தேர்தல் பற்றிய கதைகளும் சந்தேகங்களும்!

-நஜீப் பின் கபூர்-

மாகாண சபைத் தேர்தல்கள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் தற்போது பதவியில் இருக்கின்ற அரசாங்கம் தேர்தல் காலங்களில் இந்த மாகாண சபைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைச் செய்து வந்திருந்தனர். கடும் போக்கு இனவாதிகளும் இந்த மாகாண சபைத் தேர்தலுக்குத் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்து வந்திருந்தனர். இந்தியாவும் சர்வதேசமும் இந்த குறைந்த பட்ச அதிகாரங்களையுடைய மாகாண சபைத் தேர்தல்கள் நடக்;காமல் இருப்பது பற்றி அவ்வப்போது கேள்விகளைக் கேட்டதாலும் அதற்கு ஏதோ அரசு நொண்டிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.

இந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அலுத்தங்களுக்கு மறுபுறத்தில் கொரோனா முட்டுக் கட்டையாக இருந்தும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு மிகச் சிறிய காரணி மட்டுமே. யதார்த்தம் என்ன வென்றால் இந்த அரசுக்கு மாகாண சபை விடயத்தில் நாட்டம் இல்லாமல் இருந்ததுதான் தேர்தல் நடத்தப்படாமைக்கு முக்கிய காரணம். அரசு நாடி இருந்தால் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தேர்தல்களை நடத்தி வடக்குத் தவிர்ந்த அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்றி இருக்க வாய்ப்பு இருந்தது. அதிகாரத்தில் இருக்கின்ற ராஜபக்ஸாக்களில் பெரும்பான்மையினர் தேர்தல் வரை படத்தை சுருட்டி மூளையில் போட்டு விட்டார்கள்.

ஆனால் பசில் ராஜபக்கஸ தேர்தலை நடாத்தி மாகாண சபைகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டங்களுடன் இருந்தார் என்பது நமக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த செய்தி. இந்த அரசு பதவிக்கு வந்த துவக்க காலத்தில் கடும் போக்கு இனவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் ஜனாதிபதி ஜீ.ஆர். இருந்து வந்தார். இதனால் தேர்தல் பற்றிய தனது கருத்து விலை போகாது என்று அறிந்திருந்த பசில் அன்று அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வகிக்காத காரணத்தால் தேர்தல் விடயத்தில் மௌனம் காக்க வேண்டி நிலை இருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் தொடர்ப்பில் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஏற்கெனவே இருந்த விகிதசார முறையில் தேர்தலை நடத்த முடியாத சட்டச் சிக்கல்களும் இருந்தன. அந்தத் திருத்தங்களின் படி தேர்தலை நடத்த சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல ஆளும் தரப்பிலுள்ள சிறு கட்சிகள் கூட விரும்பவில்லை. பேரின சமூகத்துக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒரு பிழையான கருத்தையே ஆளும் தரப்பு பரப்பி இருந்தது.

பதிமூன்றாவது திருத்தின் படி தேர்தல் நடாத்தினால் அது தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான கோஷத்துக்கு வலு சேர்த்து விடும் என்பது ஆளும் தரப்பு கடும் போக்காளர் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கின்றது. இதனால்தான் மாகாண சபைத் தேர்தல் பற்றி அவ்வப் போது பேச்சுக்கள் வந்த நேரத்தில் அதற்கு சரத் வீரசேக்கர போன்ற ஜனாதிபதிக்கு மிகவும் விசுவாசமான ஆட்கள் தொடர்ச்சியாகத் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு அந்தக் கதைகளுக்கு அவ்வப் போது முற்றுப்புள்ளி வைத்து தேர்தல் பற்றிய கதைகளை அடக்கி வைத்திருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவை எல்லாம் கடந்த ஒரிரு வருடங்களுக்கு முந்திய கதை.

இப்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்ப்பில் புதிய கதை என்னவென்று பார்ப்போம். பல பேர் தேர்தல் வருகின்றது வருகின்றது. இந்திய அலுத்தம் இதற்குக் காரணம் என்று சொல்லி வந்தாலும் அந்தக் கதைகள் பற்றிய நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்து வந்தது. இந்த முறை ஆளும் தரப்பு நிதி அமைச்சரும் ராஜபக்ஸக்களின் அரசியல் கொள்கை வகுப்பாளர் என்று கருதப்படுகின்ற பசில் மாகாண சபைத் தேர்தல் மார்ச்சுக்கு முன்னர் வருகின்ற என்று சொல்லி இருப்பதால் அது பற்றி இப்போது எல்லா அரசியல் வட்டாரங்களிலும் தேர்தல் பற்றிய விவாதங்கள் துவங்கி இருக்கின்றது.

