‘தி கேரளா ஸ்டோரி’: சினிமாவா அல்லது ஆயுதமா?

இன்றைய சமூகத்தில் சினிமா ஒரு பிரசார ஆயுதமாக மாறிவிட்டதா? சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த விவாதம் மீண்டும் வெடித்துள்ளது. முன்பு காஷ்மீர் ஃபைல்ஸ் வெளியானபோது இந்த விவாதம் நடந்தது.

தி கேரளா ஸ்டோரி

-வந்தனா-

சமீபத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோதி பேசியது மிக அதிகமாக வைரலானது – “கேரளா ஸ்டோரி, ஒரே ஒரு மாநிலத்தில் பயங்கரவாதிகளின் போலி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. நாட்டில் மக்கள் மிகவும் கடினமாக உழைக்கும் மாநிலம் அது. அங்கு இருக்கும் மக்கள் திறமையானவர்கள், கேரளாவில் நடக்கும் தீவிரவாத சதி இந்த ‘ கேரளா ஸ்டோரி’ படத்தில் காட்டப்பட்டுள்ளது.”

“இஸ்லாமிய வெறுப்புப்பிரசாரம்” என்பது சில திரைப்படங்களின் முக்கிய கதையாக மாறியுள்ளது என்றும் ஆளுங்கட்சி ’அரசியல் ஆதாயம்’ தேட முயற்சிக்கிறது என்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

திரைப்படங்கள் பிரசார ஆயுதங்களாக மாறிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக்கருத்து தெரிவித்த பேராசிரியர் இரா.பாஸ்கர்,“ இப்போது பல படங்கள் பெரும்பான்மையைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. நான் கேரளா ஸ்டோரியை பார்க்கவில்லை. ஆனால் அது பற்றி நான் படித்தவரையில் இஸ்லாத்திற்கு எதிரான அச்சத்தை ஏற்படுத்துவதற்காக அது உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்பும் காஷ்மீர் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன – ‘மிஷன் காஷ்மீர் என்ற படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சினிமா பற்றி கற்பிக்கும் பேராசிரியர் பாஸ்கர், “இவை அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய படங்கள். ஆனால் அந்த படங்கள் இஸ்லாமிய வெறுப்பு படங்கள் அல்ல. இந்துக்களுக்கும் சரி, முஸ்லிம்களுக்கும் சரி, யாரார இருந்தாலும் அவர்களுக்கு நடப்பது சரியல்ல என்பதை அவை காட்டின. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சினிமா என்பது பிரசார ஆயுதமாகி விட்டது. புத்தகங்கள் அல்லது திரைப்படங்கள் போன்றவற்றை கருவிகளாக்கி வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சிகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

மறுபுறம், பிரசார ஆயுதம் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, படத்தின் புள்ளிவிவரங்களை அளித்து, பிரதமர் மோதி அதற்கு ஆதரவாகப்பேசியதையும் குறிப்பிட்டார்.

“மக்கள் பதில் அளித்துள்ளனர். படம், வெள்ளிகிழமையை விட திங்கள்கிழமை அதிக வசூல் செய்துள்ளது. எங்கள் படத்தைப் பற்றி பிரதமர் பேசினார். இந்தப் படம் தேசிய அளவில் பல தலைவர்களால் பேசப்பட்டது. இதுவே எங்களுடைய சாதனை. எங்கள் படம் எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல. எங்கள் படம் தீவிரவாதத்துக்கு எதிரானது,” என்று அவர் சொன்னார்..

கேள்வி கேட்பவர்கள் மீது குற்றம்சாட்டிய விபுல் ஷா, “நீங்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்டு தூண்டிவிடுகிறீர்கள். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாஜகவின் பிரசாரப் படத்தை நாங்கள் எடுக்கிறோம் என்பதை நட்டா படம் பார்த்தது நிரூப்பிக்கிறது என்று சொல்வது முட்டாள்தனம்,” என்கிறார்.

புதிதாக ஏதாவது இருக்கிறதா?

“நமது வரலாற்றுப் பாட புத்தகங்களில் காட்டப்பட்டுள்ளபடி ‘திப்பு சுல்தான்’ ஒரு துணிச்சலான இதயம் கொண்டவர் என்று நான் மூளைச்சலவை செய்யப்பட்டேன். ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு அவரது இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்த விரும்புகிறேன்,” என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“மைசூர் புலி” என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான், 1799இல் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்படும் வரை கிழக்கிந்திய கம்பெனியின் கடுமையான எதிரியாக கருதப்படுகிறார்.

