போராட்டம்: ஜெயிக்கப்போவது பணமா அகிம்சையா?

நஜீப் பின் கபூர்

2022 தமிழ் சிங்களப் புத்ததாண்டு சீசன் இது. நமது நாட்டில் ஒவ்வொரு குடிமகனினதும் கவனம் கொழும்புக் காலிமுகத்திடலில் என்ன நடக்கின்றது என்றுதான் இருக்கின்றது. அதே போன்று முழு உலகத்தாரின் பார்வையும் கூட இலங்கை மீது குறிப்பாக அதுவும் காலிமுகத்திடலில் நடக்கின்ற நிகழ்வுகளை மையப்படுத்தியதாகத்தான் இருந்து வருகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. உலக அரசியல் வரலாற்றில் இது  புதியதோர் அத்தியாயமாகக் கூட வரலாற்றில் பதிவாகவும் இடமிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம். இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப் பெரியதோர் சூறாவளி தற்போது வீசிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் அனைவருக்கும் நன்றாகப் புரிகின்றது.

இப்போது நாட்டில் ராஜபக்ஸாக்களே வெளியே போ என்ற கோசம் போடுகின்ற சாத்வீகப் போராட்டம் நடத்துவோரும், இல்லை, ராஜபக்ஸாக்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோரும், மதில் மேல் பூனையாக நின்று நயவஞ்சகத் தனமாக காய் நகர்த்துகின்ற ஒரு குழுவும் நாட்டில் இருக்கின்றது. நாம் மேற்சொன்ன குழுக்களில் பல்வேறு பட்ட பிரிவினரும்-பிளவுகளும் இருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

எமது அரசியல் ஆய்வுகளின் படி மொத்த குடித்தொகையில் எழுபத்தி ஐந்து (75) சதவீதமான மக்கள் ராஜபக்ஸாக்களின் குடும்ப ஆட்சி மீது மிகுந்த அதிர்ப்தியில்யில் இருக்கின்றார்கள். ஒரு பதிணைந்து (15) சதவீதமானவர்கள் என்னதான் ராஜபக்ஸாக்கள் அப்பட்டமான அநியாயக்காரர்களாக இருந்தாலும் அவர்களை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில்தான் இன்னும் இருக்கின்றார்கள். எஞ்சி இருக்கின்ற பத்து (10) சதவீதமானவர்கள் இந்தப் பொருளாதார நெருக்கடியில் தாமும் பாதிக்கபட்டிருந்தாலும் நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்ப்பில் தெளிவில்லாத அல்லது புரிதல் இல்லாத நிலையில் இருக்கின்றார்கள்.

ஆளும் தரப்பு

அரசியல் செயல்பாட்டுக்காரர்களை எடுத்துக் கொண்டால் அங்கும் பல வித்தியாசமான குழுக்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. ஆளும் தரப்பில் ராஜபக்ஸாக்களுக்கு கடைசி நிமிடம் வரை கூஜா தூக்கி அதன் மூலம் அரசியல் பிழைப்பை முன்னெடுப்பது என்று நிலைப்பாட்டில் இருப்போர். அதில்  உரத்து கத்துகின்றவர்கள் வரிசையில் ஜொன்டன்ஸ்டன், மஹிந்தானந்த, ரோஹித்த அபேகுனவர்தன போன்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு பிழைப்புக்கு நல்ல அமைச்சுக்கள் கையளிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அப்படித் தொழிற்படுகின்றார்கள். இன்னும் ஒரு கூட்டம் மதில் பூனையாக இருந்து அரசின் இறுதி நாள்வரை ராஜபக்ஸ முகமில் இருந்து அரசியல் செய்து விட்டு அவர்கள் மண்கௌவும் போது பல்டியடித்து மக்கள் முன் வந்து அதற்கு நியாயம் சொல்ல நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம். அவர்களில் பெரும்பாலனோர் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட ஒழுங்குகளில் துவக்கம் முதலே மிகுந்த அதிர்ப்தியில் இருப்போரும் உள்ளடங்குகின்றார்கள். என்ன முடிவை எடுப்பது என்று புரியாமல் அங்கலாய்த்தக் கொண்டிருக்கின்ற ஒரு கூட்டமும் ஆளும் தரப்பில் இருக்கின்றது.

ஆளும் தரப்பில் இதுவரை பங்காளிகளாக இருந்து மக்கள் எழுர்ச்சியைக் கண்டு தமது நிலைப்;பாட்டை மாற்றிக் கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் குழு. இதில்தான் நாம் மைத்திரி, விமல், வாசு, கம்மன்பில போன்றவர்களை இனம் காட்ட வேண்டி இருக்கின்றது. இந்தக் குழுவில் பல்வேறு தனிப்பட்ட முரன்பாடுகள் உடையோரும் இருக்கின்றனர். இந்த அரசு பதவியில் இருக்கும் வரை  பச்சோந்தி அரசியல் செய்வதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றது. எனவேதன் தமது திட்டங்களை அரசுக்கு சமர்ப்பித்து அவற்றை ஏற்க்கொண்டால் ஒத்துழைப்பு என்று அவர்கள் மக்கள் முன் நாடகம் நடாத்த முனைகின்றார்கள்.

