பேரழிவுச் சேற்றில் ஜனாதிபதி அனுர சிக்கிக்கொள்வாரா!

நஜீப் பின் கபூர்

நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்

பேரழிவுகளை யதார்த்தமாக பேசுவோம் பார்ப்போம்.!

இந்து.-பாக். உறவும் கண்டிய நகரசபை மூர்க்கமும்.!

A woman carries a child as she wades through a flooded street after heavy rainfall in Wellampitiya, Sri Lanka, on November 30. Photo: AFP

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முழு நாட்டையும் ஆட்டிப்படைத்த மழையும் அதன் கோர முகத்தையும் நாம் பார்த்தோம். அது சர்வதேச தலைப்புச் செய்தியாகவும் அமைந்திருந்தது.

Cyclone Ditwah

இந்த இயற்கை அனர்த்தத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்ற அசிங்கங்கள் இப்போது மேல் மட்டம் முதல் கீழ் மட்டங்கள் வரை பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. அவை அப்படி இருக்க இந்த இயற்கை அனர்த்தங்கள் பற்றி நமக்கு இப்படி ஒரு கருத்து இருக்கின்றது.

என்னதான் உலகம் விஞ்ஞானத்தில் உச்சத்தை எட்டிப்பிடித்தாலும் இந்த இயற்க்கை அனர்த்தங்களில் இருந்து மனிதனால் முற்றுமுழுதாக தன்னை விடுவித்தக் கொள்ள முடியாது.

பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்கின்ற வரை அதற்கு அவன் முகம் கொடுத்தே ஆகவேண்டும். ஆனாலும் மனிதனது அறிவியல் சேதங்களை ஓரளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள உதவ முடியும், அவ்வளவுதான்.

இதனை இயற்கையின் தாண்டவம் என்று சொல்வதாக அல்லது கடவுள்களின் எச்சரிக்கைகளா என்றும் நமக்குத் தெரியாது.

A man carries another man, who wears a red and yellow striped shirt, through brown floodwater. Many other people wade in the background.

அனைத்து மக்களும் இனங்களும் தான் பின்பற்றுகின்ற கடவுள்கள் மீது அதித நம்பிக்கை வைத்திருப்பதால் அந்த உன்னத சக்திதான் இயற்கை அழிவுகளில் மென்போக்கை கடைப்பிடிப்பதா அல்லது கடும்போக்கில் நடந்து கொள்வதா என்பதனைத் தீர்மனிக்க வேண்டும்.

இது கடவுள்களை கிண்டல் பண்ணுவது என்று எவரும் எடுத்தக் கொள்ளக் கூடாது. பிரபஞ்ச ஆளுகையில் ஏதோ ஒரு பலமான சக்தி இயக்கிக் கொண்டுதான் இருக்கின்றது அதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது என்பதனையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நாட்டில் நடந்த இந்த இயற்கை அனர்த்தங்கள் பற்றிய புள்ளி விபரங்களை நாம் இங்கு பட்டியலிடப்படப்போவதில்லை. அவைபற்றி நிறைய தகவல்கள் மக்களுக்கு ஏற்கெனவே சென்றடைத்திருக்கின்றன.

இயற்க்கை அனர்த்தங்கள் என்பது  இயல்பு வாழ்கையில் மனித செயல்பாடுகளுக்கு அப்பால்பட்ட ஒரு சக்தியின் தாக்கத்தால் ஏற்படுகின்ற அழிவுகள் என்று சொல்ல முடியும். அல்லது இதற்குச் சமாந்திரமான கருத்துக்கள் மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கவும் முடியும்.

இது சுனாமி பூகம்பம் மழை வெள்ளம் வரட்சி சூறாவளி கொடிய நோய்கள் என்று கூட அமையலாம். அல்லது நாம் இதுவரை உச்சரிக்காத ஒரு நாமத்தில் கூட அது வரலாம்.

