“திரும்பிய பக்கமெல்லாம்  சடலங்கள், உடல் பாகங்கள்” – பிழைத்தவரின் சாட்சி!

ஒடிசா ரயில் விபத்து தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் விபத்து நடந்த இடம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உள்ளன. இந்நிலையில் விபத்தில் தப்பிய நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனை சாட்சியைப் பகிர்ந்துள்ளார்.

அனுபவ் தாஸ் என்ற அந்தப் பயணி ஹவுராவில் இருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். விபத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துவிட அது பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பயணித்தேன். விபத்தில் நான் உயிர் பிழைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நிச்சயமாக மிகப் பெரிய ரயில் விபத்து.

பெங்களூரு – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டிகள் மூன்று முற்றிலுமாக தடம்புரண்டு சேதமடைந்துள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இவற்றில் ஏசி 3 டயர், ஏசி 2 டயர், ஸ்லீப்பர், பொதுப் பெட்டிகள் அடங்கும்.

Odisha Train Accident- Technical Glitch Or Human Error: Questions After Odisha Train Crash

இந்த விபத்தில் மூன்று ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12841), யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயில் மற்றுமொரு சரக்கு ரயில் பாதிக்கப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்து முதலில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு அருகில் லூப் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் இருந்த யஷ்வந்த்பூர் ரயில் மீது மோதியுள்ளது.

Orissa train accident: Deadly India crash in photos - BBC News

நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் என் கண்களால் 200 முதல் 250 சடலங்களை இதுவரை பார்த்துவிட்டேன். ரயில் பெட்டிகளுக்குக் கீழ் சிதைந்து கிடந்த குடும்பங்கள், உடல் அங்கங்கள் துண்டான சடலங்கள், தண்டவாளம் முழுவதும் ரத்தம் என நான் கண்ட காட்சிகள் என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாதவை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி:  நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்

விபத்துப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள்

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 238 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் காயமடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறுகிறார்.

ஒடிசாவின் பாலாசோர் அருகே நேற்று (ஜூன் 2) மாலை 7 மணி அளவில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட மிகப் பெரிய விபத்து நிகழ்ந்தது. முதலில், பெங்களூருவில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட ரயில் மீது மோதியது. இதனால், அந்த ரயிலின் பெட்டிகள் தூக்கிவிசப்பட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதின. இந்த கோர விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த உடன் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ரயில்வே பாதுகாப்புப் படை, காவல்துறை, தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்டவை விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன.

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “மீட்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்தப் பகுதியில் ரயில்கள் செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 39 ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இது மிகவும் துயரான விபத்து. உள்ளூர் மக்களுக்கும் குழுக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ரயில்பாதுகாப்புக்கு எப்போதுமே முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விபத்தை அடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். மேலும், இன்றே சம்பவ இடத்துக்கு பிரதமர் வர உள்ளதாகவும், ரயில் விபத்தில் காயமுற்று கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் விபத்துப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு அதன் பிறகு பாலாசோர் மருத்துவமனைக்கு பிரதமர் செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஐஜி நரேந்திர சிங் புண்டேலா, “தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 9 குழுக்கள் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளையும் மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவை்கப்பட்டுள்ளனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது விசாரணைக்குப் பிறகு தெரிய வரும். இன்று மாலைக்குள் எங்கள் பணி நிறைவடைந்து விடும் எனக் கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து பகுதிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரைந்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், உதவும் ஒடிசா விரைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வந்து ரத்த தானம் செய்துள்ளனர். ஒடிசா விபத்து மிகப் பெரிய சோகம் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்க அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Story

ஊடகங்கள் மீது கொத்து குண்டு வீச்சு!

Next Story

டாக்டர் சாபி ஏன் அழுதார்!