எல்லோரும் தேர்தல் வருகின்றது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் இந்த பசில் அறிவிப்புக் குறித்து எமக்கு நிறையவே சந்தேகங்கள் காணப்படுகின்றன. நிதி அமைச்சர் தேர்தல் பற்றிய பிரகடணத்தை வெளியிட்ட அடுத்த நாள் ஜனாதிபதி ஜீ.ஆர். அரசியலமைப்புக்குப் பின்னர்தான் தேர்தல் என்று ஓரிடத்தில் சொல்லி இருக்கின்றார். இப்படி ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் முன்னுக்குப் பின் முரனாக பேசுவது தேர்தல் வரும் ஆனால் வராது என்று என்ற கதை மாதிரிதான் இந்தக் கதையும் இருக்கின்றது என்று சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

உண்மையில் தேர்தலை அரசு நடாத்த விரும்பினால் புதிய முறையில் தேர்தல் நடக்க வேண்டும். அப்படி வட்டார முறையில் தேர்தலை நடாத்துவதாக இருந்தால் தேர்தல் வட்டாரங்களை புதிதாக நிர்ணயம் செய்ய வேண்டி இருக்கின்றது. இதற்கு நீண்ட காலம் எடுக்கும். தேர்தலை பழைய முறையில் அதாவது விகிதாசார முறைப்படி நடாத்துவதாக இருந்தால் அதற்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதலைப் பெற வேண்டி இருக்கின்றது. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துப்படி சாதராண பெரும்பான்மையுடன் ஒரு பிரேரணையை கொண்டு வந்து தேர்தலை நடாத்த முடியும் என்பது அவர் வாதம்.

சரி மூன்றில் இரண்டு பெரும்பான்மை தான் அரசுக்குத் தேவை என்று வந்தாலும் அதற்கு தேவையான ஆதரவை எதிர்க் கட்சிகள் வழங்கத் தயாரானவே இருக்கின்றது. எனவே அதில் பெரிய சிக்கல்கள் ஏதுவும் இல்லை. ஆனால் ஆளும் தரப்பு முக்கியஸ்தார்கள் தூய்மையான மனதுடன்தான் இந்த தேர்தல் பற்றிய கதைகளைச் சொல்லுகின்றார்களா என்பது பெரும் சந்தேகம். இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும்.

ஒரு புறத்தில் இந்திய மற்றும் சர்வதேச அலுத்தங்களினால்தான் தேர்தல் விரைவாக வருகின்றது என்ற கருத்தை எமக்கு ஜீரணிக்க முடியாதிருக்கின்றது. அண்மையில் இங்கு வந்த இந்திய வெளிவிவகார செயலாளர் தேர்தல் பற்றி நாம் மட்டும் அலுத்தம் கொடுத்தால் போதாது இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று இதற்கான அலுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தரப்பினருக்கு உபதேசம் பண்ணி விட்டுப் போதனதாக ஒரு தகவல். அந்தத் தகவலை வைத்துப் பார்க்கின்ற போது தேர்தல் என்ற காய் இந்திய கல்லடித்தும் இன்னும் கானியவில்லை என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

அரசுக்கு எதிராக மக்களின் கோபம் உச்ச கட்டத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் சொன்னபடி தேர்தலை ராஜாக்கள் வைப்பார்களா என்றும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. ஆளும் கூட்டணிக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. எனவே இந்த நேரத்தில் தேர்தலுக்கு ஆளும் தரப்பு போகுமா? என்றும் நாமக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆளும் தரப்புக் கூட்டணிக் கட்சிகளுடைய கருத்து முரன்பாடுகளைத் தீர்ப்பது பற்றி இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. ஜனாதிபதியும் தன்னை சுய விமர்சனத்துக்கு உற்படுத்தி இருக்கின்றார். என்றாலும் மக்கள் அவரை நம்பத் தயாராக இல்லை. இது அவருக்கும் தெரிந்திருக்கின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
மாகாண சபைத் தேர்தல் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆளும் கூட்டணியில் இன்று பதவியில் இருக்கின்ற சிறு கட்சிகள் தேர்தலில் அரசுக்கு எதிராண புதிய கூட்டணிகளுக்கு வருவார்களா என்று பார்த்தால் அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்பதுதான் எமது கணிப்பு. இன்று ஆளும் கூட்டணியில் அரசுக்கு எதிராக பேசுகின்ற சு.கட்சி தயாசிரி போன்றவர்கள் இதே ஆளும் கூட்டணியில் தான் அரசியல் செய்கின்ற பிரதேசத்தில் முதன்மை வேட்பாளராக களத்துக்கு வந்தாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.

அரசியல் என்றால் அப்படித்தான் என்பது நமக்கு நன்கு தெரிந்த கதைதான். அப்படித்தான் சில கட்சிகள் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற பலர் அரசு சார்பில் தீர்மானம் எடுத்து தனது கட்சிக்கு நிச்சயம் துரோகம் செய்ய இருக்கின்றார்கள் என்பதனை நாம் முன் கூட்டியே சொல்லி வைக்கின்றோம். பெருத்திருந்து பாருங்கள் காட்சிகளை.

