காசாவில் பல மாதங்களாக நடந்துவரும் போர், உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?
“நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் வெளியிட்ட ஒரு பரபரப்பான கட்டுரை, நெதன்யாகுவின் அரசியல் கணக்குகளையும், காசா போரின் பின்னணியில் நடந்த ரகசியங்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பொன்னான வாய்ப்பு தவறிய கதை
கடந்த 2024 ஏப்ரல் மாதம். காசா போர் ஆறு மாதங்களைத் தொட்டிருந்த நேரம். நெதன்யாகு போர்நிறுத்தத்திற்கு கிட்டத்தட்ட சம்மதித்துவிட்டார். ஹமாஸுடன் சண்டை நிறுத்தம் பற்றிப் பேச, ஒரு தூதரையும் எகிப்துக்கு அனுப்பிவிட்டார்.
இனி, அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, போரை நிறுத்திவிடலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தார். இந்த விஷயத்தை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல், திடீரென வெளியிட்டு, எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திணறடிக்கவும் யோசித்திருந்தார்.

இந்த போர்நிறுத்தம் நடந்திருந்தால், காசா போர் ஆறு வாரங்களுக்குள் குறைந்தபட்சம் நின்றிருக்கும். பணயக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டிருப்பார்கள். தினமும் குண்டுமழையில் சிக்கித் தவிக்கும் காசா மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்திருக்கும்.
முக்கியமாக, சவுதி அரேபியாவுடன் இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும். இஸ்ரேல் உருவானதில் இருந்து எந்த தலைவரும் செய்யாத இந்தச் சாதனை, நெதன்யாகுவுக்கு ஒரு மாபெரும் அரசியல் வெற்றியாக அமைந்திருக்கும்.
ஆபத்தில் நெதன்யாகுவின் நாற்காலி!
ஆனால், நெதன்யாகுவுக்கு இந்த அமைதி, ஒரு தனிப்பட்ட ஆபத்தையும் கொண்டு வந்தது. அவரது கூட்டணி அரசாங்கத்தில், தீவிர வலதுசாரி அமைச்சர்கள் அதிகம். காசாவை முழுவதுமாக ஆக்கிரமித்து, அங்கே யூதக் குடியேற்றங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
போர் விரைவில் முடிந்தால், இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவார்கள் என்ற பயம் நெதன்யாகுவுக்கு. அது நடந்தால், இஸ்ரேலில் முன்கூட்டியே தேர்தல் வரும். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நெதன்யாகு தோற்பார் என்றுதான் காட்டின.
அரசியல் பதவியை இழந்தால், நெதன்யாகுவுக்கு இன்னொரு பெரிய தலைவலி காத்திருந்தது. அவர் மீது 2020 முதல் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதிகாரத்தில் இருந்தால், இந்த வழக்குகளைக் கண்காணிக்கும் அட்டர்னி ஜெனரலை மாற்ற முடியும். பதவி போனால், அதுவும் முடியாது! ஆக, பதவியில் நீடிப்பது, ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க அவருக்கு முக்கியமாக இருந்தது.
கூட்டணி ஆடிப் போனது!
அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. நெதன்யாகுவின் உதவியாளர் ஒருவர், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான புதிய நிலைப்பாடு குறித்த ஆவணத்தை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். நெதன்யாகுவும் அதை சரிபார்த்துக்கொண்டிருந்தார். திடீரென, நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் குறுக்கிட்டார்.
இவர் சாதாரண ஆள் அல்ல. 2005-ல் ஒருமுறை, காசாவில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் அகற்றப்படுவதைத் தடுக்க, நெடுஞ்சாலையில் வெடிகுண்டுகள் வைக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டவர்.
காசாவில் மீண்டும் யூதக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இவர், சமீபத்தில் காசா பாலஸ்தீனியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஸ்மோட்ரிச் அமைச்சரவைக் கூட்டத்தில் மிரட்டல் தொனியில் பேசினார். “ஒரு சமரச ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டால், உங்களுக்கு ஒரு அரசாங்கமே இருக்காது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்,” என்று அதிரடியாகக் கூறினார்.
“அரசாங்கம் முடிந்தது!”
இந்த ஒற்றை மிரட்டல், நெதன்யாகுவை சிந்திக்க வைத்தது. தன் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள, போர்நிறுத்த முடிவை அவர் கைவிட்டார். நியூயார்க் டைம்ஸ் கட்டுரையின்படி, நெதன்யாகுவின் தனிப்பட்ட அரசியல் கணக்குகள்தான், காசா போரை இவ்வளவு காலம் நீட்டித்ததற்குக் காரணம் என்பது பகிரங்கமாகியுள்ளது.
ஆனால், ஒருவர் செய்த ஊழல் மற்றும் அதற்காக நாற்காலியை காப்பாற்றும் எத்தனிப்பு, இன்னொரு பக்கம் பல அப்பாவிகளை துடிக்க துடிக்க பலியாக்கியுள்ளது.
ஆம். காசா போரின் கொடூரம் ஒருபுறம் என்றால், மறுபுறம் பசிப் பிணிகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒரு வாய் உணவுக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர், தங்கள் உயிரையே விலையாகக் கொடுத்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு தகவல், உலகையே உலுக்கியுள்ளது.
மே இறுதி முதல் இதுவரை 798 பேர் பலி
கடந்த மே மாத இறுதி முதல், காசாவில் உணவு உதவி பெற முயன்றபோது குறைந்தது 798 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது வெறும் எண்ணிக்கையல்ல, பசியின் கோரப்பிடியில் சிக்கி, பாதுகாப்பான உணவுக் கூட கிடைக்காமல் உயிரிழந்த மனிதர்களின் சோக வரலாறு!
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) செய்தித் தொடர்பாளர் இந்த அதிர்ச்சித் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மே 27 முதல் உணவு உதவி பெற முயன்றபோது கொல்லப்பட்டவர்களில் 615 பேர், காசா மனிதாபிமான அறக்கட்டளைக்குச் சொந்தமான தளங்களுக்கு அருகில் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, உணவு வழங்கும் மையங்களிலேயே மரணம் அவர்களைத் தழுவியுள்ளது. மீதமுள்ள 183 பேர், உதவிப் பொருட்கள் வரும் வழிகளில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கவளம் உணவுக்காகக் காத்திருந்த மக்களின் மீது நடந்த தாக்குதல்கள், உலக மனசாட்சியை உலுக்க வேண்டும்.
உதவி வழங்கலில் இஸ்ரேலின் கெடுபிடிகள்!
உதவி நிறுவனங்கள் கூறும் குற்றச்சாட்டு இதுதான்: இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாடுகளும், தொடர்ச்சியான வன்முறையும் காசாவில் உதவிப் பொருட்களை விநியோகிப்பதை மிகவும் கடினமாக்கியுள்ளன. இஸ்ரேல் 11 வார முழு அடைப்பினை மே மாதம் தளர்த்திய பின்னரும் நிலைமை சரியாகவில்லை என்கின்றன உதவி நிறுவனங்கள்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 21 மாதங்களாகியும், காசா பகுதி பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உணவு கிடைப்பது ஒரு போராட்டமாக மாறி, அந்தப் போராட்டத்திலேயே நூற்றுக்கணக்கானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது, காசாவின் அவல நிலையை அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது.