பிக்பாஸ் சீசன் 5: ராஜூ வெற்றி எப்படி?

-ச. ஆனந்தப்பிரியா-

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரியங்கா இரண்டாவதாகவும், பாவனி மூன்றாவதாகவும் வந்தனர். பிக்பாஸ் மேடையில் போட்டியாளர்கள் பேசியது, கமல் கொடுத்த நினைவு பரிசு, சிவகார்த்திகேயன் பட அறிவிப்பு, டிஜிட்டல் பிக்பாஸ் என

இறுதி நாள்  சுவாரஸ்யங்கள் ?

உலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் நிகழ்ச்சியின் இறுதி ஐந்து போட்டியாளர்கள். 105 நாட்கள் நடந்த பிக்பாஸ் சீசன்5 கடந்த சீசனை போலவே இந்த் சீசனும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கியது.

இசைவாணி, பாவனி, அக்‌ஷரா, நிரூப், ராஜூ, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி என 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் இருந்தார்கள். மூன்றாம் பாலினத்தவரான நமீதா முதன் முறையாக இந்த சீசனில் கலந்து கொண்டார். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை.

மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ், நடன இயக்குநர் அமீர், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் ஆகியோர் உள்ளே வந்தனர். இதில் அமீர் டிக்கெட் டூ ஃபினாலே வெற்றி பெற்று முதல் இறுதி போட்டியாளராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐந்தாவது சீசனை குறிக்கும் எண்கள் வீடு முழுவதும் பச்சை நிறத்தில் இருந்தது, நீச்சல் குளத்தை ஜெயிலாக மாற்றியது, கழிவறைகளுக்கு இரண்டு பக்கமும் வழி, கடந்த சீசனில் அறிமுகப்படுத்திய புத்தக பரிந்துரையை இந்த சீசனிலும் தொடர்ந்தது என இந்த சீசனிலும் பல மாற்றங்கள் இருந்தது.

இந்த சீசனில் நமீதா திடீரென வெளியேறியது, அக்‌ஷரா மீதான தங்க கடத்தல் வழக்கு வெளியே பேசு பொருளானது, நாடகக் கலைஞரான தாமரை இறுதி வரை வந்தது, பிரியங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய் வெளியேற்றப்பட்டு பின்பு நிகழ்வுக்கு வந்தது என இந்த சீசனில் பல நிகழ்வுகள் சுவாரஸ்யமானதாக பார்க்கப்பட்டது.

இறுதி நிகழ்வில் நடந்தது என்ன?

ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 11 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கிய போதே இந்த ஐந்தாவது சீசனில் தனக்கு மிகவும் பிடித்த விஷயமாக போட்டியாளர்களுக்கு இடையில் இருந்த நட்பை பாராட்டினார் கமல்ஹாசன். இமான் அண்ணாச்சி, நமீதா, அபிஷேக் தவிர இந்த சீசனின் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதி போட்டியாளர்கள் அனைவரது குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பிளாஸ்மா டிவி மூலம் அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினர். பின்னர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நினைவு பரிசை வழங்கினார். அமீருக்கு ஷூ, பாவனிக்கு கைக்கடிகாரம், ராஜூவுக்கு பேனா, பிரியங்காவுக்கு மைக் ட்ராஃபி, நிரூப்க்கு தொப்பி ஆகியவை கிடைத்தன.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து நிரூப் முதலில் வெளியேற்றப்பட்டார்.

எந்தவொரு காரியம் எடுத்தாலும் அதை முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதன்படி பிக்பாஸ் 105 நாட்களை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி என நிரூப் தனது பிக்பாஸ் அனுபவத்தை மேடையில் கமல்ஹாசனிடம் பகிர்ந்து கொண்டார்.

அதன்பின்பு போட்டியாளர்களின் நடன நிகழ்ச்சிகள், ராமர் குழுவினரின் ஸ்ஃபூப் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து நான்காவது இடத்தில் இருப்பதாக அமீர் வெளியேற்றப்பட்டார். முந்தைய சீசன்களில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் இப்படி வெளியேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் அழைத்து வருவார்கள். ஆனால் இப்போது கொரோனா பரவல் தீவிரம் காரணமாக யாரும் உள்ளே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்த பயணத்தில் நான்காவது இடம் வந்தது வருத்தம் என்றாலும் என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி’ என அமீர் மேடையில் பேசினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் சோனி பிக்சர்ஸூம் இணைந்து அடுத்து சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து தயாரிக்க இருக்கும் படம் குறித்து பிக்பாஸ் மேடையில் அறிவித்தார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல் தயாரிக்கும் படத்தில் தான் கதாநாயகனாக நடிப்பதற்கு மகிழ்ச்சி என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசினார். பின்பு போட்டியாளர்களுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தார்.

