தேர்தலும் தீர்வுகளும் மாயைகள்?

-நஜீப் பின் கபூர்-

இன்று நாட்டில் மிகப் பிந்திய இசுவாலக இருப்பது உள்ளாட்சித் தேர்தலும் இனப் பிரச்சினைக்கு தீர்வும் என்ற கதைதான் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இதில் உள்ளாட்சித் தேர்தல் என்று பார்க்கின்ற போது கட்சிகளும் தேர்தல் ஆணையகமும் அதற்கான முன்னகர்வுகளை எடுப்பது போன்ற காட்சிகள் தெரிகின்றன. ஆளும் மொட்டுக் கட்சி வேட்புமனுத் தொடர்பாக பேசுகின்றது. பிராதான எதிராணியான சஜித் தரப்பும் அதே பாணியில் வேட்பாளர் தெரிவுக்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது. வடகு,கிழக்கில் தமிழ் தரப்புக்களும் அதற்கான ஆயத்தங்களில்  இறங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது.

முஸ்லிம்கள் தரப்புக்களும் மலையக அரசியல் கட்சிகளும் சஜித் அணியுடன் கூட்டாகவும் தனித்தும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி விடும் என்று முன்கூட்டியே அடித்துச் சொல்ல முடியும். ஜேவிபி எந்த தேர்தலாக இருந்தலும் களத்தில் இறங்க எப்போதும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றது. இதர கட்சிகளும் சில்லரைகளும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தமது வேட்பாளர்களை போட்டிக்கு நிறுத்தும். இதற்கிடையில் எல்லை நிர்ணயம் என்ற ஒரு கதையும்  தற்போது முன்வைக்கப் பட்டிருக்கின்றது.

அடுத்து இனப்பிரச்சினைக்கு அதிரடியாகத் தீர்வு.அதுவும் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்பு (04.02.2023) என்று நாள் குறிக்கப் பட்டிருக்கின்றது. அப்படியாக இருந்தால் சரியாக இன்னும் 50 நாட்கள்தான் இதற்கு எஞ்சி இருக்கின்றது. மூத்த தமிழ் தலைவர்கள் இதுவிடயத்தில் நம்பிக்கையுடன் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் வண்ணக் கனவுகள் என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம். இன்றும் அது விவகாரத்தில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் கிடையாது.

இப்படியாக தேர்தல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றிய கதைகளைச்-செய்திகளைப் பார்க்கின்ற படிக்கின்ற போது  நாட்டில் ஏதோ நல்ல காரியங்கள் நடக்கப் போகின்றது என்ற ஒரு நம்பிக்கை தமிழ் தலைவர்களிடத்தில் இருப்பது போல சாதாரண குடி மக்களிடத்திலும் அதே நம்பிக்கை ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இரு விவகாரங்களும் வெரும் விளம்பரங்களும் ஏமாற்று நாடகங்கள் என்பது எமது அவதானமாக இருக்கிள்றன. நாம் ஏன் இந்த விடயங்கள் தொடர்ப்பில் நம்பகத் தன்மையற்று சந்தேகப் பார்வையுடன் பேசுகின்றோம் என்பதளை இப்போது பார்ப்போம்.

பொதுவாக சுதந்திரத்துக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் தன்னலத்துடன் நடந்து கொண்டிருக்கின்றார்கள். தூர நோக்குடனும் தூய்மாகவும் அவர்கள் நடந்து கொள்ளாத காரணங்களினால் குறிப்பாக கடந்த இரு தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் தமது பதவிகளை அரச சொத்துக்களை கொள்ளயடிப்பதற்காகவும் சுராண்டுவதற்காகவும்தான் பாவித்திருக்கின்றார்கள் என்று பொது மக்கள் மட்டுமல்லலாது நாடாளுமன்றித்தில் இருப்பவர்களே மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் காட்சிகளை நாம் நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக இப்போது பார்த்து வருகின்றோம்.

