நாட்டில் உச்சக் கட்ட கொள்ளைகளும் டீல் அரசியலும்

-நஜீப் பின் கபூர்-

இந்த வாரம் என்ன தலைப்பில் கட்டுரையை எழுதலாம் என்று முன்கூட்டியே எந்தத் தீர்மானங்களுக்கும் எம்மைப் போன்ற அரசியல் விமர்சர்களினால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை. காரணம் வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு வருவது போல சமகாலத்தில் நமது நாட்டில் இரும்புக் கம்பிகளைத் தகர்த்துக் கொண்டு மக்கள் நமக்குச் செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவற்றில் மிகவும் ஆபத்ததான சமிக்ஞைகளும் நம்பிக்கையான நல்ல பல தகவல்களும் அடங்கி இருக்கின்றன. எப்படியோ இந்த வாரம் ஜேவிபி. தலைவர் அணுர குமர திசாநாயக்க நாட்டுக்குச் சொன்ன அப்பட்டமான அரசியல்வாதிகளின் களவுகள் பற்றியும், அடுத்து இந்த வாரம் நாடாளுமன்றம் கூடுகின்ற போது நாட்டில் சில அதிரடி மாற்றங்கள் அங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனேகமானவர்களிடம் இருந்தன.

பல ஊடகங்கள் அப்படியொரு நம்பிக்கையை மக்களுக்கு முன்கூட்டி ஏற்படுத்தி இருந்தன. எனவேதான் ஊடகங்கள் சொல்கின்ற எல்லாச் செய்திகளையும் நம்பி ஏமாறாதீர்கள் என்று நாம் நெடுநாளாக மக்களை தெளிவுபடுத்தி வந்திருந்தோம்.

கடந்த வாரம் கூட இதைப்பற்றி பேசி இருந்தோம். மேலும் எதிரணியில் வந்து அமர்ந்திருப்பவர்களை நம்பாதீர்கள் என்று கூட தலைப்பிட்டடு சில வாரங்களுக்கு முன் செய்தி சொல்லி இருந்தோம்.

குறிப்பாக விமல் மிகப் பெரிய சந்தர்ப்பவாதி என்று நேரடியாகவே சொல்லி இருந்தோம். அதே போன்றுதான் சு.கட்சியினர் நடத்தையும் என்பது நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ராஜபக்ஸாக்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று சொன்ன அதே ஆட்களே மீண்டும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுத்திருக்கின்றார்கள்.

நாட்டில் உச்ச கட்ட அரசியல் களவுகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருப்பதுடன், மக்கள் என்னதான் தூய்மையான அரசியலுக்காக தெருவில் இறங்கிப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தாலும் உச்ச கட்ட டீல்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதனைத் தான் சில தினங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த இரு விடயங்களை பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம். முதலில் இது வரை நம்மை ஆட்சி செய்த தலைவர்கள் எமது பணத்தை எந்தளவுக்குக் கொள்ளையடித்திருக்கின்றார்கள், அந்தப் பட்டியலில் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

பொய் பேசும் வலயம்!

வழக்கமாக போலியான தகவல்களை அல்லது ஒருவருக்கு சேறுபூசுகின்ற அரசியல் செய்வதாக இருந்தால் அந்தக் கதைகளைச் சந்தைப்படுத்தும் மத்திய நிலையம் நமது பாராளுமன்றம் என்பது கட்டுரையாளனின் தனிப்பட்ட கருத்து. காரணம் நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பொய்களையும் பேசலாம் என்ற சலுகை இருக்கின்றது அதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதம் என்று வேறு ஒரு பெயரும் இருக்கின்றது.

இதற்குள் மறைந்து கொண்டுதான் உறுப்பினர் சேறு பூசும் அரசியலை வெற்றிகராமாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் நமது நாடாளுமன்றம் மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிலை வேறூன்றி இருக்கின்றது. அங்கு பேசுகின்ற கருத்துக்களுக்கு எவரும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

இப்படியான காரணங்களினால் சுதந்திரமாக பொய் பேச அனுமதிக்கப்பட்ட வலையம் என்று நாம் எமது நாடளுமன்றத்தக்கு ஒரு புதுப் பெயர் கொண்டு அழைக்க முனைகின்றோம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒருவர் இப்படியான பொய்யான தகவல்கை பேசினால் – எழுதி இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நஷ்ட ஈட்டு வழக்கைத் தொடர முடியும்.

