நஜீப் பின் கபூர்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
**********
ராஜபக்ஸாக்களுக்கு தொடர்ந்தும் அதிர்ச்சி தோல்விகள்!
அனுர செல்வாக்கை உறுதி செய்த தேரர்களின் பேரணி!
பண்ணைப் பிராணிகள் போல சில அரசியல் வாரிசுகள்!
**********
நாம் கடந்த வாரம் மீண்டும் ராஜபக்ஸாக்களை அதிகாரத்துக்குக் கொண்டு வருகின்ற ஒரு முயற்சியாக முறுத்தெட்டுவே தேரர் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பேரணி பற்றிய தகவல்களைச் சொல்லி இருந்தோம். அந்த தேரர்களின் பேரணிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நமது வாசகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். பேரின சம்பிரதாய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இது பற்றி நிறையவே பேசி இருந்தன. அவை சொன்ன தகவல்கைளை மட்டுமல்ல அவை பேசாத பல தகவல்களையும் இந்த வாரம் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டு அரசியலில் பௌத்த தேரர்கள் என்போர் தீர்க்கமான ஒரு சக்தியாகத்தான் இருந்து வந்திருக்கின்றார்கள். சமூக நலன்களுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
இது மன்னர்கள் காலத்திலும் ஐரோபியர் காலத்திலும் சுதந்திரத்துக்குப் பின்னர் கூட இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றார்கள். அதனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் பௌத்த தேரர்கள் பற்றிய ஒரு நல்லெண்ணம் இருந்து வந்திருக்கின்றது. அதே நேரம் இவர்களில் சிலர் கடும் இனவாதிகளாகவும் செயலாற்றிய சந்தர்ப்பங்களும் உண்டு. என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தேரர்களின் வரலாறு அப்படி இருக்க இன்று அவர்கள் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் அதிருப்திகளும் நிலவி வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் இவர்கள் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிருத்தி கடந்த காலங்களில் அரசியல் செய்து வந்திருப்பதுதான். அடுத்து நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல இவர்களில் கனிசமான ஒரு தொகையினர் பஞ்சபாதக செயல்களிலும் ஈடுபட்டு கையும் மெய்யுமாக சிக்கியும் இருக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த பௌத்த தேரர்கள் மீதும் ஒரு அதிருப்தி நிலை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றது.
எனவே இப்படி மக்களால் வெறுக்கப்பட்ட தேரர்களில் ஒரு குழுதான் பேராளர் மாநாட்டுக்கு அழைப்பை விடுத்திருந்தது. இந்த அழைப்பைக் கொடுத்த விஜேராமவிகாரை விகாரதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் மாநாட்டை கூட்டுவதற்கு சொல்லி இருந்த காரணம், இது முற்றிலும் அரசியலுக்கு அப்பால்பட்ட பௌத்த மக்களின் நலன்களுக்கான கூட்டம் என்றார்.
ஆனால் இவர் மொட்டுக் கட்சியினதும் ராஜபக்ஸாக்களினதும் மிகப் பெரிய ஒரு கையாள். அப்படிப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஒட்டுமொத்த சிங்கள பௌத்த மக்களின் நலனுக்கான கூட்டத்துக்கு அழைப்புக் கொடுக்க முடியும்.? அதனை நாம் கடந்த வாரமும் கேட்டிருந்தோம். துவக்கத்தில் 10000ம் 8000ம் 5000ம் 2500ம் தேரர்கள் வருவதாக முறுத்தெட்டுவே தேரர் சொல்லி இருந்தார். ஆனால் வெறும் 280 பேர்தான் அங்கு வந்திருந்ததாக துல்லியமான கணக்குகளில் சொல்லப்பட்டிருக்கின்றது.
