பழைய வாழ்வு மீண்டும் வருமா!

நஜீப் பின் கபூர்

இந்தத் தலைப்பை நாம் தெரிவு செய்ததற்கு ஒரு சின்ன நிகழ்வு காரணமாக இருந்தது அதைப் பற்றி ஒரு குறிப்பையும் ஏதாவது ஒரு இடத்தில் தொட்டுச் செல்லும் நோக்கில் கருவுக்கு வருவோம். நம்மைப் பட்டினிச் சாவின் எல்லையில் கொண்டு வந்து நிறுத்திய இருக்கின்ற நமது அரசியல் தலைமைகள் ஏதாவது ஓரிடத்தில் திருந்துவார்களா என்று நாம் எதிபார்க்க முடியாத அளவுக்கு நாட்டில் அவர்களது அட்டகாசம் தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது.

மோடி-கோட்ட-அதானி கற்றலை மின்சார விவகாரம் தனிநபர்களுக்கிடையே நடந்து முடிந்திருக்கின்ற ஒரு வர்த்தகம். அதற்கும் இலங்கை-இந்தியா அரசுகளுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என்ற விவகாரம் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அந்தப் பாரதூரமான விவகாரம் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை.

சீனாவிடம் நாம் எதிர்பார்க்கின்ற 1.5 பில்லியன் அமரிக்கா டொலர்கள் பற்றி அவர்கள் எந்த அக்கரையும் இல்லாமல் இருக்கின்றார்கள். தற்போது ஜனாதிபதி ஜீ.ஆர். தம்மைவிட இந்தியாவுடன் நெருகிப் போவதால் அவர்கள் இலங்கை விடயத்தில் கடுப்பில் இருக்கின்றார்கள். அத்துடன் இலங்கைக்கு முன்பு கொடுத்த கடன்களை எப்படி மீட்பது என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கின்றது.

ஜப்பான் இலங்கைக்குக் கடன் கொடுப்பதை பற்றி சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் இலங்கையிலுள்ள ஜப்பான் துதுவர் தனது தனிப்பட்ட வைத்திய விவகாரத்துக்காக நாட்டுக்குப் போனதற்கு இங்குள்ள ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் அரசு சார்பு ஊடகங்களும் மனிதன் காசு விவகாரம் பற்றி பேசப் போய் இருக்கி;னறார் என்று கதை கட்டி இருந்தன. எனவே இலங்கைக்கு ஜப்பான் காசு வருகின்றது என்ற கதை அண்டப் புளுகு.

இந்திய தனது தனிப்பட்ட நலன்களை முன்னிருத்தியோ வேறு காரணங்களுக்காகவோ இலங்கைக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னரும் நாம் எப்படி உங்களுக்குக் கடன் தர முடியும் என்று மனநிலையில் அவர்கள் இருக்கின்றார்கள்.

விரைவில் இது பற்றி ஏதாவது ஒரு மொழியில் இலங்கைக்கு அவர்கள் இந்தச் செய்தியைப் புரிய வைக்கக் கூடும். அமெரிக்காவுக்கும் ரணிலுக்கும் நெருக்கமான உறவு பைடனுக்கு ஒரு கோல் கொடுத்தால் டாலர்கள் மூடை மூடையாக இங்கு வந்து இறங்கும் என்று எதிர்பார்ததவர்களும்-நம்பிக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் பைடன் ரணிலுக்கு ஒரு டொலரையாவது இதுவரை கண்ணில் காட்டக் கூட இல்லை.

ஐரோப்பிய நாடுகளுடன் ஜனாதிபதி ஜீ.ஆர். தொடர்ச்சியாக முறுகல் போக்கை கடைப்பிடித்து வந்ததால் அங்கிருந்தும் யூரோக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அரவே கிடையாது. நமது ஏற்றுமதிகளுக்கு வழங்குகின்ற ஜீஎஸ்பியைப் பாதுகாத்துக் கொண்டால் அதுகூட இந்த நேரத்தில் பெரும் உதவியாக இருக்கும்.

இலங்கையுடனான இஸ்லாமிய குறிப்பாக செல்வம் கொளிக்கும் அரபு நாடுகள் நல்லுறவில் இல்லை என்பதுதான் எமது கணக்கு. இதற்கு நாம் இங்கு தருகின்ற தகவல் நல்ல உதாரணமாக இருக்கும். மாலை தீவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதய அந்த நாட்டு சபாநாயகருமான அகமட் நசீட் சொன்ன ஒரு கதையைக் கேளுங்கள். அழ வேண்டியவர்கள் அழுது கொள்ளுங்கள் சிரிக்க வேண்டியவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள்.