இந்த இயற்கை அனர்த்தங்களுக்கு மனித செயல்பாடுகளும் காரணமாக அமைந்து விடுவதும் உண்டு. இப்போது உலகில் நடைபெற்ற மிகப்பெரும் அழிவுகள் என்று பார்த்ததால் பூகம்பம் காரணமான உலகில் பல நாடுகளில் இலட்சக்கணக்கான உயிர்கள் ஒரு நொடியில் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கின்றன.

அப்படி நீண்ட பட்டியல்களும் இருக்கின்றன. வரலாற்றுக்காலங்களில் கூட இப்படியாக அழிவுகள் நிகழ்ந்து வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

மழை வெள்ளம் என்று எடுத்துக் கொண்டால் சீனாவில் 1931ல் கடும் மழையால் ஹூவங்கோ அல்லது மஞ்சல் நதி பெருக்கெடுத்ததால் இருபத்தி ஐந்து (25) இலட்சம் போர் மரணித்திருக்கின்றார்கள். இயற்க்கை அழிவுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

Hundreds Killed After Cyclone in Sri Lanka, Officials Say

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் கூட இப்படியான அழிவுகள் நிறையவே நடந்து வந்திருக்கின்றன. எனவேதான் நாம் முன்பு சொன்னது போல இந்த இயற்கை அழிவுகளை விஞ்ஞானத்தால் இன்று வரை வெற்றிகொள்ள முடியாது போய் உள்ளது. இந்த யதார்த்தத்தை முதலில் மனித குலம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுனாமி வந்து பல்லாயிரம் பேர் ஒரு சில நொடியில் இறந்த போது அன்று கடலில் இருந்து முன்னூறு மீட்டர் தூரத்தில்தான் இதன் பின்னர் கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் இருந்தது.

இது எந்தளவுக்கு நகைச்சுவையானது. இது இன்று நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அமுல்படுத்தக் கூடிய ஒன்றுதானா என்றும் சிந்திக்க வேண்டும். இது பற்றி யாராவது இன்று பேசுகின்றார்களா? அப்போ இங்கு சீனா கடலுக்குள்லேயே துறைமுக நகரை அமைக்கின்றதே.!

இன்று நடந்துள்ளது மழை வெள்ளம் அதனால் ஏற்பட்ட மண்சரிவு மரணங்களை சேதங்களை வைத்து பல்வேறு தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அழிவு முன்கூட்டி தெரிந்திருந்தது அதனை அரசு தடுக்கத் தவறிவிட்டது என்று ஒரு தர்க்கம் எதிர்த் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.

இது எந்தளவு யதார்த்தமானது அறிவியல் சார்ந்தது. இது மக்களை அரசுக்கு எதிராக தெருவில் இறக்கிவிடுகின்ற ஒரு முயற்சியாகத்தான். இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் நிராகரிப்பார்கள் என்பதெல்லாம் அவர்களின் அறிவியல்சார்ந்த விவகாரமாகவே நாம் பார்க்கின்றோம்.

பல வருடங்களுக்கு முன் நமக்கு இந்த  இந்த இடங்களில் வசிக்க வேண்டாம் என்று சொல்லித்தான் இருந்தார்கள் என்று சொன்னவர்களும் இருக்கின்றார்கள். நமக்கு அதிகாரிகள் அப்படிக் காட்டிய இடங்களில் சில இடங்களில் அப்படி எதுவுமே பாதிப்புக்கள் நடக்கவில்லை.

நாம் எதிர்பார்க்காத அரசாங்கம் சிவப்பு எச்சரிக்கை செய்யாத இடங்களில்தான் இந்த அழிவுகள் நடந்திருக்கின்றது என்று சொல்கின்றவர்களும் இவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எந்த நேரத்தில் எங்கு ஏது நடக்கும் என்ற தகவல்களை மிகச்சரியாக இதுவரை உலகில் எங்கும் சொல்வது கிடையாது. திடீரென்று ஒரு இரவில் அல்லது நேரத்தில் பூமி பிளந்து மண்ணுக்குள் புதைந்து பல இலட்சம் பேர் மரணிக்கின்ற பேரழிவுகளும் நிறையவே நடந்திருக்கின்றது எதிர்காலத்திலும் அது அப்படித்தான் அமையும்.

