தேசிய அரசும் பதவி நீடிப்பும்!

-நஜீப் பின் கபூர்-

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு விருப்பமில்லாத ஒரு போக்கு எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் இது நமது நாட்டில் பல மடங்கு உச்சத்தில் நிற்க்கின்றது. அது சட்டம் சம்பிரதாயம் எல்லாவற்றுக்கும் அப்பால் வன்முறையில் கூட வந்து நிற்க்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்தற்குப் பின்னர் 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் இந்த நாட்டில் புதிய அரியல் யாப்புக்கள் உருவாக்கப்பட்டன. 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு நாட்டை ஒரு சோசலிச குடியாரசு என்று தன்னை அழைத்துக் கொண்டது. ஆனால் அன்று எதிரணியில் இருந்த ஜே.ஆருக்கு இது பிடிக்க வில்லை.

அவர் மேற்கத்தியப்  போக்குடையவராக இருந்தார். சோசலிஸம் அவருக்குப் பிடிக்கவில்லை. திறந்த பொருளாதாரம் அவரது கொள்கையாக இருந்தது. எனவே 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். மிகக் குறுகிய காலம் மட்டும் நாட்டில் இருந்த 1972-புதிய குடியரசு அரசியல் யாப்பை தூக்கி குப்பையில் போட்டு, 1978ல் புதியதோர் அரசியல் யாப்பை இங்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது சர்வதேச அரங்கில் மேற்கு-கிழக்கு என்ற பிளவுகள் இருந்ததால், மேற்கு நாடுகள் இது விவகாரத்தில் ஜே.ஆருக்கு பக்க பலமாக இருந்திருக்க வேண்டும். நாட்டிலுள்ள தேர்தல் முறைகளையும் இங்கு வாழ்கின்ற இனங்கள் வாக்களிக்கின்ற ஒழுங்குகளையும் அவதானித்த ஜே.ஆர், தனது ஐதேக. இந்த நாட்டில் இருக்கும் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ரீதியில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தெரிவு என்ற ஒன்றை அந்த யாப்பில் முன்வைத்தார்.

அண்மை வரை அதில் அவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி நல்ல இலாபங்களையும் பெற்றும் வந்தது. இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகங்களும் பொதுவாக ஐதேக. மீதுதான் அதிக நம்பிக்கை வைத்து வந்திருந்தது. ஒரு சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக சந்திரிக்க அம்மையார் காலத்தில் இதில் மாற்றங்கள் நடந்திருந்தன. அதற்குக் காரணம் அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பல தடவைகள் அதிகாரத்தில் இருந்ததும் அந்தக் கட்சிக்குள்ளே நடந்த முரண்பாடுகள் மற்றும் கொலைகள் என்பன இந்த மாற்றங்களுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

1972 கொண்டு வரப்பட்ட சோசலிச யாப்பாலோ அல்லது 1978 கொண்டு வரப்பட்ட ஜே.ஆரின் தாரான்மை வாத அரசியல் யாப்பாலோ நாட்டில் ஏதும் பாரிய மாற்றங்கள் நடைபெறவில்லை. மக்களுக்கு இரு தரப்பினாலும் ஆகாயத்தில் இருக்கின்ற கோட்டைகளை காலடிக்குக்கு கொண்டு வந்து தருவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனவேதான் தெற்காசியாவிலும் ஒரு சிங்கப்பூர் மலர்கின்றது என்ற பூச்சாண்டிக் கதைகளை அவர்கள் நமக்குச் சொல்லி வந்தார்கள். 1972,1978க்குப் பினனர் 1983ல் ஜே.ஆர்-ரஜீவ் ஒப்பந்தத்தில் தான் யாப்பில் சில கனதியான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன அதாவது பதிமூன்று என்ற தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்ற விவகாரம்தான் அது.