இதனால் நாடு இன்று வங்குரோத்து அடைந்து விட்டது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது.? நாட்டை மீட்டெடுப்பது எப்படி என்று எவருக்கும் தெரியாது. தேசம் ஆதாள பாதளத்தில் இருக்கின்றது குடிகள் அடுத்த நேரச் சாப்பாட்டுக்கு வழிதெரியாது தெருவில் கையேந்தி நிற்க்கின்றார்கள். இப்படியான ஏமாற்றுப் பேர்வலிகள் தான் தீர்வுகளையும் தரப்போகின்றார்களாம்.!

இந்தப் பின்னணியில்தான் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற நடாகங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வைத்து அது தொடர்பான பரப்புரைகளைச் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை நாம் ஒரு ஏமாற்று நாடகம் என்று பார்க்கின்றோம்.

முதலில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் எமது சந்தேகங்களை வாசகர்களுடன் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த உள்ளாட்சி சபைக்கான தேர்தல்கள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். அதனை தாமதப்படுத்தியதில் ஆளும் தரப்பையும் பிரதான எதிரணியையும் நாம் குற்றவாளிகளாகப் பார்க்கின்றோம்.

கடந்த முறைதான் இந்த உள்ளாட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரிக்க வேண்டும், என்று யோசனைகள் முன்மொழியப்பட்டு ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் அதற்கு நாடாளுமன்றத்தில் வாக்களித்து இந்த எண்ணிக்கைளை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டார்கள். அப்போது இதன் மூலம் மக்களுக்கு அதிக சேவைகளை விரைவாக முன்னெடுக்க வாய்பும் இன்னும் பல நன்மைகளும் இருப்பதாக சொல்லப்பட்து.

இன்று இந்த எண்ணிக்கை நாட்டுக்குப் பெரும் சுமையாக இருக்கின்றது. நெருக்கடியான இந்த பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த அதிக எண்ணிக்கையான உள்ளாட்சி உறுப்பினர்களைத் தமக்கு சமாளிக்க முடியாது-பராமறிக்க முடியாது என்று ஆளும் தரப்பு காரணம் காட்டி அந்த எண்ணிக்கை குறைப்புக்கான திருத்தத்தை செய்யும் வரை தேர்தலை ஒத்திவைக்க ஆளும் தரப்பு முயல்வது என்பதும் நாடறிந்த கதை. இதற்குப் பிரதான காரணம் உளவுப் பிரிவினர் சேகரித்த தரவுகளின் படி தேர்தல் நடந்தால் சஜித் அணி முதலாவது இடத்திலும் ஜேவிபி இரண்டாம் இடத்திலும் ஆளும் மொட்டு அணி மூன்றாம் இடத்திலும் இருப்பதுதான காரணம் என்ற விமர்சனங்களும் இருக்கின்றது.

அடுத்து இன்று ஆளும் தரப்புக்கு அடுத்த படியாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான உள்ளாட்சி சபை உறுப்பினர்கள் இந்த உள்ளாட்சி சபைகளில் இருக்கின்றார்கள். புதிதாக தேர்தல் ஒன்று நடந்தால் கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைவிட மிக மோசமான நிலை உள்ளாட்சித் தேர்தலில் வரும் என்ற கணக்கும் இருக்கின்றது.

எனவே தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் புதிதாகத் தேர்தலை நடாத்தி இந்தத் தோல்வியை சந்திக்கும் நிலை வந்தால் அவரது ஜனாதிபதி பதவி கேள்விக்குறியாக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த உள்ளாட்சி தேர்தலை நடாத்துவதற்கு விரும்பமாட்டார். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்புக்கள் மிக அரிது என்று நாம் நம்புகின்றோம். அடுத்து நாம் ஏற்கெனவே சொன்னது போல் ஆளும் மொட்டுக் கட்சிக்கும் களம் சாதகமாக இல்லை என்பது மிகத் தெளிவு.

ஆனால் நாங்கள் மீண்டும் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கி எமது வல்லமையைக் கட்சிப்படுத்துவோம் என்று அந்தக் கட்சியின் கோட்பாதர் பசிலும் செயலாளர் சாகர காரியவாசமும் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர். அடுத்த வேடிக்கை என்னவென்றால் அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் உள்ள எவருக்கும் இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக் கிடையாது என்று அறிவித்திருக்கின்றார்.

