நிமிஷா மரண தண்டனை நிறைவேற்றும் தேதியை அறிவிக்கணும்-மஹ்தி சகோதரர் பிடிவாதம்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தலோல் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் பட்டா மஹ்தி, ஏமன் அட்டார்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சமரசத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை எனவும், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட சூழலிலும் புதிய தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டையை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் தனது 19 வயதில் நர்சிங் வேலை தேடி ஏமன் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கிளினிக் தொடங்கினார். ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் நடத்தினார்.

Nimisha Priya Kerala nurse Yemen

கேரள நர்ஸ் நிமிஷா பிரியா

ஆனால், தலோல் அப்தோ மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து கொண்டதோடு, கிளினிக்கில் கிடைத்த பணத்தை மொத்தமாக அபகரித்ததாக கூறப்படுகிறது. கிளினிக் ஒன்று ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து கைப்பற்றுவதற்காக மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால் இந்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் மஹ்தி உயிரிழந்துவிடவே, கொலை குற்றச்சாட்டில் நிமிஷா சிக்கினார்.

இந்த வழக்கில் கைதான நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்நாட்டு அதிபரிடம் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. 2017 முதல் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்தார்.

உடனே மரண தண்டனையை நிறைவேற்றனும்

இவரைக் காப்பாற்ற மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நிமிஷாவுக்குக் கடந்த மாதம் 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. எனினும், இந்தியாவை சேர்ந்த கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தலோல் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் பட்டா மஹ்தி, ஏமன் அட்டார்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சமரசத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை எனவும், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட சூழலிலும் புதிய தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான எங்களின் சட்டப்பூர்வ உரிமையை நாங்கள் முழுமையாக பின்பற்றுகிறோம் என்றும் கோரியுள்ளார்.

சமரச பேச்சுக்கள் நடக்கவில்லை

முன்னதாக கடந்த 25 ஆம் தேதியும் இதேபோன்ற ஒரு கடிதத்தை அப்துல் பட்டா எழுதியிருந்தார். அதில், நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் புதிய தேதியை அறிவிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் ரத்தத்திற்கு பணம் என்ற எந்த ஒரு சமரச பேச்சும் நடக்கவில்லை எனவும் தனது சகோதரரின் ரத்தம் ஒன்றும் சந்தையில் வைத்து பேரம் பேசுவதற்கு ஒரு பொருள் இல்லை என்றும் இந்திய ஊடகங்களை விமர்சித்து இருந்தார்.

Previous Story

OLD KANDY

Next Story

ஓ.பன்னீர்:எத்தனை தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்?