கொரோனா சாம்ராஜ்யம் புதுக்கதை!

-யூசுப் என் யூனுஸ்-

பாட்டனுக்கு வயது 60 பிளஸ்
பேரன் சுட்டிக்கு வயது 5.
திடீரென சில தினங்களுக்கு
முன்னர் சுட்டி இப்படி ஒரு
போடு போட்டான். தாத்தா
இங்கே வாங்கோ, சாய்மானத்தில்
வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.

இது என்ன சம்திங் ரோங்!
என முதியவர் தனக்குள்
முனுமுனுத்துக் கொள்கின்றார்.
உங்களிடம் எனக்கு ஒரு
குறுக்கு விசாரணை இருக்கின்றது
என்றான் சின்னவன்.!

இதற்குப் பின்னரும் பொறுமை
காக்க முடியாத பெரியவர்
வாய் திறந்தார். இதுநாள் வரை
நான்தான் உனக்கு பாடம்-கதைசொன்னேன்.
இன்று மட்டும் நீ என்னை அதட்டுகிறாய்
என்று கேட்டார் பெரியவர்.

ஆமா அதுதான் பிரச்சினை என்றான்
அதிரடியாக சுட்டி.
வயதானவர் அதிர்ந்து போனார்.
தான் குற்றவாளிக் கூண்டில் நிற்பது
போலிருந்தது அவருக்கு.

விடயத்துக்கு வந்தான் சுட்டி!
இப்போது எனது கேள்விகளுக்கு
நீங்கள் நேரடியாகப் பதில் தரவேண்டும்
என்றான் சுட்டி வாத்தியார் பாணியில்!

சுட்டி:உலகில் மிகப் பெரிய வல்லரசு
பெரியவர்:அமெரிக்கா!
சுட்டி:வல்லரசு நாடுகள் எண்ணிக்கை.
பெரியவர்:ஐந்து

சுட்டி:உலகில் வல்லமை மிக்க படை
பெரியவர்:அமெரிக்கா!
சுட்டி: உலகில் மிகப் பெரிய அமைப்பு
பெரியவர்:சற்று யோசித்தவர்…ஐ.நா.என்றார்.

சுட்டி:விண்ணையும் மண்ணையும் நம்மையும் ஆழ்வது!
பெரியவர்:கடவுள்…!
சுட்டி:எந்தக் கடவுள்.
பெரியவர்:அவரவர் கடவுள்கள்.
சுட்டி: அவர்களில் பெரிய கடவுள்
பெரியவர்:அவரவர் கடவுள்கள் அவரவருக்கு!

சுட்டி:அப்ப அவர்கள் எத்தனை பேர்!
பெரியவர்:எனக்குத் தெரிந்த வரை 10 இருக்கும்.
சுட்டி:இப்போது அவர்கள் எல்லோரும் என்ன பண்ணுகின்றார்கள்!
பெரியவர்:தம்பி எனக்குத் தலை சுற்றுகின்றது!
சுட்டி:ப்பிரசர் ஓவராகி விட்டதோ!
பெரியவர்:நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.
அம்மாவிடம் போன சுட்டி. தாத்தாவுக்கு ஒரு கோப்பி என்றான்.!

கோப்பியுடன் வந்தாள் தாய். அப்பாவுக்கு வியர்த்து வடிவது பார்த்து பதறிப்போனவள் பக்கத்தில் இருந்த நமது வார இதழைக் கையிலெடுத்து அப்பாவுக்கு காற்று வீசினாள். பின்னர் கோப்பியை கையில் கொடுத்தாள். அதனை மடக் மடக் என்று குடித்த பெரியவர் முகத்தில் தெளிவு பிறந்தது. ஆனால் முகத்தில் அச்சமும் பீதியும் நிரம்பி இருந்தது. அப்பா என்ன நடந்தது என்றாள் மகள். பெரியவர் மௌனித்தார். சுட்டி பேச்சைத் துவங்கினான் அம்மா நீங்களும் பக்கத்தில் அமருங்கள் என்றான் சுட்டி. இப்போது உங்களிடத்திலும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன என்றான் அவன்.

தாய்: என்ன தம்பி இது!
சுட்டி: இதுவரை தாத்தா எனக்கு கதை சொல்லித் தந்தது உங்களுக்குத் தெரியும்தானே.
தாய்: ஆமா அவர் நல்ல செய்திகளையும் கதைகளையும் உனக்கு சொல்லித் தருவதை நான் பார்த்திருக்கின்றேன். இப்ப அதில் என்ன பிரச்சினை!

