நஜீப் பின் கபூர்
விருப்பு வாக்கு மொட்டு அணிக்குள் மிக மோசமான மோதல்!
ஆச்சர்யமான துண்டுப் பிரசுரங்கள் வாய்தவரும் வார்த்தைகளும்!
கருணா-அலுத்கமகே-ஹரின் அதிரடிக் கருத்தால் விசாரணைகள்!
ரணிலுக்கு கொழும்பு-2கம்பஹ-2கண்டி-1களுத்துறை-1பட்டியல்-2
சரணாகதி அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் தலைமைகள்!
பொதுத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பிழையான தகவல்கள்!
கொரோனாவை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு தற்போது 2020 நமது பொதுத் தேர்தல் பற்றிய கதைகளை நாடு பேசிக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் தேர்தல் பற்றி வழக்கம்போல் பல தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம். தேர்தல் ஆணைக்குழு கடுகதி வேகத்தில் பணிகளை முடக்கி விட்டிருக்கின்றது. வைத்தியத் துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் தேர்தல் வியூகங்களை புதிய கோணத்தில் வடிவமைத்து கொரோனாவை சாடிக்குள் வைத்திருக்கின்ற பணிகளில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள் அது பற்றிதான் அவர்கள் யோசிக்கின்றார்கள்.
இலங்கை அரசியலில் இதுவரை செல்வாக்கான கட்சிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பட்டுப்போன மரங்கள் போல் ஒடிந்து நோய்வாய்ப் பட்டிருக்கின்ற நிலையில் புதிய அரசியல் இயக்கங்களான ராஜபக்ஸாக்களின் மொட்டுக்கள் அணியும் சஜித் பிரேமதாசவின் ஹலோ அணியும் பிரதான போட்டியாளர்கள் என்று கோதாவில் நிற்க்கின்றார்கள்.
தனிப்பட்ட ரீதியில் 2020 பொதுத் தேர்தல் தொடர்பில் எமக்கு எந்த ஆர்வமும் கிடையாது. சூதாட்டத்தில் தீர்மானமான ஒரு போட்டி என்ற நிலையில்தான் நாம் அதனை நோக்குகின்றோம். இல்லை கடுமையான போட்டி என்று சொல்கின்ற ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றார்கள். தமது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் இதுதான் முடிவு என்று எண்ணிக் கொண்டு கனவு காண்பதற்கு ஒவ்வொரு பிரசைக்கும் உரிமை இருக்கின்றது அவர்களின் நம்பிக்கையில் ஏன் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டும்.? ஆகஸ்ட 6ம் திகதி வரை அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.
இப்போது தேர்தலில் நிற்க்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றி சற்றுப் பார்ப்போம். இன்று பிராதான கட்சிகள் என்பது எமது கணிப்புப்படி மொட்டுக்கள் அணியும். சஜித் அவர்களின் ஹலோ அணியுமே.! பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் என்று வருகின்றபோது மொட்டுக்கள் அணி முதல் நிலையிலும் தொலைபேசி அணி இரண்டாம் நிலையிலும் இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் மூன்றாம் இடத்திற்கு தமிழ் தரப்புக்களுக்கு ஏற்கெனவே ஆசனங்கள் ஓகே. ஆனால் அங்கே சம்-விக்கி அணிகள் அதனை எப்படிப் பகிர்ந்து கொள்ளப் போகின்றது என்பதும், முஸ்லிம்கள் தரப்பில் ஹக்கீம்-ரிசாட் பலப் பரீட்சை எப்படி இருக்கப் போகின்றன! இடையில் அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ் நிலை என்ன என்பதும்தான் சிறுபான்மை சமூகங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற தேர்தல் முடிவுகாளாக இருக்கும்.
தேர்தலில் போட்டியிடுகின்ற பெரும் தொகையான கட்சிகள் தமக்கு இந்தத் தேர்தலில் எந்தவொரு ஆசனமும் கிடைக்காது என்று தெரிந்தும் பட்டியலைப் போட்டிருக்கின்றார்கள். இதனால்தான் பல இடங்களில் செங்கம்பளம்போல் வாக்குச் சீட்டு நீண்டு இருக்கின்றது. மேலும் தேர்தலில் போட்டி போடுகின்ற பலருக்கே தான் எந்தக் கட்சியில் வேட்பாளராக இருக்கின்றேன் என்று தெரியாது. எனவேதான் அவ்வாறான கட்சிகளுக்கு வேட்பாளர் எண்ணிக்கையை விடவும் குறைவான வாக்குகள் விழுகின்றன. இதிலிருந்து வேட்பாளரே தனக்கு வேட்டுப் போடவில்லை என்பதும் தெளிவாகின்றது. இதனை இந்தத் தேர்தலிலும் நாம் பார்க்க முடியும்.
