‘தி காஷ்மீர் பைல்ஸ்’திரைப்படத்துக்கு எதிராகச் சூழ்ச்சி !

மார்ச் 11 அன்று வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி இத்திரைப்படம் குறித்து விரிவாகப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “நமது நாட்டின் வரலாற்றைச் சரியான நேரத்தில் சமூகத்தின் முன் சரியான கண்ணோட்டத்தில் வெளியிடுவதில், புத்தகங்கள், கவிதைகள், இலக்கியம் போலவே திரைத் துறையும் முக்கியப் பங்காற்றாதது நமது துரதிர்ஷ்டம். சுதந்திரத்திற்குப் பிறகு, உலகம் முழுவதும் மார்ட்டின் லூதரைப் பற்றியும் நெல்சன் மண்டேலாவையும் பற்றி அறிந்திருந்த அளவு மஹாத்மா காந்தி பற்றி அறிந்திருக்கவில்லை.

அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரித்து உலகத்தின் முன் வைக்கத் துணிந்திருந்தால், இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறினார்.

முதன்முறையாக ஒரு வெளிநாட்டவர் மகாத்மா காந்தியை படம் எடுத்து விருதுகள் வாங்கியபோது, மகாத்மா காந்தி எவ்வளவு பெரிய மகத்துவம் வாய்ந்தவர் என்பதை உலகமே தெரிந்து கொண்டது என்றார் மோதி.

“கருத்துச் சுதந்திரம் பற்றி பலர் பேசுகிறார்கள் ஆனால், எமெர்ஜென்சி குறித்து ஒரு படம் எடுக்க முடியவில்லை என்று கேலியாகப் பேசிய பிரதமர் மோதி, உண்மையை மறைக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடந்ததால் இது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தியப் பிரிவினை நாளான ஆகஸ்ட் 14-ம் தேதியை ஒரு பயங்கரமான தினமாக அனுசரிக்க முடிவு செய்த போது அதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இதிலிருந்தெல்லாம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கும் நிலையில் இதையெல்லாம் நாடு எப்படி மறக்க முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இந்தியப் பிரிவினையின் யதார்த்தத்தை வைத்து இதுவரை எந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் புதிய படம் ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றிய விவாதம் பெருமளவில் எழுந்துள்ளதை அறிவீர்கள்.

எப்போதும் கருத்து சுதந்தரம் பற்றிப் பாடம் எடுப்பவர்கள், கடந்த ஐந்தாறு நாட்களாக, ஆத்திரமடைந்து, உண்மைகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் இந்தப் படத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

படம் குறித்து வரும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து, பிரதமர் மோடி தனது உரையில், ஒருவர், தானறிந்த உண்மையை வெளிப்படுத்தத் துணிந்து, அதை முன்வைக்க முயற்சித்தார். ஆனால் அந்த உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை என்றும் இதை உலகுக்குத் தெரிவித்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இதை எதிர்க்கவும் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் கூறிய அவர், ” நான் எந்தப் படம் குறித்தும் பேசவில்லை. உண்மையை உள்ளது உள்ள படி நாட்டின் முன் வைப்பது நாட்டு நலனுக்கு முக்கியமானது என்பதே என் கருத்து. இதில் பல அம்சங்கள் இருக்கலாம். ஒவ்வொருவர் ஒவ்வொரு அம்சத்தைக் கவனிக்கலாம்.

இந்தப் படம் பிடிக்கவில்லை என்றால் வேறு படம் எடுக்க வேண்டும். இத்தனை வருடங்களாக மூடி மறைத்து வந்த சரித்திரத்தை, உண்மைகளின் அடிப்படையில் வெளியே கொண்டுவந்து விட்டார்களே என்று அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே அதற்கு எதிராக அனைத்து முயற்சிகளும் செய்கிறார்கள்.” என்றார்.

“இதுபோன்ற சமயங்களில், உண்மைக்காக வாழ்பவர்களுக்கு, உண்மைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்பை அனைவரும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

காஷ்மீர் குறித்த விவரங்கள்

காஷ்மீர் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை மையமாக வைத்தும் வந்துள்ளன. பத்திரிகையாளர் ராகுல் பண்டிதா, ‘த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கான எதிர்வினை மிக வலுவாக இருப்பதற்குக் காரணம், பண்டிட் சமூகம் எப்போதும் தங்கள் சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளதாகவே உணர்வது தான்.

