திப்பு சுல்தான்:கொடுங்கோலனா?வீரனா?

-இம்ரான் குரேஷி-

திப்பு சுல்தானுக்கும் அவரது தந்தை ஹைதர் அலிக்கும் எதிராக பேஷ்வாக்கள் போர் புரிந்தனர். இருப்பினும், திப்பு சுல்தானின் பெயரை மும்பையில் உள்ள ஒரு பூங்காவுக்குச் சூட்டியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைக் கண்ட வரலாற்றாசிரியர்களுக்கு வியப்பொன்றும் இல்லை.18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு போர்க்களத்தில் இறந்த ஒரே இந்திய ஆட்சியாளர் குறித்து பொதுவெளியில் பரவலாக வைக்கப்படும் எதிர்ப்பு வாதங்கள் தான் தற்போது புதிய சர்ச்சையாகக் கிளம்பி இருக்கிறது. இது வரலாற்றில் குறிப்பிடப்படாத ஒன்றாக இருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு எதிரான தற்போதைய எதிர்ப்பு மனநிலயைப் பார்க்கும் போது, அவர் பெயரை ஒரு பூங்காவுக்கு அல்லது விளையாட்டு மைதானத்துக்கு சூட்டுவது “அரசியல் ரீதியாக தவறானது” என ஒரு வரலாற்று ஆசிரியராவது நம்புகிறார்.திப்பு சுல்தான் ஒரு தேசிய நாயகர் என்பதை மகாராஷ்டிர மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் 19ஆம் நூற்றாண்டு வரை இந்தியா என்கிற அடையாளமே இல்லை. அப்போது, மராட்டியர்கள், வங்காளிகள், மைசூர் மாகாணத்தவர்கள் என்கிற அடையாளங்கள் மட்டுமே இருந்தன,” என்று மைசூர் பல்கலைக்கழகத்தின் திப்பு இருக்கையின் முன்னாள் பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப் பிபிசி இந்தியிடம் கூறினார்.

ஆனால், திப்பு சுல்தானை, தென்னிந்தியாவின் மிகவும் ஈவு இரக்கமற்ற படையெடுப்பாளர்களில் ஒருவர் என விவரிப்பதுதான் வரலாற்றாசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.”அவர் ஆக்கிரமிப்பாளரோ படையெடுப்பாளரோ அல்ல. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்களை விட அவர் பிறந்த மண்ணில் வேரூன்றி இருந்தவர் திப்பு சுல்தான். அவர் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் என்று விவரிப்பது, முற்றிலும் அவரைக் குறித்த தவறான புரிதல்,” என பிபிசி இந்தியிடம் கூறுகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஜானகி நாயர்.

“ஆங்கிலேயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோரின் கூட்டுப் படைகளுக்கு எதிராகப் போராடியவர் மற்றும் மாபெரும் தேசபக்தர்களில் திப்பு சுல்தானும் ஒருவர். அவருக்கு எதிராக, தேச விரோதியாக அவரைச் சித்தரிக்கும் பிரசாரம் பாரபட்சமானது” என்கிறார் வரலாற்றாசிரியர் மற்றும் பேராசிரியர் என்.வி.நரசிம்மய்யா.

திப்பு மற்றும் பேஷ்வாக்கள்

வரலாறு தெரியாதவர்கள்தான் திப்பு சுல்தானை வெறுப்பதாகக் கூறுவர் என்கிறார் நரசிம்மய்யா. திப்பு சுல்தானுடன் போரிட ஆங்கிலேயர்களுடனும் மராத்தியர்களுடனும் இணைந்த ஹைதராபாத் நிஜாமைக் குறித்து அவர்கள் இப்படிக் கூறுவதில்லை.பேஷ்வா ரகுநாத் ராவ் பட்வர்தன் தலைமையிலான தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீங்கேரி மடத்தின் சாமியார் ஒருவர் கார்கலாவுக்கு ஓட வேண்டி வந்த நிகழ்வை அவர் சுட்டிக்காட்டுகிறார். “பேஷ்வா ராணுவம் கோயிலில் படையெடுத்தது, நகைகள் அனைத்தையும் பறித்து, பூஜிக்கப்பட்டு வந்த பிரதான கடவுள் சிலையை இழிவுபடுத்தியது,” என்கிறார் அவர்.