அதற்குப் பின்னர் அவ்வப்போது தொடர்ச்சியான மாற்றங்கள் அரசியல் யாப்பில் நடந்தாலும் 20வது திருத்தம் அந்த யாப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது முழுக்க முழுக்க தலைவர்களின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்பது அனைவரும் தெரிந்த கதை. இப்போது மீண்டும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பான கதைகள் நெடுநாளாகவே இந்த நாட்டில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தற்போது பதவியில் இருக்கின்ற ராஜபக்ஸாக்கள் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்றங்கள், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமைகள் கிடையாது. பதிமூன்று ஒழிப்பு, ஒரு நாடு இங்கே ஒரு சட்டம் என்றுதான் பேசி வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் மீண்டும் பதிமூன்று விவகாரத்தில் ‘யூ டேன்’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாபெரும் பொருளாதாரா நெருக்கடிகளுக்கு முன்னால் இவர்களுக்கு இந்தியாவின் காலடியில் போய் விழுவதைத் தவிர வேறு எந்த மார்க்கங்களும் தெரியவில்லை. சீனாவை வைத்து சமாளிக்கலாம் என்று பார்த்தாலும் அது சாத்தியப் படவில்லை.

நமக்குத் தெரிந்த அரசியல் படி இன்று நாடு சர்வதேசத்தால் பல வழிகளிலும் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றது. மேலும் தற்போது நாட்டில் பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் மீது சர்வதேச ரீதியில் நம்பகத் தன்மையற்ற பார்வையே இருந்து வருகின்றன. போர் குற்றங்கள். ஊழல் மோசடிகள். நம்பகத் தன்மையற்ற இராஜதந்திரம். இதனால் ஆபத்துக்குக் கை கொடுக்க ஆளில்லாத நாடாக நாம் இருந்து வருகின்றோம்.

 

இதனால்தான் இன்று அவர்கள் இந்தியாவிடம் சற்றுப் பணிந்து வருகின்ற நிலை காணப்படுகின்றது. இதனை இந்தியா எப்படி உபயோகித்துக் கொள்ளப் போகின்றது என்பது தெளிவில்லை. நாம் இந்த கட்டுரையை எழுதுகின்ற நேரம் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி துவங்கி இருக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் இந்தியா கை கொடுத்ததால் அந்த ஆபத்து இன்னும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போய் இருக்கின்றது.  பேராபத்திலிருந்து  நாடோ ஆட்சியாளர்களோ முற்றாக இன்னும் விடுபடவில்லை-விடுபடவும் முடியாது.

சூடான், லெபானான், சிம்பாபே போன்ற நாடுகள் பற்றிப் பேசப்படுகின்றது. ஆனால் அந்த நாடுகள் கூட இந்தளவு கடன் வாங்கி தன்னை அழித்துக் கொண்ட நாடுகளாக இல்லை. அதற்கான கதைகளுகும் காரணங்களும் வித்தியாசமானவை. வாங்குகின்ற கடனிலும்  மூலதனங்களிலும் கொள்ளை. மூலதனமிட்ட எந்த ஒரு இடத்திலும் எதிர்பார்த்த வருமானம் நாட்டுக்குக் கிடைக்க வில்லை.

இந்த பின்னணியில் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்று பார்ப்பபோம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்வர்கள் தொடர்ந்தும் அந்தப் பதவியில் ஒட்டிக் கொள்வதற்கு தற்போது தமக்கு இருக்கின் வழிகள் என்ன என்று அவர்கள் குறுக்கு வழிகளிலும் யோசிக்கின்றார்கள். மக்கள் மத்தியில் தமக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதையும் அவர்கள் புரிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.

 

எனவேதான் தாம் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக தேவையான மாற்றங்களை அவர்கள் புதிய யாப்பில் செய்து கொள்ள எதிர்பார்க்கின்றார்கள். இது மக்களுக்கத் தேவையான யாப்பு என்பதனை விட அதிகாரத்தில் இருப்பவர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்கிற யாப்பாகத்தான் இருக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

சில காலத்துக்கு முன்பு பதிமூன்றுக்கு எதிராக குரல் கொடுத்த சரத் வீரசேக்கர மற்றும் கடும் போக்க இனவாதிகள் தற்போது ஒடுக்கிப் போய் நிற்க்கின்றார்கள். இந்தியாவின் தலையீடு காரணமாக பதிமூன்றின் மூலம் பெரிய மாற்றங்கள் நடக்கா விட்டாலும் இருந்ததை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று மாகாண சபைகளுடனே கதைகள் முற்றுப் பெறவும்தான் அதிக வாய்ப்பு இருக்கின்றன. மோடிக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் எல்லாம் வெறும் ஏமாற்றுக்களேயன்றி வேறில்லை. அதனால்தான் இன்று சொல்லப்படுகின்ற யாப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே  இரகசியமாக வடிவமைக்கப் படுட்டுக் கொண்டு வருகின்றது. கடந்த திசம்பரில் இது தொடர்பான குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகச் சொன்னார்கள். இன்று வரை நடக்கவில்லை.

