நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள் காரணமாக பழைய ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவர் புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார். குறிப்பாக ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஓம் பிரகாஷ் ஆர்யாலுக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் மூன்று அமைச்சர்கள் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஓம் பிரகாஷ் ஆர்யால், உள்துறை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஆர்யால் நேபாள நாட்டின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். நேபாள நாட்டின் சட்ட அமைப்புகள், மனித உரிமைகள், மற்றும் ஊழல் ஒழிப்புக்கான செயற்பாட்டாளராக இவர் அறியப்படுகிறார். நேபாள அரசியலில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.
அதேபோல நேபாளத்தை மின்வெட்டிலிருந்து காப்பாற்றிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குல்மான் கிசிங், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவரை தொடர்ந்து, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ராமேஸ்வர் கானல், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் நிதி செயலாளராக பதவி வகித்திருக்கிறார்.
நேபாளத்தில் 5 இளைஞர்களில் ஒருவருக்கு வேலையில்லா பிரச்சனை இருக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதே ராமேஸ்வர் கானலின் பிரதான பணியாக உள்ளது.
உலக வங்கி தரவுகளின்படி, நேபாளத்தில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி IN.RS 1,27,597.66 SR.RS.437661.14 ஆகும். இந்தியாவில் இது IN.RS 2,37,860.46 SR.RS 815860.00 ஆக இருக்கிறது. எனவே நேபாளத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொறுப்பு இடைக்கால பிரதமருமான சுஷிலா கார்கி தலையில் விழுந்திருக்கிறது.
வரும் மார்ச் மாதம் வரை இவர் பிரதமராக தொடர்வார். மார்ச்சில் நடக்கும் தேர்தலையும் இவர் வழிநடத்துவார். அதன் பின்னர் மக்களின் ஆதரவு பெற்ற புதிய பிரதமர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நேபாளத்தை வழிநடத்துவார்.
இதற்கிடையில், இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஓம் பிரகாஷ் ஆர்யால், குல்மான் கிசிங் மற்றும் ராமேஸ்வர் கானல் ஆகியோர் நாட்டை திறம்பட வழிநடத்துவார் என்று அந்நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.





