/

தேர்தலுக்காக ஜய-தேச கூட்டணி வரவு

-நஜீப் பின் கபூர்-
வருகின்ற ஜூன் 20ல் தமக்கு பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. எனவே நாம் முன்கூட்டிச் சொல்லி இருந்தபடி இப்போது தேர்தல் அந்தத் தினத்தில் இல்லை என்பது உறுதி. அப்படியானால் எப்போது தேர்தல்? நாட்டில் சுமுகமான நிலை வந்த பின்னர்தான் தேர்தலா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியும் எதிர்பார்க்க முடியாது.! பொதுவாக நோக்கின்ற போது நமது நாட்டில் கொரோனா இன்னும் தனது அட்டகாசத்தை பண்ணவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலைத்தான் அது இங்கு நடாத்தி வருகின்றது என்று சொல்ல வேண்டும். ஆனால் அது தனது நிலைப்பாட்டில் அப்படியே இருந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
நமது பக்கத்து நாடான இந்தியாவில் அது தற்போது அதிரடி ஆட்டத்தைத் துவங்கி இருக்கின்றது. சீனாவையும் விஞ்சி அங்கு நோய் தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரித்து விட்டது. மக்கள் கொத்துக் கொத்தாக மரணிக்கத் துவங்கி விட்டார்கள். எனவே நமது வாசலில் அதிரடி ஆட்டத்தில் இறங்கி இருக்கின்ற கொரோனா நமது வீடுகளுக்குள்ளேயும் எப்போது புகுந்து விளையாடப் போகின்றதோ தெரியாது. எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது.
கொரோனா சாடிக்குள்!
ஆனால் இது விடயத்தில் நம்மை நெறிப்படுத்துகின்ற அரச வைத்திய சங்கத் தலைவர் அனில் ஜயசிங்ஹ, நாம் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்று அடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றார். டாக்டர் நமக்குத் தருவது நல்ல செய்திதான், என்றாலும் அவரது வார்த்தைகளுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. பூதத்தை பிடித்து சாடியில் போட்ட கதையா இது! இதே ஆள் கொரோனா ஏதும் ஆட்டகாசம் பண்ணிவிட்டால் குடிமக்கள் பொறுப்பில்லாது நடந்து கொண்டதால்தான் இப்படி ஆகிவிட்டது என்றும் பேச இடமிருக்கின்றது.
எனவே கொரோனா விவகாரத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமது மக்கள் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் அல்லது கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே ஜே.ஆர்.புகட்டியது போல் நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டால் கருடா களுத்திலிருந்து பாம்பு சொன்ன மாதிரி ஆரோக்கியமாக இருக்கும். இப்போது தேர்தலுக்கான வேட்பு மனுவும் முடிந்து விட்டதே என்ன தேர்தலுக்குப் புதிய கூட்டணி பற்றி ஒரு கதை தலைப்பில் இருக்கின்றது.? இது என்ன என்று நமது வாசகர்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் இருக்கும்.
இதுவரை நமது நாட்டில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களையும் தேர்தல் ஆணைக்குழுவே முன்னின்று நடாத்தியிருக்கின்றது. ஆனால் கொரோனா வருகையுடன் வரலாற்றில் என்றுமில்லாதவாறு வைத்தியத்துறையினரின் ஆலோசனை ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக் குழுவுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது. எனவே இதனைத்தான் நாம் ஜய-தேச என்று குறிப்பிட்டிருக்கின்றோம். இன்னும் புரியவில்லை என்றால் தேர்தல் தொடர்ப்பில் வைத்திய சங்கத் தலைவர் அனில் ஜயசிங்ஹ அவர்களின் பணிந்துறைகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது. அடுத்து தேர்தல் விவகாரத்தில் நமது ஹீரோ மஹிந்த தேசப்பிரிய என்ன செய்யப்போகின்றார்-என்ன முடிவை எடுக்கப்போகின்றார் என்பதும் முக்கியமாக இருக்கின்றது.