கேரளா ஸ்டோரி

இதுபோன்ற பரப்புரை பற்றிய விவாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் கடந்த காலத்தைப் பார்ப்பது அவசியம்.

1975ஆம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி நிலவிய காலகட்டம். அந்த காலத்தில் இந்தி திரைத்துறையின் பிரபல நடிகரான மனோஜ் குமார் இந்திரா காந்திக்காக ‘நயா பாரத்’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பின்னர் எமர்ஜென்சி குறித்த விமர்சனங்கள் மிகவும் அதிமாயின. மனோஜ் குமார் அந்தப் படத்தைத் தயாரிக்க மறுத்து விட்டார்.

இதற்குப்பிறகு மனோஜ் குமாரின் நடிப்பில் வெளி வரவிருந்த ‘ஷோர்’ திரைப்படம், வெளியாவதற்கு முன்பே தூர்தர்ஷனில் காண்பிக்கப்பட்டதால், அது திரையரங்குகளில் வெளியானபோது படத்தின் வியாபாரத்தை பாதித்தது.

எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் விருப்பப்படி படம் எடுக்கப்பட்டிருந்தால், அது பிரசார படமாக இருந்திருக்குமா, இல்லையா என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் அல்ல.

அரசியலின் கேடயமாக சினிமா மாறியதா?

கேரளா ஸ்டோரி

‘தி கேரளா ஸ்டோரி’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்களை அரசியல்வாதிகள் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார்களா அல்லது பல திரைப்பட தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே இவற்றை பிரசார படங்கள் என்று சொல்கிறார்களா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

இந்த விவாதங்களுக்கு இடையே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெளியான நேரத்தில் எழுத்தாளர் ராகுல் பண்டிதா பிபிசியிடம் பேசினார்.

“காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஏனென்றால் காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் கதை ஒடுக்கப்பட்டதாக எப்போதுமே நினைத்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் படத்தின் மூலம் உணர்ச்சிப்பூர்வமான சிந்தனைகளை அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறேன். எனது புத்தகம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் ’இந்த சோகத்தின் அளவு எங்களுக்குத்தெரியாது’ என்று கூறும் மின்னஞ்சல்கள் இப்போதும், தினமும் எனக்கு வருகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்..

“காஷ்மீரி பண்டிட்டுகள் அனுபவித்த துன்பத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் பள்ளத்தாக்கின் முஸ்லிம்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை முழுமையாக புறக்கணித்த ஒரே படம் காஷ்மீர் ஃபைல்ஸ். உண்மையில் பயங்கரவாதத்தின் போது பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் படத்தின் நோக்கம் காஷ்மீரின் வலியைக் காட்டுவது குறைவாகவும், இந்துக்கள் பாதிக்கப்பட்ட உணர்வை அதிகமாகவும் காட்டுவதாக இருந்தது,” என்கிறார் காஷ்மீர் பற்றி இரண்டு பிரபலமான புத்தகங்களை எழுதியுள்ள அஷோக் குமார் பாண்டே.

கேரளா ஸ்டோரி

“எல்லா முஸ்லிம்களும் படத்தில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டனர். ஆனால் உண்மையில் பல பண்டிட்கள் அவர்களின் முஸ்லிம் அண்டை வீட்டாரால் காப்பாற்றப்பட்டனர்.”

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்று பிரதமர் உட்பட ஆளும் கட்சியுடன் தொடர்புடைய பலர் கூறியிருந்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் படத்தின் நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பல பாஜக ஆளும் மாநிலங்கள் ‘கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளன. அதே நேரம் ஹரியாணா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளித்தன.

நேருவின் காலமும் சினிமாவும்

கேரள ஜோடி

பட மூலாதாரம்,HUM HINDUSTANI FILM / FILMISTAN

நேரு மற்றும் பிற கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் ’சித்தாந்தம்’ தொடர்பான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றை விமர்சன படங்கள் என்றே சொல்லலாம்,” என்கிறார் பேராசிரியர் இரா.பாஸ்கர்.

1950கள் மற்றும் 60களின் காலகட்’த்தில் நேருவின் புகழ் உச்சத்தில் இருந்தது. அவரது கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் தாக்கத்தை பல இந்தி படங்களில் பார்க்க முடிந்தது.

மென்மை பிரசாரம் Vs கடும் பிரசாரம்?

எனவே இவை லட்சியங்களின் தாக்கம் காரணமாக உருவான படங்களா அல்லது இதுவும் ஒருவித மென்மையான பிரசாரமா என்ற கேள்வி எழுகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ தொடர்பாக இப்போது நடப்பது அதன் பெரிய மற்றும் கடுமையான பதிப்பா?

