பொன்னியின் செல்வன்-2

“பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் வாசகர்கள் பெரும் கனவான, நாவலின் திரை வடிவத்தைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதை படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. வாசகர்கள் மட்டுமில்லாது, 2K கிட்ஸ்களுக்கும் வரலாற்றை எளிமையாக புரிந்துகொள்ள இந்த திரைப்படம் உதவியிருக்கிறது.

தமிழ் நில வரலாற்றில் பெரும் சாதனைகள் புரிந்து இன்றளவும் வியக்கும் ராஜராஜ சோழன் ’பொன்னியின் செல்வன்’ என தலைப்பிட்டு, அவரையே மையமாகக் கொண்டு அமரர் கல்கி, நாவலை படைத்திருந்தாலும், இன்னபிற கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வகையில், மிக முக்கியமான கதாபாத்திரங்கள் குந்தவை மற்றும் நந்தினி. அறிவும் அழகும் ஒருசேர அமைந்த இந்த கதாபாத்திரங்கள் வாசிக்கும்போதே மனதை கிறங்கடிப்பவை, அது த்ரிஷாவாகவும், ஐஸ்வர்யாராயாகவும் இன்னும் ஒருபடி மேலே அழைத்துச் சென்று ரசனையில் லயிக்க வைத்திருக்கிறது.

சுந்தர சோழனின் மகள் குந்தவை. ஆதித்த கரிகாலனின் தங்கையாகவும், அருள்மொழி வர்மனுக்கு தாய்க்கு நிகரான அக்காவாகவும் விளங்கியவள். சோழ பேரரசின் பேரழகி, பெரும் புத்திசாலி.

அறிவும் அழகும் மட்டுமல்ல அன்பிலும் தலைச்சிறந்தவள் இளவரசி குந்தவை. ஒருபுறம், வயது முதிர்வில் இருக்கும் சுந்தர சோழருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

சோழ தேசத்தையே புறக்கணித்து போர், போர் என வாளேந்தும் அண்ணன் ஆதித்த கரிகாலன் மீது குன்றா பாசத்தை சுமக்க வேண்டும், நாடு கடந்து சோழர்களின் நற்புகழ் நாட்டும் தம்பி அருண்மொழி வர்மன் மீது அன்பை சுரக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, அரசியல் ஆலோசனைகள் வழங்கி நாட்டை காக்கும் இன்றியமையாத பணிகளும் பங்கெடுக்க வேண்டும். அந்த அத்தனை பொறுப்புகளையும் சுமந்து சிறப்பித்திருப்பார் குந்தவை பிராட்டி.

ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணிப்பதிலும் பெரும்பங்காற்றியவர் குந்தவை என சொல்லப்படும் அதே நேரம், சோழ அரசின் நிர்வாக முடிவுகளில் சரியான ஆலோசனைகள் வழங்கிய சிறந்த இளவரசி குந்தவை தேவி எனவும் குறிப்பிடப்படுகிறது.

எதிர்கால அரசியல் நிகழ்வுகளை எல்லாம் கணித்தே, ஒன்றே ஆதித்த கரிகாலனை நந்தினியையும் பிரிக்க நினைப்பதும், அருண்மொழி வர்மனை சோழ தேசம் அழைக்க வந்தியதேவனை இலங்கைக்கு அனுப்பி வைப்பதுமான முடிவுகளை எடுக்கிறார் குந்தவை. அது பெரும் பிரச்னைகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் அரசியல் ரீதியாக அந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணரும் வகையிலேயே அந்த பாத்திரம் கல்கியால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மணிரத்னம், திரைக்கதை சுவராஸ்யத்துக்காக சில காட்சிகளை நீக்கியிருந்தாலும் அந்த கதாபாத்திர திண்மை மாறாமல் வலுவாகவே இருக்கிறது.

