பாக்:என்ன நடக்கிறது? ராணுவத்திற்கே சவால் விடும் இம்ரான்! 

பாகிஸ்தானின் ராணுவ அமைப்பு இம்ரான் கானின் வடிவத்தில் நாட்டின் பாதுகாவலரை கண்டுபிடித்து விட்டதாக பல ஆண்டுகளாக கருதி வந்தது. ஆனால் ஆட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பர் ஒன் எதிரியாக இம்ரான் கான் ஆகிவிட்டார். இம்ரான் கானை எதிர்க்க பாகிஸ்தான் ராணுவம் முழு பலத்தையும் பயன்படுத்த முயல்கிறது.

Prime Minister Imran Khan Openly Attacks Pakistan Army, Compares Them To 'Animals' - YouTube

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நாடு முழுவதும் ஒடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவதுமே ஸ்தம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைகுலையச்செய்துவிட்டது.

இம்ரான் கான், பாகிஸ்தான்

-முகமது ஹனீப்-

வரலாற்றிலேயே மிக மோசமான வெப்ப அலையை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு நிலைமையை மேலும் கடினமாக்கியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலிலும் இம்ரான் கானின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, அவரைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்யப்போகிறது என்றுதான் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் சிந்தித்து வருகிறது.

ஓராண்டுக்கு முன்பு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் ’இம்ரான் கான் எங்கள் சிவப்பு கோடு. அதைத் தாண்டக்கூடாது. அவரைக் கைது செய்தால் நாடு எரியும்,’ என்று கூறினார்கள்.

பல தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் துணை ராணுவப் படை இறுதியாக இம்ரான் கானை மே 9 ஆம் தேதி கைது செய்தது.

நாடு எரியவில்லை, ஆனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தை ராணுவ கண்டோன்மெண்டுகளுக்கு கொண்டு சென்றனர்.

ராணுவத் தலைமையகமான ’ஜென்ரல் ஹெட்க்வாட்டருக்குள்’ (ஜிஹெச்க்யூ) (பாகிஸ்தானில் மிகவும் பாதுகாப்பான இடமாக இது கருதப்படுகிறது) போராட்டக்கார்கள் நுழைந்தனர். ராணுவப் பலகைகளையும் அவர்கள் உடைத்தனர். அவற்றில் ராணுவ சின்னங்களும் இருந்தன.

லாகூரில் மூத்த ராணுவ ஜெனரல் ஒருவரின் வீடு எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அவரது மரச்சாமான்கள் மற்றும் கார், தீ வைத்து எரிக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாயின. ஒரு போராட்டக்கார் ஜெனரல் போல் உடை அணிந்திருந்தார். மற்றொருவர் ஜெனரலின் வளர்ப்பு மயிலை எடுத்துச்சென்றுவிட்டார்.

ராணுவத்திற்கும், ஆட்சிக்கும் இடையிலான உறவு

இம்ரான் கான், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அது புரட்சியின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்தது. ஆனால் அது புரட்சி அல்ல. இம்ரான் கான் முதலில் ராணுவத்தால் விரும்பப்பட்டார், பின்னர் ஓரங்கட்டப்பட்டார். இப்போது அவரது ஆதரவாளர்கள் ராணுவத்துடன் மோத முயற்சிக்கின்றனர். இதில் புரட்சி குறைவாக இருந்தது மற்றும் ‘அன்பு செலுத்துவோரின்’ கோபம் அதிகமாக இருந்தது.

பாகிஸ்தானில் பொதுவாக எல்லா பிரதமர்களும் ராணுவத்திடமிருந்து விலகிச்சென்றுவிடுகின்றனர். இது ஒரு வழக்கமாகவே காணப்படுகிறது. நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான சுல்ஃபிகர் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டார்.

அவரது மகள் பெனாசிர் புட்டோ இரண்டு முறை பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஒரு இளைஞர் அவரை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் முறையாக விசாரிக்கப்படவில்லை.

நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார் மற்றும் நாடு கடத்தப்பட்டார். இப்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகிறார்.

