நாமே நமது துரோகி!

பொதுவாக தேர்தல்களில் செல்லுபடியற்ற வாக்குகள் என்று ஒன்றிருக்கின்றது. அவை பெரும்பாலும் அறியாமை காரணமாக அல்லது பிழையான வாக்களிப்பு முறையால் அப்படி நடக்கின்றது. இன்று இந்தியா போன்ற நாடுகளில் நாம் எவருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்று வாக்கை பதிக்கின்ற ஒரு முறையும் இருக்கின்றது.

ஆனால் நாங்கள் இங்கு பேசப்போவது வேறு வழிகளில் சமூகங்கள் வாக்களிப்பை பிழையாகப் பாவித்து தமது வாக்குகளை வீனடித்துத் தமது பிரதிநிதித்துவத்தை தாமே பறிகொடுப்பது அல்லது இழப்பது பற்றிய ஒரு விடயம் தொடர்பானது. அதனை உதவாக்கறை மற்றும் ஊதாரித்தனம் என்று பெயர் சூட்டுகின்றோம். இதற்கு இதனை விட பொறுத்தமான நாமங்களையும் வைத்துக் கொள்ள முடியும்.

இவை அரசியல் ரீதியில் ஒரு தற்கொலை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்-விமர்சிக்கலாம். ஆனால் சமூகங்களிலுள்ள புத்திஜீவிகளோ அல்லது சமய, சமூக அமைப்புக்களோ இது பற்றி பெரிதாக இது வரை பேசியதை நாம் அவதானிக்க வில்லை. நமது இந்த விளக்கத்துக்குப் பின்னராவது சமூகம் இது விடயத்தில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும். அந்த இரு விடயங்களையும் இங்கு பார்ப்போம்.

உதவாக்கறை

இவர்களுக்கு அறவே வெற்றி வாய்ப்புக்கள் கிடையாது என்று தெரிந்தும் சிலர் ஏதோ காரணங்களுக்காக தேர்தலில் பட்டியலைப் போட்டு வேட்பாளர்களாக வந்து விடுகின்றார்கள். இது அவர்களது ஜனநாயக உரிமை அதனை நாம் மறுக்கவோ தடுக்கவோ முடியாது.

சில சந்தர்ப்பங்களில் ஓரிரு வாக்குகள் அல்லது சில நூறு வாக்குகள் அல்லது சில ஆயிரம் வாக்குகள் கூட சமூகத்தின் உறுப்புரிமையைத் தட்டி விடும். எனவே இவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பது பற்றி சமூகங்கள் யோசிக்க வேண்டும்.

ஆனால் வேட்பாளர்களோ தமக்கு அப்படி வெற்றி வாய்ப்பு இருக்கின்றது இப்படி இருக்கின்றது என்று கதை விடுவார்கள். ஆனால் பொறுப்பானவர்கள் பலர் இவர்களுக்கு அரவே வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் சமூகத்தைத் தெளிவு படுத்தாத காரணத்தால் அப்படியானவர்களுக்கும் சில நூறு ஆயிரம் வாக்குகள் கிடைத்து விடுகின்றன.

சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் மற்றுமொருவரின் வெற்றி வாய்ப்புக்கு இது வேட்டு வைத்துவிடும் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவர்களுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகள் குப்பையில் கொட்டப்படுக்கின்ற வாக்குகளாக மட்டுமல்லாது சமூகப் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்கின்ற வாக்குகளாகவும் பதிவாகின்றது. இதை கோடாறிக் காம்புகள் பார்க்கின்ற வேலை என்று நாம் அறிமுகம் செய்தாலும் அது அவர்களது உரிமை என்பதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே வாக்காளரும் சமூகமும்தான் இது விடயத்தில் அறிவுபூர்வமாக சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.

ஊதாரிகள்

நாம் முன்பு சொன்ன வேட்பாளர் அல்லது குழுக்களை விட நாம் இங்கு குறிப்பிடுகின்ற குப்பையில் வீசப்படுகின்ற வாக்குகள் வித்தியாசமானவை. பொறுப்புள்ளவர்களினால் இதுவரை மேடைகளில் பேசப்படாத ஒரு விடயம்-விவகாரம்.

உதாரணமாக கண்டி மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு 65000-70000 வாக்குகள் போதுமானவை-உச்சமானவை என்று அறிந்தும் அளந்தும் வைத்திருக்கின்ற மக்கள் சமூகங்கள் அவர்களுக்கு ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் (100000-150000) என்று வாக்குகளை அள்ளிக் கொட்டுவதும் ஒருவகையில் குப்பையில் கொட்டப்படுகின்ற வாக்குகளாகவே கருத வேண்டும்.

