-நஜீப் பின் கபூர்-
(இது முன்பு பத்திரிகையில் பிரசுரமான ஒரு கட்டுரை)
ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்த மரணம்!
கொத்துக் கொத்தாக வந்து குவிகின்ற கொரோனா தொற்றாளர்!
பொதுத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் துரித கொதியில்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு தலைமை தாங்குது யார்!
வரலாற்றில் நாடு பாரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது!
தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கள் செய்யப்பட்ட நிலையில், ரம்மியமான மலையகத்தில் கொதிநிலை அரசியல் ஆரம்பமாகும் இந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதவகையில் மிகப் பெரியதேர் அரசியல் இழப்பு அங்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த இழப்பு நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கும் பிரதமர் எம்.ஆருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. நெருக்கடியான நேரங்களில் தம்முடன் ஒன்றாக இருந்தவர் என்றவகையில் ஜூனியர் தொண்டா மீது அவர்களுக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்து வந்திருக்கின்றன. மலையக அரசியலில் ஜூனியர் தொண்டா பற்றிய கதைகளைச் சொல்வதற்கு முன்னர் வழக்கம் போல் தேசிய அரசியல் நிகழ்வுகளை சற்றுப் பார்ப்போம்.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நாம் சொல்லி வருவது போல் கொரோனா நமது நாட்டில் வலுவான ஆட்டத்தில் இறங்கி நிற்பதை அவதானிக்கலாம். அதே போன்று உள்நாட்டில் நாம் சிறப்பாக கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றோம் என்று நமக்கு சொன்னவர்கள் இப்போது மிகப் பெரிய ஆபத்து என்று கூறுகின்றார்கள்.
நமது சுகாதார அமைச்சர் பவித்ரா தேவியோ உள்நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது போல் வெளிநாட்டிலிருந்து வருகின்ற கொரோனாத் தொற்றாளர்களையும் நாம் சுகப்படுத்தி அதிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கின்றார். அவர் தகவல் நல்ல செய்திதான். இதுவரை கொரோனாத் தொற்றாலர்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஐந்து பத்து அல்லது இருபது முப்பது என்றுதான் இருந்தது. அதிலும் பாதிக்கப்பட்வர்கள் பெரும்பாலானவர்கள் கடற்படை படையினர்.
இப்போது நாளொன்றுக்கு இந்த எண்ணிக்கை 130, 150 என்று அதிகரித்தி ருகின்றது. இவர்களில் மிகப் பெரிய எண்ணிக்கையாளர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் பணியாற்றிய தொழிலாளர்கள். அவர்கள் இப்போது கொத்துக் கொத்தாக இங்கு வந்து குவியத் துவங்கி இருக்கின்றார்கள். கட்டாரில் மட்டும் 1500வரை இலங்கையருக்குக் கொரோனா. இந்த நாட்டில் இலட்சக் கணக்கான பிர நாட்டவர் பணிபுரிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வருபவர்களை மனித வெடி குண்டுகள் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டதை ஜேவிபி தலைவர்களில் ஒருவரான சுனில் ஹதுஹெத்தி கடுமையாக விமர்சித்த வருகின்றார். இதற்கிடையில் கொரோனா தொற்றியவர்களை எமது நாட்டுக்குள் அனுப்புகின்ற குவைத் மன்னர் ஒரு நாய் மனிதனல்ல என்று முகநூல்வாயிலாக தற்போது பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இது இராஜதந்திர நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதற்கும் அதிக வாய்பு இருக்கின்றது. மேலும் நோய் தெற்றியவர்கள் அங்கே மரணித்துப்போங்கள்.; எமது ஜனாதிபதி, பிரதமரை விமர்சித்துவிட்டு இங்கே வர வேண்டாம் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு கொடூரமான வார்த்தைகள்!
கொரோனா தொற்று ஆரம்ப நாட்களில் இவர்கள் தம்மை நாட்டுக்குள் அழைத்துக் கொள்ளுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக நாட்டில் பெரும் நிதி நெருக்கடி, வெளிநாடுகளில் தொழில் பார்க்கின்றவர்கள் நமக்கு உதவி செய்ய வேண்டும், பணம்தர வேண்டும் என்று கூட அங்குள்ள நமது தூதுவராலயங்கள் அவர்களிடத்தில் கோட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தத் தகவலையும் நாம் அப்போதே சொல்லி இருந்தோம் அதே போன்று அரசாங்க ஊழியர்களிடத்தில் ஒருமாத சம்பளம் வேண்டும் என்று அனுப்பப்ட்ட கடிதம் தொடர்பாகவும் நாட்டில் கடும் விமர்சனங்கள் ஏற்பட்டு தற்போது தேர்தல் பின்னணியில் அந்தக் கதை மௌனித்திருக்கின்றது.