நம்மைப் பொறுத்தவரை இது ஒரு நகைச்சுவை.! ஊழல் மோசடிப் பேர்வழிகளைத் தவிர்த்து மெட்டுத் தரப்பில் வேட்பு மனுவைத் தயாரிப்பது என்பது வேடிக்கையான கதை. மேலும் ராஜபக்ஸாக்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு பத்திரம் மகவலி கங்கை போன்று நீண்டதாக இருக்கும் போது உள்ளாட்சி சபை வேட்பாளர்களுக்கு மட்டும் எப்படித் தடை போட முடியும் என்று கேட்கத் தேன்றுகின்றது.

மொட்டு அணியும் ரணிலின் ஐதேக. வும் இனைந்து இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்ற கதை. இப்படி ரணிலுடன் இணைந்து தேர்லுக்குப் போக முடியாது தாம் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என்று மொட்டுக் கட்சிக்குள் ஒரு தரப்பு முரண்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

அந்தக் கதைகள் எப்படிப் போனாலும் தாம் தேர்தலுக்குத் தயாராகத்தான் இருக்கின்றோம். அதற்கு அஞ்சவில்லை என்ற படத்தை உலகிற்கும் நாட்டுக்கும் காட்சிப்படுத்துகின்ற அதே நேரம் இந்தத் தேர்தலை தள்ளிப் போடத்தான் ஆளும் தரப்பு முனைக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். இதற்காக அவர்களே கையாட்களை வைத்து ஏதேனும் நொண்டிக் காரணங்களை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் நீதி மன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தும் இந்தத் தேர்தலை பிற் போட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால்தான் தேர்தல் தொடர்பான ஒரு நாடகத்தைதான் ஜனாதிபதி ரணிலும் ராஜபக்ஸாக்களும் அரங்கேற்றிக் கொண்டு வருகின்றார்கள். நாம் இந்தக் கட்டுரையைத் தயார் செய்கின்ற நேரம் முதலில் நடக்கப் போவது ஜனாதிபதித் தேர்தல்தான் என்று ஆளும் தரப்பிலிருந்து சில தகவல்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதில் ரணில் மொட்டுக் கட்சி வேட்பாளராக வரா மட்டார் அவர் மக்கள் வேட்பாளராகத்தான் அந்தத் தேர்தலில் களத்துக்கு வருவார் என்று ஐதேக. கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார். இது என்ன வேடிக்கையான கதை.?

உலகத்துக்கு தேர்தலை நடாத்த நாம் தயாராக இருக்கின்றோம் மக்களின் ஜனநாயக உரிமைகளை நாம் மதித்து நடக்கின்றோம் என்ற செய்தியை காட்சிப்படுத்திக் கொண்டு திரை மறைவில் வேறு திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என்பது நமது கருத்து.

இதனால்தான் அரசு தேர்தலை நடத்தாவிட்டால் பல இலட்சக் கணக்கான மக்களைத் திரட்டடி நாம் வீதிக்கு வருவோம் என்ற சஜித் தரப்பு நாடாளுமன்ற உப்பினர் மரிக்கார் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கதையும் ஒரு நகைச்சுவைதான். அந்தக் கட்சிக்கு வெற்றிகரமான போராட்டங்களை நடாத்துவதற்கு திரணியில்லை என்பதும் நமது கருத்து.

தேர்தல் ஆணையகம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுவை இன்னும் சில நாட்களில் கோர இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இது கூட சந்தேகத்திற்கு இடமான ஒரு அறிவித்தலாக இருக்கமோ என்று நாம் சந்தேகிக்கின்றோம்.

தற்போதய தேர்தல் ஆணையாளர் கடந்த காலங்களில் ராஜபக்ஸாக்களுடன் மிகவும் நெருக்கமான உறவில் இருந்தவர் என்பதும் தெரிந்ததே. இதனால் அவரது வார்த்தைகளைக் கூட சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடர்பான கதைகள் நாடகமா நிஜமா என்பது தெரிந்து விடும்.