இந்த வருடத்தில் தருவதாகச் சொல்லி வருகின்றார்கள். இந்த வருடம் நிறைவடைய இன்னும் ஏறக்குறைய ஒரு வருடங்கள் இருக்கின்றன.  யாப்பு, தேர்தல், அரசியல் அதிகாரங்கள் என்பவற்றை கானல் நீரைப் போன்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டி வரும். அதற்கு மேல் ஏதும் காரியங்கள் நடக்க வாய்ப்பு வருமா என்று தெளிவாகத் தெரியவில்லை. நாட்டில் தள்ளிப் போய் இருக்கின்ற பொருளாதார நெருக்கடி நாட்டுக்குள் புகுந்து அட்டகாசங்கள் பண்ணுகின்ற போது, மக்களுடைய தேவைகள் நாம் மேற்சொன்வைகளாக இருக்க மாட்டாது.

பொதுவாக இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் எல்லோருக்கும் போல் தமது காலத்தில் கொள்ளையடித் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதும் அதிலிருந்து தமக்குப் பாதுகாப்புத் தேடுவதாகவுமே சமகால ஆட்சியாளர்களின் முழு  அவதானமும் இப்போது  இருக்கின்றது. மேலும் வருகின்ற நிலமைகளுக்கு ஏற்ப நாட்டில் எப்படி அதிகாரத்தில் நின்று கடைசி வரையும் சுரண்ட முடியும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இதிலிருந்து மக்கள் தங்களை எப்படிக் காப்பற்றிக் கொள்ள முடிகின்றது என்பதுதான் அவர்கள் கண்டறிய வேண்டி இருக்கின்றது.

அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றவர்களும் அரச உயர் மட்டப் பதவியில் இருக்கின்றவர்களும் இன்று நமது நாட்டில் கூட்டுச் சேர்ந்து அரச சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளயடிக்கின்ற ஒரு நிலை இங்கு காணப்படுகின்றது. அவர்கள் ஒருவர் ஒருவர் தமக்குள் ஒத்துழைத்துக் கொள்கின்றார்கள். இதற்கு நல்ல ஒரு உதாரணம் தான் அண்மையில் சீனி, தேங்காய் எண்ணை, மலசலப் பசளை,  போன்ற கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவருக்காவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?

அண்மையில் வெள்ளைப்பூடு கொள்ளை விவகாரத்தில் தகவல்களை வெளியில் சொன்னது மட்டுமல்லாது அதைப் பற்றி துணிந்து முறைப்பாடு செய்தவர் இன்று குற்றவாளியாக நடாத்தப்படுகின்ற ஒரு நிலை. கதை இதுதான். அவர் தனது தொழில்-தேவை நிமித்தம்  அமெரிக்க போக கடந்தவாரம் கடுநாயக்க விமான நிலயம் சென்ற போது, அவருக்கு எதிராக முறைபாடுகள் இருப்பதாகச் சொல்லி அவரது பயணம் தடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் தற்போது மனித உரிமைகள் தொடர்பான அமைப்புக்களுடன் நடவடிக்கைகளுக்காக இறங்கி இருக்கின்றார். இந்த தகவல்களை நாம் தனிப்பட ரீதியிலும் தெரிந்து வைத்திருக்கின்றோம். இதற்காக அவது அமைச்சர் பந்துலவையும் மேல் மாகாண பொலிஸ் அதிகாரியையும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றார். இது தான் நமது நாட்டு நிருவாகம்.

இந்த அரசியல் பின்னணியில் நாட்டில்  நடக்கின்ற சில கதைகளையும் அதன் உள் நோக்கங்களையும் இப்போது சற்றப் பார்ப்போம். உள்ளாட்சி மன்றங்களின் சேவைக் காலத்தை தற்போது அரசு நீடித்திருக்கின்றது. இதற்கு அரசுக்கு தேர்தல் தொடர்பாக இருக்கின்ற அச்சமே முதல் காரணம். ஆனால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் சொல்லுகின்ற காரணம்.! கொரோனா தொற்றால் உறுப்பினர்களுக்கு அதாவது சபைகளுக்கு தமது கடமைகளை சரியாக செய்ய முடியாமல் போனதால் மேலதிகமாக ஒரு வருடம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லுகின்றார்கள்.