தமது தரப்பில் இருக்கின்றவர்களை பதவிகள் கொடுத்து அரசு ஆதரவாலர்களாக மாற்றும் நடவடிக்கைகளினால் அவர்கள் ஜனாதிபதி முதுகில் குத்தி அரசியல் செய்கின்றார் அவருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்குப் போவது அர்த்தம் இல்லை என்ற புதிய சூழ்நிலை அங்கு தோன்றி இருக்கின்றது. இது ஜனாதிபதி மட்டுமல்ல ராஜபக்ஸாக்கள் கூடி எடுத்த முடிவுகள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுவது ஏன் என்று எமக்குப் புரியவில்லை. ஒட்டுமொத்தமாக தற்போது ஆளும் தரப்பில் இருப்போரும் தனிக்குழுவாக அரச தரப்பில் இருப்போரும் சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். அங்கு மக்கள் நலன்கள் என்பதனை விட தன்னல அரசியலுக்குத்தான் அவர்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றார்கள். கடந்த காலங்களில் மிகப் பெரிய இனவாதிகளாகவும் இவர்களில் பலர் வேலைபார்த்தார்கள் என்பதும் தெரிந்ததே.

எதிர் அணியினர்

ஏனைய குழுக்கள் அல்லது எதிர்க் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் சஜித் தரப்பு ,தமிழ் தரப்பினர், ஜேவிபி, என்பவற்றைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கின்றது. ஹக்கீம், ரிசாட் அணிகள் பற்றி பேசுவதற்கு ஏதுமே இல்லை என்பதுதான் எமது கருத்து. அவர்கள் தனி நபர்களாகத்தான் நாடாளுமன்றத்தில் இன்று உற்கார்ந்து நாடகமாடுகின்றார்கள். அவர்கள் அரசியல் வியாபாரரிகளாக இருப்பதால் கடைசி நிமிடம் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதனை சொல்ல முடியாது. ஏன் நாம் இப்படிக் கூறுகின்றோம் என்றால், தனது கட்சிக்காரர்களை ஆளும் தரப்புக்கு கூஜா தூக்க அனுப்பி வைத்தவர்களே இந்த தனித்துவ ராஜாக்கள்தான் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சந்தர்ப்பம் வரும் போது இந்தக் கதைகளை அவர்களே மேடையில் பேசி அரசியல் செய்யும் நேரமும் வரும் என்பது உறுதி பொருத்திருந்து பாருங்கள்.!

ராஜபக்ஸாக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருக்கும் நம்பிக்கை இல்லாப் பிரேனையை பாருங்கள் அதனை கடைசிவரையும் இழுத்தடித்த சஜித் இப்போது கட்சியில் வந்த அழுத்தங்கள் காரணமாக ஓகே சொல்லி அதில் கையொழுப்பமும் போட்டிருக்கின்றார். அடுத்த பெரிய கட்சியான கூட்டமைப்பு இது வரை என்ன முடிவு என்று தெரியவில்லை. இதற்கிடையில் சட்டவல்லுனர் சுமந்திரன் பிரதமர் எம்.ஆரை சந்தித்துப் பேசி இருக்கின்றார். இந்த நேரத்தில் என்னதான் பேச வேண்டி இருக்கின்றது. ஆளும் தரப்பு பெரும்பான்மையை காத்துக் கொள்கின்ற முயற்ச்சியில்தானே அரசாங்ம் இருக்கின்றது.? எனவே பேச்சு என்ன என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.! ஆனால் ஒரு கேள்வி இது கட்சித் தீர்மானத்துடனான சந்திப்பா அல்லது தனி நபர் கொடுக்கல் வாங்கல்களுக்காக பேச்சோ  தெரியாவில்லை. அடுத்து ஜேவிபி இந்த நம்பிக்கையில்லலாப் பிரேரணையில் அவர்களுக்கு விசுவாசம்  இல்லாவிட்டாலும். அவர்களும் இதில் கையெழுத்துப் போட இணங்கி இருக்கின்றார்கள். அவர்களக்கு இருப்பதே வெறும் மூன்று உறுப்பினர்கள் தான்.!