இப்போது நவாஸ் ஷெரீப் தனது சகோதரரை பிரதமர் பதவியில் அமர வைத்து ஆட்சியை நடத்துகிறார். ஆனாலும் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு, எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியும் செய்ய முடியாததை அவரது ஆதரவாளர்கள் செய்தனர். தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் நேரடியாக ராணுவ கண்டோன்மென்ட்களைத் தாக்கி, பாகிஸ்தான் ராணுவத்தின் ஜெனரல்கள் எப்படி பெரிய பங்களாக்களில் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்பதை பாகிஸ்தானின் சாதாரண குடிமக்களுக்குக் காட்டினார்கள். மயில்கள் மற்றும் பிற செல்லப்பிராணிகள் சுற்றித் திரிவதற்காக பெரிய புல்வெளிகளும், நீச்சல் குளங்களும் அந்த பங்களாக்களில் உள்ளன.

ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் ஆசிம் முனீர் தனது அரசியல் கட்சியை அழிக்க முயல்வதாக இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு கூறியிருந்தார்.

அதற்கு முன் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வாவை துரோகி என்று அவர் கூறியிருந்தார். அவரை ஆட்சிக்குக் கொண்டு வந்ததிலும், அவரது அரசை நிலைத்திருக்கச்செய்ததிலும் பஜ்வாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

இம்ரான் கான் ஒரு ஐஎஸ்ஐ ஜெனரலை குறிப்பிட்டு, தன்னைக்கொல்ல அவர் செய்த முயற்சி தோல்வியடைந்ததாகக் குற்றம் சாட்டினார்.

அவரும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்கூட்டங்களில் இந்த ஜெனரலை டர்ட்டி ஹாரி என்று பலமுறை அழைத்தனர்.

இதற்கு முன்பும் பாகிஸ்தானில் உள்ள பல அரசியல்வாதிகள் ராணுவ ஜெனரல்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை சங்கடப்படுத்த முயன்றுள்ளனர்.

ஆனால், கோர் கமாண்டர்களின் வீடுகள் தீப்பிடித்து எரிவதையும், GHQ வாயிலுக்கு வெளியே பெண்கள் போராட்டம் நடத்துவதையும், மரியாதைக்குரிய ராணுவ வீரர்களின் உருவ பொம்மைகள் உடைக்கப்படுவதையும் பாகிஸ்தான் மக்கள் முதன்முறையாக பார்த்தனர்.

பாகிஸ்தான் அரசு எதிர்வரும் தேர்தலை ஒத்திவைக்க விரும்புகிறது. இம்ரான் கான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடும் என்று பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்போது அரசில் இடம்பெற்றுள்ள பல அரசியல் கட்சிகள் இம்ரான் கானின் கட்சிக்கு நேரடியாகத் தடை விதிக்கும்படி கோரி வருகின்றன.

இம்ரான் கான் எப்படி விடுதலையானார்?

இம்ரான்கான், பாகிஸ்தான்

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெயருக்கு நீதிக்கான இயக்கம் என்று பொருள்.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவம் குறித்து கேள்வி எழுப்பிய தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தை தாலிபன்களின் ஆதரவாளர் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் அலி வசீர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சபை நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

பலூசிஸ்தானில் ஆயிரக்கணக்கான அரசியல் தொண்டர்கள் காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தானின் எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியோ அல்லது எந்த நீதிமன்றமோ அவர்களைப் பற்றி ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், டஜன் கணக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான் எப்படி விடுதலையானார் என்ற கேள்வி எழுகிறது.

ராணுவ அமைப்பையே இம்ரான் கான் பிளவுபடுத்தியுள்ளார் என்பது பொதுவான கருத்து. இம்ரான் கானால் கவரப்பட்ட அதிகாரிகளும் குடும்பங்களும் ராணுவத்தில் உள்ளனர்.

அதன்பிறகு அவரது ஜாமீனை நீட்டிக்கும் நீதித்துறையும் உள்ளது. அவர் ஒரு நாள் சிறையில் இருந்த நிலையில், பாகிஸ்தானின் உச்ச நீதிபதி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து, “உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று கூறி, அவரை விருந்தினர் மாளிகைக்கு அனுப்ப உத்தரவிட்டார். மறுநாள் மற்றொரு நீதிபதி இம்ரான் கானை விடுதலை செய்தார்.

