தேர்தலும் புது யாப்பும் கானல் நீராகி விட்டன!

-நஜீப் பின் கபூர்-

தலைப்புக்கு வருவதற்கு முன்னால் சமகால அரசியல் களம் தொடர்பில் சில குறிப்புக்களைப் பற்றி பேசலாம் என்று தோன்றுகின்றது. அந்த வரிசையில் நமது அரசியல் தலைவர்கள் எப்படி முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை நமக்குச் சொல்லிக் கொண்டு எம்மை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதனை சற்றுப் பார்ப்போம். பொருளாதார விற்பன்னரான நமது அமைச்சர் பந்துல குனவர்தன நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று வருகின்றது தங்களது வீட்டுத் தோட்டங்களில் ஏதையாவது நாட்டிக் கொண்டு சாப்பிடுவதற்கு வழிபாருங்கள். அரசு எதுவும் பண்ண முடியாது என்ற தோரனையில் அறிவுரை வழங்கி வருகின்றார்.

நகரங்களில் ஒரு அங்குல நிலம் கூட இல்லாத மக்கள் அங்கு எதை எங்கு நடுவது. என்று கேக்கத் தோன்றுகின்றது. மேலும் அவர் இப்படியான ஒரு நெருக்கடியான நிலையில் அரசுக்கு விலைக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடியாது. அப்படி விதித்தாலும் அது நடைமுறையில் சாத்தியமாகாது என்று வேறு தெளிவாக சொல்லி இருக்கின்றார். இதற்கு முன்னர் நாட்டில் பட்டினி வருகின்றது என்று பகிரங்கமாக பேசிய செயலாளர்களும் தூக்கி எறியப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் கொஞ்சக் காலத்துக்கு நஞ்சு உணவை உற்கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொன்ன அதிகாரிகள் அதே கதிரைகளில் பதவி வகித்துக் கொண்டிருப்பதும் வேடிக்கையான விவகாரம்தான்.

நமது மற்றுமொரு ஜனரஞ்சக அமைச்சர் அதாவது விவசாயத்துக்குப் பொறுப்பானவர், அப்படி ஒன்றும் நடக்கவிடமாட்டேன் என்று அடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றார். எனவே பொருளாதார குரு சொல்லுவது சரியா அல்லது விவசாயம் சொல்லுவது சரிய என்று இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும். அது அப்படி இருக்க நுவரெலியாவுக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க வாழ்க்கைச் செலவு பட்டின் என்றெல்லாம் வீதியில் இறங்கி எருவரும் போராடக் கூடாது. சம்பளம் அதிகரிப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

சம்பளம் குறைக்கும் வழிகளைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது என்றும், அப்படி தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினால் அவர்களை சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரித்திருக்கின்றார். அதே நேரம் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற மைத்திரி தலைமையிலான சு.கட்சி அரசின் கொள்கைகளை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. இன்றும் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கின்ற அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு ஒரு கனதியான அமைச்சைப் பெற்றுக் கொள்ள பெரியவரைத் திருப்திப்படுத்தான் அவர் அப்படிக் கூறி இருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

அடுத்து நமது பிரதமர் எம்.ஆர். இந்திhவுக்குப் போய் திருப்பதியைச் தரிசித்து விட்டு வந்திருக்கின்றார். அவரது நம்பிக்கை பற்றியோ மக்களுடைய சமயக் கொள்கைகள் பற்றியோ நாம் விமர்சிக்க முடியாது. அது அவரவர் உரிமை. அங்கு போனவர் நிச்சயமாக தனது அரசியல் இருப்பு, உடலனம் பற்றி வேண்டி இருப்பார். மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் நமது வரிசுகளின் அரசியல் எதிர்காலம்-இருப்புப் பற்றிய விவகாரங்களில் நல்லது நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. நமது ஊடகத்துறை சகாக்கள் அவர் அங்கு தனியார் விமானத்தில் போனாரா அல்லது அரச செலவில் போனாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தனியான பயணமாக இருந்தாலும் இவற்றிற்கு எல்லாம் எங்கிருந்து டொலர்கள் கிடைக்கின்றன என்றும் சமூக ஊடகங்க அவரது பயணம் பற்றி கடுமையாகவும் கிண்டலாகவும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றன. பிந்திய செய்திகளின் படி நண்பர் ஒருவர் உதவியில்தான் அவர் தனியார் விமானத்தில் போனதாகவும் சொல்லப்படுகின்றது.

அவரது இந்தப் பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது. அவர் ஒரு பௌத்தர். அவரது மனைவி ஒரு கிருஸ்தவப் பின்னணியைக் கொண்டவர். என்றாலும் அவருக்கு திருப்பதி குறித்து நெடுநாளாக சிறப்பான நம்பிக்கைகள் இருந்து வந்திருக்கின்றன என்பது நாம் அறிந்த விடயம். அவர் மற்றுமல்ல இன்னும் பல நமது பௌத்த தலைவர்களும் அங்கு போய் வழிபாடுகளைச் செய்து வருகின்றார்கள். புத்த பகவானும் திருப்பதி-திருமலை ஏழுமலையானும் இணைந்து தமக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடியில் இருந்து தம்மையும் தமது குடும்பத்தவரையும் நாட்டையும் மீட்டுத் தர வேண்டும் என அவர் அங்கு கேட்டிருக்க வேண்டும்.

