பறக்கும் கார் அறிமுகம்: இந்தப் புது வகையில் உள்ள ஆபத்துகள், நடைமுறை சிக்கல்கள் என்ன?

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள ட்ராப்பர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில், அலெஃப் என்ற ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தாங்கள் வடிவமைத்துவரும் பறக்கும் கார் எவ்வாறு புறப்படும் என்ற விவரங்களை வெளியிட்டது.
பறக்கும் கார் - அலெஃப்பின் கனவு வாகனம்.

பறக்கும் கார் – அலெஃப்பின் கனவு வாகனம்.

முதல் உண்மையான பறக்கும் காரை ‘மாடல் ஏ’ என்ற பெயரில் அலெஃப் நிறுவனம் உருவாக்கிவருகிறது. இந்த வண்டி செங்குத்தாக புறப்படும் திறனுடன் கூடிய நேர்த்தியான எலெக்ட்ரிக் கார் போல இருக்குமென்றும், இதனால் 110 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பறக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே தரையில் ஓட்டவும், பறக்கவும் கூடிய கார்களைத் தயாரித்துவரும் ஏர்கார் மற்றும் பால்-வி கைரோகாப்டர் போன்ற நிறுவனங்களுடன் தங்களால் போட்டிபோட முடியுமென அலெஃப் நம்புகிறது.

ஆனால், அந்தக் கார்கள் தன்னுடைய பார்வையில் பறக்கும் கார்கள் அல்ல என்கிறார் அலெஃப்பின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான ஜிம் டுகோவ்னி.

“பறக்கும் கார்கள் என்றால் அவற்றை சாதாரண தெருக்களில் ஓட்டி, சாதாரண இடங்களில் நிறுத்த முடியவேண்டும். அதேபோல, பறப்பதற்கு செங்குத்தாக புறப்பட வேண்டும்” என ஜிம் டுகோவ்னி பிபிசியிடம் கூறினார்.

கார் புறப்படுவதற்கு தனி தளம் தேவையென்றால், எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்த்துள்ளீர்கள், எதற்கு இந்தக் கார் என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மாடல் ஏ-வுக்கான வடிவமைப்பு.

மாடல் ஏ-வுக்கான வடிவமைப்பு.

‘மாடல் ஏ’ காரின் வெளித் தோற்றம் வலைப்பின்னல் போல இருக்கும். அதன் வழியாக உட்புகும் காற்று உட்பகுதியில் அமைந்திருக்கும் உந்துவிசையை ஏற்படுத்தும் சாதனத்தினுள் நுழையும். அது கார் உயர உதவும்.

இதை மட்டுமே பயன்படுத்தி, இறக்கைகள் இல்லாமல் பறக்க அதிக ஆற்றல் தேவைப்படும்.

இந்த சிக்கலுக்கு அலெஃப் முன்வைக்கும் தீர்வு தனித்துவமானது. நீண்ட தூரப் பயணத்திற்கு ‘மாடல் ஏ’ கார்கள் பை ப்ளேன் எனப்படும் இரண்டு அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானமாக மாறும் என அலெஃப் கூறுகிறது.

செங்குத்தாக உயர்ந்ததும், கார் பக்கவாட்டில் திரும்பும். ஓட்டுநர் முன்னோக்கி பார்த்துக்கொண்டு இருப்பார். காரின் எஞ்சிய பகுதிகள் மேல் மற்றும் கீழ் இறக்கைகளாக மாறும்.

கார், இரண்டு அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானமாக எப்படி மாறும் என்பது குறித்து ஒரு காணொளியையும் அலெஃப் உருவாக்கியிருக்கிறது.

இது தற்போது வழக்கத்தில் இருக்கும் செங்குத்தாக புறப்படும் Opener BlackFly எனப்படும் மின்சார விமானத்தை ஒத்திருப்பதாக போர்ப்ஸ் கூறுகிறது.

இது புத்திசாலித்தனமான யோசனையாக இருந்தாலும், நடைமுறையில் சாத்தியமா?

ஒரே காரில் தரையில் ஓட்டுதல் மற்றும் வானில் பறத்தலுக்கான தொழில்நுட்பத்தை கொண்டுவருவது அதன் எடையை அதிகரிக்கும். மின்சாரம் என்று வரும்போது கனமான பேட்டரிகள் தேவைப்படும்.

“இயற்பியல் மற்றும் தொழில்நுட்பம் என்ன செய்ய முடியும் என்பதன் கூரான விளிம்பில் இந்த வடிவமைப்பு துல்லியமாக நிற்கிறது” என்கிறார் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக வானூர்தி பொறியாளர் பேராசிரியர் ஸ்டீவ் ரைட்.

A DeLorean at the 2016 Comic-Con in Los Angeles

காட்சிப்படுத்தப்பட்ட வடிவமைப்பின்படி, வண்டி காற்றைக் கிழித்துச் செல்லும்போது, அதிலுள்ள வலை அமைப்பு வண்டியை இழுத்துப் பிடிக்கலாம் என்கிறார் அவர்.