மொத்தமாக 600 வரையிலான ஆசனங்கள்தான் அங்கு போடப்பட்டிருந்தது. மேலும் தேரர்கள் அல்லாத அரசியல்வாதிகள் அவர்களது கையாட்கள் இனவாதிகள் என்று வெறிபிடித்து அழைகின்ற ஒரு கூட்டமும் இங்கு வந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. எனவே முறுத்தெட்டுவே தேரரின் பேரணி படுதோல்வி என்று இன்று நிரூபனமாகி இருக்கின்றது. இதனால் இனவாதிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ராஜபக்ஸாக்களும் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். காரணம் தற்போதய அரசுக்கு எதிராக மக்கள் மீண்டும் ராஜபக்ஸாக்களை ஆதரிக்கின்ற ஒரு நிலை நாட்டில் தோன்றி இருக்கின்றது என்று இவர்கள் கதைகளை விட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் களநிலவரம் என்ன என்பதனை இது அம்பலப்படுத்தி இருக்கின்றது. கடந்த ராஜபக்ஸாக்கள் காலத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்ட பௌத்த தேரர்கள் கூட இந்த முறுத்தெட்டுவே தேரரின் அழைப்பை நிராகரித்திருந்தனர். எனவே ராஜபக்ஸாக்களின் நிலையும் அதோகெதி என்பது இப்போது உறுதியாகி விட்டது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் கூட்டமே ராஜபக்ஸாக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்பில் நடாத்தப்பட்ட போது அங்கு போய் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் கலந்து கொண்டதுதான்.! சஜித் இதில் போய் பங்கு கொண்டது கட்சி வட்டாரத்திலும் அவர் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளிடத்திலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் சஜித்துக்கு கிடைத்த நன்மைகளை விட இழப்புகள்தான் அதிகம். இது தொடர்பாக பிறிதொரு இடத்தில் பேசி இருக்கின்றோம். கூட்டம் உப்புச்சப்பில்லாது முடிந்திருக்கின்றது.
கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கில் அழைத்து வருகின்றோம் என்று சொன்ன மிகிந்தலே தேரர் பேரணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எஸ்கெப்பாகி சீனாவில் போய் இறங்கி விட்டார். இதுதவிர பஸ்களில் ஆட்களை அழைத்து வருகின்றோம் என்று சொன்னவர்கள் பலர் முறுத்தெட்டுவே தேரரை ஏமாற்றி விட்டார்கள்.
இந்தப் பேரணி படுதோல்வியில் முடிந்ததால் எதிர் வருகின்ற மாகாணசபைத் தேர்தல் நடந்தால் முடிவு என்ன என்பதும் இதிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. ஒட்டுமொத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த மாநாட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்த நேரத்தில்தான் இந்த பின்னடைவு. இதனால் இப்படி ஒரு கூட்டத்தை நடாத்தி நாம் இப்போது அனுர-என்பிபி செல்வாக்கை மீண்டும் உறுதி செய்திருக்கின்றோம் என்று அங்கலாய்க்கின்றவர்களும் இதே தரப்பில் இருக்கின்றாhகள். அதே நேரம் இப்போது இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடம் கிடையாது என்பதும் இந்த பேரணி தோல்வி உறுதி செய்திருக்கின்றது.
இந்தக் கூட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த நேரம் முறுத்தெட்டுவே தேரரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேரரே என்ன பிரச்சினை? எதை வேண்டுமானாலும் என்னுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்தானே என்று கேட்க, இல்லை இப்போது எல்லா எற்பாடுகளும் முடிந்து விட்டது. ஒட்டு மொத்த தேரர்களும் உங்கள் மீது இப்போது வெறுப்பில் இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதியிடத்தில் தேரர் கூறி இருக்கின்றார்.
அதே நேரம் அமைச்சர் லால்காந்த வாருங்கள் மீண்டும் மீண்டும் வாருங்கள் வந்து தாராளமாக பேரணிகளை நடாத்திவிட்டுப் போங்கள் என்று தேரர்களுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். பௌத்த தேரர்களை உசுப்பேற்றி அரசாங்கத்தை வீழ்த்த ராஜபக்ஸ எடுத்த இந்த முயற்சியும் துவக்கத்திலே மண்கவ்வி இருக்கின்றது. முறுத்தெட்டுவே தேரர் ராஜபக்ஸாக்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தார் என்பது அரசியல் புரிகின்றவர்களுக்கு தெரியும்.
இப்போது இந்த தேரர்களின் பேரணி ஏன் வெற்றிபெறவில்லை என்பதனை சற்றுப்பார்ப்போம். 1.முன்பு போல் இலட்சம் மில்லியன் கணக்கில் காசு வீசி கூட்டத்துக்கு ஆள் சேர்க்க ராஜபக்ஸாக்களுக்கு வியாபாரிகள் செலவழிக்கத் தயாராக இல்லை.