தேர்தல் தொடர்பாக புதிய விதிமுறைகள் பற்றி தினந்தோரும் நமது ஆணைக்குழுத் தாவிசாளர் ஊடகங்கள் முன் தெளிவுரைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவர் கூறுகின்ற பல தகவல்களை மக்களும் வேட்பாளர்களும் கூட எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது எமக்குக் கூடத் தெளிவில்லாமல் இருக்கின்றது. நம்முடன் நெருக்கமான ஒரு வேட்பாளர் துண்டுப் பிரசுரங்களை விநியோகிகக் கூடாது என்று மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றார் என்று நமக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். பாமர மக்களைப் போன்று படித்தவர்களும் இப்படிக் கதைவிட ஆரம்பித்திருக்கின்றார்கள். கொரோனா மற்றும் சுற்றாடல் பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. ஆனால் தேர்தல் பரப்புரைக்கான துண்டுப் பிரசுரங்களையோ செய்தித் தாள்களையோ வெளியிடக் கூடாது என்று அது எந்தக் கட்டுப்பாடுகளையும் போடவில்லை. அதனை வினியோகிக்கின்ற முறையில்தான் விதிகளைச் சொல்லி இருக்கின்றது.
அவை எல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆட்களுடன் வைத்திய ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது. கூட்டங்களை நடத்துகின்ற ஒழுங்கிலும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் கிராம மட்டத்தில் ஆணைக்குழு சொல்கின்ற விதி முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் நிகழ்வுகள் நடந்து வருகின்றது. அங்கு சில அரசியல் கூட்டங்கள் அதிகளவிலான மக்கள் எண்ணிக்கையுடன் நடந்து வருகின்றது.
அது பற்றி எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதுவும் ஆளும் தரப்புக்கு ஒரு சட்டம் எதிரணிக்கு ஒரு சட்டமா என்ற நிலையில்தான் போய்க் கொண்டிருக்கின்றது. இன்னும் பல இடங்களில் கூட்டத்துக்கு என்னதான் மக்களுக்கு அழைப்புக் கொடுத்தாலும் அங்கு எவரையும் கண்டு கொள்ள முடியாமல் இருக்கின்றது. தேர்தல் களியாட்ட அரங்கு இன்னும் வழக்கம்போல் கலை கட்டவில்லை. ஆனால் அச்சகங்களோ இரவு பகலாக வேட்பாளர்களின் பிரச்சாரப் பணிகளை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு பல இடங்களில் தேர்தல் ஆணைக்குழு விதித்த கட்டுப்பாடுகளுக்கு முரனான பரப்புரைகளுக்கான முன் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பல வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தமது பரப்புரைகளை ஏற்கெனவே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றில் அனேகமானவை மிகவும் கீழ்த் தரமானவையாகவும் முதிர்ச்சியற்றவையாகவும் இருந்து வருகின்றன. இது வேட்பாளர்களுக்கு என்னென்ன நெருக்கடிகளைக் கொடுக்கும் என்பதனை வருகின்ற நாட்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் தனது வேட்பாளர்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்தார். சஜித் அணியின் வேட்பு மனுக்களை நீதிமன்றம் நிராகரிக்கும். நமக்கும்; மொட்டுக்களுக்கும்தான் அப்போது நேரடிப் போட்டி என்பது ரணிலின் அந்தக் கதை.