எப்போதும் அழிக்கத் துடிக்கும் வல்லமையோடு நடமாடும் நந்தினியின் அத்தனை சூழ்ச்சிகளையும் அறிந்து, அதனை முறியடிக்கும் பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பும் குந்தவைக்கு எப்போதும் இருந்தது. இந்தப் பணிகளை எல்லாம், சுதந்திரமாக செயல்பட்ட ஒரே காரணத்தாலேயே குந்தவையால் திறம்பட கவனித்துக் கொள்ள முடிந்தது.

ஆதித்த கரிகாலன் நந்தினியின் அழைப்பை ஏற்று கடம்பூர் மாளிகை சென்றால், அவனுக்கு பேராபத்து என்பதை உணர்ந்தே, சூடாமணி விவகாரத்தில் வேண்டாம் என மன்றாடுவார் குந்தவை. வந்தியத்தேவனை அழைத்து, அவர் அறிந்த துப்புகளை ஆதித்தனிடமும் சொல்லச் செய்வார், ஆனால், ஏற்கெனவே நந்தினியும், தானும் பிரிய குந்தவைக்கும் பிரதான பங்குண்டு என எண்ணும் கரிகாலன் கடம்பூர் செல்வார். பிணமாகவே தஞ்சாவூர் திரும்புவார்.

பொன்னியின் செல்வன் 2

குடும்பத்தையும் அரசையும் திறமையுடன் கவனித்த இளவரசி குந்தவையின் கதாபாத்திரம் காதலில் கைதேர்ந்தவராக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வந்தியத்தேவனை கண்ட கணம் முதல், அன்புச் சேட்டைகள் மூலம் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுவார் குந்தவை.

நாவலில் வார்த்தைகளாகவே வசீகரித்த, அவர்கள் இருவருக்குமான காதல், திரைப்படத்தில் இன்னும் ரசிக்க வைக்கிறது.

அருண்மொழி இறந்துவிட்டார் என எல்லோரும் நம்பிவிட்ட சூழலில், அவரை பெளத்த பிட்சுகள் கண்காணிப்பில் விட்ட வந்தியதேவன், குந்தவைக்கு தகவல் சொல்ல பழையாறைக்கு வருவார். கண்கள் கட்டப்பட்ட நிலையில், கையில் வாளுடன் சந்திப்பார் குந்தவை நாச்சியார். ஏ.ஆர். ரஹ்மான் இசையும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் குந்தவைக்கு மெருகு கூட்ட, அழகில் மிளிர்வார் குந்தவை.

“இவ்வளவு அறிவும், பேரழகும் ஒருங்கே வாய்ப்பது சாத்தியமா என ஒவ்வொருவரையும் கேள்வி கேட்க வைக்கிறது,” அந்தக் காட்சி.

காதல் மட்டும்தான் காரணமா என்றால், அதுமட்டுமில்லை. மற்ற இளவரசிகளை திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீடு செல்லாமல், சோழ தேசத்திலேயே இருக்க வேண்டும் என்கிற இன்னொரு நோக்கமும் வந்திய தேவன் மீது காதல் வர இன்னொரு காரணமாக இருந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்

அந்தளவிற்கு சோழப் பேரரசின் மீது அதீத அன்பு கொண்டவராக திகழ்ந்திருக்கிறார் இளவரசி குந்தவை. சோழ நாட்டிற்குப் பல நன்கொடைகளை வழங்கி பல கோயில்கள் கட்டுவதற்குக் காரணமாக இருந்ததோடு, மருத்துவ பணிகளிலும் பெருபங்காற்றியிருக்கிறார்.

தனது வாழ்க்கை முழுக்க தம்பி அருள்மொழி வர்மனையும், சோழ பேரரசையும் இரு கண்களென காத்து, பெரும் ராஜ தந்திரங்களுடன் செயல்பட்டிருக்கிறார் குந்தவை.

‘சோழ பேரரசின் பேரழகி’ என புகழப்படும் குந்தவை நாச்சியாருக்கு ஒருபடி மேலே, கண்போரை கவர்ந்திழுக்கும் அழகியாக விளங்கும் கதாபாத்திரம் நந்தினியுடையது.