அவர்கள் இருவர் பெயர்களை நாம் சுருக்கமாக ஜய-தேச என்று இங்கு குறிப்பிட்டிருக்கின்றோம். இந்த கூட்டணிதான் 2020 பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் தேசத்தின் தேர்தல் வெற்றி இந்த இருவர் எடுக்கின்ற தீர்மானங்களில்தான் தங்கியிருக்கின்றது. எனவே ஜய-தேச என்பதனை வெற்றி தேசம் என்று தமது மொழியில் உச்சரித்துக் கொள்ளலாம். ஜய-தேச கூட்டணி நமக்கு வெற்றிகராமான தேர்தல் தருவார்கள் என நாமும் நம்புகின்றோம்.
நமது அறிவுக்கு எட்டியவரை புதிதாக தேர்தலுக்கு வேட்பு மனுக் கோருவது, பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுவது என்ற கதைகள் எல்லாம் நீதி மன்றத்தில் விலைபோகாத சரக்குகளாகத்தான் இருக்கும். சஜித் தரப்பினர் தொடர்ந்தும் மக்களுக்கு சலுகைகளை வழங்க பாராளுமன்றத்தை கூட்டுமாறு நீதி மன்றம் போயிருக்கின்றனர். ஆனால் பிரதமரோ துர்பிடித்த பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதில் அர்தமில்லையென்கின்றார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
நாட்டில் சுமுக நிலையா!
அரசு தரப்பு சட்டத்தரணி ரெமேஷ; த சில்வா நாட்டில் தற்போது தேர்தலை நடத்தவதற்கு எந்தத் தடைகளுமில்லை. சுமுகமான நிலையில்தான் நாடு இருக்கின்றது என்று அங்கு வாதாட்டம் புரிந்து கொண்டிருக்கின்றார். புதிய பாராளுமன்றம் கூட்டப்படத் தேவையில்லை என்பதுதான் எமது வாதமும். ஆனால் அரசு தரப்பு சட்டத்தரணியின் நாடு சுமுகமான நிலை என்ற வாதத்தை நாம் நிராகரிக்கின்றோம்.
ஏனெனில் கடந்து புதன்கிழமை 20ம் திகதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா துவங்கிய காலத்தில் இதுவரை 24 மணி நேரத்தில் அதிகளவானவர்கள் இந்த வைரசுக்கு இலக்காகிய நிகழ்வு பதிவாகி இருக்கின்றது. அந்த எண்ணிக்கை 106000. இந்த கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கின்ற போது நாட்டில் புதிதாக 20 பேருக்கு கொரோனா.
அபுதாபி, டுபாய் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் 370 பேருக்குக்கு கொரோனா. இவர்கள் தம்மை நாட்டுக்கு அழைத்தக் கொள்ளுங்கள் என்று பலமாதங்களாக அரசைக் கேட்டிருந்தனர். என்பது இங்கு நினைவூட்டப்பட வேண்டும். அத்துடன் வெலிசர கடற்படை முகாமிலிருந்த 2193 பேர் தற்காப்பு முகாம்களில், மேலும் 578 கடற்படையினருக்கு கொரோனா. இவர்கள் நாட்டில் பரவலாக கிராமப்புறங்ளைச் சேர்ந்தவர்கள். அவர்களது தொடர்புகள் பிணைப்புக்கள் முழு நாட்டுக்குமே இந்த வைரசை கொண்டு செல்லும் ஆபத்து இருக்கின்றது.
இதனால் நாட்டில் சுமுகமான நிலை என்ற அரசு தரப்பு சட்டத்தரணி வாதத்தை நாம் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம். நாட்டில் ஆபத்தான கட்டம் இருக்கின்றதா இல்லையா என்று மதிப்பீடு செய்ய வேண்டிய பொறுப்பு வைத்தியத் துறையினரிடம் இருக்கும் போது வாதத்திறமையைக் காட்டி வழக்கை வெற்றி பெற அரசு தரப்பு சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் முயற்ச்சிகள் மிகவும் ஆபத்தானது என்பது எமது வாதம்.
ஜனாதிபதி தலமையில் கடந்த 19ம் திகதி போர் வெற்றி நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜீ.ஆர். தான் ஒரு போதும் எமது படையினரைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். தேவைப்பட்டால் அழுத்தம் கொடுக்கின்ற சர்வதேச அமைப்புக்களிலிருந்து வெளியேறுவது பற்றியும் தான் கவலைப்படவும் மாட்டேன் என வீராப்பில் பேசி இருக்கின்றார். இந்த நிகழ்வுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு ஜனாதிபதி தனிப்பட்ட அழைப்புக் கொடுத்தாலும் அவர் அந்த வைபவத்துக்குப் போகவில்லை.

