போதையில் பிடிபட்ட ஞானசார தேரர்

-நஜீப் பின் கபூர்-

சில சமயங்களில் தூங்கி எழும்பும் போது அரசுகள் கவிழ்ந்திருப்பதை அதிகாலைச் செய்திகளில் மக்களுக்குக் கேட்கக் கூடியதாக இருக்கும். அவ்வாறே சுனாமி போன்ற பேரழிவுகள் வந்து பல இலட்சம் பேர் சில நொடிகளுக்குள் மடிந்து போன செய்திகளை நாம் கேள்விப்பட்டோ அல்லது பார்த்தோ இருக்கலாம். அது போன்றுதான் நமது அரசியல் களத்திலும் தற்போது இப்படி அதிரடி நிகழ்வுகள் அல்லது குழப்பங்கள்-குழறுபடிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருவதை நாம் பார்த்து வருகின்றோம். சர்வதேச சமூகம் என்னதான் அலுத்தங்களைக் கொடுத்தாலும் அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. நீதி நியாயங்களை குப்பையில் போட்டு விட்டுத்தான் ஆட்சியாளர்கள் இந்தக் காரியங்களைப் புரிந்து வருகின்றார்கள்.

சம கால நாட்டு நடப்புக்களை அவதானிக்கின்ற போது ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ச்சி நிரல் போல் ஏதோ ஒன்று நமது அரசியல் களத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அல்லது அதே சூத்திரதாரிகள் நமது அரசியலுக்குள்ளும் நுழைந்து விட்டார்கள் அல்லது அதிக்கம் செலுத்துகின்றார்கலோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. இந்த விவகாரங்களை பாமர மக்கள் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் அதிரடியாக வெளியில் தெரிகின்ற மாற்றங்களை உணர்ந்து கொள்வார்கள் அல்லது அனுபவிப்பார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு இந்த விடயத்தில் புரிகின்ற பக்கங்களாக இருக்கும். நாட்டில் ஏதோ வித்தியாசமான காரியங்கள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது. அந்த விவகாரங்களை புதிராக வைத்து விட்டு விவகாரத்துக்கு வருவோம்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஞானசார தெரிவித்த கருத்துக்கள், அரசு இந்த விவகாரத்தில் கூறுகின்ற நொண்டிக் காரணங்கள், தாக்குதல் பற்றிய ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கையில் இருபத்தி இரண்டு (22) பாகங்களில் ஒன்றுதான் இதுவரை வெளியில் வந்திருக்கின்றது. ஏனைய அனைத்துப் பாகங்களும் இன்னும் அரசு மறைத்து வைத்திருக்கின்றது. உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்படுத்தி பேசப்படுவது போன்ற விவகாரங்கள் நாட்டில் பெரும் சந்தேகங்களைத் தோன்றுவித்திருக்கின்றது. தாக்குதல் நடந்து இப்போது முப்பது (30) மாதங்கள் கடந்து விட்டது.

உறுப்படியாக இதுவரை எதுவுமே நடக்கவில்லை. இதனால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆட்சியாளர்களைத் தற்போது கடும் தொனியில் விமர்சித்து வருகின்றார். நீதி கேட்டு சர்வதேசத்தை நாடுவது தொடர்பான அவர்களது நகர்வுகள் அரசுக்குப் பெருத்த தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக சில கிருஸ்தவ குருமாரை சிஐடி விசரனைக்கு அழைத்திருக்கின்றது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் அரசியல் அமைப்பில் ஒரு நாடு ஒரே சட்டம் என்ற விவகாரத்தில் ஜனாதிபதி சர்ச்சைக்குறிய ஞானசரருக்கு செயலணி ஒன்றை அமைத்து அதன் தலைமைப் பதவியையும் வழங்கி இருக்கின்றார். மத்திய வங்கி ஆளுநருக்கு வழங்கி இருக்கின்ற வரம்பு மீறிய அதிகாரம். வருவதாக சொல்லப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலும் அது தொடர்பான தொளிவில்லாத நிலமைகள். சில தினங்களில் வரும் வரவு செலவுத் திட்டம். விவசாயிகள் போராட்டங்கள், ஆசிரியர்களின் தொழிற் சங்க நடவடிக்கைகள், ஆளும் கூட்டணிக் கட்சிக்குள் பிளவுகள். ஒரு நேரச் சாப்பாட்டுக்கு வழி தெரியாத குடி மக்கள் என்று இந்த நெருக்கடிகள் தொடர்கின்றன.

