போராட்ட களத்தில்  கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் ! 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்க எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டம் வலுத்துவரும் சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரரான மார்வன் அட்டபட்டு (Marvan Atapattu) தனது மனைவியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு (Gotabaya Rajapaksa) எதிராக கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிப்பதால் பால் ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களுக்காகவும், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்காக அந்நாட்டு மக்கள் திண்டாடுகின்றனர்.

இலங்கையில்,13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இலங்கையில் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று (03-04-2022) இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் தடையை மீறி மாணவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் போராடி வரும் நிலையில் நிலைமை அங்கு மோசமாகி வருகிறது.

இன்றும் நாட்டில் பல இடங்களில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டாலும் போராட்டம் தீவிரமாகி வருகிறது. இதனால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை இராணுவத்தினர் விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ள சூழலில் இலங்கையில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு இராஜினாமா செய்தனர். அவர்களின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க விரும்புவதாகவும், அமைச்சரவை பொறுப்புகளை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் விதிக்கப்பட்ட உத்தரவு ஊரடங்கு இன்று திங்கட்கிழமை (04-04-2022) காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டம் அதிகரித்து வருகிறது.

தலைநகரான கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களான கண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் திரண்டு அதிபர் கோத்தபய மற்றும் அரசுக்கு எதிராகவும், GoHomeGota என்ற பதாகைகளை ஏந்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் மாணவர்கள்ம், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக இலங்கை வாழ் தமிழர்கள், சிங்களவர்கள் என இன பேதமின்றி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராடி வரும் நிலையில் மைத்திரிபால சிறசேனவின் (Maithripala Sirisena) இலங்கை சுதந்திர கட்சி கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்வன் அட்டபட்டு கலந்து கொண்டார். GoHomeGota என்ற பதாகையுடன் அவர் போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous Story

பிள்ளையான் அலுவலகம் முற்றுகை

Next Story

ஞானாக்கா வீடு முற்றுகை!