பொன்னியின் செல்வன் நாவலுக்கென அமரர் கல்கியின் கற்பனையில் வார்க்கப்பட்ட பிரத்யேக கதாபாத்திரமான இதன் கண்களில் எப்போதும் மிளிரும் சூழ்ச்சியும், உடலெங்கும் மிளிரும் கம்பீரமும் வாசகனுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடியது.

பேரழகி, கூர் மதி, ஆழ்வார்க்கடியான் நம்பியின் வளர்ப்புத் தங்கை, ஆதித்த கரிகாலனின் காதலி, பெரிய பழுவேட்டரையரின் ஆசை மனைவி, பழுவூர் ராணி என அதிகாரத்தின் மீதான போதையை ஒருவர் ருசித்து விட்டால், அந்த வேட்கை எப்போதும் விடாது என்பதை நிறுவும் வகையிலேயே நந்தினி கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருப்பார் கல்கி.

ஆனாலும், அத்தனை வஞ்சத்தையும் மீறி நாவல் நெடுக துயரத்தையும் சுமந்தபடியே இருப்பாள் அவள்.

கல்கி படைத்த நந்தினியை, இம்மி பிசகாமல் திரையில் உலவ வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

நந்தினி இப்படித்தான் இருப்பார் என வாசிப்பின்போது தோன்றிய எல்லா அம்சங்களும் பொருந்தும் ஐஸ்வர்யா ராயை, நந்தினி கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி கண்ட படக்குழு, அவர் திரையில் தோன்றியதும் மீதியையும் வசமாக்கிக் கொண்டுள்ளது.

அதிலும், கதை முழுக்க எதிரெதிர் துருவங்களாக இருக்கும் குந்தவையை சந்திக்கும் காட்சியில் நந்தினியின் கண்களில் தெரியும் குரோதமும் அந்த கதாபாத்திரத்துக்குள் உள்ள ஒட்டுமொத்த வஞ்சத்தையும் வெளிப்படுத்திவிடும்.

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் தீராத அதிகாரப் போர் பகை, வயோதிகத்தால் மரணப் படுக்கையில் கிடைக்கும் சோழப் பேரரசர் சுந்தர சோழருக்கு அடுத்து அரியணை ஏற நடக்கும் சூழ்ச்சிகள், என அதிகார யுத்த களத்திற்கு நடுவே பெண்ணொருத்தி சிம்மாசனம் ஏறத் துடிக்கிறாள்.

“ஏற்கனவே பெரும் கங்கென (எரியும் விறகுக்கட்டை) சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அவளது பழைய பகை தீகூட்ட, அவளது ஒவ்வொரு செயலிலும் அரசியல் பற்றி எரிகிறது.”

பொன்னியின் செல்வன் பகுதி 2

நந்தினி கதாபாத்திரமே மர்மங்கள் நிறைந்தது. அந்த மர்மங்களுக்கான பதில்கள் அழ்வர்க்கடியான் நம்பி, வந்தியத் தேவன் மூலம் நாவலின் போக்கில் பயணிக்க பயணிக்க கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும். இந்தக் கதாபாத்திரம் நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கோணத்திலும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட மர்மம் நிறைந்த கதாபாத்திரமாகவே இருக்கும்.

அழ்வார்க்கடியான் நம்பி சொல்லும் நந்தினி, வயது முதிர்ந்த சோழ தேசத்தின் முக்கிய அமைச்சரான பழுவேட்டரையரின் ஆசை மனைவியாக ‘ஆதாய அடைக்கலம்’ தேடிய பெண்.

ஆழ்வார்க்கடியான் நம்பியின் தங்கை. ஆனால், வந்தியத் தேவன் சந்திக்கும் நந்தினி பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து பெரிய பழுவேட்டரையரை தன்வசமாக்கி அதன்மூலம் சோழ பேரரசை அழித்துப் பழிதீர்க்கத் துடிக்கும் ராஜதந்திரம் நிறைந்தப் பெண். இப்படி நந்தினி கதாபாத்திரம் ஒரு மர்மம் நிறைந்ததாகவே கதை நெடுக உலவுகிறது.

