நஜீப் பின் கபூர்
நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல்
தலைப்பு மூன்று வெவ்வேறு விவகாரங்கள் போல இருந்தாலும் அதனை நாம் ஒரு முடிச்சுக்குள் கொண்டுவர ஒரு முயற்சி செய்வது போல இருக்கலாம். இந்த நமது முயற்சி எந்தளவுக்கு ஏற்புடையது என்பதனை முடிவு செய்யும் உரிமத்தை நமது வாசகர்களுக்கே கொடுத்துவிட்டு செய்திக்கு வருவோம்.
நமது முடிச்சு பற்றி ஒரு சிறு அறிமுகத்தை இங்கு முதலில் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். புதிய அரசியல் யாப்பு வர இருப்பதாக பிரதமர் ஹரிணி அறிவித்திருக்கின்றார். இதனால் பலருக்கு இருந்த ஜனாதிபதி கனவு இளவு காத்த கிளியின் நிலையாகின்றது. அடுத்து அரசுக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கிவிட எதிரணியினர் எடுக்கின்ற நடவடிக்கைகள் விளையா விதைகளாக நாம் பார்க்கின்றோம். இது பற்றித்தான் இந்தவாரம் விரிவாக இங்கு பேச முனைகின்றோம்.
1978ல் ஜே.ஆர் ஜெயவர்தன கொண்டு வந்த அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு சாபக்கேடு என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே தன்னால் முடியாது என்று தனது அரசியல் யாப்பின் அதிகாரத்தையும் பலத்தையும் அவரே ஒரு முறை நாட்டுக்குச் சொல்லி இருந்தார்.
இதனை கடுமையாக விமர்சித்த சுதந்திரக் கட்சி குறிப்பாக ஸ்ரீமா மற்றும் சந்திரிக்கா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர். இதில் சந்திரிக்கா இரு முறை ஜனாதிபதியாக கதிரையில் அமர்ந்தாலும் அவர் அந்த மாற்றத்தை தனது காலத்தில் செய்யவில்லை. சந்திரிக்காவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த பெரும் பங்களிப்புச் செய்ததும் இந்த ஜேவிபி.தான். அதே போன்று மஹிந்த அதிகாரத்துக்கு வரவும் ஜேவிபி. பக்க துணையாக இருந்தது.
சந்திரிக்காவுக்கு உதவிய போதும் மஹிந்த ராஜபக்ஸாக்களுக்கு பதவிக்குவர துணை நின்ற போதும் ஜேவிபி. அவர்களிடத்தில் விடுத்த ஒரு முக்கிய கோரிக்கை அல்லது இணக்கப்பாடு ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்க வேண்டும். மீண்டும் நாட்டில் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கொடுத்து பிரதமர் முறைக்கு நாடு கொண்டுவரப்பட்ட வேண்டும் என்பதும் ஒன்றாக இருந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் ஜேவிபி.க்கும் நாட்டுக்கும் கொடுத்திருந்த அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக ஜே.ஆர். பாவிக்காத அதிகாரங்களைக் கூட மஹிந்த பாவித்து அரசியலில் பெரும் ரகலையை ஏற்படுத்தி இருந்தார். மேலும் ஜே.ஆர். காலத்தில் கூட ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதி கதிரையில் அமரலாம் என்றதை இந்த ராஜபக்ஸாக்கள் திருத்தி அமைத்திருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ஒரு சர்வாதிகாரி அல்லது பேரரசன் போன்றுதான் வேலை பார்த்து வந்தார். அவர் மீது பதவிக்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்க முடியாது என்பதால் நாட்டில் மிகமோசமான ஊழல் மற்றும் அட்டகாசங்கள் நடக்க அது அவர்களுக்குப் பக்க பலமாக இருந்தது. மைத்திரி-ரணில் நல்லாட்சி காலத்தில்தான் ஜனாதிபதி அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. ஒருவர் இரண்டு முறைக்கு மேலும் ஜனாதிபதியாக முடியும் என்ற ராஜபக்ஸாக்களின் திருத்தமும் இரத்துச் செய்யப்பட்டது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் துணையால்தான் மைத்திரி ஜனாதிபதியானதால் மைத்திரிக்கு இருக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை ஒரு எழுத்துமூல ஆவணத்தில் தனக்கு மாற்றித்தர வேண்டும் என்று பிரதமராக இருந்த ரணில் கேட்டுத் தொந்தரவு கொடுத்ததால் அந்த நல்லாட்சியில் லடாய் துவங்கியது. இதனை மைத்திரி ஒரு முறை பகிரங்கமாகவே சொல்லி இருந்தார்.
