் சவுதி சல்மான் என கேவலமாக ட்ரம்ப் பேசியதாக ஒரு பரபரப்பான செய்தியை மேற்கத்திய ஊடகங்கள் சொல்லி வருகின்றன. போர் துவங்கியதிலிருந்து அவர் பேசி வருகின்ற கதைகளை ஒரு முறை பட்டியல் போட்டுப் பாருங்கள், அவர் மன நிலையை புரிந்து கொள்ள அது உதவும்.

இப்போது வெனிசுலாவைப் போல ஈரான் எண்ணெய் மீதான தனது காதலே இந்தப் போருக்கு உண்மையான காரணம் என்றும் ட்ரம்ப் பேசி இருக்கின்றார். இது தான் அவரது கடைசி கருத்து என்று நாம் நம்பவில்லை. இன்னும் பல இசுக்களை அவர் நிச்சயம் நமக்குத் தருவார்.

என்னதான் குண்டு மழை பொழிந்தாலும் ஈரானை இன்று வரை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியால் வெற்றி கொள்ள முடியவில்லை. ஈரானில் தமக்குத் தேவையான ஒரு பொம்மை அரசை நிறுவுவதற்கே ட்ரம்ப் அணி எதிர்பார்க்கின்றது.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் சாவு நடந்த வீட்டில் மையமாகவும் இருக்க விரும்புகின்ற உலகில் முதலும் கடைசியும் ஆட்சியாளர் ட்ரம்ப்தான் என்று நாம் நம்புகின்றோம். அத்துடன் இது சீதனத்துக்கான போர் என்ற ஒரு கருத்தும் நம்மிடம் இருக்கின்றது. பிறிதொரு இடத்தில் அதுபற்றிய தகவல்களைப் பதிந்திருக்கின்றோம்.

இஸ்ரேல் பக்கத்தில் ஈரான் பிராந்தியத்தில் இராணுவ வல்லமையான நாடாக வளர்வது தமது இருப்புக்கும் யூத சமூகத்தின் எதிர்காலத்துக்கும் பெரிய ஆபத்து. எனவே ஈரான் மீது அவர்கள் வைராக்கியம் கொள்வதில் அவர்கள் பக்கத்தில் ஒரு நியாயம் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள முடியும்.

Smoke rises above the city, amid the U.S.-Israeli conflict with Iran, in Riyadh,

அடுத்து பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகளில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவை ஈரான் தயவிலே இயங்கி வருகின்றன. ஈரானில் இயங்கி வரும் இந்த இஸ்லாமிய சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களை கவிழ்க்க வேண்டும் என்பது யூத சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதனைத்தான் பெஞ்சமின் நெத்தன்யா செய்து வருகின்றார். ஈரானுக்கு எதிரான போர் தனது நான்கு தசாப்த கனவு என்றும் அவர் பேசி இருந்தார்.

அத்துடன் மொசாட்-சிஐஏ ஒத்துழைப்பு செயல்பாடுகள் காரணமாக பிராந்தியத்தில் இருக்கின்ற அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்க நேச நாடுகளாக ஏற்கெனவே மாற்றப்பட்டு விட்டன. இதற்காக ரில்லியன் கணக்கான டொலர்களை அவர்கள் செலவு செய்திருக்கின்றனர்.  எனவே அரபு ஆட்சியாளர்களால் இஸ்ரேலுக்கு இன்று எந்த ஆபத்துமில்லை. அரபு மக்களிடத்தில் இஸ்ரேல் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் அங்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் அனைவரும் போல அமெரிக்க-இஸ்ரேல் நேச நாடாக இன்று மாறி இருக்கின்றன.

இதனால்தான் இன்று அரபு நாடுகளில் அமெரிக்க-இஸ்ரேல் முகாம்களையும் நலன்களையும் ஈரான் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றன. பிராந்தியத்தில் இருக்கின்ற அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடாத்தி வந்தாலும் ஈரான் மீது திருப்பித் தாக்க முடியாத ஒரு நிலையில் அவை இருக்கின்றன. மேலும் இஸ்ரேலில் தேர்தல் விரைவில் வர இருப்பதால் இந்தப் போரில் நெத்தென்யா சாதிக்க எதிர்பார்க்கின்றார்.

