பண்டோரா பேப்பர்சுகுள் இன ஐக்கியம் பூத்துக் குழுங்குகின்றது!

-நஜீப் பின் கபூர்-

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் நிறுவனத்தின் உதவியுடன், உலக நாடுகளின் உள்ள பல தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் முக்கிய புள்ளிகள் தாம் மேசாடி செய்து அல்லது கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைத்திருப்பது நெடுங்காலமாக நடந்து வருகின்றது. இது தொடர்பான ஆவணங்களை எப்படியோ பெற்று வெளி உலகிற்கு அம்பலப் படுத்துவதுதான் பண்டோரா பேப்பர்ஸ். கடந்த 2017ல்; இது பனாமா பேப்பர்ஸ் என்று வெளிவந்தது. அதற்கு முன்னர் பரடைஸ் பேப்பர்ஸ் என்றும் ஒன்றும் வந்தது. மாபெரும் உலக இரகசிய ஆவணம் என இது கருதப்படுகின்றது.

2017ல்; பனாமா பேப்பர்ஸில் இந்தியாவின் பிரபல்யமான அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயர்களும் அந்தப் பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இருந்தார். அவர் நிசங்க சேனாதிபதி. இப்போது இந்தத் தகவல்களை உலகிற்கு அறியத் தருவது யார் என்று பார்ப்போம். சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டு வருகின்றது. அதற்காக இவர்கள் இந்த முறை 6.4 மில்லியன் கடதாசிகளை செவ்வனே பரிசோதனைக்கு உற்படுத்தி இருக்கின்றார்கள். இதற்காக 600 வரையிலான ஊடகவியலாளர்கள் பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கின்றாhர்கள். எனவே இது ஒரு கற்பனைக் கதையோ அரசியல் பலிவாங்களோ அல்ல என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.

2021ல் இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில் தொன்நூற்றியொரு நாடுகளின் பண மோசடிக்காரர்கள் இருக்கின்றார்கள். இதில் முப்பது சமகால முன்னாள் அரசியல் தலைவர்களும், அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்று பல்வேறு துறைகளில் பிரபல்யங்கள் 330 பேர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றார்கள். இந்த முறை பண்ணிரெண்டு மில்லியன் வரையிலான ஆவணங்களை இவர்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தியாவில் முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சின் தென்தூக்காரின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. அவரது சட்ட ஆலோசகர்கள் இது சட்ட ரீதியான கணக்கு என்று ஊடக சந்திப்பில் கூறி இருக்கின்றார்கள். இந்திய இது தொடர்பான விசாரணைகளை முடக்கி விட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிதிக்குழு ஆலோசகர் ஒருவரின் மகன் பெயர் இதில் இடம் பெற்றிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இது தொடர்பான நடுநிலை விசாரணைக்கு கான் உத்தவு பிறப்பித்திருக்கின்றார். உலகில் பல நாடுகளில் தமது பிரசைகளுக்கு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றன. நமது நாட்டிலும் அதிகாரத்தில் இருக்கின்ற ராஜபக்ஸாக்களின் மிக நெருக்கமான மகள் முறை உறவுக்காரியான (சிலர் தங்கை முறை உறவு என எழுதுகின்றனார்) நிருபமா நடேசன் ராஜபக்சாவின் பெயர் இதில் இடம் பெற்றிருப்பதுடன் அதன் பணப் பெருமதியையும் பத்திரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமது வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருகின்ற தலைவர்கள் தொடர்ந்தும் நமக்குத் துரோகம் செய்கின்றார்கள் என்று தெரிந்தும் அவர்களையே திரும்பத் திரும்ப அதிகாரத்துக்குக் கொண்டு வருகின்ற ஒரு மக்கள் கூட்டம்தான் இந்த நாட்டில் காணப்படுகின்றது. ஏமாற்றுகின்றவர்களையே அதிகார ஆசனங்களில் வைத்து மக்கள் இந்த நாட்டில் அழகு பார்ப்பது வழக்கமாக நடந்து வருகின்றது.

தற்போதய பிரதமர் எம்.ஆர். தனது தேர்தல் செலவுகளுக்காக சீனாவிடம் இருந்து பல கோடிப் பணத்தை வங்கினார் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட போது அதனை தற்போதய பிரதமர் எம் ஆர். மறுத்ததுடன் உடனடியாக அந்தப் பத்திரிகைக்கு எதிரான சட்ட நடடிவக்கை எடுக்கப் போவதாத் தெரிவித்தார். இன்று வரை அவர் அப்படி எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன புரிந்து கொள்ள முடிகின்றது.

ரவி கருனாரத்தன வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த சதோச ஊழழுக்கு இது வரை தண்டனைகள் வழங்கப்பட்டதா? பிரான்ஸ் ஏயர் பஸ் கொள்வனவில் நடந்த மோசடி. தற்போதய நிதி அமைச்சர் பசில் 28 ஏக்கர் நிலத்தில் அமைத்திருக்கின்ற மல்வானை வீட்டு விவகாரத்துக்கு என்ன நடந்தது. இதன் காணிப் பத்திரம் கூட நடேசன் பெயரில்தான் இருக்கின்றது. இமாட் சுபைரி என்ற அமெரிக்க உளவலிக்கு நாட்டின் பிம்பத்தை உயர்த்தி உலக அரங்குகளில் காட்டுவதற்காக அன்று மத்திய வங்கி ஆளுநராக இருந்த கப்ரால் சட்டத்துக்கு முரனாக கோடிக் கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தாரே அதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா?