இந்த முயற்சியில் 2018ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டுவருவதாக அலெஃப் நிறுவனம் கூறுகிறது. அவர்களிடம் செங்குத்தாக பறக்கும் திறனுடன் கூடிய பெரிய மாதிரிகள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் அந்நிறுவனம் உருவாக்கியுள்ள மாதிரிகளில் காணப்படுவதைப்போல அவ்வளவு நளினமாக இல்லை.

ஆனால், மாதிரிகள் வேலை செய்யும் வண்டிகளாக மாறுவது அத்தனை எளிதானது அல்ல என்றும் பேராசிரியர் ரைட் எச்சரிக்கிறார்.

பறக்கும் கார்கள் பரபரப்பாக இயங்கும் வான நெடுஞ்சாலைகளை அமைப்பதில் தொழில்நுட்பத் தடை மட்டுமே ஒரே தடையாக இருக்கும்.

பறக்கும் கார்களை ஒழுங்குபடுத்துவது, அவற்றுக்கு சான்றளிப்பது ஆகியவை கடும் பணியாகவும், நேரம் பிடிப்பதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருக்கலாம். அதாவது, வழக்கமான விமானங்களுக்கு இருப்பதுபோல.

இந்தக் கார்களை இயக்க, உங்களிடம் கார் ஓட்டுநர் உரிமம் மட்டும் போதாது. விமானி உரிமமும் தேவைப்படும். ஆனால், குறைந்த உயரத்தில், குறைந்த தூரத்துக்குப் பறப்பதற்கு, அதுவும் செங்குத்தாக மேலே எழும்பும் வண்டிகளுக்கு, ட்ரோன் இயக்குவோருக்கான உரிமமே எதிர்காலத்தில், போதுமானதாக இருக்கலாம் என டுகோவ்னி கருதுகிறார்.

எந்த இடங்களில் வண்டி பறக்கலாம் என்பது தொடர்பாக கடுமையான விதிகளையும் அதிகாரிகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளன.

இனி சாலைகள் தேவையில்லையா?

மாடல் ஏ-வை அறிமுகம் செய்தபோது காட்டப்பட்ட ஒரு வரைகலை படம்.

மாடல் ஏ-வை அறிமுகம் செய்தபோது காட்டப்பட்ட ஒரு வரைகலை படம்.

மேற்கண்ட மற்றும் பிற காரணங்களால், எதிர்காலப் பறக்கும் கார்கள் உரிமையாளர்கள் பறப்பதற்கும், ஓட்டுவதற்கும் பயன்படுத்தும் ஒரே வண்டியாக இருக்காது என்று பேராசிரியர் ரைட் நினைக்கிறார்.

பேக் டு தி ஃபியூச்சர் என்ற திரைப்படத்தில், டாக் பிரவுனின் அணுக்கரு பிணைப்பு ஆற்றலில் இயங்கும், டிலோரியன் கார், சாலையில் இருந்து கிளம்பி காற்றில் பறக்கும்.

“வான்வழி போக்குவரத்து அவ்வாறு இருக்கப்போவதில்லை. பிறர் நினைப்பது போலவே எனக்கும் பறக்கும் டெலோரியன் வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ரைட்.

உண்மையில், பறக்கும் காரில் பயணம் செய்வது, ஒரு டாக்சியை வாடகைக்கு எடுப்பது போல இருக்கும் என்று பேராசிரியர் ரைட் கூறுகிறார்.

“நீங்கள் உங்கள் ஃபோனில் அழைத்தால் ஒரு பறக்கும் கார் உங்களை அழைத்துக்கொண்டு வேறு இடத்தில் இறக்கிவிடும். வேறு மாதிரி சொல்வதென்றால் நீங்கள் ட்ரோன் டாக்சியை வரவழைக்கிறீர்கள்” என்கிறார் அவர்.

பல நிறுவனங்கள் தானியங்கி முறையில் இயங்கும் பயணிகள் ட்ரோன்களை தயாரித்துவருகின்றன. அண்மையில் சீன நிறுவனமான Xpeng துபாயில் தனது X2 ட்ரோனை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவந்தது.

ஆனால், ஒரே வண்டியை சாலையில் ஓட்டவும், வானத்தில் பறக்கவும் பயன்படுத்த முடியும் என்ற யோசனை அனைவரையும் கவர்ந்திழுக்க கூடியது என்று டுகோவ்னி உறுதியாக நம்புகிறார்.

‘மாடல் ஏ’ காரின் ஆரம்ப விலையான மூன்று லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி இதை யார் வாங்குவார்கள் என்று அவரிடம் கேட்டபோது, ‘காலத்திற்கேற்ப விரைந்து மாறக்கூடியவர்கள்’ வாங்குவார்கள் என்கிறார்.

மக்கள் பறக்கும் கார்களுக்காக 100 ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்தக் காரை 2025ஆம் ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டுவர வேண்டும் என்பது அலெஃப் நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

Previous Story

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து வெளியே இட்டுச் செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ்

Next Story

இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும்