திருச்செந்துறை கிராமம் வக்ஃப் வாரிய சொத்து?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதையும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தனக்குச் சொந்தமானது என்று கூறியிருப்பதால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியம்

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் என்பது வக்பு சட்டம் 1954 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பாகும். இது வக்பு சொத்துக்களை நிர்வகிக்கிறது.

இந்நிலையில் திருச்செந்துறை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை (1 ஏக்கர் 2 சென்ட்) ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க முடிவெடுத்தார்.

இதற்கான கிரயப் பத்திரத்தை பதிவு செய்ய திருச்சியில் உள்ள மூன்றாம் துணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றபோதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த நிலம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால் பதிவு செய்ய முடியாது என்று துணைப் பதிவாளர் அவரிடம் தெரிவித்தார்.

நிலத்தை விற்க வேண்டும் என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில், ‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’ (NOC) பெற வேண்டும் என கூறியிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால், திருச்செந்துறை கிராம மக்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினார்.

இச்சம்பவம் திருச்செந்துறை கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய திருச்சியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் அல்லூர் பிரகாஷ், நாம் வாங்கின இடம் நமக்கில்லை என்றால் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

திருச்செந்துறை கிராமம் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் அழகான விவசாய கிராமம். அங்கு பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில் இங்கே அமைந்துள்ளது.

வக்ஃப் வாரியத்துக்கும் திருச்செந்துறை கிராமத்துக்கும் என்ன உறவு?

தமிழ்நாடு வக்பு வாரியம்

இது குறித்து கேட்டால் ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்ஃப் வாரியத்திற்கு செப்பு பட்டயத்தில் எழுதி இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

திருச்செந்துறை கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் 369 ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. பின்னர் எப்படி இந்தக் கோவில் நிலமும் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமா?

ராஜகோபால் 1992ல் வாங்கிய நிலத்தை விற்க வக்பு வாரியத்திடம் ஏன்? NOC பெற வேண்டும் என்று கேட்டபோது, ​​திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்ய இதுவே நடைமுறை என்று துணைப் பதிவாளர் கூறியுள்ளார்.

மேலும், அந்த கிராமம் முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்றும், கிராமத்தில் உள்ள நிலத்திற்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், அவர்களிடம் NOC பெற வேண்டும் என்றும் வக்பு வாரியம் ஆவணங்களுடன் பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான 250 பக்கங்கள் கொண்ட வக்ஃப் வாரிய கடிதத்தின் நகலும் எங்களிடம் காட்டப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தங்களுடையது என்று வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்

இந்த நிலையில், இது குறித்து வக்ஃப் வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா விளக்கமளித்துள்ளார்.

1954 அரசிதழ் ஆய்வின்படி, ராணி மங்கம்மாள், பாண்டிய மன்னர்கள் உட்பட மன்னர்கள், வக்ஃப் வாரியத்திற்கு இனாமாக இந்த ஊர் கிராமங்களை வழங்கியுள்ளனர். இது குறித்த செப்பு பட்டயம் இருக்கிறது. இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்குரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு வக்பு வாரியம்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற திருச்செந்துறை கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் அனைவரும் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்களுக்கும், வக்பு வாரிய அதிகாரிகளுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து தங்களுடைய போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

தமிழ்நாடு வக்பு வாரியம்

இந்நிலையில், திருச்செந்துறை சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊர் மக்களை சந்தித்து கிராமத்தின் இடங்கள் தொடர்பான வக்பு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பா.ஜ.க வின் மாநில மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள், கட்சி அணிப்பிரிவு நிர்வாகிகள் என 25 க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என அந்த வாரியத் தலைவர் அறிவித்திருப்பது சட்ட விரோதம்.

திருச்செந்துறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்துக்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வக்பு வாரியம் அபகரிக்கப் பார்க்கிறது. இத்தகைய மோசடியில் ஈடுபடும் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரியை (CEO) உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வக்பு வாரியம்

இந்த விவகாரத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்களும் பாதிப்படைகிறார்கள்.

தமிழகத்தில் பேய்களின் ஆட்சி நடக்கிறது.இது ஓர் இந்து விரோத அரசு. ஸ்டாலின் ஆட்சி மாலிக் கபூரின் ஆட்சியாக உள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் முன்பு ஆகம வேத நூல்களை எரிப்பதாக ஓர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். அவர்களும் வரலாம் 16-ந் தேதி இரவுக்குள் தமிழக அரசு கைது செய்ய வேண்டும்.

இந்து மதக் கோவில்களையும், சொத்துக்களையும் அரசுடமையாக்கி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு மதச்சார்பற்ற அரசு இஸ்லாமிய, கிறிஸ்துவ மதப் சொத்துக்களையும் கையகப்படுத்தி இந்து என்ற வார்த்தையை தவிர்த்து பொதுவான பெயரில் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் பதில்

தமிழ்நாடு

கே.என். நேரு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்

இதற்கிடையே, திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், 24 கிராமங்களுக்கும் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. நேற்றே பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

Previous Story

எஸ்.சி.ஓ. மாநாடு : ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி

Next Story

சினம்: சினிமா விமர்சனம்