உலகின் அதிக இயற்கை வளங்கள் கொண்ட நாடாகவும், அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகவும் தென்னாப்பிரிக்கா இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் தென்னாப்பிரிக்கா காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்டிருக்கிறது. இந்நாட்டில் பனிப்பொழிவு என்பது அபூர்வம். இது வெப்பமண்டல நாடு. எனவே உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே பனிப்பொழிவு இருக்கும்.
அதுவும் மிகவும் லேசானதாக இருக்கும். ஆனால், இந்த முறை நகர் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து சேவையும், மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பேசிய கிழக்கு கேப் மாகாணத்தின் தலைவர், “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்திருக்கிறது. மத்தா பகுதியில் பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பேருந்திலிருந்து 6 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
நான்கு பேர் இன்னும் காணவில்லை, அவர்களை தேடி வருகிறோம். என் வாழ்நாளில் நான் இப்படி ஒரு பேரழிவை பார்த்ததே இல்லை” என்று கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான வீடுகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை பேரிடரின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பொதுமக்கள் என்ன ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்? என்பது குறித்த எந்த செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடியாத நிலையில், தென்னாப்பிரிக்கா அரசு பாதிக்கப்பட்டிருக்கிறது.
மத்தாதா பகுதியில் மட்டும், 58 பள்ளிகள் மற்றும் 20 மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குப்பைகள் குவியல் குவியலாக ஆங்காங்கே தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இவையெல்லாம் அரசுக்கு சவாலாக மாறியிருக்கிறது.
இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டு இதேபோன்று கனமழை பாதிப்பு ஏற்பட்டது. கனமழையால் சுமார் 400 பேர் வரை உயிரிழந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரிடர், காலநிலை மாற்றத்தின் அலாரமாக பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் என்பதே ஒரு போலியான விஷயம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் பேசி வரும் நிலையில், சமகாலத்தில் அதன் பாதிப்புகளை நாம் உணர தொடங்கியுள்ளோம் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.