இந்தக் கதையில் ஏதாவது அடிப்படை இருக்கின்றதா? உள்ளாட்சி சபைகளில் கொரோனா நெருக்கடி சரியாக கடமைகள் செய்ய முடியவில்லை என்று எவராவது முறைப்பாடுகள் கொடுத்திருக்கின்றார்களா? அடுத்து வரும் கதையையும் இதனுடன் முடிச்சுப் போட்டு நாங்கள் உங்களுக்கு கூறுகின்றோம். அண்மையில் ஜனாதிபதி  புது வருடத்தில் கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்குப் போய் இருக்கின்றார். அங்கே ஒரு கிராமத்து இளைஞன் அவரிடம் வந்து கடந்த இரு வருடங்களாக உங்களுக்கு கொரோனா பெரிய தொந்தரவு பண்ணிப் போட்டது. நீங்கள் அந்த இரு வருடங்களையும் மேலதிகமாக எடுத்துக் கொண்டு அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று கேட்டாராம்.

இது நமக்ககு ஜனாதிபதி சொன்ன செய்தி. நாம் அனைவரும் கேட்டது. அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் அந்த இளைஞன் பாணியில் கதைக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். டயானா கமகே, அமைச்சர் சந்திரசேன மட்டுமல்லாது பல பௌத் தேரர்களும் இதில் இருக்கின்றார்கள். இன்னும் சிலர் நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக இருந்து சில காலம் ஆட்சிய செய்தால்தான் இந்த நாட்டை செய்ய முடியும் என்று வேறு ஜனாதிபதியை முறுங்கை மரத்தில் ஏற்றி அவரிடம் இருந்து பிடுங்க வேண்டியதை இப்போது பிடுங்கியும் வருகின்றார்கள். இப்படி எல்லாம் பேசுகின்ற போது நமது ஜனாதிபதியும் குசியாகி விடுவதை நாம் பல இடங்களில் பார்த்திரக்கின்றோம். மேற்சொன்ன இளைஞன் கதை ‘செட்டப்போ’ என்று வேறு நமக்கு சந்தேகம்.!

இந்தக் கதைகளை நாம் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நமது நாட்டில் ஒரு யாப்பு இருக்கின்றது. நீதி மன்றங்கள் இருக்கின்றன. என்று பலர் தர்க்கம் புரிய முடியும். இந்த நாட்டில் அரசியல் யாப்புக்களையும் நீதிமன்றங்களையும் கண்டு கொள்ளாமல் எத்தனையோ அட்காசங்கங்கள்   சட்டத்துக்குப் புறம்பாக நடந்துதானே வருகின்றது. என்பது அனைவரும் தெரிந்த விடயம். இதனை நாங்கள் மட்டுமல்ல ஜேவிபி அரசியல் செயல்பாட்டாளரான ஹந்துன் ஹெத்தி கூட எச்சரித்திருக்கின்றார். சர்வஜன வாக்கொடுப்புக்களுக்குக் கூட போகாமல் இந்த பதவி நீடிப்பு முயறச்சிகளுக்கு இடமிருக்கிறது.

அடுத்து நாங்கள் தலைப்பில் சொல்லி இருக்கின்ற விடயம் தேசிய அரசாங்கம் பற்றிய கதை. இது முற்றிலும் அரசியல் கோமாளிகள் சில பேரது கதை. அந்த அரசாங்கத்தில் ரணில் பிரதமராம். அவரது கட்சிக்கு ஐந்து தேசிய பட்டியல் நியமனங்களாம், சஜித் அணியில் இருந்து தேசிய அரசுக்கு ஐந்து பேராம் இது எல்லாம்ஷதான் தேசிய அரசாங்கம் என்று ஒரு கதைக்கு வைத்தக் கொள்வோம். அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சனை அடுத்தநாள் இரவே தீர்ந்து விடுமா என்று நாம் கேட்க்கின்றோம். இப்படியான கதைகள் எல்லாம் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களது சிந்தனையை திசை திரும்பும் செயல் என்பதுதான் எமது கருத்து. எனவே குடிமக்களோ நெருக்கடி மிக்க இந்த நாட்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பலி

Next Story

'நூற்றாண்டு விழா அழைப்பு'