“பேஷ்வா ராணுவத்தால் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் திப்பு சுல்தான் மாற்றினார். அவர் தனது மாகாண மக்களை ஆசீர்வதிக்குமாறு அம்மடத்தின் தலைமை குருவுக்கு பல கடிதங்களை எழுதினார். நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை ஹக்கீம் நஞ்சுண்டா என திப்பு சுல்தான் அழைத்தார். காரணம் அத்திருக்கோயிலில் தான் அவரது கண் பிரச்னை குணமானது. அந்த கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கும் அவர் அவ்வாறே பல திருப்பணிகளைச் செய்துள்ளார் “என்று பேராசிரியர் நரசிம்மய்யா கூறினார்.

மேல்கோட்டையிலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில் உட்பட, பல கோயில்களுக்கு திப்பு நகை வழங்கியுள்ளார், கோயில்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.“போர் செய்வதில் மராத்தியர்கள் பின்தங்கியிருக்கவில்லை. இன்றும் வங்காளத்தை மராத்தியர்கள் அடைந்ததை அச்சத்துடன் நினைவுகூரப்படுகிறது. இவர்கள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர்கள். அவர்கள் வெளிப்படையாக இருந்தனர்.” என்கிறார் ஜானகி நாயர்.

“கடந்த காலத்தை பாரபட்சத்துக்கு உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது எந்த வித வரலாற்று புரிதலுக்கும் பயன்படுத்தப்படவில்லை,” என்கிறார் அவர்.

அவர் ஒரு தேசிய நாயகரா?

“இப்போதும் அப்படித் தொடரவில்லை. கட்டாய மதமாற்றம் செய்வது மற்றும் துன்புறுத்தல் பற்றிய பிரச்னை இப்போது பேசப்படுகிறது, ஆனால் அது 18ஆம் நூற்றாண்டில் இயல்பாக இருந்தது. திப்பு சுல்தானின் ஆளுமை, காலம் கடந்து தொடர்கிறது,” என்கிறார் பேராசிரியர் நாயர்.

முதலில் ஆங்கிலேயர்கள் அவரை ஒரு கொடுங்கோலன் என்று எழுதினார்கள். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு, போர்க்களத்தில் இறந்தார் என்பது சமீபகாலத்தில் அழிக்கப்பட்டுவிட்டது, “அவர் ஓர் இஸ்லாமியர் என்பதாலும், மற்ற ஆட்சியாளர்களைப் போல தன் எதிரிகளைத் துன்புறுத்திக் கொன்றார் என்கிற பதிவுகளைப் பெற்றிருக்கிறார் என்றாலும், நிச்சயமாக, அவர் சில மதமாற்றங்களையும் செய்தார். ஆனால் அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டை, கட்டாய மதமாற்றம் செய்து அவரால் ஆட்சி செய்ய முடியாது,” என்கிறார் பேராசிரியர் ஜானகி நாயர்.

பேராசிரியர் ஜானகி கூறுகையில், “திப்பு சுல்தானின் படையில் ஆறு பிரிவுகள் இருந்தன. ஆனால் பல தரப்பட்ட இஸ்லாமியர்களை அவர் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மராத்தியர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் அடங்கிய இரண்டு பிரிவுகளையும் அவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, அவர் சமூகங்களுக்கிடையிலும் வேறுபாடுகளைக் காட்டவில்லை. அனைவருக்கும் நல்ல ஊதியம் கொடுத்தார்.”