எனவே ஜே.ஆர். கொண்டு வந்த 1978 அரசியல் யாப்பு பதவிக்கு வந்த எவரும் விட்டுக்கொடுக்க விரும்பாத ஒன்றாக இன்றுவரை இருந்து வருகின்றது. ஆனால் இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற என்பிபி-ஜேவிபி தாம் அதிகாரத்துக்கு வந்தால் நிச்சயம் புதிய அரசியல் யாப்பு வரும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.
எங்கே அவர்களும் அதனைச் செய்ய மாட்டார்களோ என்று ஒரு சந்தேகம் இருந்த நிலையில் பிரதமர் ஹரிணி அதுபற்றி சில தினங்களுக்கு முன்னர் பேசி ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றார். இதில் மிகப் பெரிய ஏமாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்துக்குத்தான். காரணம் இந்த ஜனாதிபதி பதவியை ஒரு முறையாவது அடைய அவர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தவர். சில தினங்களுக்கு முன்னர் அவரையே தமது 2029 ஜனாதிபதி வேட்பாளர் என்றும் அவரது கட்சி முக்கியஸ்தர்கள் முன்கூட்டி அறிவித்தும் இருந்தனர்.
மொட்டுக் கட்சி அமைப்பாளராக இருக்கும் ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசான நாமலுக்கும் இந்த ஆசை நிறையவே இருக்கின்றது. இது தவிர இந்த நாட்டில் அரசியல் கட்சி வைத்திருக்கின்ற அனைத்துப் பேரினத்தலைவர்களுக்கும் போல ஜனாதிபதிக் கதிரை என்பது அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மிகப்பெரிய கனவு. ஆனால் புதிய அரசியல் யாப்பு வருமாக இருந்தால் இந்த கனவு அடிபட்டுப்போகும். குடிமக்களைப் பொருத்தவரை அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை அல்லது கொட்டத்தை அடக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்து பொறுப்புச் சொல்லும் ஒரு அரசியல் யாப்புத் தேவை என்பதை இன்று அனைவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.
வேர் விடாத விதைகள் பற்றி சொல்வதாக இருந்தால், இந்த அரசு அதிரடியாக அதிகாரத்துக்கு வந்த போது நாட்டில் இருந்த சம்பிரதாய அரசியல் தலைமைகள் கட்சிகள் அனைத்துமே அதிர்ந்து போனது. அவர்கள் மேடைகளில் சொல்லியவாறு எதையும் செய்ய மாட்டார்கள் என்று கடந்த காலங்களில் ஊழல் பண்ணியவர்கள் நம்பி காலத்தை ஓட்டலாம் என்றிருந்தனர். எங்கே கள்வர்களைப் பிடித்து விட்டீர்களா என்று கேட்டவர்கள் அதிர்ந்த ஒரு சம்பவமாக ரணிலின் கைது அமைந்தது. அதுவரை கீரியும் பாம்பும் போல இருந்த ரணிலும் சஜித்தும் இணைந்தது. ரணிலை இணைத்துக்கொண்டு ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தை ஓட்டிக் கொண்டு போனதும் நாட்டில் நடந்த மிகப் பெரிய தன்னல மாற்றங்களாக இருந்தன.
இந்த அரசு ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்த போது இன்று எதிரணியில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு இருப்பது அவர்களுக்கு இருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. அரசுக்கு எதிரான முதலாவது சிக்கல் வந்தது தனது சபாநாயகர் நியமனத்தில்தான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. ஜேவிபி-என்பிபி கருத்தும் பேச்சும் அவர்களை மெழுகுவர்த்திகளாக சமூகம் பார்க்கின்ற ஒரு நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. (மெழுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஒளிகொடுப்பது) அவர்கள் அப்படித்தான் சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பது போல ஒரு நிலை இது.