சுட்டி: ஆமா அது எல்லாம் உண்மைதானா!
தாய்: அவர் ஊருக்கே கதை சொல்லுபவர்தானே அவர் தப்பே பண்ண வாய்பே இல்லையே!
சுட்டி: நீயும் அத நம்புராய் அப்படித்தானே. அவர் சொன்ன கதைகள் எல்லாம் பழங்கதை. தாத்தாவுக்கு ஒரு பரிசோதனை வைத்தேன். அதில் அவர் தோற்றுப் போய் விட்டார்.
தாய்: என்ன அப்பா இவனுக்கு தப்பாக எதாவது சொல்லிப் போட்டிங்;களோ என்றாள் சுட்டியின் தாய்.
அப்பா நடந்தது அத்தனையும் மகளிடம் சொல்லி, என்ன தப்ப நான் பண்ணினேன் என அப்பாவித்தனமாக மகளைக் கேட்டார் பெரியவர்.

தாய்: தம்பி அப்பா எல்லாம் சரியாகத்தானே சொல்லி இருக்கின்றார் என்றாள் இளம்தாய்!

சுட்டி ஏலனமாக அம்மா முகத்தைப் பார்த்து சிரித்தான். தாத்தாவுக்கும் உனக்கும் வேண்டுமானால் அவை சரியான பதில்களாக இருக்கலாம். என்னை பொறுத்த வரை நான் பார்க்கின்ற உலகில் அனைத்துக்கும் ஓரே பதில் கொரோனா! இதனை உங்களால் மறுத்துப்பேச முடியுமா! என்றான் சுட்டி. அப்பாவும் மகளும் அதிர்ந்து போனார்கள். ஒருவரின் ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா இப்போது கைப்பற்றி விட்டது. 215 நாடுகளில் கொரோனாக் கொடி பறக்கின்றது. வையகம் எங்கிலும் கொரோனா ஆட்சியும் அது பற்றிய பேச்சுகளுமாகவே இருக்கின்றது. பொதுவாக போர்களில் படையினர்தான் அதில் ஈடுபடுவது வழக்கம் அழிவுகள் அவர்களுக்குத்தான். இடையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்வதும் உண்டு. ஆனால் கொரோனா இன்று உலகிலுள்ள 770 கோடி மக்களையும் அச்சுறுத்தில் வருகின்றது.

கொரோனா ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பொருவதற்கான போராட்டங்களை உலகம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. வேடிக்கை என்ன வென்றால் இந்தப் போரில் மனித இழப்புக்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே நமக்கு வருகின்றது. கொரோனா படையணியின் இழப்புக்கள் பற்றிய எந்தத் தகவல்களுமில்லை. கொரோனா இட்டது சட்டம் சொல்வதுதான் நீதி. உலக வழமைகளும் நாடுகளின் சட்டங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் குப்பையில்!

கொரோனா கைப்பற்றி இருக்கின்ற நாடுகளிலிருந்து மீண்டும்தான் தாமாகவே பின்வாங்குகின்றது, கண்ணுக்குப் புலப்படாத தனது படையணியை திருப்பி அழைகின்றது என்றாலும் கொரோனா இதுவரைக்கும் கொடுத்த அடி ஏற்படுத்திய சேதங்களில் இருந்து உலகமும் மீண்டெல இன்னும் பல தாசாப்தங்கள் செல்லும்.

கொரோனாவால் 120 கோடிப் பேர்வரை தமது வேலை வாய்ப்புக்களை இழந்து தெருவுக்கு வந்திருக்கின்றார்கள். உலகிலுள்ள தொழிற்சாலைகள் விளைநிலங்கள் செயலகங்கள் எல்லாமே கொரோனா பிடியில் முடங்கிக் கிடக்கின்றன. பாலியல் தொழில் செய்கின்ற 45 இலட்சம் பேர்வரை தமது தொழில்களை இழந்திருக்கின்றார்கள். ஐரோப்பா வட அமெரிக்காவில் மட்டும் இந்த எண்ணிக்கை 16 இலட்சம். மேற்கு நாடுகளில் இது சட்ட ரீதியான ஒரு தொழில் என்பது தெரிந்ததே.

