பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை சர்வதேச அளவில் பல நாடுகளும் கண்டித்து வருகின்றன. இதற்கிடையில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா முடிவெடுத்திருக்கிறது.

இந்த முடிவை ஆதரித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியிருக்கின்றனர். பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்க ஆஸ்திரேலியா அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, இஸ்ரேல்- ஆஸ்திரேலியா உறவில் பதற்றம் நிலவுகிறது.

(நன்றி:  யூசுப் என் யூனுஸ்)

இந்தச் சூழலில், ஆஸ்திரேலியா முழுவதும் பாலஸ்தீன ஆதரவுப் பேரணிகள் நடைபெற்றுள்ளன.   பாலஸ்தீன அதிரடிக் குழுவின் தகவல்படி, ஆஸ்திரேலியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் பேரணிகள் நடந்தன.

சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் போன்ற முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர். பிரிஸ்பேனில் சுமார் 50,000 பேர் பங்கேற்றதாக அமைப்பாளர்கள் கூறினாலும், காவல்துறையினர் சுமார் 10,000 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக மதிப்பிட்டனர்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் கூடிய கூட்டத்தின் எண்ணிக்கையை காவல்துறை வெளியிடவில்லை. சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “காசாவில் நடக்கும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரவும், இஸ்ரேல் மீது தடை விதிக்கவும் எங்கள் அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார். அ

ங்கு பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியபடி, “சுதந்திர பாலஸ்தீனம்” என்று மக்கள் முழக்கமிட்டனர்.  ஆஸ்திரேலிய யூதர்களின் கூட்டமைப்பான ஆஸ்திரேலிய யூத கவுன்சிலின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸ் ரிவ்சின், ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த பேரணிகள் “பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன, இவை நடைபெறக் கூடாது” என்று கூறினார்.

பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளைப் தொடர்ந்து, அல்பானீஸின் தொழிலாளர் கட்சி அரசு நிபந்தனைகளுடன் கூடிய பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்க முன்வந்ததால், ஆஸ்திரேலியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Previous Story

"குண்டாக இருப்பவர்கள்.. கண்டிப்பாக 2 டிக்கெட் வாங்கணும்.."

Next Story

අවුරුදු දහයකට ඡන්ද එපා