“நான் முஸ்லிம்தான்” நடிகை குஷ்பு

ச. ஆனந்தப்பிரியா

குஷ்பு தன்னுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ‘நக்கத்கான்’ என பெயர் சேர்த்ததற்கு யாருடைய மிரட்டலோ அச்சுறுத்தலோ காரணம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்டூ பயிலும் மாணவி தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை கூறியது.

அவர் கட்டாய மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானதால் இந்த விவகாரம் சர்ச்சையானது. மேலும், மாணவி இறப்பதற்கு முன்பு அவர் பேசிய காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். தனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் தந்த நிர்ப்பந்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் விசாரணை அதிகாரி முன்பு தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும், அவரது வாக்கு மூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவி, கட்டாய மதமாற்றத்தால்தான் இறந்தார் என்றும் அதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி கோரி வருகிறது.

தமிழகத்தின் பல இடங்களிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதங்கப்பட்ட குஷ்பு

இதில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, “ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகளை இழந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த வலி தெரியும். திமுகவினருக்கு அது தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள்,” என்று கூறினார்.

மாணவி தற்கொலை விஷயத்தில் முதல்வர் மெளனம் காப்பது ஏன்? தமிழகத்தில் இதுவரை கட்டாய மதமாற்றம் செய்யவில்லை என அறிக்கை வெளியிட முடியுமா? சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை இப்படி பயந்து கொண்டு பணியாற்ற வேண்டியதன் அவசியம் என்ன? இதுபோன்ற விஷயங்களில் காவல்துறை பயந்து பின்வாங்கி தங்கள் நற்பெயரை கெடுத்து கொள்கின்றனர் என்று குஷ்பு பேசினார்.

பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

அப்போது மதமாற்ற விவகாரத்தை எழுப்பிய குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் பலரும் நீங்களே வேறு மதத்தைச் சேர்ந்தவர்தானே என்றவாறு விமர்சித்து இடுகைகளை பகிர்ந்தனர். குஷ்பு பேட்டி கொடுத்த ஊடக காணொளியையும் பலரும் பகிர்ந்து விமர்சித்தனர்.

இந்த நிலையில், குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் முஸ்லிம் ஆக பிறந்தேன். நான் பிறப்பால் முஸ்லிம் என்ற உண்மையை நான் எங்குமே மறைத்ததே இல்லை. நான் ஒரு இந்துவை திருமணம் செய்த போதும் என் மதத்தை நான் மாற்றி கொள்ளவில்லை. என்னுடைய சகோதரர் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மற்றொரு சகோதரர் இந்து.

இதில் வேடிக்கை என்னவெனில் சில தலைவர்கள் உண்மைகளை கூட சரிபார்க்காமால் முட்டாள்தனமாக பேசி கொண்டிருக்கிறார்கள்” என கூறி தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பெயரையும் KhushbuSundar or Nakhathkhan என மாற்றியிருக்கிறார். ஆனால் இதையும் பலர் விமர்சித்து இடுகைகளை பதிவிட்டுள்ளனர்.

குஷபுவின் ட்விட்டரில் இந்த பெயர் மாற்றத்தை அடுத்து அந்த ட்வீட்டுக்கு கீழே பலரும் பாஜகவில் சேர்ந்த பிறகு உங்கள் முதல் குடும்பம் வரை யார் எந்த மதம் என்பதை விளக்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்பு நீங்கள் இருந்த கட்சிகளில் இது போன்ற விளக்கங்கள் கொடுத்ததில்லையே என பின்னூட்டங்களை பதிவிட்டு, மாணவியின் மரணம் தொடர்பாக அவர் பேசிய காணொளியையும் இணைத்து மீண்டும் விமர்சனங்களை தொடர்ந்தனர்.

“ட்விட்டரில் என் பெயரை மாற்றியது பெரிய விஷயம் கிடையாது. எல்லாரும் பெயர் மாற்றுகிறார்கள் என்னென்னமோ செய்கிறார்கள். நான் என்ன சூழ்நிலையில் இருக்கிறேன் என்ற விஷயத்தையும் நான் அந்த ட்வீட்டிலேயே விளக்கி விட்டேன். மற்றபடி இதற்கும் நான் சார்ந்துள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது,” என்றார்.

“இதுக்கு முன்பும் நான் இதுபோன்று நிறைய முறை பெயர் மாற்றியிருக்கிறேன். மற்றபடி யாருடைய மிரட்டலோ அச்சுறுத்தலோ இதற்கு காரணம் கிடையாது. தேவையில்லாத பின்னூட்டங்களுக்கு என்ன பதில் சொல்வது?

மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் போராட்டத்தில் பேசினோம். அதற்காகதான் எங்களுடைய போராட்டமும். அரசியலாக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது” என்பதோடு முடித்து கொண்டார் குஷ்பு.

Previous Story

பெரும் கவலையில் அப்பச்சி!

Next Story

ஜனவரி 26 குடியரசு தினம் முதல் நிகழ்ச்சி  எப்படி நடந்தது?