இம்ரானின் ஆதரவாளர்கள்

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஊழலை வெறுக்கும் ஒரு பெரிய ஆதரவாளர் கூட்டத்தையும் இம்ரான் கான் உருவாக்கியுள்ளார்.

தூய்மையான அரசு மற்றும் நீதி பற்றிய அவரது செய்தி மக்களைக் கவர்ந்து அவரை பிரபலப்படுத்தியுள்ளது.

ஆயினும் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது, நாட்டில் ஊழல் அதிகரித்தது மற்றும் அவர் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சிறைக்கு அனுப்பினார்.

ஆனால் அவர் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் அவருடன் மிகவும் வலுவாக இணைந்துள்ளனர். இதற்கு முன் வாக்களிக்காத மற்றும் அரசியல் பேரணிகளில் பங்கேற்காத இளைஞர்களும் மகளிரும் இதில் உள்ளனர்.

அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடையாதவர் என்று இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்படுகிறது. தற்போதைய அரசியல் நெருக்கடியின் வரலாற்றுப் பின்னணியை பார்க்காமல், பாகிஸ்தானில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்று அவர் கூறுவதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

பாகிஸ்தானை ஊழல் தலைவர்களிடமிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் தன்னைக் கருதுகிறார்.

இம்ரான் கானைப் போலவே இவர்களும் ராணுவத்தை முன்னர் நேசித்தனர். ஆனால் இப்போது எல்லாவற்றுக்குமே ராணுவத்தை பொறுப்பாக்குகிறார்கள்.

ராணுவத்தின் மீது இம்ரான் கானின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்தபோதிலும், அவர் உண்மையில் ராணுவத்தின் அதிகாரங்களைக் குறைக்க விரும்பவில்லை என்று கருதுபவர்கள் பலர் உள்ளனர். முன்பைப் போலவே ராணுவ ஜெனரல்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்றும் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ராணுவம் இப்போது என்ன நினைக்கிறது

இம்ரான்கான், பாகிஸ்தான்

மே 9ம் தேதி நிகழ்வுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவம், இனி பொறுத்தது போதும் என்று நினைப்பது போலத் தெரிகிறது.

பாகிஸ்தானின் வரலாற்றில் மே 9ம் தேதி ஒரு கருப்பு நாள் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் பாகிஸ்தானில் ஒரு புதிய வகையான ஜனரஞ்சக அரசியலைத் தொடங்க முயற்சிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை சமாளிக்க அதே புத்தகத்திலிருந்து பாடத்தை எடுக்கிறது. தனக்கு முன்னால் இருந்த தலைவர்களை சமாளிக்க அவர் பயன்படுத்திய அதே பாடம்.

டஜன் கணக்கான ஊழல் வழக்குகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களின் கைதுகள் ஆகியன, ராணுவத்தைத் தாக்கியதன் மூலம் இம்ரான் கான் உண்மையில் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டார் என்ற தெளிவான செய்தியை அனுப்புகிறது.

பொதுமக்களின் மனதைக் கவரும் வகையில் தியாகிகளின் நினைவாக ஒரு பாடலையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.

மே 9-ம் தேதி ராணுவ கண்டோன்மெண்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் ‘தியாகிகளின் மரியாதை தினத்தை’ கொண்டாடியது. ஆனால் அன்றைய தினம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் யாரும் வீரமரணம் அடையவில்லை என்றும் தளபதிகளின் ஆடம்பரமான பங்களாக்கள் மட்டுமே சூறையாடப்பட்டன என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் நகரங்களின் முக்கிய வீதிகளில் ராணுவத்திற்கு ஆதரவு மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுவரை தன்னை விமர்சித்து வந்த வேறு அரசியல் கட்சிகளையும் ராணுவம் விளையாட்டின் அங்கமாக்கியுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானில் உள்ள பல சமய அரசியல் கட்சிகளும் ராணுவத்திற்கு ஆதரவாக பேரணிகளை நடத்தின.