தனக்கு அனுபவம் போது என்று பகிரங்கமாக ஊடகங்கள் முன் பேசுகின்ற ஜனாதிபதி ஜீ.ஆர். தான் எடுக்கின்ற எந்தத் தீர்மானங்களில் இருந்தும் பின் வாங்கத் தயாரில்லாத நிலையும் தொடர்ந்து கொண்டு போகின்றது. இதனால் ராஜபக்ஸ முகாமுக்குள்ளேயே பெரும் முரன்பாடுகளும் குழப்பங்களும் நிலவி வருகின்றது. அது பகிரங்க அரங்குக்கு விரைவாக வந்தாலும் ஆச்சர்யப் படுதவற்கில்லை. முன்னாள் ஊவா மாகாண முதல்வரும் தற்போதய இராஜங்க அமைச்சரும் சாமல் ராஜபக்ஸ மகன் சசிந்திர ராஜபக்ஸ ஒரு தேர்தல் வருமாக இருந்தால் அரசுக்குப் படுதோல்வி என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தும் தெரிந்ததே.

ஒரு நாடு ஒரு சட்டம் என்று விவகாரத்தில் ஞானசாரத் தேரர் தலைமையில் ஜனாதிபதி ஒரு உயர் மட்டக் செயலணியை அமைத்து தமது சிபார்சுகளைத் தெரிவிக்குமாறு கேட்டிருக்கின்றார். அந்தக் குழுவில் மொத்தம் பதிமூன்று பேர். நான்கு முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அந்த சமூகம் மகிழ்ச்சியான ஒரு செய்தியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களில் ஒருவர் விரிவுரையாளர் ஏனையோர் அனைவரும் இஸ்லாமிய மத குருமார்.

ஒரு ஹிந்து மற்றும் கிருஸ்தவக் குருமார் கூட உள்வாங்கப்படாமல் இருப்பதும் பெரும் ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருந்து வருகின்றது. அப்படி உள்வாங்ப்பட்டிருக்கும் முஸ்லிம் சமயக் குருமார் மூவருக்கும் சமூக அங்கிகாரம் இல்லை என்பதும் தெரிய வருகின்றது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் தனியார் சட்டங்களில் ஏதோ அட்டகாசங்கள் நடக்க இருக்கின்றது அல்லது ஞானத்தார் விருப்புக்கு ஏற்றவிதத்தில் முஸ்லிம் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதன் மூலம் பேரினத்தார் ஆதரவை மீட்டுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ஜீ.ஆர். எதிர்பார்க்கின்றார் போலும்.

மூத்த அரசியல்வாதியான சுசில் பிரேம்ஜயந் தம்மைப் போன்ற சட்டவல்லுணர்களை ஓரம் கட்டி விட்டு யாப்புத் தொடர்பான அரிச்சுவடிகளே தெரியாதவர்களுக்கு நமது தலைவர்கள் இந்த விவகாரத்தில் முன்னுரிமை வழங்குவது குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்த பின்னணியில் அவருக்கு சம்மட்டியால் பதில் கொடுப்பது போல இந்த யாப்பு விவகாரத்தில் ஞானசாரர் நியமனமும் நடந்திருக்கின்றது. யாப்புத் தொடர்பாக வல்லுணர்கள், முக்கியஸ்தர்கள் நாட்டில் இருக்கின்ற போது இப்படிப்பட்ட ஒரு வன்முறையாளரை அந்தப் பதவிக்கு நியமித்ததன் மூலம் ஜனாதிதிபதி அவரது அட்டகாசங்களுக்கு அங்கிகாரம் அளிக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.

