ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய ஆறு தீவிரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியான நீலம் பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயத்தின் லஸ்கர்- இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பாகிஸ்தான் உடனான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துள்ளது. குறிப்பாக சிந்து நதிநீரை அடைத்துள்ளது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, வாகா எல்லை மூடப்படுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவின் முப்படைகளும், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. “கடவுள் தான் நம்மை இனி காப்பாத்தனும்.. இந்தியா உடனான மோதலால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் புலம்பல்” இது ஒரு புறம் இருக்க துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்திருக்கிறது.
பாகிஸ்தான் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஹாஸிம் மூசா உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகளும் இரண்டு இந்தியர்களும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களது புகைப்படமும் பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அனந்தநாக், பாரமுல்லா, குப்வாரா உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் அவர்கள் பதுங்கி இருந்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனாலும் ராணுவத்தினர் வருவதை அறிந்து அவர்கள் முன்கூட்டியே தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும் நிலையில் உள்ளூர் உளவாளிகள் பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் படி அவர்கள் தப்பி வருகின்றனர்.
மேலும் அடர்ந்த காடுகளில் எப்படி தப்பிப்பது என்பது குறித்து அவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இந்திய ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார், nia அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு நிலைகளில் தீவிர கண்காணிப்பு இருந்தும் அடர்ந்த காடுகள் வழியே பயணித்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியான நீலம் பள்ளத்தாக்கை தாண்டி அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இது இந்த நடவடிக்கையில் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அப்பாவி உள்ளூர் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஏற்கனவே செய்தது போல சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மருக்குள் சென்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் கைது செய்யலாம் அல்லது கொல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.





