பாரதியார் தினம்: வறுமை வாழ்க்கை ?

பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?

இந்தியா சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அந்த வேட்கையை தீவிரமாக்கக்கூடிய கீதங்களை எழுதிய பாரதி, மிகப்பெரிய கவிஞராகப் போற்றப்படுகிறார். ஆனால், எப்போதும் வறுமையிலேயே வாடிய பத்திரிகையாளரின் வாழ்வுதான் அவருடையது.

ஒரு செல்வச் சீமானின் மகனாகப் பிறந்து, கடும் வறுமையில் முடிந்துபோனவர் பாரதி. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரிதான் பாரதியாரின் முன்னோர்களுடைய ஊர். சீவலப்பேரியைச் சேர்ந்த சுப்பையரின் மகன் சின்னச்சாமி அய்யருக்கும் எட்டயபுரத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளுக்கும் 1882ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி பாரதி பிறந்தார். அவருக்கு சுப்பிரமணி எனப் பெயரிடப்பட்டது. வீட்டிலும் வெளியிலும் சுப்பையா என்றை அழைக்கப்பட்டார் பாரதி.

பாரதியின் தாயார் பாரதிக்கு ஐந்து வயது இருக்கும்போதே காலமாகிவிட, இரு ஆண்டுகளுக்குப் பிறகு சின்னச்சாமி அய்யர் வள்ளியம்மாள் என்பவரை மணந்தார்.பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் தன் மகன் படிப்பின் மீதும், அறிவியலின் மீதும் கவனம் செலுத்த வேண்டுமென விரும்பினார். ஆனால், கணிதம், அறிவியல் போன்றவற்றில் பாரதிக்கு ஆர்வமில்லை. அவர் இலக்கியங்களைப் படிக்கவே விரும்பினார்.

சிறு வயதிலேயே அவருக்கு அற்புதமான கவிதைகளை எழுதும் ஆற்றல் வந்துவிட்டதாக அவருடைய சிறுவயதுத் தோழரான சோமசுந்தர பாரதி கூறியிருக்கிறார்.

“பாரதியார் தமது ஏழாவது வயது முதலே அருமையான தமிழ்க் கவிகளை விளையாட்டாக வரைந்து கவனஞ்செய்வதைக் கண்ட வித்வான்கள் நமது கவியின் தந்தையாரைப் புகழ்ந்திருப்பதை நான் நேரில் அறிவேன். எட்டு, ஒன்பது ஆண்டுகளில் ஸர்வசாதாரணமாய், கொடுத்த ஸமஸ்யைகளை வைத்து அற்புதமான கவிகளைப் பூர்த்திசெய்து பெரிய புலவர் கூட்டங்களைப் பிரமிக்கச் செய்த பல காலங்களிலும் நான் கூட இருந்திருக்கிறேன்” என்று சோமசுந்தர பாரதி கூறியதை சித்திர பாரதி நூலில் பதிவுசெய்திருக்கிறார் பாரதி ஆய்வாளரும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ரா. அ. பத்மநாபன்.

சுப்பையாவுக்கு பதினொரு வயதில் பாரதி என்ற பட்டம் கிடைத்தது. புலவர்களின் பெரும் சபையில் அவர்கள் புதிதுபுதிதாகக் கொடுத்த அடிகளைக் கொண்டே அற்புதமான கவிதைகளைப் பாடியதும் புலவர்கள் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தைக் கொடுத்ததாக ரா.அ. பத்மநாபன் குறிப்பிடுகிறார்.

1897ஆம் ஆண்டு பாரதிக்கும் கடயத்தைச் சேர்ந்த செல்லப்பாவின் மகள் செல்லம்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதியின் வயது பதினான்கரை. செல்லம்மாவுக்கு வயது ஏழு.

இதற்கு அடுத்த ஆண்டே பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரின் பஞ்சாலை இயந்திரங்களுக்கு உதிரிபாகங்கள் கிடைக்காததால், தொழிலில் பெரும் இழப்பைச் சந்தித்தார். அதிலேயே மனமுடைந்து இறந்தும் போனார்.