பிக்பாஸின் அடுத்த கட்டம்

பிக்பாஸ் ஓடிடி என்ற தகவல் முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது. அது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்தார். டிஸ்னி+ ஹாட் ஸ்டார் செயலில் மட்டுமே 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த பிக்பாஸ்ஸில் முந்தைய சீசன்களில் இடம்பெற்ற போட்டியாளர்களும் பங்கு பெறுவார்கள் என அறிவித்தார். இந்த டிஜிட்டல் பிக்பாஸ்ஸிற்கான சின்னத்தை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.

இரண்டாவது ரன்னர்அப் பாவனி

ராஜூ, பிரியங்கா, பாவனி என எஞ்சியிருந்த போட்டியாளர்களில் அடுத்து பாவனி வெளியேற்றப்பட்டார். ‘எந்த சூழ்நிலையாக இருந்தாலும

எதிர்கொள்வேன். பிக்பாஸ் மேலும் என்னை வலுவாக்கி இருக்கிறது’ என்றார். இந்த சீசனில் 15 புத்தகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்ற கமல்ஹாசன் இறுதி நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘தனிமையின் புனைவு களியாட்டங்கள்’, ‘ஆயிரம் ஊற்றுகள்’, ‘தேவி’, ‘பத்து லட்சம் காலடிகள்’, ‘வான் நெசவு’ ஆகிய புத்தகங்களை பரிந்துரைத்தார்.

வெற்றியாளர் ராஜூ

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன் ராஜூ, பிரியங்காவுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொடுத்தார். பின்பு அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். சிறிது நேர சஸ்பென்ஸ்க்கு பிறகு வெற்றியாளர் ராஜூ என அறிவிக்கப்பட்டு வெற்றிக்கோப்பையும் 50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

பின்பு பேசிய ராஜூ, “இன்று காலையில் இருந்தே பயந்து கொண்டே இருந்தேன். சிவகார்த்திகேயன் வந்த போது, மூன்று நண்பர்கள் வருகிறார்கள் என சொன்ன போது எங்கள் வீட்டில் இருந்துதான் வந்து என்னை கூட்டி போகிறார்களோ என நினைத்தேன். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மக்களுக்கு நன்றி” என நெகிழ்ச்சியாக தெரிவித்தார். ராஜூவின் வெற்றி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரியங்காவும் தெரிவித்தார்.

முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி கட்டாயம் என கமல்ஹாசன் அறிவுறுத்தியதோடு பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றது.

யார் இந்த ராஜூ?

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட ராஜூ தனது நகைச்சுவையான பேச்சுக்காக இந்த சீசனில் அதிகம் உள்ளே போட்டியாளர்களால் விரும்பப்பட்ட ஒரு நபராக இருந்தார். ஒவ்வொரு முறை நாமினேஷனில் வரும்போது அதிக மக்கள் வாக்குகள் பெற்று பெரும்பாலும் முதலில் காப்பாற்றப்பட்ட நபராக இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் வேலைகளை பல நேரங்களில் தட்டி கழிக்கிறார், டாஸ்க்குகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்கள் இருந்தது என்றாலும் அவரது நகைச்சுவை உணர்வுக்காகவும், கோபத்தை கட்டுப்படுத்தி உள்ளே பல பிரச்சனைகளை பொறுமையாக கையாண்டார் என்பதற்காகவும் நடிகரும் பிக்பாஸ் தமிழின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் பலமுறை நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.

ராஜூவிடம் இருந்து கற்க வேண்டிய முக்கியமான குணம் இது என்றும் போட்டியாளர்கள் பலரும் பல தருணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக ட்விட்டரில் #RajuWinningHearts என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- கல்லூரி காலம்’ தொடரில் நடிகராக அறிமுகமான ராஜூ பின்னர் ‘ஆண்டாள் அழகர்’, ‘சரவணன் மீனாட்சி’ ஆகிய சீரியல்களில் கதாநாயகனின் நண்பனாக தனது கலகலப்பான கதாப்பாத்திரம் மூலம் புகழ்பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். ‘துணை முதல்வர்’, கவினின் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா?’ ஆகிய படங்களிலும் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் டிவி பிரபலங்களான ரியோ, கவின், சிவகார்த்திகேயன் ஆகியோர் இவரது நெருங்கிய நண்பர்கள்.

மேலும் இவர் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகவும் சில காலம் பணிபுரிந்துள்ளார். பாக்கியராஜை தன் குரு என்றும், படம் இயக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்பதையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பு பகிர்ந்திருந்தார். ராஜூவுக்கும் இவரது நீண்ட கால நண்பரான தாரிகாவுக்கும் கடந்த 2020 ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது .

பலகுரல் கலைஞராகவும் வலம் வந்த ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு போய் சேர்க்கும் எனவும் அதன் மூலம் எனக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய வரும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Previous Story

அதிக முதலீடு செய்ய இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

Next Story

ஆப்கன்:  அடி மேல் அடி இடி மேல் இடி நிலநடுக்கம்.. 36 பேர் பலி