பெண் கட்டுரையாளருக்கு டிரம்ப் பாலியல் தொல்லை:உறுதி செய்து நீதிமன்றம் !

E. Jean Carroll, former U.S. President Donald Trump rape accuser, arrives for the start of a civil case at Manhattan federal court in New York City, U.S., April 25, 2023. REUTERS/Brendan McDermid

அமெரிக்க அதிபராவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப் ஒரு பத்திரிகையின் பெண் கட்டுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நியூயார்க்கில் உள்ள மான்ஹட்டன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் இ.ஜீன் காரல் என்ற அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கவில்லை என்று கண்டறிந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

டொனால்ட் டிரம்புக்கு எதிரான தீர்ப்பு
நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த எலிசபெத் ஜீன் காரல், பத்திரிகையாளர்களை நோக்கி புன்னகைத்தார்

மேலும், அந்த எழுத்தாளரின் குற்றச்சாட்டை புரளி மற்றும் பொய் என்று அழைத்த டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கை எதிர்கொள்ளத் தக்கவர் ஆகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் கட்டுரையாளருக்கு இழப்பீடாக டொனால்ட் டிரம்ப் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் அமர்வில் – ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண் நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர். மூன்று மணி நேர வாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் அதன் தீர்ப்பை அளித்தது.

“இன்று உலகம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டுள்ளது,” என்று காரல் வெளியிட்டுள்ள எழுத்துபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல. தான் சொல்வது பிறரால் நம்பப்படாமல் அவதிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்குமானது,” என்று காரல் அதில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டாெனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடப்பதற்கு பதிலாக சிவில் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. டிரம்பை பாலியல் ரீதியாக குற்றம் புரிந்தவராக சிவில் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் 79 வயதாகும் காரல் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஆரம்பம் முதல் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து வந்தார். அங்கு நடந்த இரண்டு வார கால விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை.

தீர்ப்பு வெளிவந்தவுடன் தமது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பெரிய எழுத்துகளில் தமது கருத்தை பதிவிட்ட டிரம்ப், “எனக்கு இந்த பெண் யார் என்பது பற்றி எந்தவொரு ஞாபகமும் இல்லை,” என்று கூறியுள்ளார்.

இரு வார விசாரணை

முன்னதாக, இந்த வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தபோது, காரல், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

1996ஆம் ஆண்டில் ஆடம்பர அங்காடியில் உள்ள பெண்கள் உள்ளாடை பிரிவில் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சொல்லப்படும் கூற்றை நிரூபிக்க 11 சாட்சியங்களை காரலின் தரப்பு வழக்கறிஞர் ஆஜர்படுத்தினார்.

அந்த சாட்சியங்களில் இடம்பெற்றிருந்த இரண்டு பெண்கள், டிரம்ப் பல பத்தாண்டுகளுக்கு முன்னால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

பெண் ஒருவர் நீதிபதிகளிடம் பேசும்போது, 1970களில் ஒரு விமான பயணத்தின்போது, டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார். மற்றொரு பெண், 2005இல் ஒரு நாளிதழுக்காக கட்டுரை எழுதி வந்த தனக்கு ஒரு பேட்டியின்போது டிரம்ப் முத்தம் கொடுத்ததாக கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து தமது நீண்ட கால நெருங்கிய தோழிகள் இருவரிடம் டிரம்ப் பற்றி முறையிட்டதாக காரலின் நெருங்கிய தோழிகள் தெரிவித்தனர்.

வழக்கு தொடுத்த பெண் பத்திரிகையாளரின் வழக்கறிஞர்களில் ஒருவரான ராபெர்டா கப்லான், “இந்த வழக்கில் வெற்றி பெற்றது, எலிசபெத் ஜீன் காரலின் வெற்றி மட்டுமல்ல. அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதோடு, இது போன்ற குற்றச்சாட்டுக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான வெற்றி,” என்று கூறினார்.

விறுவிறுப்பான இரண்டு வார விசாரணை

இந்த விசாரணையின் போது டிரம்ப் மற்றும் காரலின் வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன.

காரலின் வழக்கறிஞர்கள் 11 சாட்சியங்கள் மூலம் விசாரணை செய்து 1995 அல்லது 96-ம் ஆண்டு டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த புகாரை நிரூபிக்க முயன்றனர்.

இந்த சாட்சிகளில், டிரம்ப் மீது ஏற்கெனவே பாலியல் புகார் தெரிவித்து வரும் இரண்டு பெண்களும் அடங்கியிருந்தனர். 1970களில் ஒரு விமானப் பயணத்தின் போது டிரம்ப் தன் மீது பாலியல் உணர்வுடன் அடிக்கடி கைகளால் தடவியதாக ஒரு பெண் இந்த விசாரணையின் போது தெரிவித்தார்.

இன்னொரு பெண், 2005-ம் ஆண்டு ஒரு செய்தி ஏட்டில் கட்டுரை வெளியிடுவதற்காக அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது வலுக்கட்டாயமாக தன் கன்னத்தில் முத்தமிட்டதாகத் தெரிவித்தார்.

கட்டுரையாளர் எலிசபெத் ஜீன் காரல், டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று அந்த சம்பவத்துக்கு பின்னர் தங்களிடம் தெரிவித்ததாக காரலின் இரண்டு நீண்ட கால தோழிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இதற்கிடையே, காரலிடம் டிரம்ப் எப்படி நடந்துகொண்டார் என்பதை அப்படியே அவர் நீதிபதிகளிடம் விளக்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருவதாகவும், அந்த உணர்வு தம்மை எப்போதும் வருத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

“டொனால்ட் டிரம்ப் எனது சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு வைத்துக் கொண்டதால் தான் நான் இங்கே நிற்கிறேன். இது குறித்து நான் எழுதிய போது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என அவர் பொய் பேசினார்,” என நீதிபதிகளிடம் காரல் தெரிவித்தார்.