இந்த நம்பிக்கை இல்லாப் பிரோணை விடயத்தில் அரசு வழக்கம் போல் பணத்தை-பதவிகளைக் கொடுத்து அதனை வெற்றி கொள்ளும் என்பதுதான் எமது கருத்து. கடந்த காலங்களில் இருபதற்குக்  கைதூக்க  ஐந்து கோடி வரை விலைப்பட்டவர்கள் இன்று எட்டு பத்துக் (8-10) கோடி என்று இந்தத் தீர்க்கமான நேரத்தில் விலை போக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் நமக்கு இந்த நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் ஒரு போதும் நுழைய முடியாது என்று தெளிவாகத் தெரிந்திருப்போர் பலர் இருக்கின்றார்கள். மக்கள் என்னதான்  தம்மை வசை பாடினாலும் அதனைப் பற்றி அவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு அரசுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றுதான் நாம் கணக்குப் பார்க்கின்றோம்.

தற்போது நாடாளுமன்றதில் ஆளும் தரப்புக்கு தனியே 145 பிளஸ் 5 (டக்லஸ்2 பிள்ளையான்1 அங்கஜன்1 அதாவுல்ல1) 150 என இருக்கின்றார்கள் சில வாக்கொடுப்பு நேரங்களில் அது 158 வரை கூட சென்றிருக்கின்றது. அதற்குப் பலருக்கு அமைச்சுத் தருகின்றோம் என்று கொடுத்த வாக்குறுதிகளும்-காசும் துணையாக இருந்து வந்திருக்கின்றது. முஸ்லிம் உறுப்பினர்கள் ஏழு பேரும் மலையத்தில் ஒருவரும் சஜித் அணியில் ஒருவரும் என ஆளும்தரப்புக் கையாட்களாக மாறி இருக்கின்றார்கள்.  இதனால் அரசுக்கு மேலும் ஒன்பது பேரின் ஆதரவு கிடைத்தது. இன்று 42 பேர் ஆளும் தரப்பில் தனிக் குழு என்று சொல்கின்றார்கள்.? அவர்களை நீக்கிவிட்டுப் பார்தத்தால் ஆளும் தரப்புக்கு (158-42) இருப்பது. 116 என்று தேருகின்றது. ஆனால் இந்த 42 பேரில் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு அவர் இப்போது அரச தரப்பில்.  தற்போது அது 41. மேலும் மூவர் தாம் அரசு தரப்புக்கு ஆதரவு என்று ஊடங்களில் பேசி இருந்தார்கள்.

எனவே தனித்து செயலாற்றுவதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை 38கக் குறைகின்றது. அமைச்சுக்களைக் கொடுத்தும் சந்;தைகளில் விற்கப்படுகின்ற மந்தைகள் போல் நமது நாடாளமன்ற உறுப்பினர்களை பணத்துக்கு வாங்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் ஆளும் தரப்புக்கு இருக்கின்றது. அதற்கு வேண்டி பணப்பலமும் ஆளும் தரப்புக்கு நிறையவே இருக்கின்றது. எனவேதான் விமல் வீரவன்ச, பசில் நள்ளிரவு இரண்டு மூன்று மணிக்கு தனது ஆட்களை விலைக்கு வாங்கத் தரகர்களை அனுப்பி வருகின்றார் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகின்றார். எனவே எமக்கு வருகின்ற தகவல்களின் படி ஆளும் தரப்பு நம்பிக்கை வாக்கு என்று வந்தால் குறைந்தது எட்டு அல்லது பத்து மேலதிக வாக்குகளினால் வெற்றி பெறும்.

தற்போது ஆளும் தரப்புக்கு 107  ஆசனங்கள்தான் நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. மொட்டு அணிக்கு 104 ஈபிடிபி 2 தமிழ மக்கள் விடுதலைப் புலிகள் 1 என்று கணக்குச் சொல்கின்றது. அதே நேரம் எதிரணிக்கு மொத்தமாக 118 ஆசனங்கள் என்று கணக்குப் பார்ப்போரும் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரணியில் ஐக்கியப்பட வாய்ப்புக்கள் குறைவு என்றுதான் நாம் கருதுகின்றோம்.

பலர் வாக்கொடுப்பை தவிர்த்து அரசுக்கு மறைமுகமாக ஒத்துழைக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. மைத்திரி, விமல், வாசு, கம்மன்பில அணியினர்; இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக தமது வாக்குகளைப் பதிவார்களா என்ற சந்தேகம் நமக்கு நிறையவே இருக்கின்றது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்ற விடயத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. பணம் பாதளம் மட்டும் பாய்வதால் அரசுக்கு சாதகமாகத்தான் முடிவுகள் வரக்கூடும். எனவே மீட்சிக்கான மக்களுக்குள்ள ஒரே வழி அகிம்சைப் போராட்டம் ஒன்றுதான்.

அரசுக்கு சரிவு!

