திருமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்திருந்தார். வன்முறையில் ஈடுபட்ட அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது. போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த பின்னணியில், இன்று காலை போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அதையடுத்து, அலரி மாளிகையிலிருந்து மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர், பாதுகாப்புடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாப்புடன் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் திருகோணமலை கடற்படை முகாமை நோக்கி சென்றதாக கூறப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், திருகோணமலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous Story

கொளுத்தப்பட்ட சொத்துக்கள்: புதிய பட்டியல் 

Next Story

கடற்படை முகாமிலிருந்து மஹிந்த தப்பினார்