புத்தாண்டுடன் சந்திக்கு வரும் புதுப் புரளிகள்!  

-நஜீப் பின் கபூர்- 

ரணிலை ஜனாதிபதியாக அழகு பார்த்து நாட்டில் நிகழ்ந்த முதலாவது தமிழ் சிங்களப் புத்தாண்டு கடந்து போய் இன்றைக்கு ஒரு வாரம் ஆகின்றது. அதே போன்று முஸ்லிம்களின் ரம்சான் புத்தாண்டும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இந்த வாரம் புத்தாண்டுகளின் வாரம் என்று சொன்னால் அதில் தவறு இருக்க மாட்டாது. செல்வாக்குடன் இருந்த ராஜபக்ஸாக்கள் விரட்டியடிக்கப்பட்டும் ஏறக்குறைய ஒரு வருடங்கள் கடந்து நிற்கின்றது. அதே போன்று ஈஸ்டர் மனித வேட்டை நடத்து இன்றோடு நான்கு வருடங்கள் கடந்து போகின்றது.

ஜனாதிபதி ரணில் இந்தப் புத்தாண்டின் போது குடி மக்களுக்கு மிகச் சிறியதோர் சலுகையை வழங்கி இருந்ததையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தச் சலுகை இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதில் நிறையவே சந்தேகங்கள் நமக்கு இருந்து வருகின்றன. அதே போன்று தமது பிள்ளைகளின் இந்த வருடத்துக் கல்வியாண்டும் காலம் தாழ்த்தித் துவங்கி இருக்கின்றது. இதற்குத் தேவையான செவீனங்களும் கடந்த வருடங்களை விட மூன்று நான்கு மட்டங்கு அதிகரித்திருக்கின்றது. ஒரு பிள்ளையின் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள குறைந்தது 15000 ரூபாய்களாவது தேவைப்படுகின்றது. பல இடங்களில் இதற்காக என்னவழி பண்ணுவது என்று பெறோர்கள் ஓடித் திரிகின்ற அவலக் காட்சிகளையும் நாட்டில் பரவலாகப் பார்க்க முடிகின்றது.

Sri Lanka engulfed by debt crisis and protests – DW – 04/13/2022

இந்தப் பின்னணியில்  நாம் பேசப்போவது புத்தாண்டைத் தொடர்ந்து நாட்டில் மீண்டும் தொடரப் போகின்ற அரசியல் களியாட்டய்கள் அல்லது புரளிகளைப் பற்றிய கதைகளையாகும். நாட்டில் மக்கள் எந்தளவுக்குக் கோமாளிகளாக-ஏமாளிகளாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு  ஆட்சியாளர்கள் இந்த மக்களை ஏமாற்ற முடியும் என்பதற்கு நாம் இங்கு பேசுகின்ற விடயங்கள் நல்ல உதாரணங்களாக இருக்கும் என நம்புகின்றோம். மக்கள் இந்த செய்திகள் மீது பெரிய நம்பிக்கை வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக நாம் அது தொடர்பான பல தகவல்களை சமர்ப்பிக்கின்றோம்.

இப்போது மீண்டும் தேசிய அல்லது சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகப் போகின்றது. அதுவும் மிகவிரைவில் என்று கதைகள் சொல்லப்படுகின்றன. அந்தக் கதைகளுக்கு சமாந்திரமான கதைகளை சஜித் அணியில் உள்ளவர்களும் பேசுவது வியப்பாக இருக்கின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றார்கள். ஆளும் எதிரணி இரண்டிலுமுள்ளவர்கள் ஒரே கருத்தை முன்வைப்பதால் இது சாத்தியம் என்றும் மக்கள் நினைக்கின்றார்கள்.

ரணில் அரசியல் தொடர்ப்பில் நமக்கு நிறையவே முரண்பாடுகள் இருந்தாலும் இந்த காய் நகர்த்தலில் அவர் தன் மீது ஒரு சின்ன நம்பகத் தன்மையை மக்கள் மத்தியில் விதைத்திருக்கின்றார் என்று சொல்ல வேண்டும். அதற்கு அவர் கையாட்களும் அவருக்கு ஆதரவான ஊடகங்களும் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ஆனால் இந்த தேசிய-சர்வகட்சி அரசாங்கம் என்பது நமது பார்வையில் நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விவகாரமாகவே தெரிகின்றது.

Ranil Wickremesinghe as he leaves a Buddhist temple in Colombo, 20 July

சஜித் அணியில் இருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் ரணிலுடன் இணைய இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை 30-40 வரை என்று பெரும் எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றது என்றும் அதே அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கதைவிடுகின்றன. அதில் பெரியளவில் உண்மைகள் கிடையாது. சஜித் அணிக்குள் இருப்போர் பலர் நாம் கடந்த வாரம் சுட்டிக் காட்டியது போல தலைவருடன் கடும் முரண்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் சஜித்தின் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகளும். வங்குரோத்துக் காரர்களையும் கட்சிக்கு துரோகம் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்களையும் சஜித் கட்சியில் முக்கிய பதவிகளைக் கொடுத்திருப்பதும் சிரேஸ்டமானவர்கள் அதனால் அதிர்ப்தியில் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