வங்குரோத்து கிரீஸ் நாட்டில் போய் கப்பரால் தன்னிஷ்டத்துக்கு அரச பணத்தை முதலீடு செய்து பறி கொடுத்தரே அப்படிப்பட்ட ஒருவரைத்தானே இன்று மத்திய வங்கி ஆளுநராக்கி அழகு பார்க்கின்றார்கள். 2015 தேர்தலில் ராஜபக்ஸாக்கள் மண் கௌவிய போது. ராஜபக்ஸாக்களுக்கு பாதுகாப்பாக மெதமூலனைக்கு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய 2015.01.08 அதிகாலை மூன்று மணிக்கு ராஜபக்ச வீட்டிற்கு இதே நிருபமா ராஜபக்ஸாவின் கணவன் நடேசனுடன் ரணில் அங்கு போய் இருக்கின்றார். அரசியல் இருப்புக்காகவும் பாதுகாப்புகளுக்காகவும் குடும்பத்தினர் என்ற வகையில் இவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கின்றார்கள். அதே போன்று அரச பணத்ததை கொள்ளை அடித்துப் பதுக்கி வைக்கின்ற விடயத்திலும் இனம் மதம் என்ற முரன்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை.

அப்பாவி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் உரிமைகள் என்று பேசப் போகின்ற இடத்தில் மட்டும் பௌத்த பேரினவாதம் பீரிட்டுக் கொண்டு வருவதை நாம் பார்க்கின்றோம். சீனி கொள்ளை, நச்சு தேங்காய் எண்ணையை மக்களுக்கு உணவுக்குக் கொடுத்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு இது வரை எந்த்தத் தண்டணைகளும் இல்லை என்ற நிலை இந்த நாட்டில் இருந்து வருகின்றது. எனவேதான் பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பது போல மேலிடத்து பணக் கொள்ளைகளின் போது அங்கே இனவாதம் சீரோவாகி விடுகின்றது.

நிருபமா நடேசன் பண்டோரா பேப்பர்ஸ் விடயமாக நாம் பார்ப்போமாக இருந்தால் இன்று நாட்டில் பேசுபொருளாக இருந்தாலும் இன்னும் இரண்டொரு வாரங்களில் இதனை நமது மக்கள் மறந்து விடுவார்கள். இது தான் நமது வரலாறு. இதனை விட எத்தனையோ விவகாரங்களில் நமது நாட்டு நடப்புகள் அப்படித்தான் அமைந்திருந்தன.

2017 ஒரு முறை ஜேவிபி தலைவர் அணுரகுமார பகிரங்க அரசியல் அரங்கு ஒன்றில் பேசும் போது பசிலின் பணம் திருகுமார் நடேசன், நிருபமா கணக்குகளில்தான் வைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இதனைச் சொல்வதற்காக முடியுமானால் தனக்கு வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அவர் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். மேல் மட்டத்தில் இனவாதம் மருந்துக்குக் கூடக் கிடையாது. பதவிக்கு வருவதற்காக மட்டும் ஆட்சியாளர்கள் அப்பாவி பேரினத்தாரை உசுப்பேற்றி விடுகின்றார்கள். எனவேதான் மடில்லே பஞ்ஞாசாரத் தேரர் சொல்வது போல முஸ்லிம்களை தும்புறுத்தியும் சிங்களவர்களை ஏமாற்றியுமே இந்த அரசாங்கம் வஞ்சகமாக பதவிக்கு வந்தது. அதன் சாபங்களைத்தான் இன்று நாமும் நாடும் அனுபவித்து வருகின்றது என்று தேரர் கூறுகின்றார்.

நிருபமா நடசேன் ராஜபக்ஸ ராஜபக்ஸாக்களின் குடும்ப உறுப்பினர். முன்பு உதவி நீர்ப்பாசன அமைச்சராக பதவியில் இருந்திருக்கின்றார். (வயது 59) அப்படிப் பட்ட ஒருவர் கணக்கிலே இந்தளவு பெரிய பணம் என்றால் இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கணக்கில் எந்தளவு பணம்-சொத்துக்கள் உலகில் எங்கொல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

தமது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பாதல் தமக்கு மிகுந்த மன உழைச்சல் என்று கூறி இதற்கான ஒரு விசாரணையை நடத்துமாறு நடேசனும் மனைவி நிருபமாவும் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி இருப்பதுடன் அந்த விசாரணைகள் எப்படி நடக்க வேண்டும் என்று அவர்களே ஜனாதிபதிக்கு ஆலோசனையும் சொல்லி இருக்கின்றார்கள். ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊழல் மோசடிகள் பற்றிய ஆணைக் குழுவுக்கு விசாரிக்கும் படி இப்போது கேட்டிருக்கின்றார். -நன்றி ஈழ நாடு வரமலர்

Previous Story

வதந்திகள்

Next Story

பண்டோரா பேப்பர்ஸ் கதையை கேளுங்கள்