அடுத்து இந்த என்பிபி. அரசுமீது போதை வியாபாரிகள் பாதாள உலகத்தார் அரசியலை ஒரு இலாபமீட்டுகின்ற தொழிலாக செய்து வந்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்து தாமும் செல்வந்தர்களான அரச அதிகாரிகள் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து பணம் ஈட்டிய பொலிஸ் மற்றும் படைத் தரப்பினர் என்போரின் கடும் கோபமும் இந்த அரசு மீது இருந்து வருவதும் இயல்பானதே.! அதனையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் தொடர்ந்தும் இனவாதத்தை சந்தைப்படுத்தி அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் முன்பு போல இன்று நாட்டில் இல்லை என்று நாம் நம்புகின்றோம். எனவே ஏதோ ஒருவகையில் மக்களை அரசுக்கு எதிராக கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலும் இன்று நாட்டில் இருக்கின்றது என்று சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.
இந்த அரசுக்கு எதிராக மேற்சென்ன தரப்பினர் தமது தனிப்பட்ட பொருளாதார நலன்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமான நடவடிக்கைகள் என்று வைத்துக் கொண்டாலும் நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க முக்கிய பதவிகளில் இருப்போரின் நடவடிக்கைள் பற்றியும் சில சந்தேகங்கள் நமது பார்வைக்குத் தெரிகின்றது. நாம் பதவி ரீதியில் அவர்களைப் பெயர் சொல்லி இங்கு அடையாளப்படுத்தாவிட்டாலும் அங்கு பதவிகளில் இருப்போர் அவர்களின் பின்னணி. அவர்களது கணவன் அல்லது மனைவிகள் கடந்த காலங்களில் யாருடன் நெருக்கமாக இருந்து அரசியல் செய்து வந்திருக்கின்றார்கள் என்று தேடிப்பார்த்தால் நமது இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான யதார்த்தங்களை கண்டுபிடிக்க முடியும்.
நமது குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரங்களை முன்வைக்காது எடுத்த எடுப்பிலே இப்படி முறைப்பாடுகளை சொல்வது நியாயமில்லை. எனவே என்பிபி முதல் நாடாளுமன்ற அமர்வின் போது நடைபெற்ற குழப்பங்களை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். நாடாளுமன்றத்துக்கு வருகின்ற அனைவரும் அங்குள்ள சம்பிரதாயங்களை தெரிந்து கொண்டோ அல்லது கற்றுக் கொண்டோ வருவது கிடையாது. சர்ச்சைக்குரிய சபாநாயகர் அன்று தலைக்கவசம் பிழையாக போட்டிருந்தார் என்றால் அதற்கு காரணம் அங்கு இருக்கின்ற குறிப்பாக துறைக்குப் பொறுப்பான அதிகாரிகள் ஊழியர்கள்தான். அது அவர்களின் கடமையும் கூட. இதில் ஒரு அவமானத்தை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு சதி நடவடிக்கை என்றுதான் சிந்திக்க வேண்டும்.
இன்றும் பொலிஸ் அதிகாரிகள் சில நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த அரசுக்கும் முன்னய அரசுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. அவர்கள் செய்த அதே வேiலையைத்தான் இவர்களும் செய்து கொண்டு வருகின்றார்கள் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் ஏற்படுத்த ஒரு முயற்சியும் இங்கு நடந்துவருவது தெரிகின்றது. அதே ரன்வெல விபத்தை சற்றுப்பாருங்கள்.! விபத்தின் போது ரன்வெல நடாத்தப்பட்ட ஒழுங்கு அதில் பொலிசார் அவரை காப்பாற்றும் விதமாக நடந்ததான குற்றச்சாட்டு சம்பிரதாய அரசியல் அதிகாரத்தை காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிகின்றது. வாகனத்தை செலுத்தியவர் போதையில் இருந்தாரா என்ற பரிசோதனை செய்ய குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் பலூன் இருக்கவில்லை என்று சொல்லப்படுகின்ற நியாயம். அனைத்தும் கடந்த அரசியல் அதிகாரத்துக்கும் இன்றைய அரசியலுக்கும் வித்தியாசம் இல்லை என்ற நிலை.