அந்த இரு சக்திகளும் (புத்தரும் ஏழுமலையானும்) சேர்ந்து கை கொடுத்ததால் தான் இந்த நெருக்கடியில் இருந்து நாம் தப்பிப் பிழைக்கலாம் என்று அவர் எண்ணி இருக்க கூடும். எனவே வெள்ளத்தில் ஆள்ளுண்டு சாகப் போகின்றவன் கையில் கிடைக்கின்ற துரும்பையாவது பிடித்து கரை சேர முனைவது ஒன்றும் தப்பில்லை என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சில சமூக ஊடகங்கள் புதத் பெருமான் கைவிரித்து விட்டதால் அவர் திருப்பதியில் போய் சரணடைந்திருக்கின்றார் என்று பேசி வருகின்றன. யார் குத்தியாவது அரிசி வெளியே வந்து நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் ஓகே.

சில மாதங்களுக்கு முன்னர் பங்களதேஷிடம் நாம் பெற்ற குறுகிய காலக் கடன் 200 மில்லியன் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய காலமும் வந்து விட்டது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்றது. எனவே மேலும் சில காலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணையை நீடிக்குமாறு நமது அரசு கேட்டிருக்கின்றது. ஷேக் ஹஷீனா அரசு அதற்கும் சம்மதித்திருக்கின்றது என்று தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. எனவே இன்னும் மூன்று மாதங்கள் மேலதிகமாக அதற்கு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கின்றது.

இது எதனைக் காட்டுகின்றது என்றால், அவசரத்துக்குக் கைமாத்தாக வாங்கிய பணத்தை கூட இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. எனவே மாலை போல் இருக்கின்ற பெரிய கடன்களை இவர்கள் எப்படித்தான் திருப்பிக் கொடுக்கப் போகின்றார்கள் என்று நமக்கு கடன் வழங்குகின்ற நாடுகள் நிருவனங்கள் அச்சப்படும். அது இயல்பானதுதான். இந்த நிலையில் எவரும் நமக்கு கடன்களை வழங்க முன்வர மாட்டார்கள் என்பது சிறு பிள்ளைகூட புரியக் கூடிய விடயம்தான். எனவேதான் டொலர் பற்றாக்குறை காரணமாக நாம் முன்பு ஒரு முறை சொன்னது போல அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணயில்தான் அத்தியவசியப் பொருட்களை பங்கீட்டு அடிப்படையில் அதாவது கூப்பான் முறையில் வழங்குவது தொடர்பாக அரசு தற்போது யோசித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் தலைவர்கள் கூட இது பற்றி பகிரங்கமாக பேசியும் வருகின்றார்கள். காசு இருந்தாலும் பொருட்களை வாங்க முடியாது முன்பு ஒரு காலத்தில் நாம் அன்றாடம் உண்ணுகின்ற பாண்கூட பங்கீட்டு அடிப்படையில் இந்த நாட்டில் வழங்கப்பட்ட வரலாறுகள் இருந்து வருகின்றது. மேலும் இலங்கையிலுள்ள அனைத்து அரச வங்கிகளிலும் அரசு பெரும் தொகைப் பணம் கடன் வாங்கி இருக்கின்றது. அந்தக் கடன்களையும் அரசு செலுத்துவதில் நெருக்கடிகள் வந்து இருக்கின்றன. எனவே மக்கள் வங்கிகளில் வைப்புச் செய்திருக்கின்ற பணம் தொடர்பாகவும் கேள்விகள் இருந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் நாம் மாகாண சபைத் தேர்தல் புதிய அரசியல் யாப்பு போன்ற விவகாரங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. எனவே சொல்லப்பட்ட படி மாகாணசபைத் தேர்தல்களோ அல்லது புதிய அரசியல் யாப்பு தொடர்பான அடிப்படைக் குறிப்புக்களையோ அரசு இந்த நேரத்தில் சமர்ப்பிக்கின்ற நிலையில் இல்லை. ஒரு கண்துடைப்புக்காக புதிய யாப்புத் தொடர்பாக ஏதாவது குறிப்புக்களை முன்வைத்தாலும் அதில் அடங்கி இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் கடும் போக்கு பௌத்த அமைப்புக்களும் தமிழ் தரப்பினரும் எதிரணியினரும் எதிரும் புதிருமான நிலைப்பாட்டில் இருந்து விமர்சனம் பண்ணிக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள். இந்த திசம்பருக்குள் (2021) அந்தக் உத்தேசக் குறிப்புக்களை சமர்ப்பிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் அந்தக் காலக் கெடுவும் கடந்து போய் விட்டது.