இந்தத் தேர்தல் வரலாற்றில் பல புதிய பதிவுகளுடன் நடந்து முடியும் என்று நாம் எதிர்பாக்கின்றோம். தேர்தல் நடைபெற்ற அன்று இரவே முடிவுகள் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி இல்லை அடுத்த நாள்தான் 6ம் திகதியே வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. எனவே வாக்குப் பெட்டியை மாற்றி விட்டார்கள் விருப்பு வாக்கை கொள்ளையடித்து விட்டார்கள் என்ற கதைகளை ஒப்பாறிகளை நாம் இந்த முறை நிறையவே கேட்க இருக்கின்றோம். தேர்தல் பணிகளுக்கு அதிகளவு ஆளணியினர் தேவை. முன்பு போல் அவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியுமா என்று சந்தேகம் ஆணைக் குழுவிடத்தில் இருக்கின்றது.! எனவே தேர்தல் பணிகள் கட்டாய சேவை என்ற நிலைக்கு வந்திருக்கின்றது.
தற்போது நாட்டில் கருணா, அலுத்கமகே, ஹரின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தக் கருத்துக்களைப் பார்க்கும் போது உள்நோக்குடன் இது திட்டமிட்ட ஏற்பாடா என்ற ஒரு சந்தேகமும் நமக்கு இருந்து வருகின்றது. போர் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான இலங்கைப் படை வீரர்களைக் கொன்று குவித்தது பற்றி அம்பாறை சம்மாந்துறை தேர்தல் தொகுதியிலுள்ள நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருணா அம்மான் பேசி இருந்தார். அவரது இந்தக் கருத்து தெற்கில் பெரும் அதிர்வலைகளைத் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆனால் போர் காலத்தில் எதிரும் புதிருமாக இருக்கின்ற படைத் தரப்பினர் அல்லது தலைவர்கள் தமது எதிரிகளை கொன்றொழிப்பது என்பது சர்வ சாதாரணமான ஒரு விடயம். ஆனால் இந்தத் தேர்தல் காலத்தில் கருணா இதனைச் சொல்வதால் ஒரு வேளை தனக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிப் போட்டு அதிகளவான தனது கட்சிக்காரர்களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்து விடுவார்கள் என்று கணக்குப் போட்டாரோ என்னவோ.?
தனக்கு தமிழ் மக்களிடம் அங்கிகாரம் இல்லை என்பதால்தான் போர்க் களத்தில் தமிழ் மக்களின் ரொபின் ஹ_ட் என்று தனது பழைய நினைவுகளை மீட்டு தன்னைப் பற்றிய இமேஜை கூட்டிக் கொள்ள அவர் இந்த வார்த்தைகளைப் பாவித்தாரோ? அல்லது போர்கால நிகழ்வுகளை மீண்டும் உசுப்பேற்றி தெற்கில் சிங்கள மக்களுக்குத் போரில் மண்டுபோன தமது உறவுகளை நினைவுபடுத்தி அந்த வாக்குகளை ராஜபக்ஸாக்களுக்கு சாதகமாக்கி விடும் உள்நோக்கில் இந்தக் கதையைப் எடுத்து விட்டாரோ தெரியாது.
கருணா இன்று ராஜபக்ஸாக்கள் விசிரி. கிழக்கில் கரை சேர்ந்தால் வடக்கு டக்லஸ் போல் இவர் கிழக்கு ஹீரோவாகும் ஒரு நரியும் திராட்சையும் முயற்சியில் இருக்கின்றார் என்பதுதான் எமது கணக்கு. வடக்கில் டக்லஸையும் கிழக்கில் கருணாவையும் வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆப்பு வைக்கும் அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது தெற்கு அரசியல் வாதிகளின் திட்டம். அதற்கான ஒரு காய் நகர்த்தலாகவும் இது இருக்கலாம். தனது கருத்துத் தொடர்ப்பில் விளக்கம் கொடுக்க இருப்பதாகவும் தற்போது சுகயீனமாக இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அதனைச் செய்வதாகவும் கருணா சொல்லி வருகின்றார். பின்னர் அங்குபோய் நான் உண்மையைத்தானே சொன்னேன் என்று ஊடகங்கள் முன்னேயும் சொல்லி இருக்கின்றார்.