நசிட் இலங்கை-கொழும்பில் கல்வி கற்றவர் அவருக்கு நமது அரசியல் தலைவர்கள்-செயல்பாட்டாளர்கள் பலரை நன்கு தெரியும். அர்ஷ டி சில்வாவை அவர் தற்செயலாக ஓரிடத்தில் சந்தித்து கோபி குடிக்க அழைத்திருக்கின்றார். இருவரும் போய் ரெஸ்ட்டூரியன்டில் கோபிக் குடித்துக் கொண்டு பேசிக் கொண்ட கதையைத்தான் நாங்கள் தற்போது எமது வாசகர்களுக்கச் சொல்லப் போகின்றோம் கேளுங்கள்.

அதற்கு முன்னர் முன்னாள் நமது பிரதமர் எம்.ஆருக்கு மாலையில் ஏப்பரல் 9ம் திகதி நிகழ்வுக்கப் பின்னர் தங்கி இருப்பதற்கு வீடு தேடி அழைந்தவர்தான் இந்த நாசீட். அதனையும் நாம் முன்பு சொல்லி இருக்கின்றோம். சரி கதைக்க வருவோம். இலங்கையின் நிலமை மிகவும் நெருக்கடி மிக்கதாக இருக்கின்றது ஏதாவது செய்யலாம் என்றுதான் பார்க்கின்றோன்.

இலங்கை எதிர்பார்க்கின்ற அளவுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு என்ன நாங்கள் பெரிய நாடா என்று அர்ஷாவைக் கேட்ட நசீட் குறிப்பிட்ட ஒரு குரக்கன் சாட்டைக்காரர் பெயரைச் சொல்லி எமக்கு யாரையபவது பேசி கொஞ்சம் உதவி கேட்டுத் தாருங்களென் என்று கேட்டார்.

நானும் யோசித்துப் போட்டு எம்பிஎஸ் க்கு நேரக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை நிலமையைச் சொல்லி கதைத்தேன். அவரும் ஆர்வமில்லாமல்தான் பேசினார். சரி ஏதாவது வேலைத்திட்டம் அவர்களுடைய கைகளில் இருக்கின்றதா என்று எம்பிஎஸ் என்னை திருப்பிக் கேட்டார். அது பற்றி எனக்கு என்ன தெரியும்? அந்த வேலைத் திட்டம் பற்றிய கதையை நான் ‘அந்த’ குரக்கன் சாட்டைக்காரருக்கு எத்திவைத்தேன் என்பது மாலை  சாபாநாயகர் அர்ஷவுக்கு சொன்ன கதையாக இருந்தது.

எம்பிஎஸ் என்று நாம் ஒரு குறியீட்டைக் கொடுத்திருந்தோம். அது என்ன என்று வாசகர்கள் யோசிக்கலாம் சவுதி முடிக்குறிய இளவரசர். முஹம்மட் பின் சல்மானை நெருக்கமானவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள் ஓகே. இதிலுள்ள அடுத்த விடயம் நேரடியாக அரபு நாடுகளைப் பேசிப் பார்க்கக் கூட இங்கு ஒருவர் இந்த நாட்டில் இல்லை என்பதுதான்.!

ஏற்கெனவே அம்பறை-அட்டளைச்சேனையில் சுனாமி வீட்டுத்திட்டதை சவுதி பல கோடிகள் செலவில் முஸ்லிம்களுக்குக் கட்டியது. அது இன்று காடுபடார்ந்துபோய் இருக்கின்றது. மற்றும் பூணானியில் ஹிஸ்புல்லாஹ் 300 கோடி செலவில் சவுதியின் உதவியுடன் கட்டிய பல்கலைக்கழகத்துக்கு இவர்கள் ஆப்பு வைத்திருக்கின்றார்கள்.

அடிக்கடி இங்குள்ள முஸ்லிம்களுக்குத் தொலை;கள் வேறு. கொரோனா முஸ்லிம் மரணங்களை எரித்தது போன்ற விடயங்களில் தற்போதய ஆட்சியாளர்களுக்கும் அரபு நாடுகளுக்கமிடயில் நல்லறவு கெட்டுப் போய் இருக்கின்றது. இவற்றை சரி செய்யாது உதவியை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று நிலையில்தான் அந்த உறவுகள் இருக்கின்றன.