இப்போது நடந்து முடிந்திருக்கின்ற பேரழிவு பற்றிப் பேசுவதாக இருந்தால் நமது வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்ற மிகப் பெரிய அழிவாக இது பார்க்ப்படுகின்றது. 2004ல் நடந்த சுனாமியை விட இது ஐந்து ஆறு மடங்கு அதிக சேதங்கள் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் மனித இறப்புக்கள் என்று பார்த்தால் சுனாமிதான் முதலிடம். இறப்புக்கள் முப்பதாயிரம் வரை. இன்று இறந்தவர்கள் காணாமல் போய் இருக்கின்றவர்களையும் வைத்துப்பார்க்கின்ற போது இது ஒன்பதுநூறு (900) வரைதான் என்று நாம் கணக்குப்பார்க்க முடியும்.

என்னதான் இன்று அபிவிருத்தி அடைந்த சீனா ஜப்பான் அமெரிக்க போன்ற நாடுகள் மலைகளைக் குடைந்து விமானங்கள் பறக்கின்ற வேகத்துக்கு சமந்திரமான ரயில் சேவைகளை பூமியிலும் கடலிலும் அமைத்துக் கொண்டிருக்கின்றன.

டுபாயிலிருந்து கடலுக்கடியில் மும்பாய் வரை ஒரு ரயில் சேவைக்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இது எந்தளவுக்கு பாதுகாப்பானது உத்தரவாதமானது என்பது ஒரு பேரழிவில்தான் சிந்திக்கப்படலாம் என்ற ஒரு நிலையும் இருக்கின்றது.

நாம் முன்பு சொன்ன இயற்கை அல்லது கடவுள்கள் இது போன்ற நவீனத்துவங்களுக்கு எந்தளவு பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கொடுப்பார்கள் என்றும் நாம் ஒரு கேள்வியை மீண்டும்  எழுப்பி வைக்கின்றோம்.

நீ என்னுடனா விளையாட வருகின்றார். இதே பார் எனது வல்லமையை என்று இயற்கையோ-கடவுளோ வன்முறையாக நடந்து கொள்ளாது என்பதற்கு என்னதான் உத்தரவாதம் இருக்கின்றது.?

இப்போது அரசியலுக்கு வருவோம். நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற பேரழிவுச் சேறும் ஜனாதிபதி அனுரவின் அரசியல் எதிர்காலமும் என்பது பற்றி நமது பார்வையைச் செலுத்துவதாக இருந்தால் இது மிகவும் சவால் மிகுந்த ஒரு கேள்விதான்.

சேதம் மிகவும் கொடூரமானது அதனைச் சீர்செய்து நாட்டை மீட்டெடுப்பது என்பது மிக மிக சிரமமான ஒரு பணி. ஜனாதிபதி அனுர ஒரு அசாதாரண ஆளுமையாக இதுவரை பார்க்கப்பட்டாலும் பேரழிவு அவருக்கு மிகப் பெரிய பலப் பரீட்சையாக வந்திருக்கின்றது.

Sri Lanka: Latest News and Updates | South China Morning Post

அத்துடன் மக்கள் எந்தளவுக்கு அவருடன் இந்தப் பயணத்தில் இருப்பார்கள் ஒத்துழைப்பார்கள் என்பதும் நாம் முன்பு சொன்ன கடவுளுக்குத்தான் தெரியும். அது கூட இயற்கையின் தீர்மானம் என்றும் எடுத்துக் கொள்ள முடியும்.?

பகிஸ்தான் விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா பகிஸ்தான் என்பன உலகில் மிகவும் வைராக்கியம் மிகுந்த நாடுகளாக மாறின. அவையும் அப்படித்தான் நடந்து கொண்டும் வருகின்றன. விளையாட்டில் கூட கைலாகு கொடுக்க மறுப்பவர்கள் நமது துயரங்கள்-அனர்த்தங்களைக் கண்டு ஆடிப்போய் இருக்கின்றார்கள்.

