போராபத்தில் இலங்கை – அனுர குமார 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) சாத்தியமற்ற யோசனை பயனற்றது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் தீர்வு தீர்மானங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தன்னிச்சையான தீர்மானங்களினால் முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது முடிந்தால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வாருங்கள் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (19-04-2022) உரையாற்றுகையில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும் அவர் தெரிவித்தது,

இயற்கை காரணிகளை அடிப்படையாக கொண்டு சமூக கட்டமைப்பில் தற்போதைய பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருந்தால் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க தயார்.

பிரச்சினைகளை தோற்றுவித்த அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைப்பது பயனற்றது. உரபிரச்சினை தோற்றம் பெற்ற போது சபையில் பல விடயங்களையும், எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள சவால்களையும் எடுத்துரைத்தோம்.

நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நாங்கள் கருத்துரைப்பதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் சபையில் விமர்சித்தார்.

விவசாயிகள் உரம் கோரி வீதிக்கிறங்கி போராடுகையில் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது. உரகொள்கையினை ஒருபோதும் மாற்றியமைக்கப்போவதில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி நேற்று முன்தினம் குறிப்பிடுகிறார் உர கொள்கை தவறு என்று. நாட்டுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி விட்டாதாக ஜனாதிபதி தவறை விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டில் உணவு பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டு தவறு என்று குறிப்பிடுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். விவசாயத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய அரச தலைவர் பதவி விலக வேண்டும். பொருளாதார ரீதியில் அரச தலைவர் முன்னெடுத்த தீர்மானங்களும் தற்போதைய பிரச்சினைக்கு மூல காரணியாக அமைந்துள்ளது.

வரையறுக்கப்பட்ட நாணய அச்சிடல் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை சபையில் வலியுறுத்திய போது முன்னாள் நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) குறிப்பிட்டுள்ளார்.

நாணயம் அச்சிடல் பண வீக்கத்தை துரிதப்படுத்தாது, புதிய கொள்கையின் அடிப்படையில் நாணயம் அச்சிடப்படுகிறது என குறிப்பிட்டார். வரையறையற்ற நாணயம் அச்சிடல் பணவீக்கத்திற்கு பிரதான காரணம் என மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் குறிப்பிடுகிறார்.

வாழ்ககை செலவுகள் அதிகரிப்பு இயற்கை காரணியல்ல. ஜனாதிபதி, நிதியமைச்சர் உட்பட குழுவினர் மத்திய வங்கிக்கு வழங்கிய ஆலோசனைகளின் பிரதிபலனாகவே பணவீக்கம் அதிகரிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

டொலர் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் துரிதமாக்கப்பட்டது. வெளிநாட்டு கையிருப்பு பூச்சியமான நிலைக்கு சென்றதன் பின்னரே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் ரூபாவை தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தினார்.

வெளிநாட்டு செலாவணியையும் அரசாங்கம் தவறான தீர்மானங்களினால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை தோற்றம் பெற்றது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு பல்வேறு வழிமுறையில் எடுத்துரைத்ததார்கள். மக்கள் எதிர்க்கொண்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

பொறுப்பான அமைச்சர்களும் பொறுப்பற்ற வகையில் பதிலளித்தார்கள். சங்ரில்லா ஹோட்டலில் நாட்களை கடத்தும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) நடுத்தர மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தவில்லை.

பொருளாதார பிரச்சினைக்கும், மக்களின் அடிப்படை பிரச்சினைக்கும் தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வி என்பதை உணர்ந்ததன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்துகிறார்கள்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் முன்வைக்கும் யோசனை பயனற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்று 24 மணித்தியாலத்திற்குள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எவ்வாறு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். மக்களின் நம்பிக்கையை பெறும் அரசாங்கத்தை அமைப்பது கட்டாயமாகும். முடிந்தால் அரசியலமைப்பில் 19ஆவது திருத்ததை கொண்டு வாருங்கள். 19ஆவது திருத்ததை கொண்டு வருவதாக குறிப்பிட்ட யோசனைக்கு நன்றி என்றார்.

Previous Story

ரம்புக்கனை விவகாரம் நீதவான் நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்!

Next Story

வரலாற்றில் மற்றுமொரு அதிர்ச்சி! அமைச்சர்கள்தான் சுடும்படி உத்தரவைக் கொடுத்தார்கள்-நளின் பண்டார