புதிய மத்திய வங்கி ஆளுனர்   அரசுடன் முரண்படுகின்றார் கோட்டாபய அதிர்ச்சியில்!!

“மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட வேண்டும்”

ராஜபக்ஸாக்கள் தமது ஆட்சியில் எப்போதும் தான்தோன்றித் தனமாகத்தான் செயலாற்றி வந்திருக்கின்றார்கள். அதனால்தான் மத்திய வங்கி கூட அவர்கள் தேவைக்கு இசைவாகக் காரியம் பார்த்து வந்திருக்கின்றது. நாட்டின் இன்றைய பிரச்சினைக்கு முக்கிய காரணங்களில் இது பிரதானமானது. ராஜபக்ஸாக்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பதை விட அடாவடித்தனமாகத்தான் அரசியலை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்.

எனவே மத்திய வங்கி தொடர்பாக புதிய ஆளுனர் கருத்து ராஜபக்ஸாக்கள் செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாற்றமாக இருக்கின்றது. கண்மூடித்தனமாக காசு அச்சடிப்பதை புதிய ஆளுனர் நிராகரிக்கின்றார். மேலும் மக்கள் வீதிக்கு இறங்கிப் பேராடுவது கூட நியாயமானது அவர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை என்று கூட புதிய அளுனர் கூறுகின்றார்.

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி கூட மத்திய வங்கியின் ஆளுனர் கருத்துடன் இணங்கிப் போகும் நிலைப்பாடு தெரிகின்றது. அவர்  ஏற்கெனவே தவறுகளுக்கு மக்களிடத்தில் மன்னிப்புக் கூடக் கேட்டிருக்கின்றார்கள். இதனை அரசும் குறிப்பாக ராஜபக்ஸாக்கள் எவ்வளவு தூரம் ஜீரணித்துக் கொள்வார்கள் என்று புரியவில்லை.

நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும். மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்பட்டால் அது முழு நாட்டுக்கும் எதிர்வினையை தோற்றுவிக்கும். 2009ஆம் ஆண்டு காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதை தவிர்ப்பதற்கு மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட்டது.

தற்போதைய நிலைமையில் பொருளாதார மீட்சிக்காக மத்திய வங்கியும்,பொருளாதார துறைசார் நிபுணர்களும் முன்வைக்கும் யோசனைகளை தாமதப்படுத்தாமல் செயற்படுத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாறு அரச தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பது மத்திய வங்கியின் பிரதான கடப்பாடாகும். கட்டுப்பாடு இல்லாத வாகனம் பள்ளத்தை நோக்கி செல்வதை போன்ற நிலையில் தற்போது நாட்டின் பொருளாதாரம் காணப்படுகிறது.

அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மை நிலைபேறான தன்மையில் காணப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்ள முடியும் என்பதை 225 பாராளுமன்ற உறுப்பினர்களும்,நாட்டு மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டதன் பின்னரே வீதிக்கிறங்கியுள்ளார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து மீள மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தார். நாட்டின் தற்போதைய பொருளதார நிலைமை குறித்து தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதார முகாமைத்தும் சவால் நிலையில் உள்ள நிலையில் இலகுவான தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது.கடினமான தீர்மானங்களை மத்திய வங்கி செயற்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து உண்மையை மக்கள் மத்தியில் குறிப்பிடும் கடப்பாடு மத்திய வங்கிக்கு உண்டு.எவ்வித பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டால் தற்போதைய பிரச்சினைகளே தோற்றம் பெறும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்ட நிலையிலும்,அரச வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையிலும் அரச கடன் செலுத்தல் மீள்திருத்தப்படவில்லை. எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு டொலர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் சமூக கட்டமைப்பில் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்று அது மக்கள் போராட்டமாக தீவிரமடைந்துள்ளது.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி 2009 ஆம் ஆண்டு காலத்தில் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்பட்டது. அக்காலப்பகுதியில் மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி 2.6 பில்லியன் நிதியுதவியை பெற்று பொருளாதார நெருக்கடியை சீர்செய்தது.அக்காலக்கட்டத்தில் மத்திய வங்கிக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டது.

மத்திய வங்கி சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும். கடந்த ஓரிரு வருடங்கள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை. எவ்வித அழுத்தமும் இல்லாமல் செயற்படும் சூழல் காணப்பட வேண்டும் என்பதை அரச தலைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டெழுவோம் என நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

கடன் மறுசீரமைத்தல்,மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பிரதான விடயங்களுக்காக துரிதகர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் படும் துயரத்தை கண்டு மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.

சமூக கட்டமைப்பிலும்,அரசியல் கட்டமைப்பிலும் ஸ்தீரத்தன்மை பேணபட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்திலாவது தீர்வு காண முடியும். அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற மட்டத்தில் ஓரிரு நாட்களில் தீர்வுபெற்றுக்கொள்ள முடியும்.பொருளாதார நெருக்கடிக்கு வெகுவிரைவில் தீர்வுகாண முடியாது. பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

கடந்த காலங்களில் முழுமையான அரசியல் படுத்தப்பட்டு கோட்டாபய அரசின் நேரடித் தலையீடு இருந்து வந்த நிலையில், மத்திய வங்கியின் புதிய ஆளுனரின் இவ் அறிவிப்பு கோட்டாபய உட்பட பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Previous Story

பாக்: விடிய விடிய பரபரப்பு இம்ரான் தோல்வி!

Next Story

கரைபுரலும் இன ஒற்றுமை!