“முந்தைய படங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவை அல்ல. அவை வளர்ச்சி அல்லது சமூகங்களை ஒன்றிணைப்பது தொடர்பான படங்கள். 1950களின் படங்கள் மதசார்பற்றவை. அவற்றில் பன்முகத்தன்மை காட்டப்பட்டது, எந்த சமூகத்தின் மீதும் வெறுப்பு அல்ல. எமர்ஜென்சிக்கு ஆதரவாக பல படங்கள் எடுக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை” என்றார் இரா.பாஸ்கர்.

இன்றைய காலகட்டத்தைப் பற்றி பேசினால், விவேக் அக்னிஹோத்ரியின் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் 2022 இல் வெளியானது, இது சமூகத்தை இரண்டாக கிழித்துவிட்டது. காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது ஒரு பல்கலைக்கழக மாணவரின் கற்பனைக் கதையாகும். தனது காஷ்மீரி இந்து பெற்றோர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அவர் அறிகிறார்.

கேரளா ஸ்டோரி

மோதி தனது உரைகளில் கேரளா ஸ்டோரியை ஏன் குறிப்பிட்டார்?

படத்தைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, “காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காட்டப்பட்டுள்ள உண்மையை நசுக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டது. சிலர் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள், எமர்ஜென்சி எத்தனை பெரிய நிகழ்வு. அந்த சம்பவம் பற்றி எந்த படத்தையும் எடுக்க முடியவில்லை. பல உண்மைகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது. இந்திய பிரிவினை நாளான ஆகஸ்ட் 14ம் தேதியை ’ஹாரர் டே’ என்று நினைவுகூர முடிவு செய்த போது பலருக்கு அது பிடிக்கவில்லை. நாடு எப்படி மறக்க முடியும். . இந்தியப் பிரிவினை குறித்து ஏதேனும் உண்மையான திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதா?” என்று வினவினார்.

இதற்கு முன்னதாக விவேக் அக்னிஹோத்ரியின் ‘தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படமும் விவாத்திற்குள்ளானது. வதந்திகளை உண்மை என்று காட்டியதற்காக அது விமர்சிக்கப்பட்டது, அதன் பிறகு சாஸ்திரியின் பேரன் சட்டப்பூர்வ நோட்டீஸும் அனுப்பினார்.

ஒரு பிரதமர் சர்ச்சைக்குரிய படங்களை திரும்பத் திரும்பக் குறிப்பிடுவது எவ்வளவு தூரம் சரியானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஜிஹாதில் சேர்ந்துள்ளனர்” என ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் காட்டியபோது சர்ச்சை கிளம்பியது, நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளரிடம் 32,000 என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது என்று கேட்டபோது, ’உண்மை’ என்று அதுவரை சொல்லி வந்த எண்ணிக்கையை ட்ரெய்லரில் இருந்து நீக்க அவர் ஒப்புக்கொண்டார்.

கேரளா ஸ்டோரி

“இந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், இந்தப் படங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகின்றனர், ஆனால் இந்த நிகழ்வுகள் மிக சமீபத்தில் நடந்தவை. எனவே பல விஷயங்கள் மக்களுக்குத் தெரியும், அவற்றை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

சாமானியர்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே சினிமாக்காரர்களின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதில் கொடுக்கப்பட்டுள்ள உண்மைகள் அரைகுறையாக உள்ளன.

இந்த விஷயத்திற்கு காவி நிறம் கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் தீமையின் ஒரே வேராக, வில்லன்களாக முஸ்லிம்கள் காட்டப்படுகிறார்கள்,” என்று திரைப்பட விமர்சகர் அர்னப் பானர்ஜி கூறினார்.

ரௌனக் கோடேச்சா துபாயில் உள்ள ஒரு திரைப்பட விமர்சகர் ஆவார். அங்கு கேரளாவை சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

“இங்கு குடியேறிய இந்தியர்களின் ஒரே நோக்கம் வாழ்க்கை நடத்த சம்பாதித்து நிம்மதியாக வாழ்வதுதான். எனவே இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் இதையெல்லாம் பற்றிப்பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்கள். இங்குள்ள ஊடகங்களிலும் கேரளா ஸ்டோரி பற்றி அதிகம் இருக்காது,” என்றார் அவர்.

சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள சிக்கலான உறவு

கேரளா ஸ்டோரி

சொல்லப்போனால், சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையே சிக்கலான உறவு இருந்திருக்கிறது. சில படங்கள் அரசியல் பிரச்சாரத்திற்கான ஆயுதங்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சில படங்கள் அதிகாரத்திற்கு சவால் விட்டன.

‘கிஸ்ஸா குர்ஸி கா’ இந்தி படம் வந்தபோது, சஞ்சய் காந்தியின் உத்தரவின் பேரில் 1975ல் எமர்ஜென்சி காலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் பிரிண்ட்கள் எரிக்கப்பட்டதாக சஞ்சய் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது. எமெர்ஜென்சிக்கு பிறகு அமைக்கப்பட்ட ஷா கமிஷன் இந்த வழக்கில் சஞ்சய் காந்தியை குற்றவாளி என்று கண்டறிந்தது நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்பியது. ஆனால் பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

எமர்ஜென்சி காலத்தில் சோ ராமசாமியின் இதழ் கருப்பு நிறத்தில் இருந்தது. கிஷோர் குமார் போன்ற பிரபல பாடகர் எமர்ஜென்சியை எதிர்த்த விதம் அனைவரும் அறிந்ததே.

இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மிகவும் கோபமடைந்து இந்திய தேசிய கட்சி என்ற அரசியல் கட்சியை கூட உருவாக்கினார்.

சினிமா, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், பிரச்சாரம்.. இவை எல்லாம் சிக்கலாகத் தோன்றினாலும் இதில் பல விதிவிலக்குகளும் உள்ளன.

கேரளா ஸ்டோரி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர், அவர்களது சினிமா காதலுக்காக அறியப்பட்டவர்கள். ராகேஷ் ரோஷன், வாஜ்பாயிக்காக ‘கோய் மில் கயா’ என்ற இந்திப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அப்போது எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை.

இது மட்டுமின்றி, எல்.கே.அத்வானிக்காக தனது ‘தாரே ஜமீன் பர்’ (2007) திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை அமீர்கான் ஏற்பாடு செய்திருந்தார், திரைப்பட விமர்சகரான அத்வானியை அந்தப்படம் அழவைத்ததாக பின்னர் தலைப்புச் செய்திகள் வெளியாகின.

முன்னதாக 2006 ஆம் ஆண்டில் அமீர்கான், நர்மதா பச்சாவ் அந்தோலனில் பங்கேற்றதற்காக சங்கபரிவாரின் இலக்குக்கு ஆளானார். மேலும் அமீரின் ‘ஃபனா’ திரைப்படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டது.

பிரசாரம் vs பொழுதுபோக்கு

கேரளா ஸ்டோரி

கடந்த பல ஆண்டுகளாக, நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப கதைகள் இருக்கும் பல திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

நாட்டில் வகுப்புவாத ஒருமுனைப்படுத்தல் சகாப்தத்தில், இந்துப் போராளிகளின் வீரமும், ‘முஸ்லிம் படையெடுப்பாளர்களின்’ கொடுமையும் காட்டப்படும் வரலாற்றுப் படங்கள் பெருகி வருகின்றன. இதை திரைப்பட விமர்சகர் அர்னாப் பானர்ஜியும் சுட்டிக்காட்டினார்.

மதம், சமூகம், கலவரங்கள், சாதி வன்முறைகள் குறித்தும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின்மீது பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. ஆனால் இன்றுள்ள பிளவுபட்ட சமூகத்தில், சமூகத்தின் உண்மைகளை எந்தப் படத்தில் காட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது மற்றும் எதில் வெற்றுப் பிரசாரம் மட்டுமே உள்ளது என்ற வேறுபாடு மங்கலாகி வருகிறது.

“இதுதான் உண்மை என்று காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி கூறப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால காஷ்மீரின் கதையை நீங்கள் சொல்லாதவரை காஷ்மீரி பண்டிட்டுகளின் கதையை உங்களால் சொல்ல முடியாது. இந்த சிக்கலான விஷயங்களை அடுக்கு மேல் அடுக்காகக் காட்ட வேண்டிய அளவிற்கு இடம் இல்லாததே, அவர்களின் கதை முன்பு படங்களில் காட்டப்படாததற்கு காரணமாக இருக்கலாம்,” என்று ஆவணப்பட தயாரிப்பாளர் சித்தார்த் கக், காஷ்மீர் ஃபைல்ஸ் தொடர்பான உரையாடலின்போது கூறினார்.

Previous Story

தேச பக்தனும் துரோகியும்!

Next Story

வெசக் நல்லெண்ண விஜயம்!