இதனால், காசியிலிருந்த தனது அத்தை குப்பம்மாளின் வீட்டிற்குச் சென்ற பாரதி அங்கிருந்த மிஷன் கல்லூரி, ஜெய் நாராயண் கல்லூரி ஆகிய இரண்டிலும் படித்தார்.

காசியிலிருந்த சமயத்தில்தான் தன் குடுமியை எடுத்திவிட்டு கிராப் வைத்துக்கொண்டார் பாரதி. வட இந்தியர்களைப் போல வால்விட்ட தலைப்பாகையும் மீசையும் வைத்துக் கொள்ளும் பழக்கமும் அப்போது ஏற்பட்டதே என்கிறார் ரா.அ. பத்மனாபன்.

பிறகு எட்டயபுரத்தில் வந்து வசிக்க ஆரம்பித்த பாரதியிடம் ஆங்கில கவிதைகளின் தாக்கம் வெகுவாகவே இருந்தது. அத்தகைய தாக்கத்தில் ஸானட் எனப்படும் ஆங்கில கவிதை வடிவில் ‘தனிமை இரக்கம்’ என்ற ஒரு பாடலை விவேகபாநு பத்திரிகைக்கு அனுப்பினார். 1904 ஜுலையில் அந்தக் கவிதை பிரசுரமானது. இதுதான் பாரதி எழுதி பிரசுரமான முதல் கவிதை. காசியிலிருந்து எட்டயபுரம் திரும்பிய பாரதி, அங்கிருந்த அரண்மனையில் இரண்டாண்டுகளுக்கு வேலை பார்த்த பிறகு வேலை தேடி மதுரைக்குச் சென்றார்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அரசன் சண்முகனார் என்ற தமிழறிஞர் பணியாற்றி வந்தார். அவர் மூன்று மாதம் விடுமுறையில் சென்றபோது அந்தப் பணியில் இணைந்தார் பாரதி. அப்போது அவருக்கு மாதச் சம்பளம் பதினேழரை ரூபாய். 1904ஆம் ஆண்டு நவம்பரோடு அந்த வேலை முடிந்தது.

இதற்குப் பிறகு சென்னையிலிருந்து வெளியான தமிழ் தினசரியான சுதேசமித்திரனில் வேலைக்குச் சேர்ந்தார் பாரதி. இதற்குப் பிறகு மரணம் வரை பத்திரிகை எழுத்தே அவரது வாழ்வாதாரமாக இருந்தது. சுதேசமித்திரனில் சேர்ந்து ஓராண்டுக்குள்ளாகவே சக்ரவர்த்தினி என்ற பெண்களுக்கான பத்திரிகையின் ஆசிரியராகவும் வேலை பார்க்க ஆரம்பித்தார் பாரதி.

1905வாக்கில் கொல்கத்தாவுக்கு அருகில் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா அம்மையாரைச் சந்தித்தார் பாரதி. இந்தச் சந்திப்பு பாரதியிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சுதேசமித்திரனில் எழுதிவந்த பாரதி, தான் விரும்பிய கருத்துகளை அப்பத்திரிகையில் எழுத முடியாமல் இருந்துவந்த நிலையில், 1906ஆம் ஆண்டில் பாரதியை ஆசிரியராகக் கொண்டு இந்தியா என்ற பத்திரிகையை எம்.பி. திருமலாச்சாரி துவங்கினார். இதில் அரசியல் கட்டுரைகளைத் தவிர, பாடல்கள், கதைகள் ஆகியவற்றையும் பாரதி எழுதினார்.

1907ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். இரண்டு ரயில் பெட்டிகள் நிறையும் வகையில் சென்னையிலிருந்து ஆட்கள் சூரத்திற்குச் சென்றனர். இந்த மாநாட்டில்தான் மிதவாதப் பிரிவினருக்கும் தீவிரவாதப் பிரிவினருக்கும் மோதல் மூண்டது. அங்கு சென்று திரும்பிய பாரதி, இந்தக் கூட்டத்தைப் பற்றியும் எழுதினார்.