அரசுக்கு எதிரான போராட்டங்கள் இந்தளவுக்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று அரசு ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. அதனை முறியடிப்பதற்கு அரசு பல கோடி ரூபாய்களை மூலதனமிட்டாலும்  அது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. நாளுக்கு நாள் ‘கோ ஹோம் கோட்டா’ கோசம் போடுகின்ற அணியின் கரங்கள் பலப்பட்டு வருகின்றது. மேலும்  போராட்த்தை மலினப்படுத்த பல்வேறு யுக்திகளை அளும் தரப்பினர் பரீட்சிப்பதுடன் களத்தில் தனது கையாட்களை கூட இறக்கி விட்டிருக்கின்றனர். மேலும் ‘எங்களுக்கு கோட்டா வேண்டும்-மஹிந்த வேண்டும்’ என்று கோசம் போட ஆளும் தரப்பு சில கைக் கூலிகளை கடந்த சில தினங்களாக இறக்கிவிட்டிருந்தனர். அப்படி போன பலர் காசுக்காகவும் மது மற்றும் சாப்பாட்டுப் பார்சல்களுக்காகவும்தான் போனதாக ஒத்துக் கொண்டுமிருந்தனர். என்பது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் தெரிய வந்தது. அப்படிப் போன பலர் பொதுமக்களால் அடித்துத் துரத்தப்பட்ட சம்பவங்களும் கடந்த வாரம் பல இடங்களில் நடந்தது.

‘கோ ஹோம் கோட்டா’ கிராமப் போராட்ட பூமியாக இருப்பதுடன் சில நேரங்களில் மதவழிபாட்டு பூமியாகவும் களியாட்ட பூமியாகவும் மாறுகின்றது. என்றாலும் இந்தக் கட்டுரையைத் தாயாரிக்கின்ற நேரம்வரை அவர்கள் முற்றிலும் வன்முறையை தமது ஆயுதமாக ஏற்கத் தயாராக இல்லை. இதனை ஒரு கலவர பூமியாக மாற்ற விசமிகள் அங்கு ஊடூவி இருப்பதை ஏற்பாட்டாளர்கள் தெளிவாக அறிந்து எச்சரிக்கையாகவும் நடந்து கொண்டு வருகின்றார்கள்.

ஆளும் தரப்பினர் குறிப்பாக கடந்த தேர்தலில் அரசுக்கு கடைக்குப் போனவர்கள் பெரும்பாலும் போராட்டம் நடாத்துக்கின்ற இளைஞர்கள் பக்கம் சாய்ந்து விட்டாலும் ஒரு சிறுகுழு இன்றும் இனவாதத்தையும் வன்மறையையும் தூண்டி சாத்வீகப் போராட்டத்தை குழப்பியடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த முயற்ச்சி இன்று வரை கைகூடாவில்லை. சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், வைத்தியத் துறையினர், சட்டதரணிகள், ஆசிரியர்கள் கலைஞர்கள், விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் உலகம் பூராவிலுமுள்ள இலங்கையர்கள் அனைவரும் இன்று ஒரணியில் நிற்கின்றார்கள்.

இங்குள்ள மிகவும் ரம்மியமான காட்சி சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள் என அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் போராட்ட களத்தில் ஒரே கோசத்துடன் களத்தில் நிற்க்கின்றார்கள். அதனைக் கூட வேறு விதத்தில் சித்தரிக்கு ஆளும் தரப்புக்கு விசுவாசம் தெரிவிக்கின்றவர்கள் கதைகளைக் கட்டி வருகின்றார்கள்.  ஆனால் ஆளும் தரப்பினர் கடைசி நிமிடம் வரை அதிகாரத்தில் இருப்பதற்கான உத்திகளையும் பிரச்சாரங்களையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நேரம் ரணிலை பிரதமராக்கி பிரச்சனைக்குத் தீர்வு என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டரசு என்ற கதையையும் அவரைப் பிரதமராக்கி இவரைப் பிரதமராக்கித் தீர்வு என்றும் கதைகள் வருகின்றது. இப்போது நாமல் பிரதமர் மஹிந்த பதவி விலகுகின்றார் என்று பிரச்சாரங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டக்காரர்கள் ஒரே குரலில் ராஜபக்ஸாக்கள் அனைவரும் வெளியே போக வேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக நிற்கின்றார்கள்.

இதற்கிடையில்  காலி முகத்திடல் போராட்டகாரர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு பிரதமர் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கின்றார். ஆனால் அவர்களோ அந்த அழைப்பை நிராகரித்து தமது போராட்டத்தில் உறுதியாக இருப்பதனைத்தான் அவதானிக்க முடிகின்றது.

நன்றி17.04.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இளைஞர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கெஹெலிய!  அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் தகுதி இவருக்கு இருக்கா?

Next Story

இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி  நிறுவனம் விலைகளை மீண்டும் அதிகரித்தது.!