பாம்பின் கால் பாம்பு அறியாதா?

 உளவுத்துறையை ஓட விடும் அண்ணாமலை!

‘என் போன் உரையாடல் பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியதற்கு, வலுவான பின்னணி இருப்பதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.

பா.ஜ., வட்டாரம் கூறியதாவது: அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. அதனால், அவரின் அன்றாட நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து, அதை சாதுரியமாக முறியடிக்க வேண்டும் என, அரசு தரப்பு கடும் முயற்சி எடுக்கிறது. இதற்காக, உளவுத்துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அண்ணாமலை பாதுகாப்புக்கு, மூன்று போலீசார் நியமிக்கப்பட்டனர். சில நேரங்களில், நான்கு போலீசார் வந்து சென்றனர்.

மத மாற்ற அழுத்தம்

போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதால், போலீசாரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டுமோ, அங்கு நிறுத்தினார். வீடு மற்றும் அலுவலகம் உள்ளே அவர்கள் நுழையாமல் பார்த்து கொண்டார். இருந்தும், உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் செல்வது நிற்கவில்லை. உளவுத் துறையில் இருக்கும் தன் விசுவாசிகள் வாயிலாக, அதை அண்ணாமலை அறிந்து கொண்டார். போலீசாரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு, ‘அலர்ட்’ கொடுத்தார்.

ஒரு கட்டத்தில், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு எதுவுமே தெரியாமல், ரகசியமாக நடந்து கொண்டார்.இதனால், போலீசார் தடுமாறினர். தகவல் கிடைக்காத நிலையில், அண்ணாமலைக்கு கூடுதல் பாதுகாப்பு எதற்கு என்று முடிவு எடுத்து, பாதுகாப்பை குறைத்தனர். ஒரே ஒரு போலீஸ்காரரை அனுப்பினர். அதுபோல, தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தின் பாதுகாப்பையும் குறைத்து விட்டனர்.

அதே நேரம், உளவு பார்க்கும் நுண்ணறிவு போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். அவர்கள், எந்நேரமும் அண்ணாமலை மற்றும் கமலாலயம் பகுதியை வலம் வர துவங்கினர். பத்திரிகையாளர்கள் பலரை நண்பர்களாக்கி, அவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை, மேலிடத்துக்கு உடனுக்குடன் அனுப்பினர்.அதுவும் அண்ணாமலைக்கு தெரிந்து விட்டது. அவர் உஷாரானதும், உளவு பிரிவு அதிகாரிகள் தத்தளித்தனர்.

கடைசியாக, அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான், போன் உரையாடலை பதிவு செய்வது. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதை சோதிக்க விரும்பிய அண்ணாமலை, கவர்னரை சந்திக்க போவதாக, மொபைல் போன் வாயிலாக சிலரிடம் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் உளவுத் துறை அதிகாரிகள் வாயிலாக, ஆட்சி மேலிடத்துக்கு சென்றது. கவர்னர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும், நுண்ணறிவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அத்துடன், கவர்னரை சந்திக்க போகும் விபரம் கேட்டு, பலரும் தொடர்பு கொள்ள, தன் போன் உரையாடல் பதிவு செய்யப்படுவதை, அவர் உறுதி செய்து கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., — பா.ஜ., கூட்டணி இருக்கக் கூடாது என, உளவுத் துறை அதிகாரிகள் சில காரியங்களை செய்ய துவங்கினர். இரு கட்சியினரிடையே தகவல்களை தாறுமாறாக பரப்பினர். இது தெரிய வந்ததும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை ரகசியமாக சந்தித்து பேசினார். அதன்பின் தான், இரு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுவது என, முடிவு எடுக்கப்பட்டது.

மத மாற்ற அழுத்தம் காரணமாக, அரியலுார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்திலும், அண்ணாமலையின் செயல்பாடுகளை முன்கூட்டியே அறிய, உளவுத் துறை போலீசார் கடுமையான முயற்சி எடுத்தனர். ஆனால், கடைசி வரை ரகசியமாகவே இருந்ததால், உளவுத் துறையினர் தடுமாறினர்.

கூடுதல் குடைச்சல்

நடிகை விஜயசாந்தி இடம் பெற்ற மேலிட குழுவை அமைத்து, அவர்களை தமிழகம் வரவழைத்தது, விசாரணைக்கு ஏற்பாடு செய்தது எல்லாமே அண்ணாமலை தான். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ரகசியமாக பேசி, இதை செய்து முடித்தார். இதனால், உளவுப் பிரிவு போலீசார் கடும் கோபத்தில் உள்ளனர்.

மறைமுகமாக கூடுதல் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இதை முறியடிக்க, தன் போன் உரையாடலை பதிவு செய்கின்றனர் என வெளிப்படையாக கூற துவங்கியுள்ளார். போலீஸ் மற்றும் தமிழக அரசின் நெருக்கடி அதிகமானால், மேலும் பல ரகசியங்களை உடைக்க, அண்ணாமலை காத்திருக்கிறார். இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறின.

பாதுகாப்பு குறைப்புக்கு அண்ணாமலை தான் காரணம்

இது குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸ் பிரிவில், ‘செக்யூரிட்டி பிரிவு’ என்று தனியாக உண்டு. உளவு பிரிவு உயர் அதிகாரி குறிப்பிடும் தலைவர்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடு செய்வது இந்த பிரிவின் கடமை.ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, இதில் மாற்றம் செய்யப்படும்.

பாதுகாப்பு அவசியம் தேவைப்படுவோருக்கு அது தொடரப்படும் அல்லது குறைக்கப்படும். எனினும், அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், அந்த தலைவர்களின் அன்றாட செயல்பாடுகளை, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். இது, அரசியல் தலைவர்களை கண்காணிப்பது போன்றது தான். இதனால் பல தலைவர்கள், போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என கூறி விடுவர்.

அண்ணாமலை பாதுகாப்புக்கு துவக்கத்தில், மூன்று போலீசார் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர் அதை இடைஞ்சலாக கருதி, போலீசாரிடம் கசப்பு காட்டியதை தொடர்ந்தே, பாதுகாப்பு குறைக்கப்பட்டது. சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெருவில் தான் தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த தெருவின் இரண்டு முனைகளிலும், போலீஸ் பூத் அமைத்து, அங்கே போலீசார் நிறுத்தப்பட்டனர்.

சிறிது காலத்துக்கு பின், கமலாலயத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று தெரிய வந்ததால், அந்த பூத்களுக்கு அனுப்பப்பட்டபோலீசார் நிறுத்தப்பட்டனர். அதற்கு பதிலாக, கமலாலயம் உள்ள பகுதியில், 24 மணி நேரமும்பாதுகாப்பு பணியில், போலீசார் உள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு பின், போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக தேவையென்றால், அதை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது.இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் கூறின.

Previous Story

சஜித்தும் சல்காதுவில்!

Next Story

மக்கள் நாடி பிடித்து பார்க்க முற்படுகின்றது அரசாங்கம்: காய் நகர்த்துகின்றார் பசில்!