எனவேதான் நாமும் என்னதான் கடுமையான வார்த்தைகளை செய்திகளைப் சொன்னாலும் அவை விடயத்தில் உள்ள சட்டச் சிக்கல்கள்-நெருக்கடிகளை அறிந்து இன்று வரை லாவகமாக வார்த்தைகளை நகர்த்திக் கொண்டிருகின்றேம்.

அது போன்றுதான் ஜேவிபி.யினரும் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாகச் சொல்லி இருக்கின்றார்கள் இந்தக் கொள்ளைகள் பற்றிய தகவல்கள் சிலவற்றை அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்பு பேசி இருந்தார்கள்.

இப்போது ஒரு நீண்ட தமிழ்ப் படம் பார்ப்பது போல ஊடக சந்திப்பை வைத்து இந்த தகவல்களை மக்கள் மயப்படுத்தி இருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த செய்திகளை அவர்கள் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு மறைந்து கொண்டு கற்களை எறியவில்லை. இங்கு பெயர் கூறப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிவு செய்து கேடிஸ்வரராகவும் வாய்ப்பும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றது.

அந்த ஊடகச் சத்திப்புக்கு 160 வரையிலான கோவைகளை மட்டுமே எடுத்து வந்திருந்தார்கள். இதுபோன்று மொத்தமாக 540 கோவைகள் தம்மிடம் இருப்பதாகவும். இன்னும் பல நூறு கோவைகள் ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்; அங்கு அவர்கள் தெரிவித்தார்கள்.

தாமே கோவைகளைத் தெரிவு செய்து எடுக்காது அழைப்பப்பட்ட விஷேட பிரமுகர்களை வைத்தே அவற்றை எடுத்து தகவல்களை அறிமுகம் செய்தனர். தாமே கோவைகளை எடுத்துப் படித்தால் இலக்கு வைத்துத் தாக்குவதாக விமர்சனம் வரும் என்பதால் இந்த உத்தியைக் கையாண்டதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார்கள்.

ஜேவிபி.னர் தம்மிடம் உள்ள கேவைகளிலில் ஒட்டுமொத்த ராஜபக்ஸாக்கள் மனைவிமார் அவர்களது பிள்ளைகள் உறவினர்கள் அவர்களின் தேவைக்காக செயல்பட்ட அதிகாரிகள் படைத் தரப்பினர் இருப்பதாக கூறுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக தாம் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதி மன்றங்களுக்குப் போனாலும் அரச அதிகாரிகளும், பொலிஸ் மற்றும் ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசமான நீதிபதிகள் அந்த வழங்குகளை முறையாகக் கையாளாத காரணத்தால் பல வழக்குகள் குப்பையில் இருக்கின்றன.

பல வழக்குகளில் குற்றம் நிருபனமானாலும் குற்றவாளிகளுக்கு பகிரங்க மன்னிப்பு அல்லது வழக்கிலிருந்து விடுதலை என்பனவும் கிடைத்து வருகின்றன என்பது அவர்களது குற்றச்சாட்டுக்கள்.

அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவரது குடும்பம், எதிர்க் கட்சித் தலைவர் சஜித், பினை முறி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில், ரவி, மகோந்திரன் அதற்காக ‘புட்நோட்’ போட்டவர்கள். காசு வாங்கிக் கொண்டு புத்தகம் எழுதியோர் என்ற நீண்ட பட்டியலும் அங்கு உச்சரிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களாக பீ.பி. ஜயசுத்தர, அஜித் நிவாட் கப்ரால் அவன்கார்ட் நிசங்க சேனதிபதி, திரு நடேஷன், நிரூபமா நடேஷன மற்றும் பெரும் வர்த்தகப் புள்ளிகள் என்று இந்தப்பட்டியல் தற்போது ஜேவிபி கையில் இருக்கின்றது.

அவர்கள் கருத்துப்படி இப்படிக் கொள்ளையடித்த பணத்தை மீட்டு மக்களுக்கு வழங்குவதாக இருந்தால் அது தமது தலைமையில் அமைகின்ற ஒரு அரசால் மட்டுமே முடியும் என்பது அவர்கள் வாதம். அதில் ஒரு நியாயமும் இருக்கின்றது.