கருணா படைத் தரப்புடன் இணைந்து கொண்டாலும் அவர் எமக்கு விசுவாசமாக செயலாற்றவில்லை. அவர் விடுதலைப் புலிகளுக்குப் பக்கச் சார்பான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வந்தார். மேலும் அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட 150 பேரில் 80 பேர் சிறுவயதான பேராளிகளாக இருந்தார்கள் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்க குறிப்பிடுகின்றார். அவர் கருணா குழுவுக்கான தேர்தல் பிரச்சாரச் செயலாளரோ என்று நமக்குக் கேட்கத் தோன்றுகின்றது. கருணா விடுதலைப் புலிகள் தொடர்பில் எந்த இரகசியங்களையும் எமக்கு வழங்கவில்லை என்று மேலும் அடுக்கிக் கொண்டு போகின்றார் பீல்ட் மார்~ல். இதற்கிடையில் கருணாவுக்கு அடைக்களம் கொடுக்கும் பிரதமர் ராஜபக்ஸாவும் கைது செய்யப்பட வேண்டும் அவர் புலிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருக்கின்றார்.
அடுத்து 2011ல் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய தனது அணி சூதாட்டத்தில் இறங்கி வேண்டுமென்றே தோற்றுப்போனது என அப்தோய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்து நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் தான் இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக கடந்த புதன் கிழமை நாவலப்பிடியாவில் நடந்த ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டதுடன், பல வருடங்களாக தான் இந்தக் கருத்தை பகிரங்கமாக சொல்லி வருவதாகவும் அவர் கூறி வருகின்றார். அவரது இந்தக் கருத்து கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கின்றது. ஆனால் அலுத்கமகே தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்.
தற்போதய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும அமைச்சர் என்ற வகையில் தான் இதுபற்றி விசாரித்து பார்த்த போது முன்னாள் அமைச்சரால் முன் வைக்கப்படுகின்ற இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்ப்பில் தனது அமைச்சிலோ, கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையிலோ அல்லது சர்வதேச கிரிக்கட் அமைப்பிடமோ எந்த விதமான பதிவுகளும் முறைப்பாடுகளும் இல்லை என்று உறுதியாக பதில் கொடுத்திருக்கின்றார். ஆனால் முன்னாள் அமைச்சர் அலுத்கமகே அதற்கு முரனாக கருத்துக்களை தொடர்ந்தும் சொல்லி தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கின்றார். தற்போது விசாரணைகள் என்று முடக்கி விடப்பட்டிருக்கின்றது. இதுவும் தேர்தல் நாடகத்தின் ஓராங்கமாக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகின்றது.
மொட்டுக்கள் அணியினர் மத்தியில் பரவலாக விருப்பு வாக்குகள் தொடர்பில் சிவில் யுத்தம் நடைபெற்று வருகின்றது. இதில் ஜனாதிபதி அணி பிரதமர் அணி மொட்டுக்களின் கோர்ட் பாதர் பசில் அணி மற்றும் தன்னுடன் இணைந்திருக்கின்ற சில்லறைகள் குறிப்பாக சு.கட்சியினர் என்று கூட்டணிக்குள் வெட்டுக் கொத்து. மொட்டு முக்கியஸ்தர்கள் பலர் கூட இதற்கு இப்போது இலக்காகி இருக்கின்றார்கள். நாம் முன்சொன்ன டலஸ் அலகப்பெரும ஆட்கள் கூட அடிபுடிப்பட்டு வைத்தியசாலை பொலிஸ் என்று ஏறி இறங்கி வருகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் இந்த மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே தேர்தலுக்குப் பின்னர் அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளும் போதும் இந்த அணிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட பலப் பரீட்சைகளில் ஈடுபடுவார்கள்.
தனக்கு விசுவாசமான ஒரு பாராளுமன்றம் இருந்தாலோ சிறப்பான ஒரு ஆட்சியைத் தனக்குக் கொடுக்க முடியும் என்று ஜனாதிபதி ஜீ.ஆர். குறிப்பிட்டிருந்தார். ஆனால் நடப்புக்களைப் பார்க்கின்ற போது கதை வேறு விதமாகப் போய்க்; கொண்டிருக்கின்றது. எமக்கு வருகின்ற தகவல்படி மொட்டுக்கள் அணியில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஸ முதலாம் இடத்திலும் பசில் அணியினர் இரண்டாம் இடத்திலும் ஜனாதிபதி விசுவாச வியத்மக – நிபுணத்துவ அணி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றது. எனவே ஜனாதிபதி விசுவாச வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். நமது கணிப்பின் யதார்த்தத்தை தேர்தல் முடிவுகளில் தெரிந்து கொள்ள முடியும்.
