பாததும்பற பிரதேச சபை: உடதலவின்ன, மடவள முஸ்லிம் பிரதிநிதித்துவம் OUT

-நஜீப்-

அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 திகதியும் நடக்கப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான புதிய உள்ளூராட்சி வட்டாரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சில வேலை அரசாங்கம் ஏற்கெனவே அறிவிப்புச் செய்த தேர்தலை இரத்துச் செய்து விட்டு தேசப்பிரிய உறுப்பினர் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்திருக்கின்ற புதிய வட்டாரங்களின் அடிப்படையில் தேர்தலுக்கு அறிவிப்புச் செய்யவும் இடமிருக்கின்றது.

நமக்குக் கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி தெற்கில் சிறுபான்மை சமூத்தினர் பெருவாரியாக வாழ்ந்த வட்டாரங்களை புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் துண்டாடி அந்த வட்டாரங்கள் பேரின சமூகத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதற்காக பேரின கிராம சேவகர் வட்டாரங்கள் புதிதாக அதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இது விவகாரத்தில் தெற்கிலுள்ள சிறுபான்மை சமூகத்தினர் தமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்து தமது உறுப்புரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் நடடிவடிக்கைகளில் விரைவாக இறங்க வேண்டும் எனவும் அரசியல் சிவில் சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட செயற்பாடு என்பது நமது குற்றச் சாட்டு. இது பற்றி ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் விளக்கம் கோட்டால் தான் இந்த எல்லை நிர்ணயத்தின் போது இனப் பிரதிநித்துவம் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

ஆனால் பிரதேச மட்டத்தில் அதிகாரிகள் திட்டமிட்டு தொடர்ச்சியாக இதுவரை இருந்த சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்துக்கு நாடுபூராவிலும் ஆப்பு வைத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது நமது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது. உதாரணத்துக்கு பாததும்பரை பிரதேச சபையில் இதுவரை 18+14 (32) ஆக இருந்த பிரதிநித்துவம் தற்போது ஒன்பதாக 9+7 (16) ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 60965 பேர். இதில் 14000 பேர் (உடதலவின்ன, மடவளை) முஸ்லிம்கள். 1000 பேர்வரை தமிழர்கள். சராசரியாக இதுவரை ஒவ்வொரு சபைகளிலும் ஐந்து முதல் ஆறு வரையிலான முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கு தொடர்ந்தும் இடம் பெற்றிருந்தார்கள். இதன் பின்னர் இந்த புதிய வட்டாரங்களில் ஒரு உறுப்பினரைக் கூட அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத சூழ் நிலை இன்று உருவாக்கப் பட்டிருக்கின்றது.

பாததும்பற பிரதேச சபையில் மடிகே-உடதலவின்ன 611, கலதெனிய 612, மடிகே-மடவள 637, குன்னேபான 638, பிஹில்லதெனிய 639 ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.

புதிய வட்டாரங்கள்

1.மீகம்மன:  594, 601, 602, 603, (612).
2.பொல்கொல்ல:  609, 610, (611) 615.
3.அபேசிங்ஹ கம:  635, 636, (637) 639.
4.மடவள:  604: (638) 640, 641.
5.பிடியேகெதர:  595, 596, 597,633, 634,(639), 642, 643, 644, 645.

(ஏனைய வட்டாரங்கள் முறையே:

6.வத்தேகம: 594,598,599,600,620,621,622,

7.பரனகம: 623,624.625,627,628,631,632,

8.கஹல்ல: 605,606,608,613.614.

9.அபதென்ன: 616,617,618,619,629.630.)

இதில் முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகள் இணைக்கப்ட்டிருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் அந்த வட்டாரத்தில் இன்று சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளனர். பாததும்பற ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று பல இடங்களில் தமக்கு அநீதி இலைக்கப்பட்டிருப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

 

Previous Story

சீனாவில் மக்கள் தொகை சரிவு.. மாணவர்களை காதலில் விழ வைக்க ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை.!

Next Story

புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்: கலந்துரையாடல் 07.04.2023