1960 – 1970களில், வரலாற்றாசிரியர்கள் திப்பு சுல்தானின் பொருளாதாரத் திட்டங்கள், விவசாயம், பட்டுத் தொழிலின் வளர்ச்சி ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்ததாக ஜானகி நாயர் சுட்டிக்காட்டுகிறார். “திப்பு சுல்தான் மிகவும் புதுமையானவர்” என்கிறார்.

“திப்புவின் காலத்தில், நிலம் விவசாயிகளுக்கு நேரடியாக அரசு குத்தகைக்கு விட்டது. விவசாயிகள் அதை பரம்பரை பரம்பரையாக வைத்திருந்தனர். அனைவருக்கும் நிலம் கிடைத்தது. ஆனால் இந்த திட்டம் மலபார் பிரதேசத்தில் தோல்வியடைந்தது. காரணம் பெரிய நிலபுலன்களைக் கொண்டிருந்த நிலக்கிழார்கள் அங்கு வேறு முறையைப் பின்பற்றி வந்தனர்.” என்கிறார் நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நரேந்திர பனி.

உண்மையில், திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆங்கிலேயர்களே திப்புவின் விவசாய நில முறையைத் தழுவி `ரயத்துவாரி முறையை’ கொண்டு வந்தனர். மைசூரில் காரன்வாலிஸ் பிரபுவின் ஜமீன்தாரி முறை செயல்படவில்லை, காரணம் திப்பு சுல்தான் தனது சொந்த விவசாய நில முறையை உருவாக்கினார்.

பேராசிரியர் ஜானகியின் கூற்றுப்படி, 1980களின் பிற்பகுதியில், திப்பு சுல்தானுக்கு எதிரான வெறுப்புணர்வு எழுச்சி தொடங்கியது என்கிறார் “இரண்டு முக்கிய விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒன்று மதமாற்றங்கள், மற்றொன்று கன்னட மொழியை ஊக்குவிக்காதது. கோயில்களை இடிப்பது குறித்தும் இருக்கிறது. இது மிகவும் கலவையான விஷயம். திப்பு சுல்தான் கோயில்களை ஆதரித்ததற்கு பல சான்றுகள் உள்ளன.”

“வலதுசாரி வரலாற்றாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் மறைந்த சூர்யநாத் காமத் கூட, தனது கர்நாடக வரலாற்றுப் புத்தகத்தில், திப்பு சுல்தான் போன்ற ஒரு நபருக்கு சரியான இடத்தை அளித்துள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் பேராசிரியர் ஜானகி.

என்ன மாறிவிட்டது?

வரலாறு என்பதற்கும், குறிப்பாக கடந்த சில தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கும், மக்களிடையே உள்ள புரிதலுக்கும் இடையே தெளிவாக வரலாறு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இது போக இன்னும் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

“திப்பு சுல்தான் மிகவும் கலவையான மற்றும் சிக்கலான குணாதிசயங்களைக் கொண்டவர். துரதிர்ஷ்டவசமாக, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அவரைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்வது தேச விரோதமானது என்கிற நிலையை நாம் அடைந்துள்ளோம். அதே நேரத்தில், திப்பு சுல்தான் ராக்கெட்டுகளின் முன்னோடியாக விளங்கியதால், நாசாவில் திப்பு சுல்தானின் படம் வைக்கப்பட்டுள்ளது. அத்தொழில்நுட்பம் பின்னாளில் ஆங்கிலேயர்களால் திருடப்பட்டது “என்று பேராசிரியர் ஜானகி நாயர் கூறினார்.

“புதிய அரசியல் விவாதங்களினால், திப்புவின் தேசிய நாயகன் என்கிற பிம்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான புதிய பிம்பங்களையும் புதிய நாயகர்களையும் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இது வேண்டுமென்றே செய்யப்படுகிறது. உண்மையான தேசிய நாயகர்களை வீழ்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்.

Previous Story

'நூற்றாண்டு விழா அழைப்பு'

Next Story

பட்டாசு போல ஏவுகணை விடும் வடகொரியா: