தேர்தல் வரைபடங்கள் எல்லாம் சவக் குழியில்!

Scene with group of people, walking with flags to elections. Crowd of women and men at a demonstration. Concept for election campaign, voting theme vector background.

-நஜீப் பின் கபூர்-

election indai

பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்க மக்கள் உள்ளூராட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேர்தலுக்கு இரு தினங்கள் முன்மொழியப் பட்டாலும் (ஏப்ரல் 9, 25) திகதிகளில் தேர்தல் இல்லை என்று முடிவாகி அந்த குறிப்பிட்ட நாட்களும் இன்று கடந்து போய் இருக்கின்றன. அதே போன்று எதிரணியில் இருக்கின்ற சஜித் மற்றும் அணுரகுமார போன்றவர்களும் இந்தத் தேர்தலில் தமக்கு இருக்கின்ற நல்ல வாய்ப்பை பரீட்சித்துப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பதவியில் இருக்கின்ற ரணில்-ராஜபக்ஸாக்கள் இந்தத் தேர்தலுக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்.

தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள்.! இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலா என்ற ஒரு கேள்வியும் தேர்தலை நடாத்துவதற்கு எங்கே பணம் இருக்கின்றது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் மொட்டுக் கட்சி தேர்தலுக்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது போல ஒரு நாடகத்தை ஆடிக் கொண்டிருந்தது. இன்றும் அவர்கள் நாமும் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று பேசி வருகின்றார்கள். இது அப்பட்டமான நாடகம் என்று நாம் கடந்த காலங்களில் நமது வாசகர்களுக்கச் சொல்லி வந்திருக்கின்றோம். தமது வங்குரோத்து நிலை காரணமாக தேர்தலுக்கு ஆளும் தரப்பினர் அஞ்சுகின்றார்கள்.

அடுத்து, இல்லை மாகாணசபைத் தேர்தல்தான் முந்தி வருகின்றது. அதற்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எனவே அதனைத்தான் முதலில் நடத்த வேண்டும் என்ற ஒரு கதையும் சொல்லப்பட்டு வந்தது. தமிழ் அரசியல் கட்சிகளும் இது விடயத்தில் ஆட்சியாளர்களிடத்தில் கோரிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தன. அத்தோடு பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் வருகின்றது என்று ஆளும் எதிரணியினர் கற்பனையில் கதைகளை சொல்லிக் கொண்டு வந்தனர். இவ்வாறான செய்திகளை ஆளும் தரப்புக்கு ஆதரவான ஊடகங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டு வந்தன. இது மக்களின் கவனத்தை திசை திருப்பி மறைமுகமாக அரசுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கின்ற ஒரு பரப்புரையாகத்தான் இருந்த வந்தன.

சமூக ஊடகங்கள் பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடும் பாணியில்தான் இந்த தேசிய ஊடகங்களும் செய்திகளை இன்றும் சொல்லிக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான மக்கள் இவ்வாறான கதைகளை நம்பி கொண்டு அதனை காவிக் கொண்டு போய் அடுத்தவர்களிடத்திலும் சந்திகளிலும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இன்று பொரும்பாலான தேசிய ஊடகங்கள்  சமூக ஊடகங்களைப் போல்தான் பொறுப்பில்லாது தான் சார்ந்திருக்கின்ற கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால்தான் பெரும்பாலான குடிமக்கள் ஏமாந்து கொண்டு வருகின்றார்கள்.

எமக்குத் தெரிந்த அரசியல் கணக்குகளின் படி இதன் பின்னர் நாட்டில் திட்டமிட்ட நிகழச்சி நிரல் படி எந்தத் தேர்தல்களும் நடக்கமாட்டாது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை வெற்றிகரமாக ஜனாதிபதி ரணிலும் ஆளும் மொட்டுக் கட்சியினரும் முறியடித்ததால் அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இதற்கு முன்னார் ரணில் மாமானார் தேர்தல்களைத் தள்ளிப்போட மேற்கொண்ட திருகுதாளங்களை இந்த நாட்ட மக்கள் பார்த்து வந்திருக்கின்றார்கள். ரணில் இதனை விட பல மடங்கு மோசமாக தேர்தல்கள் விவகாரத்தில் நடந்து கொள்வார். இதனைப் பொது மக்கள் பொருந்திருந்து பார்ப்பார்கள்-சந்திப்பார்கள்.

ஜனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க தனக்கு ஆதரவான ஆட்சியாளர்கள் என்னதான் மக்கள் விரோதிகளாகவும் ஜனாநாயக விரோதிகளாகவும் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயலாற்றுவார்கள். அதனை இதற்கு முன்னரும் நாம் ஒரு முறை சுட்டிக் காட்டி இருந்தோம். அதனை மீண்டும் ஒரு முறை சுட்டடிக் காட்டலாம் என்று கருதுகின்றோம். எகிப்தில் இஸ்லாமிய சகோதாரத்துவ அமைப்பைச் சேர்ந்த முர்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பதவிக்கு வந்தாலும் அமெரிக்கவும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் சில மாதங்களுக்குள்ளே அந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு தமக்கு விசுவானமான ஒருவரை பதவியில் அமர்த்தினார்கள். இது போன்று பரவலாக உலகில் நடந்து வந்திருக்கின்றது.

இலங்கையிலும் அப்படியான ஒரு நிலைதான் இருந்து வருகின்றது. இன்றைய ஜனாதிபதி ரணில் மேற்கத்திய விசுவாசியாகவும் அமெரிக்க ஆதரவுப் போக்குடையவராகவும் இருப்பதால் நாட்டில் ஜனநாயகத்தைப் பற்றி மேற்கத்திய நாடுகள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் இந்த ரணிலுக்கு ஆதரவு கொடுத்து அவரை பதவில் தொடர்ந்தும் வைத்திருக்கவே விரும்புவார்கள். ராஜபக்ஸாக்கள் அமெரிக்க விரோதிகளாகவும் சீன ஆதரவாலர்களாகவும் கடந்த காலங்களில் செயலாற்றி வந்தாலும் அவர்கள் சீன விவகாரத்தில் தற்போது அடக்கி வாசிக்கின்றார்கள் என்பதைப் பார்க்க முடிகின்றது.

அதிகாரத்தில் இருக்கின்ற போது முடியுமான மட்டும் சீனாவின் உதவியை இவர்கள் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதன் ஊடாக நிறையவே சொத்துக்களையும் குவித்துக் கொண்டர்கள் என்ற பலமான குற்றச்சாட்டுக்கள் இன்றும் இருந்து வருகின்றன. அத்துடன் அந்தளவுக்கு இன்று கொள்ளையடித்து பணத்தை சூரையாட முடியாத ஒரு நிலையும் நாட்டில் இருக்கின்றது. மேலும் பெற்ற கடனைத் திருப்பிப் பெருவதாற்கான சீனாவுக்கான காலக் கெடுவும் நீடிக்கப் பட்டிருப்பதால் சீனா இன்று ஆட்சியாளர்கள் மீது திருப்தி இல்லாத ஒரு நிலையிலும் இருக்கின்றார்கள். இதனால் சீனாவில் இருந்து முன்பு போல அரசியல்வாதிகள் இலாபமீட்டி வருமானம் ஈட்ட முடியாத நிலை தோன்றி இருப்பதால் இன்று மொட்டுக் கட்சியினரும் சீனாவிலிருந்து விலகி வருகின்ற ஒரு நிலையும் தோன்றி இருக்கின்றது.