அதே நேரம் வடக்குக் கிழக்கில் பல இடங்களில் தமிழீழ விடுதலைப் போரில் பலியானவர்கள் தொடர்ப்பில் நினைவு கூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றிருக்கின்றன. படையினர் ஆட்சேபனைகளைத் காட்டி அச்சுறுத்தல் விடுத்;த நேரத்திலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. பல இடங்களில் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை படையினர் வீடியே எடுத்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஊடக வன்முறை!

கொரோனா ஒரு புறம் மக்களுக்கு மரண அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்ற அதே நேரம் ஊடகங்கள் மக்கள் மத்தியில் தப்பான கருத்துக்களையும் இனவாத கண்ணோட்டத்திலும் செய்திகளையும் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றன. இதனை ஒரு வன்முறையாகவே நாம் பார்க்கின்றோம். இதற்கு எதிராக அரசாங்கமோ அல்லது வெகுஜன இயக்கங்களோ இன்னும் தனது கவனத்தை செலுத்தவில்லை என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது. மாறாக அரசு இவர்களுக்கு அனுசரனை வழங்குகின்றது என்றும் எண்ணத்தோன்றுகின்றது.
கடந்த வியாழன் நாட்டிலுள்ள ஒரு பிரபல பத்திரிகையும் பல ஊடகங்களும் இப்படி ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்லி இருந்தன. வருமானம் குறைந்த பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு தடுத்த விட்டது என்று அமைச்சர் பந்துல குனவர்தன சொல்லி தேர்தல் ஆணையகத்தின் மீது ஒரு வெருப்பை மக்கள் மத்தியில் பரப்பி இருந்தார். அடுத்த நாளே நாங்கள் அப்படியான எந்தக் கருத்தையும் எந்த இடத்திலும் சொல்லவில்லை மக்களுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபாவைத் தாரலமாக வழங்க முடியும். ஆனால் அரசியல்வாதிகளை அதில் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றுதான் நாம் சொல்லி இருக்கின்றோம் என்ற தேர்தல் ஆணைக்கழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்ட செய்தியை மறுத்திருக்கின்றார். ஆனால் அந்தச் செய்தி ஒரு மூளையில் பதிவாகி இருக்கின்றது. இது அப்பட்டமான ஊடக வன்முறை.
அதே ஊடகத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தொடர்ப்பில் வைத்திய சங்கத் தலைவர் சொன்னதானவும் ஒரு செய்தி இருந்தது. அந்த செய்தியில் தான் அப்படியான வார்த்தை எதையும் பேசவில்லையென வைத்தியர் அனில் ஜயசிங்ஹ மறுத்திருக்கின்றார். எமது ஆவதானப்படி பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தொடர்ப்பில் ஊடகங்கள் இனவாத கண்ணோட்டத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மகள் விவகாரம் பேராசிரியர் ரத்னஜீவன் சொல்வது