புலம் பெயர் தமிழர்களிடம் டொலர்களைக் பிடுங்கப் பார்த்தாலும் இந்த சந்தர்ப்ப வாதிகளிடத்தில் ஏமாந்து போக அவர்கள் என்ன இழிச்சவாய்களா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. ஒட்டு மொத்தமாக தற்போய ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இலங்கைகு உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். ரணிலை முன்னிருந்திப் படத்தை ஓட்டலாம் என்று பார்த்தால் ஒரு காட்சியையாவது ஓட்ட முடியவில்லை.

மீண்டும் இந்தியா பக்கம் வருவோம். இந்தியா அன்று பருப்பை ஆகாயத்தில் இருந்து கொட்டியது. இன்று சாப்பாட்டுப் பொதிகளைப் பகிர்ந்து கொண்டிருகின்றது. ஆனால் இதில் ஒருதுளி கூட தமிழ் மக்களின் இன ரீதியான நலகள் இல்லை என்பதுதான் எமது வாதம்.

அவை வடக்கு கிழக்கு மலையக மக்களுக்கு என்று ஒரு தொகுதி பகிரப்பட்டாலும் தமிழ் மக்களின் உணர்களுடன் அரசும் அதிகாரிகளும் படைகளும் இன்றும் விளையாடிக் கொண்டிருக்கின்றது. குறைந்தது அதனையாவது இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. குறுந்தூர் மலை ஆக்கிரமிப்புப் போன்ற விவகாரங்களில் கூட இந்திய உறுப்படியான எந்தத் தீர்மானங்களுடனனும் இல்லை என்பதனைத்தான் இது காட்டுகின்றது.

நமது பஞ்சம் உலகிற்கே தெரிந்து எல்லோருமாக ஒன்று சேர்ந்து என்ன பண்ணலாம் என்ற கதைகள் அங்காங்கே நடந்தாலும் அரசுக்கு பொருளாதரா ரீதியில் உத்தியோகபூர்வமாக உதவுவதில் நம்பிக்கையற்ற நிலைதான் காணப்படுகின்றது.

காரணம் பதவியில் இருக்கின்ற அரசின் ஸ்திரத் தன்மை குறித்தும் தற்போது பதவியில் இருப்பவர்கள் குறித்தும் நல்லலெண்ணம் சர்வதேசத்துக்கு இல்லாமையே இந்த நிலைக்குக் காரணம் என்பதுதான் எமக்குப் புரிகின்ற அரசியலாக இருக்கின்றது. ரணில் பிரதமராக பதவியேற்றது நாட்டு மக்களைப் பாதுகாப்புதற்காக அல்ல ராஜபக்ஸாக்களைக் காப்பதற்குத்தான் என்பது இன்று உறுதியாகி விட்டது.

ரணிலுக்குக் கொடுத்தால் செய்வார் என்று எம்மிடம் வாதிட்டவாகள் கூட பாருங்களேன் நாங்களும் ஆளை நம்பினோம் மோசம் போய்விட்டோம் என்று பேசுகின்றார்கள். முட்டித் தான் குனிய வேண்டும் என்று இருப்பவர்களுடன் நாமும் வாழ்வதால் அந்தக் காட்சிகளையும் பார்த்து-கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற இருக்கின்றது ஓகே.

ரஷ்யாவிடம் குறைந்த விலையில் எரிபொருள் வாங்க  இருந்ததுதான் ஆனால் அதனை எப்படிச் செய்வது? ஊக்ரைன் போர் நடக்கின்ற போது அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று விமல் கோஷ்டியிடத்தில் ரணில் முகத்துக்கே கூறி இருக்கின்றார் விமல் இதனை ஊடகங்களிலும் சொல்லி இருந்தார்.

அடுத்து மோதி அழுத்தத்துக்குப் பயந்து மின்சார விவகாரங்களை கவனிக்க வேண்டி வந்தது என்று ஜனாதிபதி ஜீ.ஆர். தன்னிடத்தில் நேரடியாகக் கேட்டுக் கொண்டதால் மற்றுவழிகள் இருக்கவில்லை. அமைச்சரவை அனுமதி இல்லாமலே அந்த வேலையைச் செய்து விட்டு அதற்குப் பின்னர் அங்கீகாரம் எடுக்கப்பட்டது என்று மின்சாரசபைத் தலைவர் கோப் குழு முன் சாட்சி சொல்லி இருந்தார்.