இந்திய இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தான்  விமானங்களுக்கு தனது ஆகாய வெளியை திறந்து விட்டிருக்கின்றது என்றால் அந்த மனித நேயத்தை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.!   ஆனால் இங்கு அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக எப்படி எல்லாம் நடந்து கொண்டு வருகின்றார்கள்.?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கண்டி மாநகர சபையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செயலகத்தை மூடு என்று அங்குள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வம்பு பண்ணுவதை இந்திய-பகிஸ்தான் செயல்களுடன் ஒரு முடிச்சுப்போட்டுப்பாருங்கள்.!

Kandy Town Hall - Wikipedia

அனுர தலைமையிலான என்பிபி அரசு தனது ஓராண்டு பூர்த்தியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்தது. எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அது தனது வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றது. இதனால் அவர்களுக்கு நிறையவே அரசியல் எதிரிகள்.

அவர்கள் அனைவரும் போல இன்று ஓரணியில் இணைந்துள்ளனர். பொருளாதார ஸ்தீர தன்மையை நோக்கிப்பயணித்துக் கொண்டிருப்பதற்கு ஆதாரமாக இந்த 2026 வரவு செலவுத்திட்டத்தில் அரசு ஒரு ரில்லியன்களை கையிருப்பில் வைத்திருந்தது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்து நாம் அறிந்ததே.

மறுபுறத்தில் போதைக்கு எதிராக ஜனாதிபதி மாபெரும் போரொன்றைத் துவங்கி இருந்தார். அத்துடன் கள்வர்களும் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் என்றெல்லாம் செயல்பாடுகள். அது பற்றி விசாரணைகள் நீதி மன்றங்களில் போய்க் கொண்டிருந்தன. ஆனால் அவை இன்னும் பூரணமடையவில்லை.

அரசியல் தேவைகளுக்கான படுகொலைகள் தனிநபர் கொலைகள் தொடர்பான தேடல்களும் நடந்து வருகின்றன. ஊழலுக்குப் பழகிப்போன  அரச நிருவாகிகளை தூய்மையான சேவைகளுக்குக் கொண்டு வருது, போதை மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய படைத்தரப்பினரை வைத்துக்கொண்டு அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளிலும் ஜனாதிபிதிக்கு நிறையவே சவால்கள் இருக்கின்றன.

People use a boat to navigate a flooded street in Colombo, Sri Lanka, Saturday, Nov. 29, 2025. (AP Photo/Eranga Jayawardena)

காலநிலை முன்னறிப்புக்களை நவீன மயப்படுத்துவது தொடர்பான ‘டொப்லர்’ என்ற ஒரு இயந்திரத்தை கொள்வனவு செய்ய 2016ல் கெபினட் அங்கிகாரம் வழங்கி இருந்தது. அதற்கு அந்த அரச காலத்தில் பணம் செலவு செய்யப்பட்டிருக்கின்றது.

அதன் மூலம் புயல் காலநிலை மாற்றங்களை முன்கூட்டித் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும்.? இதற்கு வெளிநாட்டு உதவிகளும் கிடைத்திருக்கின்றன.

கொழும்புத் துறைமுகத்திற்கு அதற்காகச் சில இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அது முறையாக உரிய இடங்களுக்குக் எடுத்துச் செல்லாததால் வழியில் தெருவில் விழுந்து உடைந்து போனது. இதற்காக ஐந்து கோடி வரை செலவானது. இயந்திரக் கொள்வனவுக்கான ஏற்பாடு முதலில் மஹிந்த காலத்தில் நடந்திருந்தது.

2014ல் அமெரிக்காவில் வங்குரோத்துக் காரணமாக மூடப்பட்ட ஒரு நிறுவனத்திடமே இதனை அன்றைய அரசு கொள்வனவு செய்தது.! அது எப்படி சாத்தியம்? இயந்திரம் கொண்டு வரப்படும் போது மைத்திரி-ரணில் (2016) ஆட்சி.