உண்மையில், நந்தினி கதாபாத்திரத்தை நல்லது, கெட்டது எனும் வரையறைக்குள் அடக்க முடியாது. பிறந்தது முதலே ஏமாற்றங்கள், வஞ்சம், சூழ்ச்சி என எதிர்மறை சம்பவங்கள் பலவற்றை சந்தித்ததாலேயே நந்தினி இப்படியாகி விட்டாளோ என வாசகனுக்கு தோன்றும். அதை திரையிலும் காண முடிகிறது.

இது, கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கான தொடக்கத்தையும் முடிவையும் கல்கியும், மணிரத்னமும் அவரவர் விருபத்துக்கு வரையறுத்து இருக்கிறார்கள்.

அதன்படி, நந்தினி ஒரு ஆதவற்றவராக நதிக்கரையின் அருகில் உள்ள நந்தவனத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பியின் பெற்றோர்க்குக் கிடைக்கிறாள்.

அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால் ‘நந்தினி’ என்று பெயர் சூட்டப்படுகிறாள். பின்னர், ஆழ்வார்க்கடியானின் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு ஆழ்வார்க்கடியான் தனது வளர்ப்புத் தங்கையாக நந்தினியை வளர்க்கிறார்.

சிறுவயதில் தஞ்சையின் பழையாறையில் வளர்ந்த நந்தினியை சோழ இளவரசரான ஆதித்த காதலிக்கிறார். பிறகு நந்தினிக்குள்ளும் காதல் மலர்கிறது. அதனால், சோழ தேசத்திலிருந்து வெளியேற்றப்படும் நந்தினி, பாண்டிய மன்னரால் வளர்க்கப்படுகிறார்.

பிற்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போரில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை ஆதித்த கரிகாலன் துண்டாக வெட்டி சோழ தேசம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்கிறார்.

இதன் காரணமாக சோழ ராஜ்ஜியத்தை அழித்துப் பழிதீர்க்கும் எண்ணத்தில் தனது பேரழகையும், அறிவு கூர்மையையும் ஆயுதமாகப் பயன்படுத்தி பலரை தன் வலையில் சிக்க வைத்து, பாண்டிய ஆபத்துதவிகள் மூலம் பல ராஜதந்திர செயல்களில் ஈடுபடுகிறார்.

ஆனாலும், ஆதித்த கரிகாலன் மீதான் காதல் நந்தினியின் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. அதனால், வாள்முனையை அவன் நெஞ்சில் வைத்தும், அவனை கொல்ல முடியாமல் தவிக்கிறாள். இதனால், நந்தினி நல்லவளா, கெட்டவளா என எளிதில் வாசகனாலோ, பார்வையாளனாளோ பதில் சொல்லிவிட முடியாது.

பொன்னியின் செல்வன் பகுதி 2

உண்மையில், பொன்னியின் செல்வன் கதையில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் இருந்தாலும், குந்தவைக்கும், நந்தினிக்கும் ஏற்படும் உளவியல் மோதல்தான் ஒட்டுமொத்த பிரச்னையையும் உருவாக்கி கதையை நகர்த்தும் காரணி.

ஆதித்தனை காதலிக்கும் நந்தினி மீது குந்தவைக்கு குரோதம் ஏற்படாமல் இருந்திருந்தால், நந்தினிக்கு சோழ தேசத்தின் மீது இவ்வளவு விரோதம் எழுந்திருக்காது.

ஆனால், அரசியல் வலையில் சிக்குண்டிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுமே அரசியல் சார்ந்தே முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை கதை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆனாலும், நாவல் எழுதிய காலகட்டத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், அத்தனை சுதந்திரமாக படைக்கப்பட்டிருக்கும் குந்தவை, நந்தினி கதாபாத்திரங்கள் “இப்படியும் கூட இவர்கள் வாழ்ந்திருப்பார்களா” என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு எப்போதும் ஆச்சரியம் தருபவர்களாகத் தோன்றுகின்றனர்.

Previous Story

6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு...80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்

Next Story

சம சமாஜ தலைவர் ஓட்டம்!