அதனை ஜனாதிபதி மறுக்கின்றார். ஆனால் பதிவுகள் தெளிவான முறை கேட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. எனவே நாடு ஏதோ காரணங்களினால் அழுத்தங்களுக்கு அடிபணிகின்றது. மறுபக்கத்தில் அரச கஜானாவில் அப்பட்டமான மோசடி கொள்ளைகள் நடந்து வருகின்றன. இது பற்றி கடந்த வாரம் நீண்ட காட்டுரையில் சொல்லி இருந்தோம் அதனை உறுதிப்படுத்துக்கின்ற வகையில்தான் இந்தப் புதிய தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

துவக்கத்தில் தலைப்புக்கு விளக்கம் சொல்வதாக சொல்லி இருந்தோம் அது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பல வருடங்களாக பொது நிகழ்வுகளில் நம்முடன் அடிக்கடி சந்திக்கும் பல்கலைக்கழகப் பேராசியரியர் தற்செயலாக தெருவில் வைத்துக் கட்டுரையாளனைக் பார்த்திருக்க வேண்டும்.

சனக் கூட்டத்துக்குல் சிக்கி நான் தொலைந்து போவேன் என்ற எண்ணத்தில் வீதியின் எதிர்ப்பக்கத்தில் இருந்து என்னை பெயர் கூவி பேசி இருக்க வேண்டும். என்னடா நகர மத்தியில் கூவுகின்றார்களே என்று பார்த்ததால்> நான் அறிந்த பேராசிரியர் எதிர்ப் பக்கத்தில் இரு கரங்களையும் உயர்த்தி தன்னை அடையாளப்படுத்தக் கொண்டிருந்தார்.

சரி கட்டுரைக்கும் இதற்கும் என்ன முடிச்சு.? காரணம் இருக்கு. அவர் ஓய்வு பெற்று லண்டனில் இருக்கின்ற தனது பிள்ளைகளுடன் போய் இருந்து விட்டு தற்காலிகமாக நாட்டுக்கு வந்த நேரத்தில்தான் நமக்குள் இந்த சந்திப்பு.

பக்கத்தில் இருந்த ரெஸ்ட்டோரியன்டுக்குள் என்னை அழைத்துக் கொண்டு போனவர், நமது  வார இதழ் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் கேட்டார். இப்போது புதியவர் ஒருவர்தான் ஆசிரியர். அவர்தான் ஞாயிறு இதழைச் செய்கின்றார் என்று அவரது பெயரையும் சொன்னேன். தான் குறிப்பாக ஒன்லைனில் வழக்கமாக இதழில் அரசியல் படிப்பதாகவும் ஆனாலும் முறையாக பவிவேற்றம் திகதிக்கு நடப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசியலைப் பற்றி என்னிடம் கேட்டவர் குறுகிய காலத்துக்குள் நாடு தலைகீழாக மாறிப் போய் இருக்கின்றது. இந்த ஒரு வருடத்தில் என்ன விலையேற்றம்? வந்த கையோடு ஓடலாம் என்றுதான் இருக்கின்றது. சில வேலைகளை முடித்துக் கொண்டதும் ஓட்டம்தான். எப்படித்தான் சமாளிக்கின்றீர்கள் என்று கேட்டார். புரிகிறதுதானே என்றேன் நான்.

‘நமது பழைய வாழ்வு மீண்டும் வருமா’ என்ற என்னை அழுத்தமாகவும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் கேட்டார் மனிதன். நான் தெளிவாகச் சொன்னேன். நிச்சயமாக அப்படி ஒரு நல்லலெண்ணத்தைக் கனவில் கூட கற்பனை செய்ய வேண்டாம். தூய்மையான ஒரு ஆட்சி மாற்றம் நடந்து குறைந்தது ஐந்து வருடங்களாவது காத்திருக்க வேண்டும்> என்ற எனது கணக்கைச் சொன்னேன். பேராசிரியர் கேள்விதான் இன்றைய நமது தலைப்பு!

எனவே இந்த நாட்டு மக்களிடத்தில் நாம் கேட்பது> இதற்குப் பின்னரும் ஏமாளிகளாக இருந்து நீங்களே உங்களை அழித்துக் கொள்கின்ற அரசியல் செய்யப் போகின்றீர்களா? கற்றுக் கொண்ட பாடிப்பிணைகளில் இருந்து புதுப் பயணத்தைத் துவங்கப் போகிறீர்களா என்பதுதான்.

வருகின்ற சில வருடங்கள் நமது அரசியல் சமூக வரலாறுகள் தலைகீழாக புறட்டிப் போடுகின்ற காலங்களாக இருக்கும் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று குடிகளை எச்சரிக்கின்றோம்.

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை-வைத்திய அதிகாரிகள் சங்கம் 

Next Story

கடைசிக் கப்பலும் வந்தாச்சி!