மக்கள் என்னதான் அரசுக்கு எதிரான மன நிலையில் இருந்தாலும் பிராதான எதிர்க் கட்சியான சஜித் அணியின் பலம் ஆளும் தரப்புடன் தாக்குப் பிடிக்கப் போதுமான நிலையில் இல்லை என்பது எமது வலுவான கருத்து. எனவே வாய்ப்பை சஜித் அணி தனக்கு ஏற்றவிதமான இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. இது ஆளும் தரப்புக்கு சாதகமான நிலையாக நமக்குத் தெரிகின்றது. தெற்கில் உள்ள சிறுபான்மை கட்சிகள் வழக்கம் போல் தேர்தல் வெற்றிக்காக அரசுக்கு எதிரான அணியில் குறிப்பாக சஜித் அணியில்தான் இருப்பார்கள் என்பதனை முன் கூட்டிச் சொல்ல முடியும். சில வேலை தனித்துவக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் ஆளும் தரப்பு வெற்றி வாய்பை பிரகாசமாக வைத்திருக்க தனித்துக் களமிறங்குகின்றறோம் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றவும் ஒரு சின்ன வாய்ப்பு இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் கூட்டணிக்கு வாய்பான நிலை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் கவர்ச்சிகரமான ஆட்களை களத்தில் இறக்கி விட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் மாற்றுக் காட்சி காரர்கள் அறுவடையை சற்று அதிகரித்துக் கொள்ளவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதனையும் சொல்லியாக வேண்டும். கிழக்கில் தனித்துவக் கட்சிக்குள் இப்போதே தலைவருக்கு எதிரான கிளர்ச்சிகள் அல்லது சதிகள் துவங்கி இருக்கின்றது.

மு.கா. ஹக்கீமுக்கு இந்தத் தேர்தல் ஒரு சாவல் மிக்கதாக அமைய இடமிருக்கின்றது. கிழக்கில் இது வரை மௌராகம் படிய ஹக்கீம் விரோதிகள் இப்போது சற்ற விளித்துக் கொண்டிருப்பது போலத் தெரிகின்றது. மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் வடக்கு, மற்றும் கிழக்கில் ரிசாடுக்கு அனுதாப வாக்கு ஓரளவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே அங்கு ஹக்கீம் விரோத கூட்டணி ஒன்று பிறப்பெடுக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. சமகால அரசியலில் ஹக்கீம் அரசியல் அரங்குகளில் காணாமல் போய் இருக்கின்றார். அல்லது அடக்கி வாசிக்கின்றார் என்றதான் சொல்ல வேண்டும்.

செஞ் சட்டைக்காரர்கள் என்னதான் மக்களுக்காக குரல் கொடுத்தாலும் பேரின சமூகம் அவர்களை காவல் நாய்கள் போன்றுதான் பாவிக்கின்ற பரிதப நிலை தொடர்கின்றது. அரசுக்கு எதிரக தமது வாக்குகளைக் கொண்டு போய் கொட்டுவதற்கு ஒரு கட்சி தெற்கில் இல்லாத நிலை இன்று அங்கு காணப்படுவது துரதிஷ்டவசமானது.

நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு திடீரென்று ஊக்குவிப்புத் தொகை ஒன்றை வழக ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய இருப்பதாக ஒரு தகவல் நமக்கு வந்திருக்கின்றது. உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் தொகை நிதியை அரசு அபிவிருத்திகளுக்காக ஒதுகீடு செய்ய இருப்பதாகத் தெரிகின்றது. உள்ளாட்சி உறுப்பினர்களது மாதந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் தன் மீதுள்ள நல்லெண்ணத்தை அதிகரிப்பதற்கு மேற் கொண்டிருக்கும் முயற்சி மட்டு மல்லாது அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கான பரப்புரை என்று எடுத்துக் கொண்டாலும் அதில் தவறிருக்க மாட்டாது.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கும் காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அதனையும் அரசு சில காலத்துக்குத் தள்ளிப் போட இருக்கின்றது. எலாத்துக்கும் கொரோனா மீதுதான் இப்போது குற்றசாட்டு. ஆனால் அதில் உண்மைகள் கிடையாது. நாட்டின் இந்த நிலமைக்குக் காரணம், முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக விடப்பட்ட குறைகளும், தற்போதய அரசு பதவிக்கு வந்து நாள் முதல் மேற் கொண்ட பிழையான தீர்மானங்களுமே காரணமாகும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலை வானத்தைத் தொட்டிருக்கின்றது. மக்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றார்கள். நிதி அமைச்சர் பட்டினிச் சாவில் மக்களை இறக்க விட மாட்டோன் என்று சூளுரைத்திருக்கி;ன்றார். ஆனால் பசில் நிதி அமைச்சரானதும் பொருள்களின் விலைகள்
குறையும், மக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார் என்று நம்பிக்கைகளை வழங்கி இருந்ததும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். எல்லமே ஏமாற்று நாடகங்களாகத் தான் தெரிகின்றது.

Previous Story

வாராந்த அரசியல்

Next Story

வாராந்த அரசியல்