நியூயார்க் டைம்ஸ் அதிர்ச்சி தகவல்! இந்திய ஊடகத்துக்கு சீனா நிதி 

இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 5 நிருபர்கள், சர்வதேச அரங்கில் சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வு செய்து விரிவான செய்தியை தயார் செய்துள்ளனர். இந்த செய்தி கடந்த 5-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது.

இதில், சீனாவுக்கு சாதகமாக செயல்பட இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் சீனாவுக்கு சாதகமாக செயல்பட அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சீன தரப்பில் பெரும் தொகை அள்ளி வீசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியின் சுருக்கம் வருமாறு:

கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ‘‘நோ கோல்டு வோர் குரூப்’’ என்ற அமைப்பு திடீர் போராட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது. இங்கிலாந்தில் ஆசிய வம்சாவளியை சேர்ந்த மக்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தியது.

இதே ‘‘நோ கோல்டு வோர்குரூப்’’ அமைப்பினர் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. பருவநிலை மாறுபாட்டை தடுப்பது, இனவெறி தாக்குதல்களை தடுப்பது ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படுவதாக அமைப்பின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய புலனாய்வில், ‘‘நோ கோல்டு வோர் குரூப்’’ அமைப்பு சீனாவின் பினாமி அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் நிதியுதவி செய்து வருகிறார். இலங்கை வம்சாவளியை சேர்ந்த இவர் சீன அரசின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘‘தாட்வோர்க்ஸ்’’ என்ற சாப்ட்வேர் நிறுவனத்தையும் பல்வேறு அறக்கட்டளைகளையும் சிங்கம் நடத்தி வருகிறார். இவர் பெரும்பாலான நாட்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் முகாமிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மற்றும் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் ஓர் அரசியல் கட்சி,அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜாம்பியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களுக்கு அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்.

இந்தியாவில் ‘நியூஸ்கிளிக்’ என்ற ஊடகத்துக்கு அவரது சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த ஊடகம் சீனாவுக்கு ஆதரவான, சாதகமான செய்திகளை வெளியிட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் சோஷலிஸ்ட் புரட்சிகர தொழிலாளர் கட்சிக்கு தொழிலதிபர் சிங்கம் தரப்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த கட்சியின் தலைவர்களும் சீனாவுக்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட தொழிலதிபர் சிங்கம் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். இதுதொடர்பாக தனது நிறுவனங்கள், நண்பர்கள் வாயிலாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.

கடந்த மே மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் நெவில் ராய் சிங்கம் கலந்து கொண்டார். அந்தகூட்டத்தில் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் யூ யுன்குவானுக்கு அருகில் சிங்கம் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க தொழிலதிபர், சமூக சீர்த்திருத்தவாதி என்ற பெயரில் சீனாவின் ரகசிய தூதராக அவர் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ஆதரவான செய்திகளை வெளியிட நெவில் ராய் சிங்கம் அதிதீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச விரோத செயலுக்கு! சீனாவிடமிருந்து நிதி- அரசின் குற்றச்சாட்டு!

-ஆ.பழனியப்பன்-
மோடியுடன் நிஷிகாந்த் துபே

‘ஓர் இணையதளமும், காங்கிரஸ் கட்சியும், சீனாவும் கைகோத்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எழுப்பியது. அதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததால், 137 நாள்களுக்குப் பிறகு நேற்று (ஆக. 7) நாடாளுமன்றத்துக்கு வந்தார் ராகுல் காந்தி. அவருக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி-க்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். “பாரத் ஜோடோ… பாரத் ஜோடோ…”, “ராகுல் காந்தி ஜிந்தாபாத்..” என்று காங்கிரஸார் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சீரியஸான குற்றச்சாட்டு ஒன்றை பா.ஜ.க-வினர் எழுப்பினர். இந்தியாவுக்கு எதிராக சீனாவுடனும், சில தேசவிரோதிகளுடனும், காங்கிரஸ் கட்சி கைகோத்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி-யான நிஷிகாந்த் துபே எழுப்பினார். இது தொடர்பாக, `தி நியூயார்க் டைம்ஸ்’ ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றம் கூடியதும் தனது இருக்கையிலிருந்து எழுந்த நிஷிகாந்த் துபே, “சில ஊடகம், ‘துக்டே துக்டே கேங்’ ஆகியவை அந்நிய சக்திகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை `தி நியூயார்க் டைம்ஸ்’ ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு சீனா நிதி வழங்குகிறது. நரேந்திர மோடி அரசை எதிர்ப்பதற்காக சீனத் தரப்பினரை காங்கிரஸ் தலைவர்கள் 2016-ம் ஆண்டு சந்தித்தனர்” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மக்களவை

மேலும், “சில ஊடகத்தின் மூலமாகவும், சீன சக்திகளின் மூலமாகவும், இந்தியாவைத் துண்டாட அவர்கள் (காங்கிரஸ்) விரும்புகிறார்கள். 2005 முதல் 2014 வரை தனக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் சீனாவிடமிருந்து காங்கிரஸ் கட்சி பணம் வாங்கியது. 2008-ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திஆகிய இருவரையும் அவர்கள் (சீனா) அழைத்தனர். 2016-ம் ஆண்டு, டோக்லாம் பிரச்னை ஏற்பட்ட நேரத்தில், சீனாவுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்” என்ற குற்றச்சாட்டுகளை துபே அடுக்கினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார்.