ஞானசாரர் பற்றி நமது நிலைப்பாடுகள் தொடர்பில் பல முறை சொல்லி வந்திருக்கின்றோம். இப்போது ஞானம் எப்படியான ஒரு பேர்வலி என்று ஆதாரபூர்வமாக எம்மிடம் உள்ள தகவல்கள் சிலவற்றை மக்களுக்கு அறிப்யப்படுத்தலாம் என்று நினைக்கின்றோம். அலுத்கம போன்ற பல இடங்களில் நடந்த வன்முறையின் பின்னணியில் அவர் இருந்தார் என்பதும் அப்போது பாதுகாப்பு அமைச்சராக அன்றைய ஜனாதிபதி எம்.ஆர். இருந்தார். அவரது பாதுகாப்புச் செயலாளராக தற்போதய ஜனாதிபதி ஜீ.ஆர். இருந்தார். அந்த வன்முறையை அவரால் தடுக்க முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் 476 ம் பக்கத்தில் இலங்கை தௌஹீத் அமைப்பு, ஜமத்தே இஸ்லாம், அதன் மாணவ அமைப்பு மற்றும் ஞானசாரத் தேரர் நடவடிக்கைகள் இந்த தாக்குதலுக்குப் பின்னணி என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

நீதி மன்றத்தை தொடர்ந்து அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் நீதி மன்றம் அவரைக் குற்றவாளியாக தீர்ப்பளித்து தண்டனைக்கு ஆளாக்கி இருந்தது. பின்னர் தனக்கு மன்னிப்புக் கேட்டு மன்றாடி ஞானத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்குக் கடிதம் எழுதி அதன் மூலம் விடுதலையானார்.

அடுத்து ஞானத்தின் இந்த விவகாரத்தை சற்றுப் பாருங்கள். பௌத்த துரவிகளுக்கு வாகனம் ஓட்ட முடியாது. எனவே அவர்களுக்கு வாகனச் சாரதி அனுமதிப் பத்திரமும் கிடையாது. சட்டம் அப்படி இருக்க, ஞானம் ஒரு காரை இரவு இரண்டு மணிக்கு கொழும்பில் ஓட்டிச் சென்றிருக்கின்றது. அதுவும் சட்டத்தை மீறி அசுர வேகம். வண்டி கட்டுப்பாட்டை மீறி ஒரு முச்சக்கர வண்டியுடன் மோதி விட்டது. முச்சக்கர வண்டி இலக்கம் 211865. துமிந்த என்ற முச்சக்கர வண்டிக்காரர் படுகாயம் அடைந்தார். சம்பந்தப்பட்ட பொலிஸ் கிரேன்பாஸ்.

மோதலை நடாத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தiமைறைவாகி இருக்கின்றது ஞானம். விரட்டிப் போய் பிடித்து ஆளை பொலிசுக்கு கொண்டு வந்து பரிசோதித்த போது மனிதன் கடும் மது போதையில் இருந்தது உறுதியாகி இருக்கின்றது. விவகாரம் நீதி மன்றம் கொண்டு செல்லப்பட்டு ஆளுக்குத் தண்டனையும் கிடைத்திருக்கின்றது. வழக்கு இலக்கம் 6315-2000 நீதி மன்ற வழக்கில் குற்றிவாளியாக தண்டனை பெற்றிருக்கின்றார் தேரர். இந்த விவகாரத்தில் மட்டும் எத்தனை குற்றங்களை மனிதன் புரிந்திருக்கின்றது என்று எண்ணிப் பாருங்கள். எனவே இப்படிப்பட்ட ஒரு மனிதனை யாராவது சட்டம் இயற்றுவதற்கு நியமனம் செய்வார்களா? ஆனால் நமது ஜனாதிபதி ஜீ.ஆர். அதனைச் செய்து சாதனை புரிந்திருக்கின்றார்.