2.ராஜபக்சாக்களிடம் குறுக்குவழிகளில் சேர்த்த கோடிக் கணக்கான காசுகள் இருந்தாலும் அதனை வீசி இவற்றுக்கு செலவு செய்ய அவர்கள் தயாராக இல்லை.
3.அனுர தலைமையிலான என்பிபி அரசு எந்தவிதமான நெருக்கடிகளும் இல்லாமல் அதன் பதவிக் காலத்தை தொடரும் என்று நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் ராஜபக்ச விசிரிகள் கூட இவற்றுக்கு இன்று காசு வீசமுன்வர மாட்டார்கள்.
4.போதை மற்றும் பாதள உலகத்தார் கடந்த காலங்களில் ராஜபக்ஸாக்களுக்கு தாராளமாக காசு செலவு செய்து தாமும் உழைக்கின்ற ஒரு பொறி முறை நமது அரசியலில் இருந்தது. இன்று அந்த நிலை நாட்டில் இல்லை.
5.மேலும் மக்கள் அறிவியல் ரீதியில் நமது அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் நாட்டில் ஊழல் மோசடி வன்முறைகளற்ற ஒரு ஆட்சி தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அதனால் இப்படியான கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றவர்களையும் அவற்றின் நோக்கங்களையும் மக்கள் விளங்கி வைத்திருக்கின்றார்கள். நல்லதும் கெட்டதும் மக்களுக்குப் புரிகின்றது.
6.எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பாலான பௌத்த தேரர்கள் இன்று கைக் கூலிகளின் பின்னால் போகத்தயாராக இல்லை. அனுர ஜனாதிபதியாகும் முன்னரே அவர்கள் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து அவருக்காக மிகப்பிரமாண்டமான தேரர்களின் மாநாட்டை கொழும்பில் நடாத்தி இருந்தார்கள்.
7.மீண்டும் ராஜபக்சாக்கள் அதிகாரத்தக்கு வருவார்கள் என்ற நம்பிகை அவர்களின் ஆதரவாலர்களுக்கே இல்லை. இப்படியான காரணங்களினால் ராஜபக்ஸாக்களையும் அவர்களின் கையாட்களையும் மக்கள் இன்று நிராகரிக்கின்றார்கள். எனவே இவர்களின் பின்னால் கூட்டம் வராது.
நாமல் பேருரை
நடந்தது என்ன?
கடந்த சில தினங்களாக நாட்டில் பேசப்படுகின்ற மற்றுமொரு தலைப்பு நாமலும் அவரது ஒக்ஸ்போர்ட்-கேம்ரிஜ் பல்கலைக்கழக பேருரையும். இந்தப் பேருரை பற்றிப் பேசுகின்ற போது பொதுவாக பல்கலைக்கழகங்களில் இப்படியான பேருரைகள்-சொற்பொழிவுகள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகின்றது என்று பார்ப்போம். பல்கலைக்கழகங்களில் பொதுவாக ஒரு மாணவ சங்கம் இருக்கும். அது மிகவும் பலமானது. அங்கு போய் பேருரை நடாத்தும் போது அப்படி அழைக்கப்படுகின்ற தலைவர்கள் தென்னாபிரிக்க நெல்சன் மண்டேலா குத்துச்சண்டை வீரர் முஹம்மட் அலி போன்ற ஜாம்பவான்களாகத்தான் இருப்பார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே.
இதுதவிர பலநூறு சங்கங்கள் அங்கு இருக்கும். பாடவாரியான சங்கங்கள் மற்றும் நாடுகள் வாரியான சங்கம் என்றும் அவை அமையலாம். அங்குள்ள இலங்கை மாணவர்கள் ஒரு பத்து இருபது பேர்கூட ஒரு சங்கம் வைத்திருப்பார்கள். அப்படியான ஒரு சங்கத்தில் போய் பேச நாமல் அழைக்கப்பட்டிருந்தார் என்றால் அது ஜீரணிக்கக் கூடிய ஒன்று.