இதை நான் அதை உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று கூறுவேன்.” என்கிறார். காஷ்மீரின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரிந்திருப்பது வியப்பளிப்பதாக அவர் கூறுகிறார்.

ஆனால் தலித்துகள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் இடதுசாரிக் கருத்தியல்களுக்கு எதிரான வன்முறைச் சித்தரிப்புகள், திரைப்படங்களில் பெரும்பாலும் அரிதாகவே இருப்பதாகக் கூறுவோரும் உள்ளனர்.

சஞ்சய் காக் என்ற காஷ்மீரி பண்டிட் ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.

இதுபற்றிக் கூறும் அவர், “இந்தக் கதை இதுவரை சொல்லப்படவில்லை என்று மக்கள் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பாலிவுட் இந்தக் கதையைச் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் பாலிவுட் இதுபோன்ற கதைகளை படம் எடுப்பதில்லை.

1984-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தை வைத்தும் பாலிவுட் ஒரு படம் கூட எடுக்கவில்லை. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்தும் இல்லை. இதுபோன்ற ஆயிரக்கணக்கான கதைகள் இந்த நாட்டில் உள்ளன, அவை முக்கிய திரைப்படங்களில் இடம் பெறவில்லை.” என்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரதமர் மோடியின் உரையை மறு ட்வீட் செய்து, “தங்கள் உரிமைகளைக் கோரிய இந்நாடின் விவசாயிகள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டபோது இந்த ‘கருத்துச் சுதந்திரம்’ எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்ச் 11ஆம் தேதி வெளியானது இந்தப் படம். மார்ச் 12ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியுடன் விவேக் அக்னிஹோத்ரி இருக்கும் புகைப்படம் வைரலானது.

படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் நரேந்திர மோடியுடனான தனது ஒரு படத்தைப் பகிர்ந்து, “பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. மேலும் சிறப்பு என்னவென்றால் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்காக அவரது பாராட்டும் கிடைத்தது. நன்றி மோதி ஜி” என்று குறிப்பிட்டிருந்தார்.

அபிஷேக்கின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, “இந்தியாவின் மிகவும் சவாலான உண்மையை வெளிப்படுத்தும் தைரியத்தை வெளிப்படுத்தியதற்காக, அபிஷேக், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தி காஷ்மீர் ஃபைல்ஸ் அமெரிக்காவில் திரையிடப்படுவது, நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் மனநிலை மாற்றம் அடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலானதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்தன. சிலவற்றில் விவேக் அக்னிஹோத்ரி படத்திற்காக பாராட்டப்பட்டார். அதே சமயம், அரசியலில் இருந்து விலகி இருக்குமாறும் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கூறியது என்ன?

படம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. படத்திற்குச் சரியான விளம்பரம் செய்யப்படவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் படத்தின் இயக்குநர், “படத்திற்கு விளம்பரம் தேவை என்றால் நானே கோரியிருப்பேன். ஆனால் அது தேவையில்லை என்பதால் நான் செய்யவில்லை. மக்கள் என்னிடம் கேட்டார்கள், ஏன் செய்யவில்லை என்று.

மக்களின் மனநிலை எனக்குப் புரிந்தாலும், இந்திய மக்களிடமிருந்து நான் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு கேள்வி என்னவென்றால், காஷ்மீரின் பெயரில் மக்கள் பலவிதமான செயல்களைச் செய்திருக்கிறார்கள், பல்வேறு வகையான படங்கள் மற்றும் பிற விஷயங்களைச் செய்துள்ளதால், காஷ்மீருக்காக மக்களின் இதயம் துடிக்கிறது என்று நான் நம்புகிறேன்.”

“இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம், கஷ்மீர் தான் என்று நான் நம்பினேன். இரவும் பகலும் காஷ்மீரை மீட்பது குறித்துச் சிந்திப்பவர்களின் இதயத்தில் காஷ்மீர் நிறைந்திருக்கும் என்று நான் உணர்ந்தேன். படத்தில் எந்த உச்ச நட்சத்திரம் நடிக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டில்லை” என்று விளக்குகிறார்.

Previous Story

ஜனாதிபதி இன்று விசேட உரை!

Next Story

அசிங்கப்பட்ட கோட்டா அமைச்சர்