சிலதினங்களுக்கு முன்னர் கொரோனா பற்றி இப்படி ஒரு ஆய்வை சிக்காகோ பல்கலைக் கழகம் செய்தது. சராசரி மனிதர்களிடம் இந்தக் கொரோனா கடவுளின் செயலா அல்லது வேறு காரணிகளினால் வந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களில் 65 சத வீதமானவர்கள் இது கடவுள் செயல் என்றார்கள். இவர்களில் மத நம்பிக்கையில் ஊரிப்போனவர்கள் எண்ணிக்கை 30 வீதமாக இருந்தது. 25 சதவீதமானவர்கள் இது இயற்கையாக ஏற்பட்டது என்றார்கள். இயற்கை யாரது படைப்பு என்ற கேள்விக்கு இவர்களில்; 15 சதவீதமானவர்கள் கடவுள் என்றார்கள். 7 சதவீதமானவர்கள் விஞ்ஞானா ரீதியில் தர்க்கங்களை சொல்லி இருந்தார்கள். ஏனைய 3 வீதமானவர்கள் இதற்குத் தெளிவான பதில்கள் எதனையும் முன்வைக்கவில்லை. எனவே பொதுவாகப் பார்க்கின்ற போது 80 சதவீதமானவர்கள் இது கடவுள் பார்த்த காரியம் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த கொரோனா தொடர்பாக இப்படியான ஒரு கருத்தும் சொல்லப்பட்டு வருகின்றது. இது மனித நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவு என்பது அந்தக் கருத்து. ஆனால் இது விடயத்தில் கட்டுரையாளனிடத்தில் உடன்பாடு கிடையாது. காரணம் 100 வருடங்களுக்கு முன்பு இதே உலகில் (1918-1920) ஸ்பானிசா என்ற வைரஸ் காரணமாக 5 கோடிப்பேர் மரணித்திருக்கின்றார்கள். நமது நாட்டில் கூட ஒரு இலட்சத்தி 75 வரை மரணங்களும் இந்தியாவில் 50 இலட்சம் மரணங்களும் அப்போது நிகழ்ந்திருக்கின்றன.

அப்போது இந்தளவு இயற்கை அழிவுகளை மனிதன்; பூமியில் உண்டு பண்ணி இருக்கவில்லையே! அப்படிப் பார்க்கும் போது இந்த வாதம் எவ்வளவு தூரம் வலுவானது யதார்த்தமானது என்று நாம் கேட்கின்றோம். பல யுகங்களுக்கு முன்னர் இந்த உலகம் புறட்டிப்போடப்பட்டிருக்கின்றது என்றும், பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன என்றும் வாதங்கள் இருக்கின்றன. எனவே காலத்தையும் நொண்டிக் காரணங்களையும் சொல்லி தமது வாதங்களை நியாயப்படுத்துவதும் தப்பான தகவல்கள் என்று நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம். (5 கோடிப்Nரை பலி கொண்ட ஒரு வைரஸ் பற்றிய கதையை நாம் ஆதாரத்துடன் வாசகர்களுக்கு முன்பு சொல்லி இருந்தோம்)

எனவே இது கடவுளின் காரியமாகத்தான் இந்த வைரஸ் வெளிப்பாடுகள் என்ற கோட்பாடுகள் இருக்க முடியும் என்ற நம்பிகையை ஏற்கவேண்டி இருக்கின்றது. ஆனால் அதற்காக நியாயங்களைச் சொல்லும் போது வரலாறுகளையும் சம்பவங்களையும் மனத்தில் கொண்டு கருத்துக்கள் சொல்லப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நாம் வம்புக்காக இப்படி ஒரு கேள்வியை எழுப்புகின்றோம்.

பல மதங்கள், பல கடவுள் கோட்பாடுகள் நமக்குள்.! அப்படியானால் இது எந்தக் கடவுள் கொடுத்த தண்டணை. அல்லது எல்லாக் கடவுள்களும் மனித குலத்திற்கு எதிராக கூட்டணி அமைத்துக் காரியம் பார்த்திருக்கின்றார்களோ? என்ற எமது கேள்விக்கு யாராவது பதில் தரட்டும். எனவே கடவுளின் பெயரைச் சொல்லி பயமுறுத்தல்களைச் செய்ய வேண்டாம். எந்த நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்போது சேதங்களைக் குறைக்கலாம். இது போன்ற புதிய அனுபவங்கள் எதிர்காலத்திலும் வரலாம்.