இம்ரான்கான், பாகிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவம் தனது அமைப்பிற்கு உள்ளேயும் இம்ரான் கானுக்கு ஆதரவாக உள்ள ராணுவ அதிகாரிகளை தேடி வருகிறது.

மே 9 ஆம் தேதி நடந்த நிகழ்வுகளின் விசாரணையின் போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் கதீஜா ஷா. பேஷன் டிசைனரான இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவரது தாத்தா பாகிஸ்தானின் ராணுவத் தலைவராக இருந்தார். மேலும் அவரது முந்தைய மூன்று தலைமுறையினரும் ராணுவ கண்டோன்மெண்டில் வளர்ந்தவர்கள்.

தன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். ஆனால் இம்ரான் கான் ‘ராணுவத்திற்குள்’ தனது செல்வாக்கை செலுத்தியுள்ளார் என்பதும் அவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு தீ வைக்க தயாராக உள்ளனர் என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.

கதீஜா ஷாவை கைது செய்ததன் மூலம் இம்ரான் கானின் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியை ராணுவ குடும்பங்களுக்கு ராணுவம் அளித்துள்ளது.

பிடிஐ தலைவர்களை பெரிய அளவில் கைது செய்தும், மே 9 சம்பவங்களில் தொடர்புடைய ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களை ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை செய்தும் இம்ரான் கானின் கட்சியை உடைக்க ராணுவம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

பல பிடிஐ உயர் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற பெரும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர். இம்ரான் கான் ராணுவத்துடன் மோதுவதை ஆதரிக்க முடியாது என்று கூறி சில தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

வரலாற்று ரீதியாக பாகிஸ்தான் ராணுவம் எப்போதெல்லாம் மக்களை எதிர்கொள்ள வேண்டிவருகிறதோ அப்போதெல்லாம் அது தனது பாதையை கண்டறிவதில் வெற்றி அடைந்துள்ளது. அதே நேரத்தில் அடிமைத்தனத்திற்கு பதிலாக மரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இம்ரான் கான் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த தேக்கநிலைக்கு மத்தியில் பாகிஸ்தானின் சாமானிய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வருங்காலத்திலும் இந்த அவதிகளை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் வரலாறு

•1996 ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சி நிறுவப்பட்டது.

• கட்சியின் ஆரம்ப நோக்கம் நீதித்துறை அமைப்பை சுதந்திரமாக மாற்றுவதும், ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஆகும்.

• 1997 பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஒரு இடம்கூடக்கிடைக்கவில்லை.

• 2002 ஆம் ஆண்டில் PTI தனது முதல் வெற்றியைப் பெற்றது. இம்ரான் கான் மியான்வாலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• 2008 இல் நடைபெற்ற தேர்தல்களை ஊழல் பிரச்சனையை முன்வைத்து கட்சி புறக்கணித்தது.

• 2011 அக்டோபர் 30 ஆம் தேதி இம்ரான் கான் மினார்-இ-பாகிஸ்தானில் ஒரு பேரணியை நடத்தினார். அதில் ஏராளமான மக்கள் திரண்டனர்.

• அதே ஆண்டு டிசம்பரில் கராச்சியில் நடந்த கட்சியின் பேரணி இன்னும் அதிகமான மக்களை ஈர்த்தது.

• 2013 இல் கட்சி 75 லட்சம் வாக்குகளைப் பெற்று 35 இடங்களை வென்றது. வாக்கு எண்ணிக்கையில் அக்கட்சி இரண்டாவது இடத்தில் இருந்தது.

• 2018 பொதுத் தேர்தலில் கட்சி 114 இடங்களை வென்று இம்ரான் கான் தலைமையில் அரசு அமைத்தது.

• இம்ரான் கான் 2018 ஆகஸ்ட் 18 ஆம் தேதி பாகிஸ்தானின் பிரதமரானார்.

• 2022 ஏப்ரல் 10 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு இம்ரான் கான் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

Previous Story

அடக்கடவுளே! கோயிலுக்குள் நிர்வாணமாக வந்து.. தொட்டு தொட்டு கும்பிட்ட  பெண்..

Next Story

சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு அளித்த முதல் டிவி பேட்டி!