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலை அவரது கையடக்கத் தொலைபேசி ஊடாக நாம் தொடர்பு கொண்டு, அவரது மகள் தொடர்பாக சொல்லப்படும் குற்றசாட்டுக்களுக்கு விளக்கம் கேட்டோம். அதனை அவர் அப்பட்டமான பொய் என்று எடுத்த எடுப்பிலே நமக்குச் சொன்னார். மேலும் விளக்கம் கேட்ட போது எனது மகள் வெளி நாட்டிலிருந்த வந்ததும் முகாமில் இருந்ததும் உண்மை. நான் மகளை எனக்குக் கொடுக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் சென்றதும் உண்மை.
ஒரு தந்தை என்ற வகையில் கடமை முடிந்து போகும் போது அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அந்த சம்பவம் நடந்திருக்கலாம். அவர் இப்படி நடந்து கொண்டதை ஊடகங்கள் பாரிய குற்றச்செயலாக காட்ட முனைவதை நாமும் மனிதாபிமான அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நமது நாட்டில் நடந்திருக்கின்ற துஷ;பிரயோகங்களைப் பார்க்கின்ற போது இதுவும் ஒரு செய்தியா-கதையா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இது தொடர்பாக மேலும் நம்முடன் கதைத்த பேராசிரியர் 14 நாள் முகாமில் இருந்த தனது மகள் தொடர்பான எல்லா வைத்தியப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் மகளை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்படி ஒப்படைத்த வைத்திய சான்றிதழில் முகாமுக்குப் பொறுப்பானவர் கையெழுத்துப்போடாமல் எமக்கு அந்த சான்றிதழைத் தந்திருக்கின்றார்கள். இது தற்செயலாக நடந்த ஒரு தவறாக இருக்கலாம். என்றாலும் அதற்குத்தான் பொறுப்புக் கூற முடியாது. அதனை ஒரு பெரிய இசுவாக இப்போது எடுத்து கதைகள் புனைகின்றார்கள். இப்போது அவரது சாரதியையும் உதவியாளரையும் முகாமுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். இந்த இடத்தில் எமக்கு ஒரு கேள்வி இருக்கின்றது. அப்படியானால் பேராசிரியரை ஏன் தடுப்பு முகாமுக்கு அவர்களைப் போன்று அழைத்துச் செல்லவில்லை.?
இது தேர்தல் ஆணைக்குழுவை மக்கள் முன் நெருக்கடிக்கு இலக்காக்கும் ஒரு நாடகம்-நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். மேலும் பேராசிரியர் தனது அலுவல்கள் முடிந்து யாழ். போனதும் அவரை ஒரு பெரிய குற்றவாளியை விரட்டுவது போல் அங்கு பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். அண்மைக்கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தேர்தல் ஆணைக்குழு மீது வெறுப்புணர்வில் காரியங்கள் நடப்பது போல் தெரிகின்றது.
அமைச்சர் பந்துல இந்த நாட்களில் மிகத் தப்பான தகவலகளையும் பொய்களையும் தொடர்ச்சியாகச் சந்தைப்படுத்தி வருகின்றார். ஹோமகமையில் அவரது தேர்தல் தொகுத்தியில் சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்று அமைய இருப்பதாக செய்தி சொல்லியிருந்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் கோடிக்கணக்கில் இதற்கு செலவு செய்யலாமா என்று பல பக்கங்களிலிருந்து கண்டணங்கள் வந்த போது இல்லை.. இல்லை. அதற்கு அரச பணம் செலவு செய்யப்படவில்லை சர்வதேச கிரிக்கட் சபைதான் இதனைச் செய்கின்றது என்று சமாளித்தார். அவரது கதையை நம்பிய அரச தரப்பு கம்மன்பிலவும் அது சர்வதேச உதவி என்று பந்துலவுக்கு வக்காளத்து வாங்கினார்.
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் அப்படியான எந்த ஒரு திட்டமும் நம்மிடத்தில் இல்லை. இதற்கு நாம் நிதி வழங்கவுமில்லை என்று சுவரில் எறிந்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் கொடுத்தது. அமைச்சர் பந்துல மௌனித்தார். கம்மல்பில மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை உண்டு பண்ணும் என்பதால் தற்போது பிரதமர் பம்புக்கும் நோகாமல் பம்படித்த கம்புக்கும் நோகாமல் ஒரு முடிவை எடுத்திருக்கின்றார் பிரதமர் எம்.ஆர்.! அந்த நிதி பாடசாலைகளின் கிரிக்கட் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்று சாமாளித்திருக்கின்றார். எனவே இதிலிருந்து இதற்கு அரச பணம் இந்த நெருக்கடி நிலையிலும் மூலதனமிட தீர்மனம் எடுக்கப்டடிருந்தது தெளிவாகின்றது.
மோசடிக்காரர்கள் கூடாரம்

சில தினங்களுக்கு முன்னர் தனியர் ஊடகமொன்றில் நேரடி விவாதம். ஆளும் தரப்பிலிருந்து அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் கலந்து கொண்டிருந்தார். இங்கு ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹதுன்ஹெத்தியின் அதிரடிக் கருத்துக்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில், ஒரு கட்டத்தில் ஜேவிபிக்கு இருக்கின்ற மூன்று சதவீத வாக்குகளையும் இழந்துகொள்ளவா பார்க்கின்றீர்கள் என்று ஆளும் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்து. அதற்கு ஹதுன்ஹெத்தி கொடுத்த பதிலடியால் அரசு தரப்பு மக்கள் மத்திலியில் மூக்குடைபட்டு சுருண்டு விழுந்ததை பார்க்க முடிந்தது.