நாம் தலைப்பில் சொன்ன அனைத்துத் தேர்தல் வரை படங்களும் இன்று சவப் பெட்டியில் என்ற விவகாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல் கதை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஏற்கெனவே முடிவுற்று விட்டதால் இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பார்ப்போம். முதலில் வர இருப்பது ஜனாதிபதித் தேர்லாக இருக்கின்றது. இதனை ரணில் முன்கூட்டி நடத்துவார் என்று சில கருதுகின்றார்கள். அத்துடன் ஆளும் தரப்பு வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில்தான் என்றும் அவருக்கு விசுவாசமானவர்கள் கதைத்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் நிச்சயமாக ஆளும் தரப்பு வேட்பாளராக ரணில் ஒரு போதும் வரமாட்டார். அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மி. இப்போது எந்தத் தேர்தல்களும் கிடையாது என்பதால் அவரது பெயரை உச்சரித்து அதில் இலாபமீட்ட சிலர் முனைகின்றார்கள் இது ஒரு அரசியல் வியாபாரம் அவ்வளவுதான்.

ஆளும் மொட்டுக் கட்சி நிச்சயமாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் வந்தால்  வேட்பாளர் ஒருவரைக் களத்தில் நிறுத்துவார்கள். ஆனால் தற்போதய நிலையில் அப்படி யாரைக் களத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவருக்கு வாய்ப்பு கிடையாது என்பதால் இந்த ஜனாதிபதத் தேர்தலை ரணிலைப் போன்று மொட்டுக் கட்சிக்காரர்களும் தற்போதைக்கு விரும்ப மாட்டார்கள். எனவேதான் குறிப்பிட்ட காலத்திலும் இந்த ஜனாதிபத் தேர்தல் தற்போதய அரசியல் பின்னணயில் நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நாம் உறுதியாகச் சொல்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்து கடும் போக்காளர்கள் அதிகாரத்துக்கு வந்தால் நிச்சயம் நாம் சிறைக் கூடங்களில்தான் போய் இருக்க வேண்டி வரும் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான அணியினரும் சிறையில் தள்ளும் கதையைப் பகிரங்கமாகவே தற்போது சொல்லியும் வருகின்றார்கள். எனவே தமக்கு வாய்ப்பில்லாத இந்தத் தேர்தலை அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வைக்காமல் ரணில் மாமனார் ஜேஆர் செய்தது போல அல்லது அதனை விட பல மடங்கு ஏன் வன்முறையாகக் கூட ரணில் இந்த தேர்தலை தனது ஆயுள் வரையும் தள்ளிப் போடக் கூடிய ஒரு ஆபத்தும் நெருக்கடியும் இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். அப்போது இன்று தேர்தலை வைக்காமல் இருப்பதற்காக சொலுக்கின்ற நொண்டிக் காரணங்களை இவர்கள் தொடர்ந்தும் சொல்ல அதிக வாய்ப்பு இருக்கின்றது.

பொதுத் தேர்தல் விவகாரத்தை பார்த்தால் இதே நிலைதான் காணப்படுகின்றது. அதிலும் தமக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தால் அதனையும் பதவியில் இருக்கின்றவர்கள் ஒரு போதும் நடத்தமாட்டார்கள். விவகாரத்தை சர்வதேத்தின் அவதானத்துக்குக் கொண்டு வந்தாலும் நாம் முன்சொன்ன நியாயங்களின் படி அவர்களும் அதனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அதே நேரம் இந்த விவகாரம் சர்வதேத்தின் அவதானத்துக்கு வருவதற்கு நெடும் காலம் எடுக்கும். தற்போது ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை விவகாரங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்ற பாணியில்தான் அது அமையும். அதனால் இந்த அராஜக ஆட்சி தொடர்ந்தும் நாட்டில் நீடிக்க அதிக வாயப்புக்கள் இருந்து வருகின்றது.

பொதுத் தேர்தல் நடந்தால் அதிலும் மொட்டுக் கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வாய்ப்புக்குகள் மிக மிகக் குறைவு. ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வது கூட கல்லில் நார் உரிக்கின்ற காரியமாகத்தான் அவர்களுக்கு இது அவர்களுக்கு இருக்கப் போகின்றது. இதனால்தான் நாட்டில் எந்தத் தேர்தல்களும் கியைடாது தேர்தல் வரைபடங்கள் அனைத்தும் இன்று சவப் பொட்டியில் வைக்கபட்டிருக்கின்றது. அதற்கு எப்படித்தான் மீண்டும் உயிர் கொடுக்கு முடியும் என்ற வழி தெரியாது கட்சிகளும் மக்களும் திண்டாடிக் கொண்டு வருகின்றார்கள். ஒருவகையில் மக்கள் மட்டும் அவர்களுக்காக பேசுகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் நாட்டில் எந்த தேர்தல்களும் கிடையாது தேர்தல் வரைபடங்கள் அனைத்தும் இன்று சவப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கின்றது என்று நாம் இங்கு பதிந்திருக்கின்றோம்.

2023 LG Election: postal voting applications accepted from tomorrow

ரணிலுக்கு விசுவாசமானவர்கள் அவர் இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்காவது அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் ரணில் 2048 அதாவது நாடு சுதந்திரம் பெற்று நூற்றாண்டு நிறைவடைகின்ற போதுதான் அதாவது இன்னும் 25 வருடங்களில் நாடு உலகில் மிகவும் செல்வந்த நாடாக மாற்றியமைக்கப்படும் எனக் கூறி வருகின்றார்கள். அப்போது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளாக இருக்கின்ற நாடுகளுக்கு நாம் கடன்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று ரணில் சில நாட்களுக்கு முன்னர் பேசி இருந்தார்.

இந்தக் கதைகளை எல்லாம் மக்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது. ரணில் வயது அவரது ஆயுள். இந்தக் கதையிலுள்ள நம்பகத் தன்மை யதார்த்தங்கள் நகைச்சுவை என்பவை பற்றி குடிமக்கள் மீண்டும் மீண்டும் பல முறை சிந்தித்துப் பார்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது நமது ஆலோசையாக இருக்கின்றது. ஆனால் சஜித் தரப்பில் இருக்கின்ற பலர் குறிப்பாக சிறுபான்மை அரசியல்வாதிகள் ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமான உறவில் இருப்பதும் இந்த நம்பிக்கை காரணமோ அல்லது அதிகார ஆசனத்தில் இருப்பதால் பிழைத்துக் கொள்ளும் நோக்கிலோ தெரியாது.

With Diluted Powers, the Election Commission Faces a Daunting Task – Groundviews

இதற்கிடையில் புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பாக விடப்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள கடந்த 25ம் திகதி வரை எல்லை நிர்ணயக் குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  காலக்கெடு கொடுத்திருந்தார். ஆனால் இந்த கட்டுரையைத் தயாரிக்கின்ற கடைசி நிமிடம் (28.04.2023) வரை சிறுபான்மைக் தலைவர்கள் தமது திருத்தங்களை அங்கு அனுப்பிவைக்கவில்லை என்று உறுதியாகத் தெரிகின்றது. மு.கா.தலைமையகத்திலிருந்து நம்முடன் தொடர்பு கொண்ட ஒருவர் இது பற்றி தகவலை நம்மிடம் கேட்டார்.

நாம் காலக் கெடுதானே கடந்த 25ல் முடிந்து விட்டதே என்று சொன்ன போது அது பற்றி அவர் எந்த கருத்துக்களையும் எமக்குத் தெரிவிக்கவில்லை. உங்களிடம் இருக்கின்ற தகவல்களை நமக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்க, நாமும் சில தகவல்களை வட்ஸ்அப் மூலம் அவருக்கு அனுப்பி வைத்திருந்தோம். இதுதான் சிறுபான்மை உரிமைகளுக்காக கட்சி வைத்திருப்போரின் நிலையாக இருந்து வருகின்றது.

நன்றி: 30.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மே தினப் பலப்பரீட்சை: 2023 !

Next Story

புகழஞ்சலி:  யாவரையும் மகிழ்வித்த மனோபாலா!