1907ஆம் ஆண்டு முதல் பாலபாரதா அல்லது யங் இந்தியா என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழும் பாரதியின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது. சென்னையின் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய எம்.ஸி. நஞ்சுண்டராவ் இந்தப் பத்திரிகையை பாரதிக்காக நடத்தினார்.பாரதி தனது குருவாகக் கொண்ட நிவேதிதா தேவி இந்த இதழில் நிறைய எழுதி வந்தார். இந்தப் பத்திரிகையை நடத்திய நஞ்சுண்டராவ்தான் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி கடைசியாக வசித்த வீட்டைக் கட்டியவரும்கூட.

1907ல் பாரதி பாடிய மூன்று பாடல்கள் ‘சுவதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் சிறிய பிரசுரமாக வெளியாயின. அவரது படைப்புகள் தனிப்பிரசுரமாக வெளியானது அப்போதுதான்.இதற்கிடையில் வ.உ. சிதம்பரம் பிள்ளை இந்திய கப்பல் கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க விரும்பி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை பதிவுசெய்தார். அந்த கம்பெனிக்காக நிதி திரட்டுவதில் பாரதி பெரும் உதவி செய்தார்.

மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவரை சிதம்பரம் பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாரதி. அவர் அந்த நிறுவனத்தில் 70 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார்.இந்த காலகட்டத்தில் பால கங்காதர திலகரின் தாக்கம் பாரதியாரிடம் வெகுவாக இருந்தது. 1908ஆம் ஆண்டில் பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டு ஆறு வருஷ கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

பாரதியும் கைதுசெய்யப்படலாம் என்ற சூழல் நிலவியதால், அவருடைய நண்பர்கள் அவரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள புதுச்சேரிக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதனால், புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார் பாரதி.இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, “இந்தியா” பத்திரிகையின் அச்சகம் புதுவைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து புதுச்சேரியிலிருந்து வெளியாக ஆரம்பித்தது “இந்தியா”. இந்த காலகட்டத்தில் தேச பக்தர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதழில் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளராக பாரதியின் செயல்பாடுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. திருவல்லிக்கேணியிலிருந்து வெளியாகி நின்று போயிருந்த விஜயா என்ற இதழ் 1909லிருந்து புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளியாக ஆரம்பித்தது.

1910லிருந்து அரவிந்த கோஷின் கர்மயோகின் இதழின் தமிழ்ப் பதிப்பான கர்மயோகி வெளியாக ஆரம்பித்தது.பாரதியின் சொந்தப் பத்திரிகையான கர்மயோகி, ஆர்ய தர்மம்,பாரத நாட்டுக் கலைகள், ராஜாங்க விஷயங்கள் முதலியவை பற்றி விவரிக்கப்படுமென பாரதி அறிவித்திருந்தார். இதற்கிடையில் இந்தியா, விஜயா ஆகிய இரு பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்தியப் பகுதியில் தடை விதிக்கப்பட்டது. இதனால், இரு பத்திரிகைகளுமே நின்று போயின. 1910வாக்கில் பாரதி எழுத பத்திரிகைகளே இல்லாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் வ.வெ.சு. ஐயர், பாபு அரவிந்த கோஷ் ஆகியோரும் புதுச்சேரியை வந்தடைந்தனர்.

1911ல் மணியாச்சியில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இவர்கள் மீதான பிரிட்டிஷ் உளவாளிகள் கண்காணிப்பு அதிகமாயிற்று. இனி பத்திரிகைகளில் எழுதுவதென்பது இயலாதென்பதையறிந்து, புத்தகங்களாக வெளியிடக்கூடிய படைப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1912ல் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் ஆகிய முக்கியமான நூல்கள் உருப்பெற்றன.