உடைந்து போன இயந்திரத்தை திருத்த அது மீண்டும் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அது திரும்பி வரவே இல்லை. அந்த நாட்களில் அதற்கு செலவு செய்யப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

அதற்குப்பின்னர் ஜப்பான் இப்படியான இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்க முன்வந்தது. அதனை அந்தக் காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் பெற்றுக் கொள்ள எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.

அது புத்தளம் மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் பொறுத்துவதாகவும் இருந்தது. இது பற்றி  எந்தப் பதிவுகள் (இன்வென்றி) எங்கும் இல்லை. எனவே என்ன நடந்திருக்கின்ற என்பதனைப் புரிந்து கொள்ள முடியும். அவை அன்று உரிய முறையில் அமைக்கப்பட்டிருக்குமாக இருந்தால் சேதங்களைக் குறைத்திருக்கலாம் என்றும் தர்க்கிக்க முடியும்.?

பேரழிவில் போக்குவரத்து பல இடங்களில் தூண்டிக்கபட்டிருக்கின்றது. உள்நாட்டில் பல இடங்கள் தீவுகள் போல மாறி இருக்கின்றது. தீவுக்குக்கூட படகு சேவை இருக்கும். இங்கு அப்படியும் நுழைய முடியாது. இன்றுவரை பல இடங்களில் இந்த நிலை. பல இடங்களில் புதிதாக பாதைகளை போட வேண்டிய நிலை.

இன்னும் சில இடங்களில் சீரமைப்புக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுகின்றது. இதில் பிரதான பாதைகள், உள்ளூர் பாதைகள், புகையிரதப்பாதைகள் என்பனவும் அடங்கும்.

உணவு உற்பத்தி பெரும் சேதத்தில் இருக்கின்றது. விவசாயிகளின் வருமானம் இழக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழி செய்ய வேண்டும்.

நம்பிக்கையுடன் வளர்ந்து வந்த உல்லாசப் பிரயாணத்துறையிலும் எதிபார்த்த இலக்கை அடைவதில் நிறையவே இந்தப் பேரழிவு தாக்கங்களைச் செய்யும். சிறிதும் பெரிதுமான கைத்தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. அவற்றை சீர்செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசு கை கொடுக்க வேண்டும். இதற்கிடையில் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் முன்னெடுக்கின்ற விசமத்தனமான பிரச்சாரங்களுக்கும் அரசு பதில் கொடுக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் நாட்டில் மீண்டும் மழை வரும் என்று எதிர்வு கூறப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே பூமி கடுமையாக பலயீனப்பட்டு சிதைந்து போய் இருக்கின்றது. அந்த நிலத்தில் மீண்டும் மழை நீர் கொட்டுமாக இருந்தால் நிறையவே ஆபத்துக்கள் மீண்டும் வரலாம்.

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில்  மாகாணசபைத் தேர்தல் வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோசம் போடுவார்கள்.  அதற்கு அரசு பேரழிவைக் காரணம் சொல்லித் தள்ளிப்பபோட முடியாது.

அப்படி இந்தத் தேர்தல் வருமாக இருந்தால் பதவியில் இருக்கின்ற என்பிபி அரசு மீது மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றாhகள் என்பதனை நாம் கண்டு கொள்ள முடியுமாக இருக்கும்.

இப்படியாக நிறையவே சவால்களை அரசு சந்திக்கின்றது. அரச தலைவர் என்றவகையில் ஜனாதிபதி அனுர இவற்றை எல்லாம் எப்படிச்சமாளிக்கப் போகின்றார்?

ஆளுமை மிக்க ஜனாதிபதி வரலாறு காணாத பேரழிவுச் சேற்றில் சிக்கிக் கொள்வாரா நாட்டை மீட்டெடுப்பாரா என்பதனை பார்க்க இன்னும் சில காலம் நமக்குத் தேவைப்படும்.

Previous Story

கண்டியில் மூக்குடை பட்ட சுமோ - சாணக்கியன் அணி...?

Next Story

ඔබේ මුදල් අකුරට වැඩ