கோடி கோடியாய் நமக்குப் அன்னியச் செலவானியைக் கொண்டு வந்து கொட்டிய நமது உறவுகள் இப்போது நோய்வாய்ப்பட்டு நாட்டுக்குள் வருகின்றனர். வருமனாமும் கிடையாது தொழிலும் கிடையாது. வந்தவர்களும் வெரும் கைகளுடன் வந்து குவிகின்றார்கள் என்றால் நிலமையை ஊகித்துக் கொள்ள முடியும். நோயாளிகளை உங்கள் நாடுகளுக்குப் போய்விடுங்கள் என்று அந்த அரசுகள் அழுத்தங்களைக் கொடுக்கின்றன. மறுபுறத்தில் இந்த நெருக்கடி நிலையில் அவர்களை இங்கு அழைத்துக் கொள்வது ஆபத்து என்று அரசு பயப்படுகின்றது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளியில் அந்த அரசுக்குத் தெரியாமல் பணிபுரிகின்றவர்கள் நிலமை மிக மோசமாக இருக்கின்றது. ஊரடங்கு நேரத்தில் எங்கே தலைமறைவாக நிற்பது.? சாப்பாட்டுக்கு வழியில்லை.
நமக்குத் தெரிந்த இப்படியான பலர் நோய்வாய்பட்டு மிக ஆபத்தான நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சென்று சிகிச்சை பெறவே முடியாது. மரணப்படுக்கையில் இருக்கின்ற அவர்கள் யாராவது கொடுக்கின்ற வில்லைகளை சாப்பிட்டு கடவுள் புன்னியத்தால் பிழைக்கலாம் அல்லது இந்த உலகைவிட்டுப் போகலாம் என்ற நிலை.
இந்த நேரத்தில் சில எதிர்கட்சிகள் சொல்வது போல நாம் எல்லா விவகாரங்களிலும் அரசை சாட விரும்பவில்லை. மைத்;ரி-ரணில் அரசுகள் அல்லது சஜித்தான் வெற்றி பெற்று ஜனாதிபதியாகி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த கொரோனா நெருக்கடிக்கு அவர்கள் தீர்வு தந்திருப்பார்களா? தங்திருக்கத்தான் முடியுமா?
எனவே நாம் நாட்டு மக்களுக்குச் சொல்கின்ற செய்தி.! கொரோனா பாவப்பட்டு நம்மை விட்டு விலகிக் கொண்டாலும் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் முகம் கொடுக்க இருக்கின்றோம். அப்போது சில வேலை கொரோனாவுக்கு இலக்காகி நாம் மரணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுகூட மக்கள் விரையில் கதைப்பார்கள். அந்தக் கதைகளை நாமும் உயிருடன் இருந்தால் கேட்க முடியும்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலை ஒரு வர்த்தகமாக கருதி பிழைப்பு நடத்துகின்றவர்கள் முன்பு போல் அரசியலில் பெரிய வருமானங்களை அடைவது சற்றுக்கடினமான காரியமாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். எனவே தற்காலத்தில் வாழ்கின்ற தலைமுறையினருக்கு கொரோனா கதையைச் சொல்லிச் சொல்லி, போர் இல்லாதிருந்தால் நாங்கள் ஜப்பானாகி இருப்போம் சிங்கப்பூராகி இருப்போம் என்று கதைவிட்டது போல் கொரோனா வந்திருக்காவிட்டால் நாம் அமெரிக்காவையும் சீனாவையும் வெற்றிருப்போம் என்று நமக்குப் புதிய கதைகளைச் சொல்ல அரசியல்வாதிகள் வருவார்கள்.
உள்நாட்டில் உற்பத்;திகள் இல்லை, வெளிநாட்டு வருமானங்கள் இல்லை, வெளிநாட்டுக் கடன் தொல்லை, புதிய கடன் பெறுவதில் நெருக்கடிகள், பெற்ற கடன்களும் அதற்கான வட்டிகளையும் கொடுப்பதில் சிக்கல், அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை. ஏற்கெனவே பொருளாதரா நிலையில் நோய்வாய்பட்டிருந்த நமக்கு கொரோனா ஏற்படுத்தி இருக்கின்ற இந்த நாசத்திலிருந்து நாம் எப்படி மீண்டெலமுடியும் என்று கேள்விகளுக்கு கண்ணுக் கெட்டிய தூரத்தில் பதில் கிடையாது. தற்போது குடும்பங்களுக்கு கொடுக்கின்ற அரசு மற்றும் தனிநபர் உதவிகள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீடிக்கப்போகின்றன. என்பதனை நினைக்கும்போது அச்சமாக இருக்கின்றது. எனவே பட்டினிச்சாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உலகம் குறிப்பாக நமது நாடு கண்டறிய வேண்டி இருக்கின்றது. எனவே கொரோனாவுடனான அல்லது அதற்குப் பின்னய அரசியல் மனித குலவரலாற்றில் புதிய பல அனுபவங்களை நிச்சயம் நமக்கு கற்றுத் தரும்.