இளவ மரத்தை காக்கும் தமிழர்

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு கடுகதியில் தீர்வு என்ற ஒரு கதையை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் முன்வைத்திருந்தார். பேசுவற்கும் கேட்பதற்கும் இது நல்ல தலைப்பாக இருக்கின்றது என்பதில்  மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அந்த வார்த்தைகள் சட்டரீதியான வரைபுகளுடன் அமுலுக்கு வரும் போதுதான் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் அதன் பிரதி பலன்களை அனுபவிக்க முடியுமாக இருக்கும்.

இந்த முறை ஜனாதிபதி ரணில் தீர்வுக் கருத்தை முன்வைத்த போது கடும் போக்கு பௌத்த தேரர்களும் சிங்கள பக்தர்களும் முன்பு போல அதற்கு தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்காது அடக்கி வாசிக்கின்றார்கள் என்று உணர முடிகின்றது. இதற்கு சில வேளைகளில் பௌத்த தேரர்களைத் தனிப்பட்ட ரீதியில் முன்கூட்டிச் சந்தித்து தனது நாடகப் பிரதிகளை ஜனாதிபதி ரணில் அவர்களுக்கு காட்டி அவர்களை அமைதிப்படுத்தி இருக்க வேண்டும்.

அடுத்து சர்வதேச அரங்கில் வேறு மார்க்கமே கிடையாது என்ற நிலையில் உலக நாடுகளினதும் அமைப்புக்களினதும் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஏற்பாடு என்று சொல்லி கடும் போக்காளர்களை சமாதானப்படுத்தி இந்த நகர்வுகளை ஜனாதிபதி முன்னெடுக்கவும் இடமிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று கடந்த காலங்களில் உச்சரிக்கபட்பட ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்ட கொதி நிலை இந்த முறை தனிந்து அல்லது அடங்கி இருப்பதும் நமக்குச் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

எந்தவிதமான நிபந்தனைகளையும் முன்வைக்காது தமிழ் தரப்பினர் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது எவ்வளவு தூரம் அறிவுபூர்வமானது என்று நமக்குப் புரியவில்லை. சர்வதேத்தின் மேற்பார்வையில் தான் பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் என்றும் சிலர் கூறி இருந்தார்கள். ஆனால் அது எப்படிப் போனாலும் குறைந்த பட்சம் இந்தியாவின் மத்தியஸ்தைக் கூட அரசாங்கம் ஏற்கத் தயாராக இல்லை என்பதன் மூலம் இது ஏமாற்று நாடகம் என்ற எமது விமர்சனத்துக்கு வலுவான ஆதாரமாக அமைகின்றது.

நாம் சொல்லுகின்ற படி இந்த இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் அப்பட்டமான நாடகங்கள் என்று 2023.02.04 சுதந்திர தினத்துக்கு பின்னர் தெரிய வரும் போது. அதிகார வர்க்கம் எப்படிப் போனாலும் தமிழ் தரப்பினர் தமது சமூகத்தின் முன் எந்த நியாயங்களை முன்வைத்த அரசியல் அரங்குகளில் தமது முகங்களைக் கட்சிப்படுத்த முடியும்.?

\ஆனால் அரசியல் வியாபாரத்தில் இவர்களுக்கும் பங்கு என்று வரும் போது இவை எல்லாம் சர்வ சாதரண விடங்கள் என்று அமைந்து விடும்.! எம்மைப் பொருத்த வரை இந்தத் தீர்வு விவகாரம் இளவ மரத்துக் காய்களைத் தமிழ் தரப்புக்கள் காத்து வருகின்றது என்பது நமது  நம்பிக்கையாக இருக்கின்றது. இன்னும் சரியாக 50 நாட்கள் வரை நாமும் பொருத்துப் பார்ப்போம்.

நன்றி: 18.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

ஐஸ் போதைக்கு அடிமையான உயர் பதவி வகித்தவரின்  நிலை

Next Story

FIFA 2022 உச்சி முகர்ந்த மெஸ்ஸி - அர்ஜென்டினாவின் வெற்றி