சஜித் அணியின் அமைப்பாளரும் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினருமான ஹரின் பெர்ணாண்டோ பேராயர் ரஞ்சித் மெக்கலம் பெர்ணாண்டோவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை ஆளும் தரப்பினர் நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக கடந்த தேர்தல்களில் கிருஸ்துவ மக்களின் பெரும்பாளானோர் ராஜபக்ஸ விரோத அணிக்கு ஆதரவாகவே தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து வந்திருக்கின்றார்கள். ஆனால் ஹரினின் இந்தப் பேச்சால் ஒரு சின்ன வலி அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஹரின் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக இருந்து கொண்டு சஜித் அணிக்கு எதிராக சதி செய்கின்றார் என்ற ஒரு குற்றச்சாட்டும் தற்போது சொல்லப்படுகின்றது.
இதற்குப் பல வருடங்களுக்கு முன்னரும் இதே ஹரினுக்கு எதிராக அவர் ராஜபக்ஸா விசுவாசமனவர் என்றும் நாமலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் குற்றச்சாட்டுக்கள் இருந்ததை அரசியல் நிகழ்வுகளை நினைவில் வைத்திருப்பவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே மந்தைக்குள் ஒரு கறுப்பாடா! இப்போது ஹரின் கருத்துக்கு சஜித் மன்னிப்புக் கேட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் அரசியல் சக்திகள் ஆதிக்கத்தை பிடிப்பதற்கு வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்ற அதே நேரம் முஸ்லிம் தனித்துவ அரசியல் சக்திகள் பெட்டிப் பாம்பாக நின்று இந்த முறை சரணாகதி அரசியலை செய்து கரைசேரும் முயற்சியில் இருக்கின்றார்கள். அவர்களின் வாயிலிருந்து எந்த உணர்வுபூர்வமாக வார்தைகளும் இப்போது வெளி வருவதில்லை. அவர்கள் மௌன விரோதம் பூண்டிருக்கின்றார்கள் போலும்.
முதலில் கரை சேருவது. பின்னர் பதவிக்கு ஒரு பல்டி என்பதுதான் அவர்கள் அரசியல். இதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆளும் தரப்பில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்கள் நிச்சயம் தோல்வி என்று தெரிந்தும் களத்தில் இருக்கின்றார்கள். எனவே ஒரு கௌரவமான தோல்விக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் என்று நாம் இவர்களை அடையளப்படுத்துகின்றோம். இவர்கள் அரசியலில் பின்னால் இருப்பதும் வியாபார நலன்களே.
அடுத்து ஒரு ஆச்சர்யமான துண்டுப் பிரசுரமொன்றை குருனாகலையில் தேர்தல் களத்தில் பார்க்க முடிந்தது. ஆளும் தரப்புக்கு மாவட்டத்திலுள்ள 15 ஆசனங்களில் 11 அல்லது 10 போய்விடும் சஜித், ரணில் இரண்டுக்குமே கிடைக்க இருப்பது 5 அல்லது 4 ஆசனங்கள் மட்டுமே. இப்படி ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருப்பது மொட்டுக்கள் அணி என்று யோசிக்கின்றீர்களா? நிச்சயமாக அப்படி இல்லை. ஐதேக வேட்பாளர் ஆதரவு உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்தான் இதனை அச்சிட்டு விநியோகித்து வருகின்றார். ஐதேக வேட்பாளர் கட்சியே அங்கு தமக்குப் படுதோல்வி என்ற மனநிலையில் இருந்து அரசியல் செய்கின்றார்கள் என்றால். ஆதரவாலர்களைக் கேட்கவும் வேண்டுமா! இவர்களை வழிநடத்துபவர்கள் யாரோ! நிச்சயம் இவர்களை வழி நடாத்துகின்றவர் ரணிலாகத்தான் இருக்கும் என நாம் நம்புகின்றோம்.
இதற்கிடையில் ரணில் தரப்புக்கு கொழும்பில் -2 கம்பஹ -2 கண்டி -1 களுத்துறை -1 தேசியப் பட்டியல் 2 என்று எட்டு ஆசனம் கிடைக்கும் என சஜித் தரப்பு கருதுகின்றது. முன்னாள் உறுப்பினர் ஒருவர் நமக்கு இந்தத் தகவலைச் சொன்னார்.