தற்போது எப்படியும் தேர்தலை நடத்த வேண்டிய நிலையில் நாடு இருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினர் தேர்தலுக்கான பணிகளை முனைப்புடன் செய்து கொண்டிருக்கின்றனர். நம்முடன் தொடர்பு கொண்ட ஒரு உயர் மட்;ட அதிகாரி தற்போது கொரோனா பின்னணியில் நடக்கின்ற தேர்தலில் நாம் எதிர் நோக்கின்ற சவல்களும் அதனை வெற்றி கௌ;வதற்கான மார்க்கங்களைப் பற்றித்தான் வைத்தியத்துறையினருடன் அதிகமாக தற்போது பேசி வருகின்றோம். கொரோனா அதிரடி ஆட்டமொன்றை இறுதிக்கட்டத்தில் ஆரம்பித்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று நாங்கள் கேட்டபோது கற்பனை செய்யக் கஷ;டமாக இருக்கின்றது என்ற பதில்! சில விடுதலைப் போராட்டங்களில் இலட்சக் கணக்கானவர்களை இழந்தும் வெற்றிக் கம்பத்தை அடைந்த வரலாறுகள் இருக்கின்தே என்று நாம் கேட்ட போது பலத்த சிரிப்பு மட்டும் மறுமுனையில் கேட்டது.
நமது தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நீங்கள் பக்கச்சார்பானவர் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகின்றதே அதற்கு என்ன பதில் என்று கேட்ட போது, நிச்சயமாக நாம் பக்கச்சார்பானவர்கள் என்று கூறி சில நெடிகள் மௌனித்திருந்தார். என்ன நீங்கள் பேசுகின்றீர்கள் என்று ஊடகக்காரர்கள் கேட்க முன்னர் அவரே நாம் குடி மக்களுக்குப் பக்கச்சார்பானவர்கள் என்றார். எமது எல்ல முடிவுகளும் குடிகள் நலன்களை மையப்படுத்தியதாகவே இருக்கும் என்றார் மஹிந்த தேசப்பிரிய.
இப்போது குளிரான மலையகத்துக்கு நமது வாசகர்களை கூட்டிப்போகலாம் என்று எதிர்பார்க்கின்றோம். ஒரு விமர்சனக் கண்னோட்டத்தில் இது விவகாரத்தில் கதையைச் சொல்ல நினக்கின்றோம். சௌம்மியமூர்த்தி தொண்டமான் இலங்கை இந்திய வம்சாவலி மக்களின் தன்னிகரில்லாத தலைவன். அது இந்த நாள்வரையும் நிலைத்திருக்கின்றது என்பது எமது கருத்து. தனக்குப் பின்னர் தனது அரசியல் இயக்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குத் தலைமைத்துவம் கொடுப்பதில் தனது குடும்பத்தில் ஒரு நல்ல வாரிசு இல்லாமல் இருந்தது அவருக்கு பெரும் வேதனையாக இருந்து வந்திருந்தது. இதனை அவர் தனது சகாக்களிடம் பகிரங்கமாகவே கூறியும் இருக்கின்றார்.
கட்டுரையாளன் பக்கத்தில் இருக்கின்ற ஒரு சந்திப்பில் (கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் நடந்த மு.கா. பேரணிக்கு அவர் வருகை தந்த நேரம் நடந்த சம்பவம் இது.) இந்தக் கதையை அவர் மு.கா. தலைவர் அஷ;ரஃபிடம் பேசிக் கொண்டிருந்தார். பகிரங்கமாக அந்த விழாவில் மலையகப் பெரும் தலைவர் தொண்டா பேசியபோது நான் பல தசாப்தங்களில் அடைந்த வெற்றிகளை மு.கா.தலைவர் அஷ;ரஃப் சில வருடங்களில் ஈட்டி வருவது எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது என்று அங்கு பேசினார்.