அப்படி இருக்க கொலை கொள்ளை அடாவடித்தனங்கள் தில்லுமுல்லு பண்ணிய ஒரு உள்ளூர் அரசியல்வாதியை அப்படி பத்து இருபது பேர் வைத்திருந்த சங்கத்தில்கூட பேச அழைக்க மாட்டார்கள். எனவே இந்திய சுதந்திர தின நிகழ்வில் போய் நாமல் கலந்து கொண்டது. அங்கு நடந்த தேசிய விழாவுக்கு நாமலை அழைத்தது போல ஒரு இசுவை கொடுத்து மூக்குடைபட்டது அதுபோல காசு பறிக்கின்ற ஒரு ஏற்பாடாகதான் நாமலுக்கு இந்தச் சந்தர்ப்பமும்-ஏற்பாடும் என்ற ஒரு கதையும் இருக்கின்றது.
அதே பாணியில் ஒரு நிகழ்வுதான் லண்டனிலும் நடந்திருக்கின்றது. பின்னர் லண்டனில் இருக்கின்ற தமிழ் டயஸ்போரா எதிர்ப்பால் தமது பேருரை நடைபெறவில்லை என்ற ஒரு செய்தியை சந்தைப்படுத்தி நாட்டில் விடுதலைப்புலிகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் இலங்கையில் அரசியலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு ஏற்பாடு என்ற கருத்தும் இதில் இருக்கின்றது. எப்படியோ இந்த நாமல் மேற்சொன்ன பல்கலைக்கழங்கள் தவிர்த்துக் கொண்டது.
அதற்கு சொல்லப்படுகின்ற காரணம் அவரை இந்த பல்கலைக்கழகங்களுக்கு கால்வைக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கொலைகாரர்கள் ஊழல் பேர்வளிகள் என்று ஆயிரக்கணக்கான ஈமேல் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் 2500 தமிழர்தரப்பிலும் 5000 வரையிலான ஈமேல் சிங்கள மக்கள் தரப்பிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றதாம்.
இப்படி அழைக்கப்படுகின்ற பிரமுகர்கள் தொடர்பான எதிர்ப்புக்கள் வருவது இயல்பானதுதான் முன்பும் அப்படி வந்திருக்கின்றது. ஆனால் அழைக்கப்படுகின்ற அந்தப் பிரமுகரை அழைக்க வேண்டும் என்றும் ஈமேல்களும் ஏட்டிக்குப்போட்டியாக வருவதுண்டு. ஆனால் நாமலுக்கு ஆதரவாக ஒரு ஈமேல் கூட இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் வரவில்லையாம். அடுத்து இன்று உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் ஜனாதிபதி அனுர செல்வாக்கு எகிறிவருவதால் ஈகோவில் நாமலை ஊதிப் பெருப்பிக்கின்ற ஒரு ஏற்பாடாகத்தான் இந்த அழைப்பு என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நாமல் என்ன ஒரு கல்விமானா அல்லது அரசியல் சிந்தனையாளரா? இவர்கள் பண்ணையில் வளர்க்கப்படுகின்ற பிராணிகளைப் போல வாரிசு அரசியல் வாதிகள். இதுதான் அவர்களின் அடிப்படைத் தகைமை.
இந்த அழைப்பு நிராகரிப்பு பற்றி கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் 1947ல் ஆரம்பிக்கப்பட்ட யூனிவர்சிட்டி என்ற பத்திரிகையில் 2026.01.19 ஒரு கட்டுரை வெளி வந்திருக்கின்றது. அதில் நாமல் மற்றும் அவர்களின் தந்தை குடும்பம் மிகக்கொடூரமான இனவாதிகள். அரசியல் மோசடிக்காரர்கள் மனித உரிமைகளை மீறிய கும்பல் என்று அது குறிப்பிட்டிருக்கின்றது. அத்துடன் மஹிந்த ராஜபக்ச வய்டவாலங்களும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. மேலும் டசன்கணக்கான தழிழ் அமைப்புக்கள் நாமல் பேருரையை எதிர்ப்பதாகவும் அதில் எழுதப்பட்டிருக்கின்றது. மேலும் தாஜூதீன் படுகொலை சட்டதரணி பரீட்சை எழுதிய முறை நீதி மன்றங்களில் நாமலுக்கு இருக்கும் வழக்குகள் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாமல் லண்டன் போகும் முன்னரே பேருரை இரத்துச் செய்யப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் இவைபற்றி தன்னிடம் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தில் அவராகவே நிகழ்வைத் தவிர்த்துக் கொண்டாரா என்றும் ஒரு சந்தேகம் இதில் இருக்கின்றது.