ஒட்டு மொத்த முன்னணி அரசியல்வாதிகள் அனைவரினதும் பெயர்களும் பட்டியலில் இருக்கின்றது. அதே நேரம் நமக்கு எதிராக இப்படி மக்கள் பணத்தைக் கொள்யடித்த குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை நாடாளுமன்றத்துக்கு வெளியே நம்மைப் போன்று சந்திக்குக் கொண்டுவருமாறும் அவர்கள் ஏனையயோருக்கு சவால் விடுகின்றார்கள்.

ஜேவிபி இந்த ஊடகச் சந்திப்பை நடத்திய சில மணி நேரங்களில் அதற்குப் பதில் கொடுத்து மறுப்புத் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. நாமலும் நமது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துப் பதில் சொல்லி இருந்தார்.

வசந்த சமரசிங்ஹ சொல்வதென்ன!

இது பற்றி நாம் ஊழலுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளி வசந்த சமரசிங்ஹவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் அப்படியும் பேசுவார்கள் அதற்கு மேலும் பேசுவார்கள். ஏன் நாம் அவர்களின் நாமத்துக்குக் கெட்ட பெயரை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றோம் என்று எம்மீது வழக்குப் பதிவு செய்து ஒட்டு மொத்தமாக எம்மை அவர்களுக்குத் தண்டிக்க முடியுமே? ஏன் அப்படிச் செய்யாமல் மக்களை ஏமாற்ற இப்படி நாடகங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று அவர் திருப்பி நம்மிடத்தில் கேள்வி எழுப்புகின்றார்.

நாட்டில் மிகப் பெரிய நிதி நெருக்கடி இருக்கின்றது. நமது அரசியல்வாதிகள் ரில்லியன் கணக்கில் கொள்ளையடித்திருக்கின்றார்கள் என்று நாம் வழக்குகளை பதிந்துள்ளோம். இன்னும் பல நூறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றோம். அரசு, சட்டத்துறை, காவல் துறை, உளவுத்துறை என்பனதான் இது பற்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்குத்தான் அவர்களுக்கு சம்பளமே வழங்கப்படுகின்றது. ஆனால் அரசும் அதிகாரிகளும் இன்று கள்வர்களை எல்லா வழிகளிலும் பாதுகாக்கும் முயறச்சியல்தான் தற்போது ஈபட்டிருக்கின்றார்கள். இதுதான் யதார்த்தம்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றதில் அணுரகுமார அமெரிக்க டைம்ஸ் மஹிந்த ராஜபக்ஸ பற்றிய எழுதிய கட்டுரையில் பல பில்லியன் ஊழல் பற்றி சுட்டிக் காட்டிய போது அதற்கு தான் உடனே நடவடிக்கை எடுக்க சட்டத்தரணிகளிடத்தில் கட்டளையிட்டிருப்பதாக அங்கு பதில் சொல்லி இருந்தார் மஹிந்த.

ஆனால் அந்த செய்தி வெளி வந்து பல வருடங்கள் ஆகியும் இன்று வரை அந்தப் பத்திரிகைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரிந்ததே.

இந்த செய்தியையும் நாம் பல முறை இங்கு சுட்டிக் காட்டி இருந்தோம். இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடிகின்றது.? இது வரை அதிகாரத்தில் இருந்த இரு தரப்பினரும் குற்றவாளிகளாக இருப்பதால் அவர்கள் ஒருவரை ஒருவர் காப்பற்றி கொள்ளும் முயற்ச்சியில்தான் இருக்கின்றார்கள்.

பிணைமுறி விவகாரத்தில் மைத்திரி விசாரணைக் குழுவை நியமித்தார். அதற்கு என்ன நடந்தது. அதிலிருந்து 106 பக்கங்களக் காணவில்லை. அது ஏன்.? 3250 மில்லிய ரூபாய்களை 26 வங்கிகளினூடாக அர்ஜூன் அலேசியஷ் மஹேந்திரன் பகிர்ந்திருக்கின்றார். ரவி கருணாநாயக்க 165 மில்லியன், கொழும்பு மேயர் ரோசி சேனநாக்க 44 இலட்சம், தயாசிரி 22 மில்லியன் ரூபா என்று 102 அரசியல்வாதிகளின் பெயர்களை இந்தப் பட்டியலில் இருக்கின்றது.

