பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எதிர்ப்பு வர காரணம் என்ன?

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது.

1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சட்டத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இன்றும் அவர்களில் சிலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்திருந்தார்கள்.

அதன்பின்னர், 2022ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நடத்தப்;பட்ட போராட்டத்தை அடுத்து, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் பல சிங்களவர்களும் கைது செய்;யப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு மூன்று இனத்தவர்களும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு

இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாட்டில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது ஆயிரம் மடங்கு ஆபத்தான சட்டம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பான சரியான வரைவிலக்கணம் கிடையாது எனவும், மிகவும் பரந்த வரைவிலணக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட சுதந்திரங்களை இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அம்பிகா சற்குணநாதன்

அம்பிகா சற்குணநாதன்

அத்துடன், இந்த சட்டமானது, நாட்டில் ராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். அவர் சொல்லும் சில விஷயங்கள் வருமாறு:

01.ராணுவத்திற்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. (கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் ராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது)

02.தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் தடுப்பாணையை பாதுகாப்பு அமைச்சர் மாத்திரமே வழங்க முடியும். எனினும், புதிய சட்டத்தில் பிரதி போலீஸ் மாஅதிபர்களுக்கு தடுப்பாணையை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுகின்றது.

03.புதிய சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

04.வர்த்தமானியின் ஊடாக அமைப்புக்களை தடை செய்தல், ஒரு பிரதேசத்தை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியும்.

05.வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராக போராடுபவர்களை, சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் நோக்குடன், அந்த பௌத்த மத தலங்களுக்கு சேதம் விளைவிப்பதாக திரிவுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்;.

06.வர்த்தமானியின் ஊடாக தடை செய்யப்பட்ட இடங்களை படம் அல்லது காணொளி எடுத்தலால், அது கூட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றமாக கருதப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

07.இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிவதற்காக ரகசிய தகவல்களை திரட்டுவதும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகின்றது.

08.போலீஸாரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது தடுப்பு முகாமில் நடக்கும் விடயங்கள் போன்றவை ரகசிய தகவல்களாக பட்டியலிடப்படுகின்றன.

09. இவ்வாறான தகவல்களை திரட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பெரிதும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்படலாம்.

10.தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் உள்ளது.

11.தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொழிற்சங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அந்த சேவையை ஜனாதிபதி அத்தியாவசிய சேவையாக அறிவித்தலின் ஊடாக, அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவித்தலானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

அரசாங்கத்தின் பதில்

விஜயதாஸ ராஜபக்ஷ

விஜயதாஸ ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில குறைபாடுகள் காணப்படலாம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

குறைபாடுகள் எந்தவொரு சட்டத்திலும் காணப்படக்கூடியது எனவும், முழுமையான சட்டமொன்று உலகில் எந்தவொரு நாடும் அமல்படுத்தியது கிடையாது எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் என்பது காலத்தின் மற்றும் சமூகத்தின் தேவை எனவும் அவர் கூறுகின்றார்.

ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான ஜனாதிபதிகள் இந்த சட்டத்தின் கீழ் செயற்படாத பட்சத்தில், நாடு தற்போது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரத்த ஆறுகள் ஓடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாகவும், அதனை தவிர்த்துக்கொள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தை பாதுகாப்பதற்காவோ அல்லது ஜனாதிபதியை பாதுகாப்பதற்காகவோ தாம் புதிய சட்டங்களை கொண்டு வருவது இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு, மக்களுக்கான சட்டங்களையே தாம் கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

Previous Story

விவாதத்தை ஏற்படுத்திய  மன்னர்  ஷா மகன் இஸ்ரேல் பயணம்: ?

Next Story

6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு...80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்