“பாலியல் வல்லுறவால் பிறந்தேன்; ஆனால் அது என் அடையாளம் அல்ல”

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள் தங்களது அன்பவத்தை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அது அவர்களின் வாழ்க்கையை வரையறுக்க அவர்கள் ஏன் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

டஸ்னிம்

டஸ்னிம்

அன்புள்ள டஸ்,

தற்போது நீ பிறந்து 10 நாளே ஆன குழந்தை. ஆனால் இதை படிக்கும்போது நீ வளர்ந்திருப்பாய்.

ஐ லவ் யூ சோ மச்.

தனது தாய் லூசியின் டைரியை முதன்முதலாக படிக்கும்போது டஸ்னிமின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. இந்த டைரி இருப்பதே டஸ்னிமுக்கு தெரியாது. ஆனால் டஸ்னிம் குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் லூசி உயிரிழந்தார். இந்த டைரி மட்டும் எப்படியோ பிழைத்து கொண்டது. டஸ்னிமின் கன்னத்தில் இருக்கும் தழும்புதான் அந்த இரவு நடந்ததற்கான ஒரே சாட்சி. புகை வீட்டை சூழ்ந்ததும் டஸ்னிமின் தந்தை அவரை பத்திரமாக தூக்கி ஒரு போர்வையில் சுற்றி தோட்டத்தில் உள்ள ஆப்பிள் மரத்திற்கு அடியில் கொண்டு வந்து வைத்தார்.

டஸ்னிமின் உயிரை அவர் காப்பாற்றினார் ஆனால் பெட்ரோல் ஊற்றி நெருப்பு மூட்டியதே அவர்தான். அந்த நெருப்பில் லூசியின் தாய் மற்றும் சகோதரியும் உயிரிழந்தனர்.

டஸ்னிமுக்கு தனது தந்தை ஒரு குற்றவாளி என்றும் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் என்றும் தெரியும். ஆனால் காவல்துறையின் பாதுகாப்பில் 18 வருடங்களாக இருந்த டைரியை படிக்கும்போது டஸ்லின் உடைந்து போகும் அளவிற்கு ஒரு உண்மையை தெரிந்து கொண்டார்.

தனது தாயின் வழக்கு தொடர்பான ஆதார கோப்புகளை கேட்டபோதுதான் டஸ்லினுக்கு அந்த டைரி கிடைத்தது.

அந்த டைரியை படித்த டஸ்லினுக்கு தனது தந்தை தனது தாயை பாலியல் வல்லுறவு செய்ததன் மூலமாகதான் தான் பிறந்த உண்மை தெரியவந்தபோது அவர் மீது இடி வந்து விழுந்தது போல இருந்தது.

லூசியின் கனவு மற்றும் நம்பிக்கையை மட்டும் அந்த டைரியின் பக்கங்கங்கள் விளக்கவில்லை. அவர் ரகசியமாக அனுபவித்த கொடுமைகளையும் அந்த டைரியின் மூலம் டஸ்லின் தெரிந்து கொண்டார்.

லூசி 12 வயது இருக்கும்போது டஸ்லினின் தந்தை, டாக்ஸி ஓட்டுநர் அசர் அலி மெமூத்தால் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளானார். அவர் 10 வருடங்கள் லூசியை காட்டிலும் மூத்தவர்.

உண்மை டஸ்னிமை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த உலகத்தில் தான் மட்டுமே இந்த கொடுமையை அனுபவிப்பது போல அவர் உணர்ந்தார். ஆனால் அது உண்மையல்ல.

பிரிட்டனை பொறுத்தவரை பாலியல் வல்லுறவினால் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் துர்ஹாம் பல்கலைக்கழகமும், பெண்கள் நீதிக்கான மையமும் இணைந்து 2021ஆம் ஆண்டில் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 3,300 பெண்கள் பாலியல் வல்லுறவினால் கர்ப்பம் அடைந்துள்ளனர் என்று கூறுகின்றன.

தற்போது வரவுள்ள சட்ட வரைவின் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தைகளை அதிகார்பபூர்வமாக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறமுடியும் என அரசு தெரிவிக்கிறது. இதன் மூலம் அவர்கள், தெரபி, ஆலோசனை போன்ற வசதிகளையும், அவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களையும் பெற முடியும் என அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். மது, போதைப் பழக்கம், கல்வி மற்றும் வீடு வாங்கும் சேவைகளில் அவர்களுக்கு அதிகம் சலுகை கிடைக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது

ஆனால் பிரிட்டனில் பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தைகளுக்கு எந்த தொண்டு நிறுவனமும் ஆதரவு சேவைகளும் இல்லாத காரணத்தால் டஸ்னிமை போன்றோர் கடினமான தங்களின் உணர்வுகளை நிபுணர்களின் உதவியோடு கையாள்வது எப்படி என தெரியாமல் போராடுகின்றனர்.

“உங்களின் பெற்றோர் காதலில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என நீங்கள் எண்ண தோன்றும்” என்கிறார் அவர்.

லூசி இறக்கும்போது அவருக்கு 15 வயது

லூசி இறக்கும்போது அவருக்கு 15 வயது

“உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் அது மாற்றும். உங்கள் குடும்பம் குறித்து உங்களை குறித்து உங்களுக்கு தெரிந்த அனைத்தும். ஏனென்றால் பாலியல் வல்லுறவு குற்றவாளி மற்றும் கொலைகாரருடன் எனக்கு பந்தம் உள்ளது. அதேபோல நான் அவரை போல வளர்ந்தால் என்ன ஆகும் என அச்சமும் எனக்கு வரும்” என்கிறார் அவர்.

அந்த டைரியின் சில பக்கங்களை டஸ்னிமால் படிக்க முடியவில்லை. எனினும் அதில் டஸ்னிமுக்கான லூசியின் அன்பை வெளிப்படுத்தும் பக்கங்களில் மட்டும் டஸ்னிம் கவனம் செலுத்த விரும்பினார். அதில் அவர்கள் இருவரின் வாழ்க்கை குறித்த கவிதைகளும் கதைகளும் இருந்தன.

“நான் என்னை பற்றி தவறாக நினைக்க கூடாது ஏனென்றால் எனது தாய் அதை விரும்ப மாட்டார்,” என்கிறார் டஸ்னிம்

நீல்

நீல் ஒரு பெருமூச்சுவிட்டு காகித உறையைத் திறந்தார்.

அவர் மேற்கு யோக்ஷையரில் உள்ள இல்க்லி நகரில் தத்தெடுக்கப்பட்டார். நீல்லுக்கு ஒரு மகிழ்ச்சியான குழந்தை பருவம் இருந்தபோதிலும், தனது தாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார். ஒரு கதையின் இளவரசியை போல படம் வரைந்து என்றாவது அவர்கள் இணைவார்கள் என நீல் நினைத்தார்.

நீலுக்கு தற்போது 27 வயது. தனது தாயை கண்டறிய நியமிக்கப்பட்ட ஒரு தனியார் துப்பறிவாளர் கொடுத்த கடிதத்தை நீல் திறக்கிறார். ஆனால் அந்த கடிதத்தை படிக்க படிக்க அவர் ஏதோ ஒரு ஆழமான பள்ளத்திற்குள் விழுவது போல உணர்ந்தார்.

நீலின் தாய் பதின் வயதில் இருக்கும்போது யாரென்று தெரியாத ஒரு நபரால் பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.

பாலியல் வல்லுறவின் விளைவாக பிறந்த குழந்தைதான் நீல் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

“அந்த வார்த்தைகளை கேட்கும் தருணத்திற்கு எதுவும் என்னை தயார்ப்படுத்தவில்லை” என்கிறார் நீல்.

ஒரு வன்முறையில், ஒரு மோசமான நிகழ்வின் மூலம் நீங்கள் பிறந்தீர்கள் என்பது தெரிந்தால் அது யாரோ நெஞ்சை குத்துவதை போலவும் கிழித்து எறிவதை போலவும்தான் தோன்றும் என்கிறார் நீல்.

“நீங்கள் அசிங்கமாக உணர்வீர்கள், துயரம் துரத்தும், குழப்பம் வரும். உங்களை குறித்து அனைத்து மோசமான உணர்வுகளும் உங்களுக்கு தோன்றும். நான் உடைந்துவிட்டேன்.” என்கிறார் நீல்.

“நீல்லுக்கு தன்னை பற்றி தெரிந்த அனைத்தும் மாறியது போல இருந்தது. கண்ணாடியில் பார்தாலும் ஏதோ ஒரு முகம் தெரியாத ஒரு நபர் பின்னால் இருந்து பார்ப்பது போல அவர் உணர்ந்தார்.”

காதலின் மூலம் பிறக்காமல் வன்முறையின் மூலம் பிறந்தால் உங்கள் தாய் உங்களை பார்க்க விரும்புவாரா? நீல்லுக்கும் இதே உணர்வுதான்.

சிறையின் கதவு மூடியதும் தனது இதயம் ஏதோ மிகுந்த கனத்துடன் துடிப்பதாக டஸ்னிம் உணர்ந்தார். அவரை பாதுகாவலர் ஒருவர் சிறிய அறை ஒன்றுக்கு அழைத்து சென்றார். அதில் ஒரு மேசையும் இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

அந்த அறையின் மறுபுற கதவு திறந்தது. டஸ்னிமின் தந்தையை டஸ்னிம் முதன்முறையாக கண்டார். சாம்பல் நிறத்தில் சிறை சீருடை அணிந்திருந்த அவர் டஸ்னிம் நினைத்ததை விடவும் உயரம் குறைவாக இருந்தார்.

ஆனால் அவரின் நடத்தை ஆச்சரியமாக இருந்தது. அவர் டஸ்னிமை கட்டித்தழுவினார். அவருக்கு சாக்லேட் கேக் வாங்கி வந்தார். ‘கொண்டாடுவதற்காக’

அசர் அலி மெமூத் 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்

அசர் அலி மெமூத் 2001ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்

ஆனால் டஸ்னிம் விரும்பியது இதுவல்ல. தனது தந்தை செய்த தவறின் தாக்கத்தை உணர வேண்டும் என டஸ்னிம் நினைத்தார்.

ஆனால் தனது தாயை துன்புறுத்திய மனிதரை அவர் கண்முன் கண்டார்.

டஸ்னிம் சிறையை விட்டு நடந்து வெளியே வந்தார். மீண்டும் அங்கு செல்லவே இல்லை. அவருக்கு தேவையான அனைத்து விடையும் அவருக்கு கிடைத்துவிட்டது.

ரயில் நிலையம் ஒன்றில் தனது தாயின் வருகைக்காக காத்திருந்தார் நீல். நீல்லின் மனதில் சொல்ல முடியாத உணர்ச்சிகள் எழுந்தன. அவர் இந்த தருணத்தை பலமுறை ஒத்திகை செய்து பார்த்திருந்தார். என்ன செய்ய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தார்.

அவர் வந்தடைந்தவுடன் அது நீல்லின் தாய்தான் என்று அவர் தெரிந்து கொண்டார்.

இருவரும் மாறி மாறி பார்த்து கொண்டனர். நீல் மிகவும் பதட்டமாக உணர்ந்தார்.

“நான் பார்ப்பதற்கு அந்த மனிதரை போல உள்ளேனா?” என்று கேட்டார் நீல். “நான் சென்று விடுகிறேன் என்றார்” ஆனால் இல்லை என்று அவர் தாய் பதிலளித்தார். தனது தோளில் இருந்த பெரும் பாரத்தை யாரோ இறக்கி வைத்தது போல நீல் உணர்ந்தார்.

இருவரும் வெகுதூரம் நடந்தனர். ஒருவரின் வாழ்க்கை குறித்து மற்றவரிடம் பகிர்ந்து கொண்டனர். நீல்லின் உடன்பிறந்தவர்கள் குறித்து அவர் தாய் கூறினார். இருவரும் ஒரே மாதிரியாக பேசினார்கள், சிரித்தார்கள் நடந்தார்கள்.

ஆனால் அந்த இரவு என்ன நடந்தது என நீல் கேட்கவில்லை. அதை கேட்டு தனது தாயை அவர் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு தெரிந்த வரை நீல்லுக்கு தந்தையில்லை. தாய் மட்டும்தான். அதுவே அவர்களுக்கு போதும்.

அம்மா, நான் பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தையா?

சேமி காரில் தனது அருகில் அமர்ந்திருந்த தனது மூத்த மகனை கண்டார். அவர் தனது மகனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார். அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த வலியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியவில்லை.

“இல்லை” “நீ எனது குழந்தை”

சேமி

SAMMY WITH HER SON

2013ஆம் ஆண்டு. சேமி சமீபத்தில்தான் தனது 12 வயது மகனிடம் அவர் எவ்வாறு பிறந்தார் என்பதை விவரித்திருந்தார். தனது மகன் தந்தை என்று அழைக்கும் அர்ஷித் ஹுசைன் என்பவர் எவ்வாறு தன்னை 14 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்தார் என்பதை அவர் தெரிவித்தார். ஹுசைன், சேமி காதலில் இருப்பதாக நம்ப வைத்தார். ஆனால் 24 வயது ஹுசைன் அவ்வாறு பல பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார்.