இந்தப் போரில் எல்லா நாடுகளையும் போல நமக்கும் பாதிப்பு. அதுவும் பல மடங்கு அதிகமாகவே இருக்கின்றது. ஏற்கெனவே நாம் வங்குரோத்து நாடு என்று உலகத்தாரால் அறியப்பட்டிருந்தவர்கள். மேலும் நேரடியாக ஈரான் கடற்படை கப்பல்கள்-வீரர்களுக்கு இலங்கை மனிதாபிமான ரீதியில் உதவி அதன் மூலம் சற்று அமெரிக்காவின் மனக்கசப்பை சம்பாதித்திருக்கின்றது.? மறுபுறத்தில் போரில் ஈரானுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் ரஸ்யா-சீனா இலங்கையில் தற்போது பதவியில் இருக்கும் அணுராவுக்கு மிகவும் நெருக்கமானவை.

இதனால் இந்த அணுர அரசு மீது அமெரிக்காவுக்கு ஒரு சந்தேகப் பார்வை இருக்கத்தான் செய்யும் என்பது நமது கணக்கு. எனவே கயிற்றில் நடக்கின்ற இராஜதந்திரத்தை இன்று வரை ஜனாதிபதி அணுர வெற்றிகராமாக செய்து வருகின்றார் என்று சொல்ல வேண்டும். இதற்கிடையில் ஈரான் போரை வைத்து இங்கு ஆட்சியை பிடிக்க சிலர் வியூகங்கள் போடுகின்ற கதைகளும் இருக்கின்றன. அவை வீரியம் இல்லாததால்  கருவிலே களைந்து போகின்றன.

உலக மொத்த பாதுகாப்பு செலவில் அமெரிக்க 53 சதவீதத்தை செலவு செய்கின்றது. அதன் முகாம்கள் இன்று உலகம்பூராவிலும் இருக்கின்றன. இது அந்த நாட்டுக்கு பெரும் பணச் செலவையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. தனது உலக ஆதிக்கத்துக்கு இது உதவும் என்று அமெரிக்கா நம்பிக்கை. அதே நேரம் தங்கள் நாடுகளில் அமெரிக்க முகாம்கள் இருப்பது தமக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும் என்று முகாம்களை வைத்துக் கொள்ள அனுமதித்த நாடுகள் நம்பி வந்தன.

ஆனால் ஈரான் போருடன் இது வெறும் மாயை. தமது நாடுகளில் அமெரிக்கா வைத்திருந்த முகாம்களைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் அவற்றை மூடிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பியோடி விட்டார்கள். இதனால் நாம் ஏமாந்து விட்டோம். அமெரிக்கா எங்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அடி வாங்கும் வளைகுடா நாடுகள் அங்கலாய்க்கின்றன.

எதிர்காலத்தில் அமெரிக்காவை பாதுகாப்புக்கு நம்புவது நமது ஏமாளித்தனம் என்பதை இன்று அவை உணர்ந்து கொண்டன. இப்படி இருக்க சீனா மற்றும் ரஸ்யா போன்ற ஒரு நாட்டுடன் போர் வந்தால் அமெரிக்க நிலை என்ன என்ற விமர்சனங்கள் பரவலாக நடக்கின்றன. இதற்கிடையில் அமெரிக்க-இஸ்ரேல் போன்ற நாடுகளில் போருக்கு எதிரான கிளர்ச்சிகளை அங்குள்ள குடிமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையும் இங்கு கம்மன்பில போட்ட புத்தகம் இரண்டும் ஒன்று. இதில் பலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பி இருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். கூறியதையே இருவரும் திரும்பத் திரும்ப பேசி தாமும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றி இன்று கோவனத்துடன் நிற்கின்றார்கள்.!

Previous Story

கொழும்பில் சியோனிட்டுக்களின் ஜூம்மா பேருரை

Next Story

ஈரான் கொடுத்த மரண அடி அதிர்ச்சியில் அரபு நாடுகள்ஓடி ஒளிந்த இஸ்ரேல்