ஆனால் டிரம்பின் வழக்கறிஞர்கள் எந்த சாட்சியையும் அழைக்கவில்லை. நீதிமன்றத்துக்கே டிரம்ப் வராத நிலையில், அவர் பதிவு செய்து, வழக்கறிஞர்களிடம் அளித்த வீடியோ காட்சிகள் நீதிபதிகளுக்கு காண்பிக்கப்பட்டன. அதில் டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

“அது ஒரு அபத்தமான மற்றும் அருவருப்பான கட்டுக் கதை,” என அதில் தெரிவித்துள்ள டிரம்ப், “அது ஒரு செயற்கை புனைவு,” என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் வாதத்துக்கு எதிர்ப்பு

டிரம்ப்

டிரம்புக்கு எதிரான இந்த வழக்கில், அவர் தனது சமூகவலைதளத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காரலின் குற்றச்சாட்டுக்கள் என்பவை ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான தகவல் என்றும், காரல் பொய் பேசியதைத் தவிர வேறு எதையும் பேசவில்லை என்று பொருள்படும்படி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது குறித்தும் காரலின் வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

மேலும், 2005ஆம் ஆண்டில் தாம் பேசியதாக 2016இல் வெளியான ஒரு ஒலிப்பதிவில் டிரம்ப் பேசியிருந்த விஷயங்களை அவரே பொய் என்று நிரூபித்துள்ள நிலையில், அது குறித்தும் காரலின் வழக்கறிஞர்கள் சில விவரங்களை நீதிமன்றத்தின் முன் வைத்தனர்.

அந்த ஒலிப்பதிவில், திரை நட்சத்திரங்கள் பெண்களிடம் எவ்வளவு அந்தரங்கமாக நடந்து கொண்டாலும் அதை அவர்கள் அனுமதிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதே தவறைத் தான் காரலிடம் டொனால்ட் டிரம்ப் செய்துள்ளார் என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட டிரம்பின் வீடியோ பதிவில், தமது முன்னாள் மனைவி மர்லா மேபில்சைப் போலவே காரல் இருந்ததாக அவர் தெரிவித்த தகவலை வைத்து வாதிட்ட காரலின் வழக்கறிஞர்கள், ஒரு முறை காரல் எனக்குப் பிடித்தமானவர் அல்ல என டிரம்ப் பேசியது, இதன் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

இதற்கிடையே, காரலின் குற்றச்சாட்டு ஒரு கட்டுக்கதை என வாதிட்ட டிரம்பின் வழக்கறிஞர் டகோபினா, காரல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கூடுதல் விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

காரலிடம் விசாரணை நடத்திய அவர், சம்பவம் நடந்த தேதியை அவர் சரியாக நினைவுபடுத்தாத நிலையில், அப்போது டிரம்ப் என்ன செய்துகொண்டிருந்தார் என நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

“தேதி, மாதம், வருடம் என எதுவும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை நீங்கள் எழுப்ப முடியாது, இந்த விவரங்கள் தெரியாமல் சாட்சிகளையும் அழைக்க முடியாது,” என டிரம்பின் வழக்கறிஞர் வாதிட்டார்.

“உண்மைகளை புறந்தள்ளிவிட்டு டிரம்ப்பை வெறுக்கச்செய்ய வேண்டும் என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் நடந்த உடனே அது குறித்து ஏன் காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், டிரம்பிடம் இருந்து தப்பும் நோக்கில் அக்கம்பக்கத்தினரின் உதவியைக் கூட நாடாமல் காரல் ஓடி விட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

பாலியல் தொல்லையில் எப்போது பாதிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்து புகார் அளிக்கலாம் என நியூயார்க்கில் 2022ஆம் ஆண்டு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பெண் கட்டுரையாளரான எலிசபெத் ஜீன் காரல் இந்த வழக்கை தொடுக்க முடிந்தது.

பாலியல் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், காலம் கடந்த நிலையிலும் அது குறித்த புகார்களை அளிக்க அந்த சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது.

டிரம்பின் எதிர்கால அரசியலில் ஏற்படும் பாதிப்பு

அமெரிக்க அதிபர்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இருக்கும் டிரம்ப்புக்கு இந்த தீர்ப்பு நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

டிரம்ப்புக்கு எதிரான இந்தத் தீர்ப்பு குடியரசு கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் அடிப்படை ஆதரவை அது எந்த வகையிலும் பாதிக்காது. இருப்பினும் குடியரசு கட்சியில் இருக்கும் அவரது போட்டியாளர்கள், இந்த தீர்ப்பை அவருக்கு எதிராக வலுவாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன.

“பல்வேறு விஷயங்கள் ஒன்றாக இணைந்து டிரம்புக்கு எதிராக ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது,” என்கிறார் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ஜான் துனே.

“அதிபர் தேர்தலின் போது யாரை தேர்வு செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.”

“டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என நான் நம்பவில்லை, அடிப்படை ஆதரவை மட்டும் நம்பி ஒரு தேர்தலில் ஒருவர் வெற்றிபெறும் வாய்ப்பில்லை,” என்கிறார் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டர் ஜான் கார்னின்.

தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் அல்லது மற்ற விசாரணைகளில் வரவிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் டிரம்ப் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை விட, அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதியாகப் பயன்படுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.

Previous Story

சில மணி நேரத்தில் தீர்வு!

Next Story

கிழக்கு  ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்கு பகிரங்க குற்றச்சாட்டு-இம்ரான்MP.