இறுதியாக அவரின் பிடியிலிருந்து சேமி தப்பித்தார். அப்போதிலிருந்து அவரை பாதுகாக்க எந்த சேவையையும் இல்லாமல் போனது குறித்து பேசி வருகிறார். சவுத் யோக்ஷயரில் உள்ள ரோதர்ஹமில் இம்மாதிரியாக பாலியல் வல்லுறவில் பிறந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும் அவர் பேசி வருகிறார்.

சேமி
சேமி

ஹுசைன் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார். சேமியின் மகனின் டிஎன்ஏ அவருக்கு எதிரான ஆதாரமாக அமைந்தது.

ஆனால் இந்த செய்தியை கேட்டதிலிருந்து தனது மகன் படும் துயரத்தை சேமி பார்த்து வருகிறார். தன்னை யாரும் விரும்புகிறார்களா? தான் ஒரு வேண்டாத குழந்தையா என சேமியின் மகன் கேட்க தொடங்கினார்.

இந்த செய்தி நாடு முழுவதும் பரவியது. எல்லாம் பொதுவெளிக்கு வந்தது. அவர்கள் தனிமையாக உணர்ந்தார்கள்.

தான் ஒரு சிறந்த தாயாக இருக்க சேமி முயற்சி செய்தார். ஆனால் எல்லாம் அவரின் தவறு என அவர் நினைக்கிறார்.

தனது சமையலறைக்கு சென்று அழுகிறார் சேமி. அவர் தனது மகனை மிகவும் நேசிக்கிறார் ஆனால் தான் இல்லாமல் மட்டுமே தனது மகன் நன்றாக இருப்பார் என அவர் நினைக்கிறார்.

டஸ்னிம், நீலை போலவே சேமியும் தனது உணர்வுகளுடன் தனியாக போராடினார். 2021ஆம் அனடு மேண்டி என்ற மற்றோரு தாயை சந்தித்து அவர் வெளிப்படையாக உரையாடியபோதுதான் சற்று ஆறுதலாக உணர்ந்தார்.

ஹுசைனுக்கு 35 வருட சிறை தண்டனை கிடைத்தது. சேமி மேண்டியின் சமையலறையில் அமர்ந்துள்ளார். மேண்டியின் நாய் டோஃபி நாற்காலிக்கு அடியில் அமர்ந்துள்ளது. மேண்டி சேமியிடம் தனது கதையை சொன்னார். 30 வருடங்களுக்கு பிறகும் அது வலி நிறைந்ததாக இருந்தது.

மேண்டி முதன்முறையாக 11 வயதில் தான் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக நினைவு கூர்ந்தார். அவரின் தந்தை ஒரு மதிப்புக்குரிய காவல்துறை பணியாளராக இருந்தார். சால்வேஷன் ஆர்மியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். ஆனால் ஒரு நாள் தனது ஆடைகளை களைந்து மேண்டியை நோக்கி வந்தார்.

அப்போதிலிருந்து ஒவ்வொரு இரவும் மேண்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதை யாரிடமும் சொல்ல மேண்டிக்கு தைரியம் வரவில்லை. அவர் பயந்துவிட்டார். எங்கோ மாட்டிக் கொண்டதை போல உணர்ந்தார்.

ஒருநாள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார்.

“அது யாரோ உங்களுடைய உடம்பில் விஷத்தை ஏற்றியதை போல இருந்தது. அதை தான் எனது தந்தை எனக்கு செய்தார்.” என அவர் சேமியிடம் தெரிவித்தார். மேண்டிக்கு என்ன செய்வது என்று தெரியவிலை. அவரின் தந்தைக்கு தெரிந்தபோது நாட்கள் கடந்துவிட்டன. அவர் குழந்தை பெற்று கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த குழந்தை தனது தந்தையை தந்தை என்றே அழைக்கும் என நினைத்து கொதிப்படைந்தார் மேண்டி.

டெலிவரிக்கு பிறகு குழந்தையை அவரின் தந்தைதான் வாங்கினார்.