அப்படியானல் சீனியர் தொண்டாவுக்கு வாரிசுகள் இல்லையா என்று பலர் கேட்கலாம். வாரிசு இருந்தது. அது அரசியலிலும் செலாற்றி, ஒரு காலத்தில் மத்திய மாகாணசபையின் கல்வி அமைச்சராகவும் அந்த மனிதன் இருந்தார். அவர்தான் ராமநாதன் தொண்டமான். ஆனால் அந்த மனிதன் ஆளுமைமிக்க ஒரு தலைவராக மக்கள் மத்தியில் எடுபடவில்லை. உடல் ரீதியாகவும் அவர் மிகவும் பலயீனப்பட்ட மனிதனாகவே இருந்தார். வயதை விட முதுமையான ஒரு தோற்றமே அவரிடம் இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் அறுமுகம் தொண்டமனின் அரசியல் பிரவேசம் நடக்கின்றது. பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அறுமுகம், சௌமியமூர்த்தி தொண்டமானின் மகன் அல்ல பேரன். முன்பு நாம் குறிப்பிட்ட சௌம்மியமூர்த்தி தொண்டமனின் மகன் இராமநாதன் தொண்டமன் அவர்களது மகன். அப்போதே தனது மகன் இராமநாதனைவிட தனது பேரன் அறுமுகம்தான் தனக்குப்பினால் தனது அரசியல் இயக்கத்தை முன்னெடுததுச் செல்லக் கூடிய நல்ல தெரிவு என்பது சீனியருக்குப் புரிந்தது.
அந்த நிகழ்வும் அப்படியே அமைந்தது. சௌம்மியமூர்த்தி தொண்டமானுப் பின்னர் தொண்டமான் குடும்பத்திலிருந்து தொழிலாளர் தலைவராக ஆறுமுகம் பிறப்பெடுத்தார். இவர் இந்த தொழிலாளர் அமைப்புக்குத் தலைத்துவம் கொடுத்த போது அப்போது கட்சியின் முன்னணி அதாவது தலைவர் தொண்டாவுக்கு அடுத்த நிலையில் இருந்த பலரது அதிர்ப்தி கட்சியில் எழுந்தது. இதில் செல்லச்சாமி முக்கியமானவர். யார் என்ன விமர்சனங்கள் சென்னாலும் சௌமியமூர்த்தி தொண்டாவுக்குப் பின்னர் மலையக மக்களுக்கு நல்ல துடிப்பு மிக்க தலைவராக இந்த ஆறுமுகம் தொண்டமான் பணியாற்றி வந்திருக்கின்றார் என்தையும் மறுப்பதற்கில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் கண்டி-மகவளி ரிச் ஹோட்டலில் கட்டுரையாளனுக்கு ஆறுமுகம் தொண்டமானை சந்திக்க வேண்டி வந்தது. இது ஆறுமுகத்தின் அரசியல் நகர்வும் பிரச்சாரங்களும் தெடர்பாக சந்திப்பாக இருந்து. இந்த சந்திப்பின் போது பிரபல சட்டத்தரணி பஸ்லின் வாஹிட், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஆக்ரா எஞ்ஜினியரிங் உரிமையாளர் நளீர் ஆகியோர் உடனிருந்தார்கள்.
இப்போது நீங்கள் பசுமை அணியில் இறங்கி இருக்கின்றீர்கள். தற்செயலாக இந்த அணி தோற்றுப்போனால் என்ன பண்ணுவீர்கள் என நான் ஆறுமுகம் தொண்டமானிடம் கேட்ட போது. அவர் பலமாக சிரித்துவிட்டு. இந்த முறை நீங்கள் கொடுத்த பச்சை சேர்ட் எனக்கு வாய்க்கவில்லை. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நீல சேர்ட்டை வாங்கி மாட்டிக் கொண்டு பதவிக்கு வரும் அரசில் இணைந்து நமது சமூக நலனுக்கான அரசியலை முன்னெடுப்பேன் என்று எம்மிடத்தில் அன்று சொல்லி இருந்தார்.
இந்த செய்தியை நான் ஊடகங்களில் அடுத்த நாளே பதிவிட்டிருந்தேன். இந்தச் செய்தியைப் படித்த அவரது முக்கியஸ்தர் ஒருவர் என்னிடத்தில் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த முக்கியஸ்தர் முன்னிலையில் எனது அந்த செய்தியால் உங்களுக்கு ஏதும் சங்கடமா என்று தலைவர் ஆறுமுகத்தை நான் கேட்டேன். யார் சொன்னது.? நான் சமூகத்துக்காக துனிச்சலுடன் அரசியல் தீர்மானங்களை எடுப்பவன் என்பதனை நமது தலைவர்கள் புரிந்து கொள்ள இவ்வாறான செய்திகள் உதவிபுரியம் என்று குறித்த நபர் முன்னே என்னிடத்தில் சொன்னார்.
