பொன்னியின் செல்வன் பட காட்சிகள்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படம் ஆகியிருக்கிறது. இந்த முதல் பாகத்தில், நாவலில் இருந்து எந்த அளவுக்குப் படம் விலகியிருக்கிறது?

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படம் ஆகியிருக்கிறது. இந்த முதல் பாகத்தில், நாவலில் இருந்து எந்த அளவுக்குப் படம் விலகியிருக்கிறது?

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகிவிருக்கும் நிலையில், முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ நாவல் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதில் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் கடலில் மூழ்குவது இரண்டாம் பாகத்தின் இறுதியில் நடக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் அந்தக் காட்சியோடு முடிவுக்கு வந்திருக்கிறது. மீதமுள்ள மூன்று பாகங்களின் கதை அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் – 2ல் இடம்பெறும்.

தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தில் இந்த முதலிரண்டு பாகங்களில் உள்ள கதை வெகுவாக சுருக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சில காட்சிகள் மாற்றப்பட்டும் உள்ளன.

1. கதையின் துவக்கம்: நாவலில் கதையானது, வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் ஓலையோடு வீராணம் ஏரிக் கரை மீது பயணம் செய்வதாகத் துவங்கும். திரைப்படத்தில் ராஷ்டகூடர்களுடனான போருடன் துவங்குகிறது. ஓலைக்குப் பதிலாக தனது வாளைக் கொடுத்து வந்தியத்தவேனை அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.

2. கடம்பூர் மாளிகைச் சதி: நாவலைப் பொறுத்தவரை, வந்தியத்தேவன் தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் மாளிகையில் தங்கும்போது எதேச்சையாக ஆதித்த கரிகாலனுக்கு எதிராக பெரிய பழுவேட்டரையர் செய்யும் சதி தெரிய வருகிறது. ஆனால், திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனே கடம்பூரில் சதி நடக்கவிருப்பதாகக் கூறுகிறான்.

3. குடந்தை ஜோதிடர்: பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு முக்கியமான பாத்திரம் குடந்தை ஜோதிடர். இவரிடம் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் ஜாதகமும் இருக்கும். இந்த ஜோதிடரின் இல்லத்தில்தான் குந்தவையும் வந்தியத்தேவனும் பார்ப்பார்கள். ஆனால், திரைப்படத்தில் இந்தப் பாத்திரம் வரவேயில்லை. திரைப்படத்தில் குந்தவைக்கும் வந்தியத்தேவனும் இடையிலான முதல் சந்திப்பு பழையாறையில் நடக்கிறது.

4.முத்திரை மோதிரம்: நாவலில் நந்தினியிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறும் வந்தியத்தேவன், தஞ்சாவூர் கோட்டைக்குள் மரியாதையாக உள்ளே அனுமதிக்கப்படுவான். ஆனால், திரைப்படத்தில் முத்திரை மோதிரத்தைக் காட்டியும் வீரர்கள் அவனைக் கட்டிப்போட்டுவிடுகிறார்கள்.

5. சுரங்கப் பாதையில் கந்தமாறன் மீது கொலை முயற்சி: நாவலைப் பொறுத்தவரை நந்தினியின் அரண்மனையிலிருந்து அவனாகத்தான் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்து தப்புவான். சுரங்கப் பாதைக்குள் சென்ற பிறகு, அந்த சுரங்கப் பாதையில் வைத்து சம்புவரையரின் மகனான கந்தமாறன் முதுகில் குத்தப்படுவதைப் பார்த்து, அவனைக் காப்பாற்றுவான். அந்தப் பழி வந்தியத்தேவன் மீதே விழும். ஆனால், திரைப்படத்தில் நந்தினியே அவரை சுரங்கப்பாதையில் அனுப்பிவைக்கிறாள். கந்தமாறன் மீதான தாக்குதல் சம்பவம் படத்தில் இல்லை.

6. பூங்குழலி அறிமுகம்: நாவலில் பூங்குழலியை வந்தியத்தேவன் கோடிக்கரையில் சந்திப்பான். அவளிடம் பேசி வலியுறுத்தி, அவளுடைய படகில் தன்னை இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுவான். அப்படித்தான் இருவரும் அறிமுகமாவார்கள். திரைப்படத்தில், திடீரென பூங்குழலி பாத்திரம் அறிமுகமாகிறது. எப்படி இருவரும் சந்தித்தார்கள் என்பது இல்லை.

7. சிற்றரசர்களுடன் குந்தவை சந்திப்பு: பழுவேட்டரையரின் மாளிகையில் சிற்றரசர்களைச் சந்திக்கும் குந்தவை, அவர்களைச் சஞ்சலப்படுத்துவதற்காக, தன் சகோதரர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கவிருப்பதாகக் கூறுவாள். தங்கள் வீட்டுப் பெண்ணை இளவசர்களுக்குக் கொடுக்கலாமே என்று எண்ணி சிற்றரசர்கள் யோசிப்பார்கள். இப்படி ஒரு காட்சி திரைப்படத்தில் வருகிறது. ஆனால், நாவலில் அப்படியான தருணம் ஏதும் கிடையாது.

8. அருள்மொழிவர்மனைக் காப்பாற்றுவது யார்?: நாவலில் இலங்கையிலிருந்து புறப்படும்போது ஒரு கப்பலில் ஏறி, அந்தக் கப்பல் தீப்பிடித்து விட, வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் கடலில் மிதப்பார்கள். அப்போது அங்கு வரும் பூங்குழலி அவர்களைக் காப்பாற்றுவாள். திரைப்படத்தில் இதுதான் உச்சகட்ட காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாய் பேச முடியாத, நந்தினியின் சாயலில் உள்ள மந்தாகினிதேவியே இவர்களைக் காப்பாற்ற முயல்வதாக காட்டப்படுகிறது.

9. பழையாறை: நாவலில் குந்தவை பழையாறையில் வசிக்கிறாள். பழையாறை என்பது அரசிலாறு, முடிகொண்டான் ஆறுகளுக்கு இடையில் உள்ள ஒரு சிறு நகரம். ஆனால், திரைப்படத்தில் ஒரு பிரமாண்டமான ஆற்றின் கரையில் உள்ள பகுதியாக இது காட்டப்படுகிறது. அதேபோல, இலங்கையும் கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான மலைகளை உடைய பகுதியாகக் காட்டப்படுகிறது. ஆனால், நாவலில் வரும் யானையிறவு, தொண்டைமானாற்று முகத்துவாரம் போன்றவை, தமிழக கடலோரப் பகுதிகளைப் போன்றவை.

Previous Story

ஆக்கிரமித்த இடங்கள்: ரஷ்யாவோடு இணைகுக்ம் புதின்

Next Story

டவுனுக்கு அமைச்சராகும் கோட்டா!