165 காசோலைகள் ஊடாக இந்தக் கொடுப்பனவுகள் நடந்தது என்று அவர் துல்லியமாகத் தகவல் தருகின்றார். இதற்கான சாட்சிகளும் நீதி மன்றத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் அடித்துக் கூறுகின்றார் வசந்த சமரசிங்ஹ. சிறுபான்மைத் அரசியல்வாதிகளின் பெயர்களும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் வியாபாரிகளின் பெயர்களும் இருக்கின்றதா என்று கேட்டதற்கு சரியான நேரத்தில் அது பற்றிய தகவல்களைத் தருகின்றோம் என்றார் அவர்.

நடந்த பண மேசடியில் நமது கைகளில் சிக்கிய தகவல்கள் மட்மே இவை சர்வதேச உடன்பாடுகள் கொடுக்கல் வாங்கலகள் ஊடக இன்னும் எப்படியெல்லாம் நடந்திருக்க முடியும் என்று பொது மக்கள் ஊகித்துக் கொள்ள முடியும். இப்படிப் பார்க்கின்ற போது நாம் எப்போதோ சிங்கப்பூரைக் கடந்த போய் இருக்க வேண்டும் என்ற கதை யதார்த்தமானது.

நாடாளுமன்றக் கூத்துக்கள்

நாம் முன்பு சொல்லி இருந்தது போல ஆளும் தரப்பிலிருந்து எதிரணிக்கு வந்தவர்களை நம்பி ஏமாறாதீர்கள் என்ற செய்தியில் அவர்கள் கபடத்தனமாக நடந்து கொள்வது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்ததால் முன் கூட்டிச் சொல்ல முடிந்தது.

மக்கள் நெருப்பாக இருக்கின்ற போது அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதனைத்தான் மக்கள் இப்போது புரிந்து கொள்ள வேண்டும். எப்படியாவது இன்றும் சில வருடங்களுக்கு இந்த அரசை வைத்துப் பிழைப்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு.

மேற்சொன்ன பணக் கொள்ளைகளிலில் இவர்களது பெயர்கள் அடங்கி இருப்பதும். பலயீனமான ராஜபக்ஸாக்களை அதிகாரத்தில் தொடர்ந்து வைத்து அவர்கள் கையில் இருக்கின்ற பெரும் தொகையாக பணத்தை பிடுங்குகின்ற அரசியல்தான் தற்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

அரசியல் கொள்கை கோட்பாடு மக்கள் விருப்பு வெருப்புகள் எல்லாம் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதிர்வரும் காலங்களில் நாம் நாடாளுமன்றத்துக்கு வர மாட்டோம் என்பதனைப் புரிந்து கொண்டுதான் அவர்கள் இப்படி நடந்து கொள்கின்றார்கள்.

இந்த நாடாளுமன்ற அமர்வில் பல நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பணம்தான் தீர்க்கமான சக்தியாக இருக்கப் போகின்றது என்பது நமது வாதமாக இருந்தது. எனவே பல்டிகளுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் சொன்னோம். இன்றும் பணமும் அவர்களும்தான் ஜெயித்திருக்கின்றார்கள்.

கடந்த 3,4ம் திகதிகளில் ஹேமா பிரேமதாச இப்படி இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகச் சந்திப்பில் விமல் வீரவன்ச பகிரங்கமாகப் பேசினார். இது அபாண்டம் எனில் பாராதூரமான இந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது ஹேமாவுக்கு பல மில்லின் நஷ்டஈட்டு வழக்குப் போட முடியும்.

அதே போன்றுதான் 2015 ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிக்கு எதிராக திஸ்ஸ அத்தநாயக்க வேலை பார்த்தார் என்பதும் தெரிந்நதே. இது அன்று சஜித் பார்த்த சதி வேலை என்பது தெரிந்தது. எனவேதான் அந்த வழக்கிலிருந்து திஸ்ஸ விடுதலையானார். நமது அரசியல் களம் எந்தளவுக்கு அசிங்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்..

நன்றி: 08.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பிரதம விருந்தினராக ஷிரந்தி ராஜபக்க்ஷ; எழுந்த சர்ச்சை!

Next Story

கோட்டாபயவிற்கு தொடர் அதிர்ச்சி