மனோ கணேஷன் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்து சஜித்துக்கு அவர் ஊடகக் கொடுதனுப்பிய செய்தி பற்றிய கதை சஜித்தின் அரசியல் இமேசை சேதப்படுத்தி இருக்கின்றது. அது அப்படி இல்லை ஊடகங்கள் தவறாக செய்திகளைச் சொல்லி விட்டன என்று கதையில் சில திருத்தங்களைச் செய்ய மனோ முயன்றாலும் அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. எதிரணியில் இருக்கின்ற சிறுபான்மைத் தலைவர்கள் அமைச்சுப் பதவி ஏக்கத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். அந்த ஆர்வத்தில்தான் இப்படியான சந்திப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

மனோ மு.கா. தலைவர் ஹக்கீமும் ஜனாதிபதியைக் கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்தார் அவரிடமும்  ரணில் சில தகவல்களைச் சொல்லி இருக்கின்றார் என்று தெரிவித்திருந்தார். இந்தக் கதை முற்றிலும் உண்மையானது. ஹக்கீம் கூட தனக்கு விசுவாசமான பலரிடம் தேசிய அரசு பற்றிய ரணின் கதையை உற்சாகத்துடன் கடந்த வாரம் சொல்லிக் கொண்டிருந்தார். ஹக்கீம் அரசியல்  பின்னணி அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி அமைகின்ற அரசில் தமக்கு ஏதாவது சுருட்டிக் கொள்ள முடியும் என்பது இவர்களின் அரசியல். அதனால்தான் அவர்கள் இந்த ரணில் உறவில் மிகுந்த ஆர்வமாக இருக்கிகின்றார். மேலும் இவர்கள் தற்போது தமது தலைவர் சஜித்தை விட ரணில் உறவில் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றாhகள்.

Sri Lanka could tip back to chaos if six-time PM voted president

கடந்த 19ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய இப்தார் நிகழ்வில் தனித்துக் கட்சி நடத்துகின்ற முக்கிய தலைவர் ஒருவர் அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மஹிந்தவே ராஜபக்ஸாவே நேரடியாகத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்ததால் தனக்கு இந்த நிகழ்வைத் தவிர்க்க முடியாது போனது என்று அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கின்றார். அந்தத் தலைவர்.! இந்த மஹிந்த ராஜபக்ஸாவைத் திருப்திப்படுத்தினால்தான் தேசிய அரசில் அமைச்சுப் பதவியை தனக்கு உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும்.

அடுத்து அமைச்சர் ரஜித்த செயல்பாடுகளும் கதைகளும் பற்றிப் பார்ப்போம். அவர் தனக்கு சுகாதார அமைச்சுக் கிடைத்தால் வெற்றிகரமாகச் செய்து காட்டுவேன் என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இது சஜித்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மரைக்கார் போன்ற சஜிதுக்கு நெருக்கமானவர்கள் இதை வைத்து ராஜிதவுக்கு சேறுபூசிக் கொண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை என்றும் சொல்லிக் கொண்டிருந்தாலும் இதுவரை ராஜித மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை.

Sajith Premadasa

தனது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இது விடயத்தில் ராஜித்தவுடன் தொடர்பு கொண்டு ஊடகங்களிடம் விளக்கமளிக்குமாறு கோட்ட போது அதற்கு ராஜித மறுத்துவிட்டார். அப்படி மறுப்பு அறிக்கை விடுவதற்கு தான் எந்தத் தவறும் புரியவில்லை. தனக்கு சுகாதார அமைச்சுக் கிடைத்தால் அதனை சிறப்பாகச் செய்த காட்டுவேன் என்று தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என்று அவர் தனது நிலைப்பாட்டில் இருப்பது அந்தச் சந்தப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதே போன்று பெரும் என்ணிக்கையான மூத்த அரசியல்வாதிகள் சஜித்துக்குக் கட்டுபடாமல் நடந்து கொள்வதால் தலைவர் சஜித் பல இடங்களில் மூக்குடைபட்டுக் கொண்டிருப்பதும் தெரிய வருகின்றது.

சஜித் பிரதமர் ரணில் ஜனாதிபதி என்ற ஒரு கதையும் கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி சொல்லப்பட்டு வந்தன. இந்த செய்திகளைச் சொல்கின்ற ஊடகங்களின் அரசியல் பின்னணியை மக்கள் புரிந்து வைத்திருந்தால் அவர்கள் இதனை ஒரு செய்தியாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாட்டிலுள்ள பெரும்பாலன மக்கள் செய்திகளை எடுத்த எடுப்பிலே உள்வாங்கிக் கொள்ளும் மன நிலையில் இருப்பதால் அவர்களுக்கு இது புரிவதில்லை.