மேண்டி
மேண்டி

“அது என்னை முற்றிலும் அழித்துவிட்டது. அவர்தான் எனது குழந்தையை முதன்முதலில் தூக்கினார். அவன்மீதிருந்து கையை எடு என கத்த வேண்டும் போல எனக்கு இருந்தது” என்கிறார் மேண்டி.

“அவன் என்னுடைய குழந்தை. அவன் அற்புதமானவன். அவனை நான் எப்போதும் பாதுகாப்பேன்.”

வாய்ப்பு கிடைத்தபோது மேண்டி தனது வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். மீண்டும் அங்கு செல்லவே இல்லை.

ஒரு மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையில் குழந்தை உருவாவதற்கும், துன்புறுத்தலில் குழந்தை உருவாவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா என சேமி அவரிடம் கேட்டார்.

ஆம். என்கிறார் மேண்டி. “அவன் எனது அன்பு காதலனால் உருவாகவில்லை. ஒரு மோசமானவனால் உருவானான். ஆனால் நான் அவனை நேசிக்கிறேன்.”

மேண்டியின் மகனை அவரது கணவர் பீட் முறைப்படி தத்தெடுத்து கொண்டார். இப்போது மற்றொரு குழந்தையுடனும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

ஆனால் தனது தந்தையிடமிருந்து தப்பித்த மேண்டியால் அந்த தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை. அவரின் மகனுக்கு ஒரு மரபணு குறைபாடு உள்ளது.

30 வருடங்களுக்கு பிறகும் அவரை 24 மணி நேரமும் பார்த்து கொள்கிறார் மேண்டி. பாலியல் துன்புறுத்தலால் தான் பிறந்ததை புரிந்து கொள்ளும் பக்குவம் அவரது மகனுக்கு இல்லை. எனவே அவரின் பிறப்பு குறித்து அவரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை என மேண்டி நிம்மதியடைந்தார். ஆனால் அது மேண்டியின் வாழ்க்கை மொத்தத்தையும் பாதித்தது.

“நான் எப்போதும் கூறுவேன். நான் மீட்கப்பட்டவள் எனது குழந்தை பாதிக்கப்பட்டவன்” என்கிறார் மேண்டி சேமியிடம்.

“இந்த முறையில் பிறக்க வேண்டும் என அவன் விரும்பவில்லை. ஒரு குற்றம் எனக்கு நடந்தது. அது அவனுக்கும் நடந்தது.” என்கிறார் அவர். சேமியும் மேண்டியும் சந்தித்து கொள்ளும் வரை இருவரும் தாங்கள் தனிமையாக இருப்பதாக உணர்ந்தார்கள்.

“உங்களுக்கு என்ன நடந்தாலும் சரி. நீங்கள் அதை கடந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என மேண்டியின் மூலம் தெரிந்து கொண்டேன்” என்கிறார் சேமி.

“மக்கள் இதை பொதுவெளியில் பேச வேண்டும்.”

இறுதியாக இது குறித்து பொதுவெளியில் பேசப்படுவதாக செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். பாதுக்கப்பட்டவர்களுக்கான சட்ட வரைவு அல்லது ‘டெய்சிஸ் லா’ (1970ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவால் பிறந்தவரின் பெயர்), நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் ஒன்று என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

நீல் மற்றும் டஸ்னிம் இந்த சட்டவரைவில் ஏற்படும் மாற்றம் தங்கள் குரல்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சாட்சி என்கின்றனர்.

அதேபோல இதுகுறித்து அவர்கள் தொடர்ந்து பேச விரும்புகின்றனர். இதுகுறித்து பேச அனைவரும் தயங்குகின்றனர். ஆனால் அது தவறு. இது என்னுடைய தவறில்லை. நான் பாதிக்கப்பட்டவள் என்று டஸ்னிம் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து பொதுவெளியில் பேசுவது தனது தாயின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் நம்புகின்றார். “எங்களின் கதை மோசமான ஒன்றாக முடிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.” என்கிறார் டஸ்னிம்.

“எனது தாயிடம் அவர் எவ்வளவு தைரியமானவர் என்பதை சொல்ல நான் விரும்புகிறேன்.” என்கிறார் டஸ்னிம்.

அதே போல நான் நன்றாக இருக்கிறேன் என்றும் அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்கிறார் டஸ்னிம்.

Previous Story

சீனாவை நெருங்குகிறதா செளதி? பட்டத்து இளவரசரின் கனவு ?

Next Story

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு! சாணக்கியன் பகிரங்க கருத்து