இதற்கிடையில் சீனாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களுக்குள் அதனை நாம் மலிவு விலையில் தரமுடியும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் சீனா அதிபர். அவரது இந்த அறிவிப்பை நம்பலாம் சீனா நாட்டுத் தலைவர்கள் ஒரு போதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாணியில் முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை கூறுபவர்கள் அல்ல பொறுப்புடன் நடந்து கொள்பவர்கள். அதே நேரம் இந்த மருந்தை நமக்கு சீனா இலவசமாகத் தர வேண்டும் என்று பல ஆபிரிக்கத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இதிலிருந்து இந்த மருந்தின் விலை ஜாஸ்தியாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகின்றது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏதோ உளவியல் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றார். அவர் தமது ஆலோசகர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்ப்பதில்லை என்று தற்போது பகிரங்கமாக குற்றச்சாட்டப்படுகின்றது. அதே நேரம் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா கடுமையாக ட்ரம்ப் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றார். அமெரிக்க வரலாற்றி இப்படி ஒரு அதிபரைப் பற்றித் தான் ஒரு போதும் கேள்விப்படவில்லை என்று அவர் கூறி வருகின்றார். எனவே இப்படியான ஒருவரை மீண்டும் அமெரிக்க மக்கள் அதிகாரத்துக்குக் கொண்டு வருவார்களேயானால் அந்த நாட்டு மக்களின் புத்தி கூர்மை பற்றி உலகம் சித்திக்க வேண்டி வரும். உலகம் எதிர்பார்ப்பது போல் அமெரிக்க மக்கள் ஒன்றும் புத்திகூர்மையானவர்கள் அல்ல என்பது இது விவகாரத்தில் எமது கருத்து. கடைசியாக தனது நாட்டில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இருப்பது கௌரவமான ஒரு விவகாரமாகவே தான் பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கின்றார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டறியப்படுவதற்கு முன்னரே அது தானாகவே அழிந்து விடும் அல்லது இந்த உலகிலிருந்து விலகிவிடும் என்று உலக புற்று நோய் அமைப்பின் முன்னாள் நிருவாகியும் விஞ்ஞானியுமான கரோல் சிகோரா தனது டுவிட்டரில் பதிந்துள்ளார். அதே போன்று பெரும்பாலனா வைத்தியத்துறை நிபுனர்கள் உரிய தடுப்பூசி எப்போது வரும் என்று எம்மால் உறுதிபடத் தெரிவிக்க முடியாது என்று கூறுகின்றனர். ஸ்பானிய விஞ்ஞானிகள் 2019 டிசம்பரில் கொரேனா சீனாவில் இருந்து பரவியது என்ற கருத்தை மறுக்கின்றார்கள் அவர்கள் சென்ற அக்தோபர் அளவில்தான் இது மக்களிடத்தில் முதலில் பரவி இருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாகக் தெரிவித்திருக்கின்றார்கள். ஸ்பானிய-பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தக் கருத்து வெளியாகி இருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் உலக சுகாதார மையக் கூட்டம் நடைபெற்றது. நமது சுகாதர அமைச்சர் பவித்திராவும் கூட அங்கு போய் இருந்தார். அங்கு பேசிய அவுஸ்திரோலிய நாட்டுப் பிரதிநிதி கொரோனா பரவலுக்கு யார் காரணம் என்று உலக சுகாதார மையம் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது இந்தக் கருத்துக்குப் பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின் பிங் விசாரணை வைத்துக் கொள்வதில் ஆட்சேபனையில்லை ஆனால் முதலில் இதனைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். அவரது இந்தக் கருத்தை அமெரிக்க சார்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சீனா திட்டமிட்டு கொரோனாவைத் பரப்பியதால் அது பற்றி அவர்கள் இப்போது பேசுவதை தவிர்க்கின்றார்கள் என்று வாதம் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தென் கிழக்கு ஆசியா நாடு வியட்னாம். போரில் அமெரிக்காவை மூக்குடைபட வைத்த நாடு. இந்த கொரோனா விவகாரத்தில் முழு உலகின் கவனத்தையும் தற்போது அது ஈத்திருக்கினறது. பத்துக் கோடி வரை மக்கள் வாழ்கின்ற அந்த நாட்டில் இது வரை கொரோனா தொற்றாளர்கள் 326 மட்டுமே! இவர்களில் 266 பேர்வரை இது வரை சிகிச்சைபெற்று வெளியேறி இருக்கின்றார்கள். இதுவரை ஒரு மரணங்கள் கூட அங்கு நிகழவில்லை என்பது பெரும் ஆச்சர்யமாக இருக்கின்றது. இந்தியாவை தற்போது கொரோனா அதிரடியாகத் தாக்க ஆரம்பித்திருக்கின்றது. அங்கு 114000 பேருக்கு நோய்த் தொற்று மரணங்கள் 3600 வரை. இன்னும் சில நாட்களில் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

கொரோனா தொடர்ப்பில் சீனா மீது என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் ஹீரோவாகும் அதிக வாய்ப்பும் அந்த நாட்டுக்கே இருக்கின்றது என நாம் கருதுகின்றோம். இந்த கொரோனாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் இன மத மொழி அரசியல் கருத்துக்களை மறந்து உலக மனிதகுலம் ஐக்கியப்பட்டு செயல்பட வேண்டிய நேரமிது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

பரீட்சார்த்த வெள்ளோட்டம்

Next Story

இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை