திரைப்  படம் O2 எப்படி ?

நடிகர்கள்: நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன்.

இசை: விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: தமிழ் அழகன்

இயக்கம்: ஜி.எஸ். விக்னேஷ்

நயன்தாரா நடித்த 02 திரைப்படம்

நயன்தாரா நடித்துள்ள O2 என்ற திரைப்படம் தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. நேற்று இரவு இந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

“இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்ட ஒரு குறும்படமாகவே இந்த O2 படம் தெரிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு திரைக் கதையில் இல்லாமல் போனது, படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிட்டது” என்கிறது தினமலர் நாளிதழ்.

“கணவனை இழந்த இளம் விதவை நயன்தாரா. அவரது ஒரே மகன் ரித்விக்கிற்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது. எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம்தான் சுவாசிக்க முடியும். அதற்கான ஆபரேஷன் செய்து கொள்வதற்காக கோயம்புத்தூரிலிருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்து மூலம் செல்கிறார்.

கடும் மழைக்கிடையில் நிலச் சரிவில் அந்தப் பேருந்து சிக்கிக் கொள்கிறது. பேருந்தில் இருப்பவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதனால், நயன்தாராவின் மகன் ரித்விக்கின் ஆக்சிஜன் சிலிண்டரைப் பிடுங்கி சுவாசிக்க முயற்சிக்கின்றனர். தன் மகனைக் காப்பாற்ற நயன்தாரா என்ன முயற்சி எடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை” என இந்தப் படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறது தினமலர்.

“கடந்த சில ஆண்டுகளில், நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார். ஆனால், அவருடய கமர்ஷியல் படங்களைப் போலில்லாமல் இதில் சில படங்களே ஹிட் ஆகின. இருந்தபோதும் அவர் தொடர்ந்து அம்மாதிரி படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார்.

O2வும் அந்த மாதிரி ஒரு திரைப்படம்தான். ஆனால், படத்தில் திருப்பங்கள் என்ற பெயரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஒட்டுமொத்த படத்தையும் நாசமாக்கிவிட்டன” என விமர்சித்துள்ளது இந்தியா டுடே.

“ஒரு நல்ல ‘சர்வைவல் ட்ராமா’வுக்கான அம்சங்கள் இந்தக் கதையில் இருக்கவே செய்கின்றன. ஆனால், படம் பல சமயங்களில் குழந்தைத்தனமாக இருக்கிறது. சீரியஸான பல காட்சிகளில் சிரிப்பு வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பேருந்தில் சிக்கியிருப்பவர்களுக்காக பதற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. எல்லாம் செயற்கையாக இருப்பதால் அவற்றோடு ஒட்ட முடியவில்லை” என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

படத்தில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். “நயன்தாராவும் குழந்தையாக வரும் ரித்விக்கும் தாயும் மகனுமாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் அந்தச் சிறுவன் ரித்விக் தன்னம்பிக்கையோடு நடித்திருப்பதால், முக்கியமான காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

திரைப்படத்தை இறுதிவரை படபடப்புடன் கொண்டுசெல்வதில் தமிழ் அழகனின் ஒளிப்பதிவு முக்கியப் பங்கை வகிக்கிறது.

சரியான அம்சங்கள் படத்தில் இருக்கின்றன. ஆனால், திரைக்கதையில் உள்ள பிரச்சனைகளால் பல இடங்கள் சொதப்பலாகியிருக்கின்றன. ஆனால், நடிப்பும் ஒளிப்பதிவும் ஒரு நல்ல முயற்சி என்று இந்தப் படத்தைக் குறிப்பிடவைக்கின்றன” என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

நயன்தாரா நடித்த 02 திரைப்படம்

“லாஜிக் பிரச்னை படம் நெடுகிலும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை” எனும் இந்து தமிழ் திசை நாளிதழ், படம் குறித்து நேர்மறையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

“‘ஓ2’ உங்களை திரையிலிருந்து விலகச் செய்யாது என்பது மட்டும் உறுதி. படம் தொடங்கியதும் எவ்வித சமரச காட்சிகளுக்கும் இடமளிக்காமல், நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது. அடுத்தடுத்த காட்சிகளுக்கான பதற்றம், விறுவிறுப்பு நம்மை தொற்றிக்கொண்டு நகர்வது படத்திற்கு பலம். படம் இரண்டு லேயர்களை கொண்டு பயணிக்கிறது.

சூழலியல் ஆபத்துகளையும், இயற்கையை வேட்டையாடும் மனிதனை, இயற்கை வேட்டையாடாமல் விடாது என்பதையும், அதற்கான உதாரணத்தை தொடக்கக் காட்சியில் சொன்ன விதமும் விழிப்புணர்வுடன் கூடிய அச்சத்தை விதைக்கிறது.

இயற்கைக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக இயற்கை மீண்டும் உங்களுக்கு கைமாறு செய்யும் என்ற சூழலியல் பிரச்சினையை பாடமாக எடுக்காமல் காட்சிகளால் கடத்திய விதம் கவனம் பெறுகிறது. மற்றொருபுறம் மகன்களை மீட்கும் தாய்கள்.

நயன்தாரா – ரித்விக் மட்டுமல்லாமல், மற்றொரு கதாபாத்திரமும் தன் தாயின் போராட்டத்தால் மீட்கப்பட்டிருக்கிறது. இரண்டு லேயர்களுக்குள் சாதியும் பேசப்படுகிறது.

படத்தில் நயன்தாராவின் கலையாத மேக்கப்பும், ஆங்காங்கே ரத்தக் கரை என சொல்லிக்கொள்ள ஒட்டியிருக்கும் இரண்டு ஸ்டிக்கர்களும் உறுத்துகின்றன. அவ்வளவு பெரிய நிலச்சரிவில் சிக்கிய பேருந்துக்குள் இருக்கும் நயன்தாராவுக்கு அடிகள் எதுவுமில்லாமல், சொல்லப்போனால் பயணிகள் 8 பேருக்கும் பெரிய பாதிப்பில்லாமல் இருப்பது நம்பும்படியாக இல்லை.

கிராஃபிக்ஸ் காட்சிகள் செயற்கைத் தனத்தை உரித்து காட்டுகின்றன. லாஜிக் பிரச்னை படம் நெடுகிலும் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

‘அறம்’ படத்தையொட்டிய உணர்வை கொடுக்கும் இப்படத்தில், லீட் கேரக்டரில் நயன்தாராவையும், பேரிடர் மீட்புகுழுவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியாக பெண் ஒருவரையும் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது சமகால சினிமாவில் ஆடல் பாடல்களுக்காவும், காதலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தப்படும் போக்கிலிருந்து தனித்து நிற்கிறது” என்கிறது இந்து தமிழ் திசை.

Previous Story

துரோகி ஹீரோவான கதை!

Next Story

முட்டால்தனமாக உள்ளே புகுந்த ரணில்-சுமந்திரன்