“மாவோயிஸ்ட்களுக்கும் மூத்த பத்திரிகையாளர்களுக்கும் எவ்வாறு பணம் கொடுக்கப்பட்டது என்பதை `தி நியூயார்க் டைம்ஸ் ஏடு’ விவரித்திருக்கிறது” என்றும் கூறிய துபே, சீனா, ‘நியூஸ்கிளிக்’ இணையதளத்தின் உரிமையாளரும், அதன் எடிட்டருமான பிரபீர் புர்கயஸ்தா, பத்திரிகையாளர்கள் ரோகிணி சிங், சுவாதி சதுர்வேதி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

அனுராக் தாகூர்

அனுராக் தாகூர்

“காங்கிரஸ் கட்சிக்கும், நியூஸ்கிளிக் இணையதளத்துக்கும் சீனாவுக்கும் ‘இந்தியாவுக்கு எதிரான தொப்புள் கொடி உறவு’ இருக்கிறது” என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது. நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை துபே முன்வைத்ததற்கு, காங்கிரஸ் எம்.பி-க்கள் அவையில் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன் காரணமாக, அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

அதையடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு, சோனியா காந்தி, ராகுல் காந்தி அருகே கூடிய எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள், துபேயின் குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோருவது என்று முடிவுசெய்தனர். துபேயின் குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்றும், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளித்தார். துபேயின் பேச்சு முதலில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. பிறகு, மாலையில் மக்களவையின் இணையதளத்தில் அவரின் பேச்சு இடம்பெற்றிருந்தது.

ராஜீவ் சந்திரசேகர்

ராஜீவ் சந்திரசேகர்

இதே குற்றச்சாட்டை நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பா.ஜ.க-வினர் எழுப்பினர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, நியூஸ்கிளிக், சீனா என்ற பெயரைகளை அனுராக் தாகூர் குறிப்பிட்டார். மேலும், சீனா, நியூஸ்கிளிக், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையே தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் திட்டம் இந்திய தேசத்தைப் பலவீனப்படுத்துவது. தேச நலன்களுக்கு தீங்கு விளைவிப்பது.. இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டங்களை உருவாக்குவதுதான்’ என்றும் அவர் விமர்சித்தார்.

“நெவில்லி ராய் சிங்கம் என்ற அந்நியரிடமிருந்தும் சீன நிறுவனங்களிடமிருந்தும் நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றுவருகிறது என்று தெரியவருகிறது. நெவில்லி ராய் சிங்கத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன ஊடக நிறுவனமான மாகு குழுமத்துடன் தொடர்பிருக்கிறது” என்றும் அனுராக் தாகூர் குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க எம்.பி மற்றும் அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் எம்.பி-க்கள் எபி டென், மாணிக்கம் தாகூர் ஆகியோர் துபேவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கிறார்கள்.

“சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு எதிராக தவறான தகவல்களை துபே தெரிவித்திருக்கிறார். சீனாவிடமிருந்து அவர்கள் பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். பத்திரிகையாளர்கள், பிரிவினைவாதிகளுடன் கைகோத்து தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள்” என்று எபி டென் கூறியிருக்கிறார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

பத்திரிகையாளர் ரோகிணி சிங், “நியூஸ்கிளிக் இணையதளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிஷிகாந்த் துபேயிடம் நான் சில கேள்விகளை எழுப்பினேன். அதில் அவர் அப்செட் ஆகியிருக்கிறார். அதனால், என்னைப் பற்றி நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

“இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று கூறியிருக்கும் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி, “நியூஸ்கிளின் இணையதளத்துக்காக நான் ஒருபோதும் பணியாற்றியதில்லை. நியூஸ்கிளிக் நிறுவனத்திடமிருந்து நான் பணம் வாங்கியிருந்தால், அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்கட்டும். எம்.பி என்கிற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அப்பட்டமாக அவர் பொய் சொல்லியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதை திசைத்திருப்பும் நோக்கில் இந்தப் பிரச்னையை ஆளும் தரப்பு எழுப்புகிறது என்கின்றன எதிர்க்கட்சிகள்.

Previous Story

பேர்சி அபேசேகர தொடர்பில் பொய்யான தகவல் 

Next Story

மிஸ் யுனிவர்ஸ்:பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த  இந்தோனேசியா போட்டியாளர்கள்