ஆனால், எல்லா நூல்களும் அந்த ஆண்டிலேயே வெளியாகிவிடவில்லை. பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியானது. சில நூல்கள் அவரது மறைவுக்குப் பிறகு வெளியாயின.

பாரதி தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் விறுவிறுப்பாகவும் புலமையுடனும் எழுதக்கூடியவர். The Fox with Golden Tail என்ற பெயரில் அன்னி பெஸன்ட் அம்மையாரின் அரசியலைப் பற்றி ஒரு கேலிக் கதையை எழுதியிருக்கிறார். தான் எழுதிய கவிதைகள் சிலவற்றையும் நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் பாசுரங்கள் சிலவற்றையும் பாரதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Political Evolution in the Madras Presidency என்ற கட்டுரையும் பாரதி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளில் ஒன்று.

புதுவையில் இருந்தபோது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடிய நிலையிலும் ஒரு நாளை சமைப்பதற்காக வைத்திருந்த அரிசியை எடுத்து குருவிகளுக்கு தீனியாகப் போட்டது குறித்த சம்பவத்தை தனது பாரதி நினைவுகள் நூலில் பதிவுசெய்திருக்கிறார் யதுகிரி அம்மாள், இதுபோல திருவல்லிக்கேணியில் குடியிருந்தபோதும் நடந்ததுண்டு.

1918வரை புதுச்சேரியில் இருந்த பாரதிக்கு அந்த வாழ்க்கை ஒரு கட்டத்தில் சலித்துவிட்டது. மீண்டும் சென்னை மாநகரத்திற்குத் திரும்ப விரும்பினார் அவர். 1918 நவம்பரில் தன் மனைவி செல்லம்மாவுடன் சென்ற அவரை, பிரிட்டிஷ் காவல்துறையினர் கைதுசெய்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் கொண்டுசென்றனர். பிறகு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் பாரதி. நவம்பர் 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட பாரதி டிசம்பர் மாத மத்தியில் விடுதலை செய்யப்பட்டார். பத்தேகால் வருட புதுச்சேரியில் வாசம் இப்படியாக முடிவுக்கு வந்தது.

புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதி, தன் மனைவின் சொந்த ஊரான கடயத்தில்தான் சில காலம் வசிக்க வேண்டியிருந்தது.அங்கிருந்தபோது பலரிடம் நிதி திரட்டி தன் புத்தகங்களை பதிப்பிக்கத் திட்டமிட்டார் பாரதி. ஆனால், அது நடக்கவில்லை.1920 நவம்பரில் கடயத்தில் நடந்த ஒரு நிகழ்வையடுத்து, பாரதியுடம் அவரது குடும்பத்தினரும் மீண்டும் சென்னை திரும்பினர்.

மீண்டும் சுதேசமித்திரன் அலுவலகத்தில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் பாரதி. இந்த காலகட்டத்தில்தான் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் இருந்த வீட்டில் வசித்தார் பாரதி. இந்த நிலையில்தான், 1921ஆம் ஆண்டு வீட்டெதிரே இருந்த பார்த்தசாரதி பெருமாள் கோவில் யானையால் தாக்கப்பட்டு காயமடைந்தார் பாரதி. பிறகு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றார். ஜூன் மாதத்தில் இந்த சம்பவம் நடந்தது.

1921 செப்டம்பரில் பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. ஒன்றாம் தேதியிலிருந்து சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார் பாரதி. செப்டம்பர் 11ஆம் தேதி மாலையில் நிலைமை மோசமடைந்தது. அதிகாலை ஒன்றரை மணியளவில் உயிரிழந்தார் பாரதி.

பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கைகள் எழுந்ததன் பின்னணியில் 1949ல் அவரது பாடல்கள் அப்போதைய முதல்வர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரால் நாட்டுடமையாக்கப்பட்டன.

Previous Story

ஒமிக்ரான்:58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் ?

Next Story

'பிரிக்ஸ்' நாடுகளில் இந்தியா முன்னணி