அத்துடன் அவர்களுக்கு இது தொடர்பான புரிதலும் தெளிவும் கிடையாததால்தான் இந்த நிலை. எனவே நாம் மேற்சொன்ன அனைத்துக் கதைகளும் ஒரு காதில் உள்வாங்கி மறு காதால் அதனை வெளியே தள்ளிவிடுகின்ற செய்திகள் என்பதுதான் யதார்த்தமானது. தனது கட்சிக்குள் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடிகளைச் சரி செய்து கொள்வதில்தான் சஜீத்தின் காலம் முழுவதும் இந்த நாட்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அத்துடன் அவரது போராட்டங்களும் மக்கள் மத்தியில் எடுபடாமல் இருக்கின்றது.

இப்போது பலருக்கு புதிய அமைச்சுக்கள் வழங்குவது பற்றிய கதைகளைப் பற்றிப் பார்ப்போம். ஆளும் மொட்டுக் கட்சியினர் பெரும் எண்ணிக்கையானவர்கள் பதவிகளை எதிர்பார்க்கின்றார்கள். அரசியல் அமைப்பில் உள்ள சில சரத்துக்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. ஆனால் தேசிய அரசு ஒன்று அமைகின்ற போது இந்த தடை இயல்பாக செல்லுபடியற்றதாகி விடும்.  இந்த வாய்ப்பு யாப்பில் இருப்பதால் அதனைப் பாவித்து தேசிய அரசு பற்றி கதைகளை அதிகாரத்தில் இருப்போர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறி அவர்களுக்குக் கால் கட்டுப் போட்டிருப்பதுடன் அமைச்சுக் கனவில் அவர்களைச் சஞ்சரிக்கவும் பண்ணி இருக்கின்றார்கள்.

சரி அப்படி ஒரு தேசிய அரசு சாத்தியம்-அமைகின்றது என்று வைத்துக் கொள்வோம். அதில் சஜித் கட்சியிலிருந்தும் கூட்டணியில் இருந்து வருகின்ற அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை ரணில் கொடுக்கின்றார் என்று பார்த்தால் தற்போது பதவியில் இருக்கின்ற ஆளும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? எனவே எதிரணியில் இருந்தது வருகின்ற அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடையாது. அப்படி அமைச்சுப் பதவிகள் கொடுத்தாலும் அதிலும் கனதியான அமைச்சு உதாவாக்கரை அமைச்சு என்றும் இழுபறிகள் நிச்சயம் இருக்கும்.

அப்படி எதிரணயில் இருந்து வருகின்றவர்களுக்கு பதவிகள் என்று வந்தால்  நாமல் ராஜபக்ஸ எதிரணித் தலைவர் பதவியில் அமர்வார் என்றும் கதைகள் வருகின்றன. இது சஜிதுக்கு பிரதமர் பதவி என்ற கதையுடன் முடிச்சுக் போட்டுப் பார்க்க வேண்டி  இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இவை அனைத்தும் உப்புச் சப்பில்லாத கதைகள். ஆட்சியாளர்கள் தற்போது தமக்கு பெரும் நெருக்கடியாக இருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை தள்ளிப் போடுவதில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இப்போது தேர்தல் கிடையாது அது எப்போது என்று ரணில்-ராஜபக்ஸாக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை. சில வேலை இது கடவுளுக்குக் கூடத் தெரியாத விவகாரமாக இருக்குமே என்று நமக்குள் ஒரு சந்தேகம்.! காரணம் கடவுள்களைக் கூட அதிகார அரசியல் வர்க்கம் கட்டுப் போட்டு விட்டதோ என நினைக்க வேண்டி இருக்கின்றது.

அடுத்த நாளை எப்படி ஓட்டுவது? மக்கள் எதிர்ப்புக்களில் இருந்து எப்படித் தப்புவது? என்பதுதான் ஆட்சியாளர்களின் தேடலாக இருக்கின்றது. அந்தத் தேடலின் கண்டு பிடிப்புத்தான் புதிய பயங்கரவாதச் சட்டம். அதனை இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரத்தில் இருப்போர் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வர இருக்கின்றார்கள். அதற்கும் நமது மக்கள் பிரதிநிதிகள் கைளை உயர்த்தி நிறைவேற்றி விடுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். அனேகமாகத் தற்போது ஆளும் தரப்புக்கு வழக்கமாக கை தூக்குகின்ற கூட்டத்தை விட இன்னும் பத்துப் பதிணைந்து பேர் எதிரணியிலிருந்து இதற்கு கைதூக்கவும் இடமிருக்கின்றது. பணமும் பதவியும் கொடுத்தால் இங்கு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதால்தான் நாம் இப்படிக் கணக்குப் போடுகின்றோம்.

இந்த புதிய பயங்கரவாதச் சட்டம் அமுக்கு வந்தால் அரசியல் விரோதிகளை சட்டரீதியாக வேடையாடும் உரிமையை இவர்கள் பெற்று விடுவாhகள். ஜனாநாயகத்தின் காவலர்களாக பார்க்கப்படுகின்ற மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இதனை இன்றுவரை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றது. ரணில் இவர்களின் விசுவாசி என்பதால் அப்படியோ என்னவோ தெரியாது.

நன்றி23.04.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

அதிரடியாக அகுரண வந்த குண்டு!

Next Story

விவாதத்தை ஏற்படுத்திய  மன்னர்  ஷா மகன் இஸ்ரேல் பயணம்: ?