இந்த ஒழுங்கு விதிகளைப்பார்க்கின்ற போது அதிகாரத்தில் இருக்கின்ற அரசுக்கு கூஜா தூக்குகின்ற ஒரு நிருவாகம் அதிகாரிகள் பொலிஸ் சட்டம் நீதி என்பன நாட்டில் இன்னும் மாறவில்லை. எனவே என்பிபி அரசு வந்ததால் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அல்லது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நடைமுறையில் இல்லை என்பதனை இங்கு உறுதி செய்து வருகின்றது. இரு கஞ்சா செடிகள் தொடர்பாக என்பிபி அரசியல்வாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் நடவடிக்கைகள் என்பனவும் நமது அரசியல் அசிங்கங்களைத்தான் தெளிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. ஜனாதிபதி அனுர என்னதான் அரங்குகளில் கூவிக் கொண்டிருந்தாலும் களத்தில் அப்படி இல்லை என்ற வாதத்தில் ஆதாரங்கள் இருப்பதை இவை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பார்க்கின்ற போது இது தவறு அதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.
அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்ற எதிரணியினர் பேரழிவில் அரசு என்னதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க எடுக்கின்ற அனைத்து திட்டங்களையும் எதிரணி அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா? அதே நேரம் இன்று எதிர்க் கட்சி தலைவராக இருக்கின்ற சஜித் அல்லது ரணில் அல்லது ராஜபக்ஸாக்களில் ஒருவர்தான் ஜனாதிபதி கதிரையில் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டு இந்த புனர்நிர்மானங்களை எண்ணிப்பாருங்கள்.!
ஒரு விடயத்தை வைத்து சரிசமமாக நிகழ்வுகளை மதிப்பீடு செய்கின்ற போது என்னதான் நேர்மையாக கருத்துக்களை முன்வைத்தாலும் அதனை மற்றொரு தரப்பு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனை மனித இயல்பு என்று சொல்வதா அல்லது நயவஞ்சகம் என்பதா என்பதனை சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும். பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கின்ற போது எதிரணியினர் அனேமாக அவற்றில் திருப்தி கொள்ளும் நிலையில் இல்லை.
உதாரணத்துக்கு இந்த டிட்வா நிவாரனத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் டிட்வா புனரமைப்பு பணிகளுக்கு 13910 கோடி உதவித் தொகையை அறிவித்திருக்கின்றார். இதனை அரசு நன்றி உணர்வுடன் வரவேற்று ஏற்றுக் கொள்வதுடன் எதிரணியினர் இதனை இந்தியா தனது பிடிக்குள் நாட்டைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் அனுர அரசுக்கு வெளிநாட்டு உதவிகள் வராது என்று சொன்ன அதே ஆட்கள் இந்தளவு வரும் உதவிகளை முகாமைத்துவம் செய்ய அனுர அரசுக்கு ஆளணி கிடையாது. எனவே எம்மையும் இதில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று இன்று பகிரங்கமாக கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். இது என்ன அரசியல் நாகரீகம் முரண்பாடு என்று கேட்கத் தோன்றுகின்றது.
பொதுவாக குடிமக்கள் இன்னும் பதவியில் இருக்கின்ற அரசு விவகாரங்களில் முரண்படுகின்ற நிலையில் இல்லை. இதனால்தான் இந்த அரசுக்கு எதிராக ஊடகங்கள் அரசியல்வாதிகள் என்னதான் கருத்துக்களை விதைக்க முயன்றாலும் அது வேர் விடாது பட்டுப்போகும் நிலையில் இருந்து வருகின்றது. இந்த நிலை தொடரும் என்று நாம் சொல்லவும் முடியாது. அது இந்த நாட்டில் குடிமக்கள் எடுக்கின்ற முடிவுகளிலும் புத்திஜீவிகள் சமூகத்தை வழி நடாத்துகின்ற ஒழுங்கிலும்தான் தங்கி இருக்கின்றது.