மரணிக்கும்வரை சௌமியமூர்த்தி தொண்டமான் மலையாக அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது போல் ஆறுமுகம் தொண்டமானால் தொடர்ந்தும் அதனைப் பாதுகாக்க முடியவில்லை. பல தலைமைகள் புதிதாக அங்கே மூளைத்தன. இந்திய வம்சாவலி மக்கள் பல கூறுகளாக இப்போது பிளவு பட்டிருக்கின்றார்கள். அங்கே மலைக்கும் மலைச்சாரல்களுக்கும் ஒவ்வொரு தலைவர்கள். இது ஆரோக்கிய நிலையா ஆபத்தான விடயமா என்பதனைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டி இருக்கின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை தொண்டா எதிரணியினர் மலையத்தில் கைப்பற்றி தொண்டாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர். அதற்காக ஆறுமுகம் தொண்டமான் துவண்டு பேய்விடவில்லை. மைத்திரி-ரணில் நல்லாட்சியில் அரசுடன் இணைந்து கொள்ள அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்த முடிவுளை மலையகத்தின் புதிய தலைமைகள் முறியடித்து விட்டன. அல்லது அந்த அரசிலும் தொண்டா ஒரு அமைச்சராக இருந்திருப்பார்.
தற்போது வெற்றி வாய்ப்பு மிக்க ராஜபக்ஸாக்கள் அரசாங்கத்தில் தனிப் பெரும் தலைவராகவும் மலையகத்தின் செல்வாக்கான அமைச்சைப் பெற இருந்த ஆறுமுகத்தை இன்று மலையகம் இழந்து விட்டது. இது மலையக மக்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவும் இருக்கின்றது. இனி அவர் திரும்பி வரப்போவதில்லை. இன்று (31.05.2020) அண்ணாரின் இறுதிச் சடங்குகள் ஹற்றன்-நோர்வூட்டில் நடைபெறுகின்றது. தலைவனின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக் கணக்கான தொண்டர்கள் கூடுவதை கொரோனா தடுத்திருக்கின்றது.
நுவரெலியாவில் அவர் இடத்திற்கு மகன் சட்டத்தரணி ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றது. நாம் அறிந்தவரை இ.தொ.கா.வுக்கு யார் இதன் பின்னர் தலைமை தாங்கப் போகின்றார்கள்.? மூத்த சில தலைவர்களும் தொழிற் சங்கவாதிகளும் அங்கு இருந்தாலும் அவர்கள் ஆறுமுகம் தொண்டா அளவுக்கு செல்வாக்கானவர்களோ கவர்ச்சியானவர்களோ ஆளுமை உள்ளவர்களோ அல்ல. செந்தில் கூட அந்த இடத்துக்கு பொருந்தாது என்பது நமது கருத்து. எனவே தற்போதய நிலையில் இ.தொ.கா. ஐந்து பேருக்கும் குறைவான ஒரு தலைமைத்துவ சபையால் வழி நடாத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை. மூன்று மூத்த தலைவர்களுடன் இந்த இடத்துக்கு இளையவன் ஜீவன் தொண்டாவையும் (27வயது) மற்றுமொருவரையும் இணைத்துக் கொண்டு தீர்மானங்களுக்கு வருவது நல்லது.
ஜீவனை ஒரு துடிப்பு மிக்க அரசியல் தலைவனாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு இ.தொ.கா. மூத்த தலைவர்களுக்கு இருக்கின்றது. என நாம் நினைக்கின்றோம். வருகின்ற தேர்தலில் ஆறுமுகத்தை இழந்த இ.தொ.கா. எப்படி தனது வியூகங்களை வகுக்கப்போகின்றது என்பதனைப் பொருத்திருந்து பார்ப்போம். அத்துடன் ஒரு அமைச்சர், பிரதி அமைச்சர் பதவி. இதனை யார் கையில் கொடுத்தால் இந்திய வம்சாவழி மக்கள் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. மேலும் மலையகத்திலிருந்து தேசிய அரசியலில் இளவயதில் கால்பதிக்கின்ற ஜீவன் பக்குவமாகவும் புத்தி கூர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டியும் இருக்கின்றது என்பதனை நாம் அவருக்கு அறிவுரையாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
மலையக இந்திய வம்சாவலி மக்கள் இந்த மண்ணில் மனிதர்களாக வாழ இன்னும் அடைந்து கொள்ள வேண்டிய விவகாரங்கள் நிலுவையில் நிறையவே இருக்கின்றது. என்பதனைத் தொண்டா வாரிசுகள் மட்டுமல்ல ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும்.