இதனை இப்படியும் விளக்க முடியும் ஒரு லீட்டர் கொள்ளளவு பால் போத்தலுக்கு ஒன்றரை அல்லது இரண்டு லீட்டர்களை ஊற்றினால் மேலதிகமானவை தரைவழியே ஓடி வீண் விரையம் செய்யப்படுவது போல் ஒரு காரியத்தைத்தான் சமூகம் இதில் செய்கின்றது. இரண்டு மூன்று மேலதிக உறுப்பினர்களை வென்றெடுக்கக் கூடிய இடத்தில் சமூகம் ஒரிருவருக்கு அதனை மட்டுப்படுத்தி வாக்குகளை வீண் விரையம் செய்வது ஊதாரித்தனமாகவே நாம் பார்க்கின்றோம். இப்படி வாக்குகளைப் போட்டுவிட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைக்கின்றது என்று சமூகமும் படித்தவர்களும் ஒப்பாறி வைப்பது சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலாகவே இருக்க முடியும்.

இதில் மற்றுமொரு வாதமும் இருக்கின்றது. தமது ஆதரவு வேட்பாளர் எந்தளவு வாக்குகளை அள்ளிக் குவிக்கின்றாறோ அது அவருக்கும் அவரது ஆதரவாளருக்கும் பெறுமை சேர்க்கின்ற விடயமாக உற்சாகம் கொடுக்கின்ற விடயமாகவும் இருக்கலாம். சமூகப் பிரதிநித்துவம் என்று பார்க்கின்ற போது இது வீண்விரையம். சமூகத்துரோகம்! அநியாயம். இஸ்லாம் வீண் விண்விரயத்தை ஆதரிக்கவில்லை என்றால் இதுவும் சமூக நோக்கில் சிந்திக்கபட வேண்டிய ஒரு விவகாரம் என்பது எமது வாதம். ஆனால் சமூகம் சமயம் பற்றிப் பேசுபவர்கள் இதனைப் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

4 வருக்கு வாய்ப்பு!

சமூகப் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகின்ற மகான்கள் இது போன்ற விவகாரங்களை மக்களிடம் முன்வைத்து விளக்கங்கள் கொடுக்காமல் இருப்பபதும் ஏனோ! வைக்கோளில் இருக்கின்ற நாய்களைப்போல் அரசியல்வாதிகள் நடந்து கொள்வது நமது நாட்டில் பொதுவான விடயமாக இருந்தாலும் பொறுப்புள்ள சமூகமும் பெரியார்கள் இதுவிடயத்தில் சிந்திக்க வேண்டும். எனவேதான் கண்டி மாவட்டத்திலிருந்து நான்குக்கும் மேற்பட்ட பிரதிநிதித்துவத்தை வென்றடுப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என்று நாம் கூறுகின்றோம்.

கடந்த தேர்தல்களில் பகிர்ந்தளிக்கின்ற முறையில் ஊர்கள் சமூகங்கள் வாக்களித்து சாதனைகளைப் படைத்திருக்கின்றது. பெருந் தொகையான வாக்குகள் உள்ள ஊர்களில் சில உறுப்புரிமைகளையும் சிறு தொகை வாக்காளர் உள்ள ஊர்களில் பல உறுப்பினர்களையும் வழக்கமாக பெற்றுக் கொள்கின்ற கிராமங்கள் இதே மாவட்டத்தில் இருக்கின்றன. கடந்த காலங்களில் பொதுத் தேர்தல்களில் கண்டி மாவட்ட வாக்களர்கள் இந்த சாதனையை சிறப்பாக செய்து முடித்த பல உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.

2000 ஆண்டு தேர்தலில் மு.கா.30000 த்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டதும் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கின்றது. இந்தத் தேர்தலில் 135000 அளவில் முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்படும் என எடுத்துக் கொண்டால். குறிப்பிட்ட ஒரு கட்சியில் இருவருக்கும். சிறு கட்சிகளில் அல்லது குழுக்களில் போட்டி போடுகின்ற இருவருக்கும் இந்த ஒரு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் யாருக்கு இப்படியான வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதை புத்திஜீவிகள் சமூகத்தை அறிவூட்டி நெறிப்படுத்தினால் நான்கு பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ள முடியும்.

ஒருவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து அவர்களுக்கு நிதியோ அமைச்சுப் பதவிகளோ ஒதுக்கப்படுவதில்லை ஒருவாக்கிலாவது கரை சேர்ந்து விட்டால் அந்தப் பிரதிநிதி சமூகத்தில் அமைச்சராகவும் வரலாம். அவருக்கு வழங்கப்படும் நிதியில் அவர் அபிவிருத்திப் பணிகளைச் செய்யலாம். நாம் மேற்சொன்னவாறு ஒரு போத்தல் கொள்ளவில்; ஒன்றரையே இரண்டு போத்தல் பாலைக் கொட்டி சமூகம் ஊதாரித்தனம் பண்ணக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

நம்பிக்கை

Next Story

புதிய அரசியல் யாப்புக்கு 2/3 !