அதே போன்று ஏற்கெனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய காலமும் இன்னும் ஓரிரு மாதங்களில் கடக்க இருக்கின்றது. அது கூட நடக்க மாட்டாது. அதனை அரசு ஒரு வருடங்களுக்கு ஒத்தி வைத்திருக்கின்றது. அதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலும் இது போன்ற நடந்திருக்கின்றது என்று தற்போது ஆளும் தரப்பினர் விவாதிக்க இடமிருக்கின்றது. இந்தியாவும் சர்வதேசமும் என்னதான் அழுத்தங்களைக் கொடுத்தாலும் மாகாண சபைத் தேர்தலும் இப்போது நடக்கப் போவதில்லை இதற்கு அரசு நாட்டின் பொருளாதார நிலையையும் ஒமிக்ரோனையும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் காரணம் காட்டும்.

நமது கணிப்புப்படி மாகாணசபைத் தேர்தலும் புதிய அரசியல் யாப்பும் கானல் நீராகத் தான் இன்று மாறி இருக்கின்றது. அப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்காக ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. எதிரணியினர் கூட அதனை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றார்கள் ஆனால் அரசு அதனைக் கூட செய்யவில்லை. எனவே அரசுக்கு தேர்தலை நடாத்தும் நேக்கங்கள் இல்லை என்பது தெளிவு.

அரசு என்னதான் நியாயம் சொன்னாலும் அதனை இந்தியாவும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்பதும் தெளிவு. அடுத்து தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அது அரசுக்கு பாரிய பின்னடைவைக் கொடுக்கும். ஜனாதிபதி தேர்தலில் அறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகள் கிடைத்ததாக அரசு மார்தட்டிக் கொண்டது. ஆனால் அந்த ஒட்டுமொதத்த வாக்காளர்களும் இப்போது காணாமல் போய் இருக்கின்றார்கள். வீதிகள் வீடுகள் தோரும் இந்த அரசுக்கு வாக்குப் போட்வர்களே திட்டிக் கொடும் அரச தலைவர்களை சபித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். கடந்த வாரம் அமைச்சர்களான ராஜபக்ஸாக்கள் போன இடங்களில் மக்கள் அவர்களை ஹூ.. வைத்த சம்பவங்கள் பல நாட்டில் நடந்திருந்தன.

இதற்கிடையில் ஜனாதிபதி பதவி விலகப் போகின்றார் என்று சமூக ஊடகங்கள் கடந்த வாரம் பரபரப்பாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன. அதனால் ஜனாதிபதி ஊடகப் பிரிவே அப்படி எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி எடுக்கவில்லை என்று உத்தியோக பூர்வமாக செய்தி வெளியிட்டிருந்ததையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது புதுக் கதையாக ஜனாதிபதி ஜீ.ஆரை ஓரம் கட்டிவிட்டு எம்.ஆரை ஜனாதிபதி கதிரையில் அமர வைத்து பி.ஆரை பிரதமராக்கினால் எல்லாப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று சிலர் சொல்ல முனைகின்றார்கள். பி.ஆர்.விசுவாசிகள் பிரதமர் எம்.ஆரை ஒதிக்கி விட்டு அந்த இடத்தக்கு பி.ஆரை நியமிக்கலாம் என்றும் யோசிக்கின்றார்கள். இது தலைவலிக்கு தலையணையை மாற்றிய கதையாகத் தான் இருக்கும். இதற்க்கிடையில் இந்தியா மட்டுமல்ல சீனாவும் கூட ராஜபக்ஸாக்களை கை விடுகின்ற நிலை தோன்ற ஆரம்பித்திருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

அவர்கள் இப்போது எதிர்க் கட்சித் தலைவர் சஜித்தை நெருங்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அதே நேரம் ஆளும் தரப்புக்கு வாக்குப் போட்டவர்கள் பலர் ஜேவிபி யுடன் நெருக்கமாக செயல்பட ஆரம்பித்திருப்பதையும் கிராமப் புறங்களிலும் படித்த மக்கள் மத்தியிலும் பார்க்க முடிகின்றது. அண்மையில் நடந்த தாதியர் தொழிற்சங்க உறுப்புரிமைக்கான தேர்தலில் ஜேவிபி. ஆதரவாளர்கள் அனைத்து உறுப்புரிமையையும் போல் தனதாக்கிக் கொண்டிருந்தனர். இதுவரை அதிகாரத்தில் இருந்த முறுத் தெட்டுவே ஆனந்த தேரர் அணி பதினேழு சதவீத வாக்குகளையும் சமன் தேசப்பிரிய தலமையிலான அணியினர் பதினாறு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால்தான அரசு தேர்தல் வரை படத்தையும் யாப்புத் திருத்தத்தையும் கானல் நீராக காட்டிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிகின்றது.

நன்றி 02.01.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஹக்கீம் நயவஞ்சக அரசியல் - அதாவுல்லா

Next Story

எம்மைத் தொடர்பு கொள்ள..