கதை இதுதான், ஆம் நீங்கள் சொல்வது சரிதான் இந்தப் பாராளுமன்றம் முழுக்க முழுக்க அரசியல் வியாபாரிகளாலும் டீல்-கரர்களாலும் நிரம்பி வழிகின்றது. எதிர்வருகின்ற தேர்தல்களிலும் அவ்வாறானவர்கள் வெற்றி பெறுவதற்கான பின்னணி இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களும் டீல்கள் மூலம் கோடி கோடியாக பணம் ஈட்டியவர்களும் இந்தத் தேர்தலில் பணத்தைக் கொட்டி மீண்டும் பாராளுமன்றத்தை நிரப்புவர்கள் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருக்கின்றது என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.

இந்தப் பாரளுமன்றத்தில் மிகச் சிறந்த செயல்திறன் மிக்க உறுப்பினர் என்ற வரிசையில் நான் தொடர்ந்தும் 225 பேரில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றேன். எனது தலைவர் சகோதரர் அணுரகுமார முதலிடத்தில் இருக்கின்றார். இது நாம் செய்த ஆய்வுகளின் முடிவல்ல நடுநிலையான உள்நாட்டு சர்வதேசக் கணிப்புகள். நீங்கள் குறிப்பிடுவது போல் எமக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போனால் அது பற்றி யார் கவலைப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று பதில் கொடுத்தார். இந்தப் பதில் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக சக்கை போடு போடுகின்றது. ஆனால் யாதார்த்தம் இதுதான்! கொள்ளையர்களும் ஏமாற்றுகாரர்களும் அரசியலில் பணம் கோடி கோடியாய் உழைத்த சமூக விரோதிகள்தான். 2020 பொத்தேர்தலில் ஜெயிப்பார்கள்.

அதேபோன்று குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பேரில் அரசியல் செய்கின்ற இந்த டீல்காரர்களும் அரசியலில் பணம் ஈட்டியவர்களுக்குமே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. முஸ்லிம் சமூக அரசியல் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கின்றது. கட்சிகள் என்பதனை விட தலைவர்களை வழிபாடும் கும்பல், அடியாட்கள், கையாட்கள், உறவுகள், ஏஜெண்டுகளும் அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள்தான் தலைவர்களினால் கட்சிக் காவலர்களாக அங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவர்களால் சமூகத்துக்கு என்னதான் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது என்று நாம் கேட்க்கின்றோம்.

அறிவியல் ரீதியில் மக்கள் நெறிப்படுத்தப் படாததாலேயே சமூகங்களில் அரசியில் வியாபாரிகளினதும் டீல் காரர்களினதும் அட்டகாசம் கொடி கட்டிப் பறக்கின்றது. சிறைக்கூடங்களில் இருக்க வேண்டியவர்கள் நாடாளுமன்றம் போய் நாட்டை ஆள்கின்றார்கள். வருகின்ற தேர்தலில் பணத்துக்கும், அரிசி, பருப்புக்காகவும் மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றம் அனுப்பும் வாய்ப்பு சமூகங்களில் பிரகாசமாக இருக்கின்றது. இதனால் சமூக ஆர்வமும் அறிவியல் ரீதியிலான சிந்தனையுள்ளவர்களும். பாராளுமன்றம் வருவது அத்தி பூத்தால்போல் அமைகின்றது. இதுதான் ஹதுன்ஹெத்தி கதையின் சுருக்கம். கடந்த வாரம் நாம் சொன்னது போல ரம்சான் புத்தாண்டு தினத்தில் ஊரடங்கு என்பதை அரசு உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

3 லட்சத்து 48 ஆயிரத்து 76 பேர் பலி

Next Story

கம்பிரிகஸ்வெவ கொரோனா நிவாரணம்