இது ஆசியாவின் ஆச்சர்யமா? உலக ஆச்சர்யமா? என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. இதற்கான பின்னணி எப்படி வருகின்றது என்று பார்த்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய ஜனாதிபதியின் வெற்றிக்காக இந்த ஞானம் எட்டுநூறு (800) வரையிலான விகாரைகளில் அவருக்காக பிரச்சார போதனைகள் புரிந்ததாக தேரர் கூறுகின்றார். அதற்கு நன்றிக் கடனாக இந்த நியமனம் இருக்கக் கூடும். ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியைத் தேட வேண்டியதில்லை. முஸ்லிம்களின் அல்லாஹ்தான் சூத்திரதாரி என்று விவகாரத்துக்கு தேரர் முற்றுப் புள்ளி வைக்க தேரர் முனைவதும் குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் யாப்பு விடயத்திலும் குழப்ப நிலை ஏற்பட்டு வருதை அவதானிக்க முடிகின்றது. யாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை வெளியில் செய்து விட்டு அதற்கு அங்கிகாரத்தை பெறுகின்ற இடமாக மட்டும் நாடாளுமன்றத்தைப் பாவிக்கின்ற ஒரு திட்டமும் திறை மறைவில் நடக்கின்றது என்ற சந்தேகங்கள் இருந்து வருகின்றது. புதிய யாப்பு வரைந்த பின்னர்தான் தேர்தல்கள் வரும் என்றும் சொல்லப்படுகின்றது. எனவே மாகாணசபைத் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் நிதி அமைச்சர் பசில் நடவடிகைகள் மாகாணசபைத் தேர்தலை முன்னிருத்தித் தான் நகர்கின்றது என்று தெரிகின்றது. வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் ஒரு உள்ளாட்சி வட்டார அபிவிருத்திக்கு நாப்பது இலட்சம் ரூபாய்கள் வரை செலவு செய்ய அவர் திட்டமிட்டிருக்கின்றார். இதற்காக அவர் 71 பில்லியன் ரூபாய்கள் வரை 2022 பஜெட்டில் ஒதுக்கீடு செய்யும் எண்ணத்தில் இருக்கின்றார். அது அப்படி அமைந்தால் மாகாணசபைத் தேர்தல் விரைவில் வருகின்றது என்று அர்த்தப் படுத்திக் கொள்வதில் தவறுகள் இருக்காது.

ஆனால் ஜனாதிபதி இதற்கு ஆப்பு வைக்கவும் இடமிருக்கின்றது. பழைய விகிதாசார முறையில் தேர்தல் என்று ஆளும் தரப்பில் ஒரு குழு பேசிக் கொண்டிருக்கின்ற போது அமைச்சர் தினேஷ் ஐம்பதற்கு ஐம்பது விகிதத்தில் தேர்தல் என்றும் கூறுகின்றார். அதற்கு மைத்திரி தரப்பு சு.கட்சியும் சம்மதம் தெரிவித்திருக்கின்றது என்று தினேஷ் கூற, இது பற்றி சு.கட்சி முக்கியஸ்தர்களிடம் நாம் கேட்டால் அதற்கு தாம் ஒத்துக் கொள்ள மாட்டோம். நாம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் கூறுவது முற்றிலும் தவறு என்பது அவர்கள் பதிலாக இருக்கின்றது.

சேதனப் பசளை என்று சீனாவில் இருந்து கொண்டு வந்த பசளையில் நிறையவே குறைபாடுகள் இருக்கின்றது. அதனால் அந்த சேதனப் பசளை திருப்பி அனுப்பப்பட்டது என்று விவசாய அமைமைச்சரும் அரசாங்கமும் நமக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் அதே கப்பல் மாற்றுப் பெயருடன் மீண்டும் நமது துறைமுகத்துக்குள் நுழைவதற்கு தற்போது முயற்சிகளைச் செய்து வருகின்ற வேடிக்கைகளையும் இந்த நாட்களில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எதிராக பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. இதனால் இப்போது ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் சீனத் தூதுவர் ஊடக ஏற்றுமதி செய்த சீன நிறுவன அதிகாரிகளுடன் கொழும்பில் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை தமக்கு ஏற்றுக் கொள்ள முடியாது மூன்றாம் தரப்பு ஆயு;வு கூடமொன்றில் (சிங்கப்பூர்) இதற்கான பரிசோதனைகளைச் செய்து அதனை இரு தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சீனா நிறுவனத்தால் சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கான பரிசோதனை நிலையத்தையும் கூட சீன நிறுவனமே முன் மொழிந்திருக்கின்றது.

இதனை நமது அரசியல் தலைமைகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று நமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த விவகாரத்திலும் ஒரு டீல் நிச்சயம் நடந்திருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்படியாக இருந்தால் இதன் பின்னர் இது தொடர்பான நமது நாட்டிலுள்ள ஆயு;வு கூடங்களை அரசாங்கம் பராமறித்து அதற்குப் பணம் செலவு செய்வதும் வீண் விரயம் என்றுதான் அரசுக்கு ஆலோசனை சொல்ல வேண்டி இருக்கின்றது.

Previous Story

வாராந்த அரசியல்

Next Story

அணுர அதிரடி பசில் பஜெட் நொருங்கியது!