“நாளை விடிய
தலைவரின் மற்றுமொரு
வாக்குறுதி காற்றில் பறக்கும்”
நமக்கு நெருக்கமான ஒரு வேட்பாளர், அவர் கட்சி சமர்ப்பித்த வேட்பு மனு நிரகரிக்கப்பட்டிருந்தது. அது பற்றி நாம் விசாரித்த போது தமது தனித்துவத் தலைவர் ‘அது ஒன்றும் பிரச்சினை கிடையாது’ நீங்கள் உங்கள் தேர்தல் பணிகளைச் செய்து கொண்டு போங்கங்கள்.
வேட்பாளர் மீண்டும் கேள்வி எழுப்ப என்ன என்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றும் தலைவர் கேட்டிருக்கின்றார். கட்சி நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் நிராகரிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் 24 வரையிலே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஏனையவை அவ்வளவுதான்!
எனவே தமது வேட்பாளர்களை நாளை வரை சமாளிக்கத்தான் தலைவர் இந்த நாடகத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார். நாளை தலைவர் கொடுத்த வாக்குறுதிகள் பல இடங்களில் காற்றில் பறக்கும் காட்சிகளை வேட்பாளர்களும் தொண்டர்களும் பார்க்கக் கூடியதாக இருக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை என்றாலும் ஏமாறுவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும் !
*****
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் நாளை வியாழக்கிழமை வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நேற்று முதல் இன்று வரை நடைமுறையில் இருக்கத்தக்கதாக இத்தகைய உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதனை நாளை வரை நீடித்து இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசை கே.பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது நாளை வரை நடைமுறையில் இருக்கும்.
அதே சமயம் ஒருவரின் பிறப்பின்போது வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மூலப் பிறப்புச் சான்றிதழை ஆதாரமாக-ஆவணமாக-ஏற்க மறுத்திருந்தால் அதனை ஏற்றுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு இன்று உத்தரவிட்டது.
தென்னிலங்கையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு ஒன்று தொடர்பிலேயே இந்த வழிகாட்டலை நீதிமன்றம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.